top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : ஒவ்வொரு நாளும் திருநாள்தான்

Updated: Feb 5, 2022

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசை கொண்ட விளையாட்டு வீரரிடம், நீ வெற்றி பெறுவதற்கு அன்றாடம் என்ன செய்கிறாய் என்று புதிய பயிற்சியாளர் கேட்டார். தினமும் காலையில் 20-30 கிலோமீட்டர் தூரம் ஓட்டப்பயிற்சியும், 3-4 மணிநேர உடற்பயிற்சியும் செய்து வருவதாகவும், அத்துடன் சில உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாகவும் கூறினார்.


இலக்கில்லா பயிற்சி


ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல உன்னுடைய இலக்கு என்ன என்று கேட்டதற்கு, முழு மாரத்தான் ஓட்டத்தை இரண்டு மணி நேரங்களுக்கு குறைவாக கடந்து முடிக்க வேண்டும் என்றார். 42 கிலோ மீட்டர் கொண்ட முழுமாரத்தான் ஓட்டத்திற்கு உன்னுடைய அன்றாட பயிற்சி இலக்கு என்ன என்று கேட்டதற்கு, அன்றாட இலக்கென்று தனியாக ஏதுமில்லை. தினமும் குறிப்பிட்ட தூர ஒட்டப்பயிற்சியும், குறிப்பிட்ட உடற்பயிற்சியால் உடல் வலுவை கூட்டுகிறேன். உடல் வலிமையிருந்தால், அந்த இலக்கை எளிதில் அடையலாம் என்று அந்த வீரர் பதிலளிக்கிறார்.


  • அவரின் கூற்று சரியானதா ?

  • அவர் செய்துவரும் பயிற்சியால் மட்டும் அந்த இலக்கை அடைய முடியுமா ?


தினமும் 42 கிலோமீட்டர் ஓடுபவரால், கட்டாயம் மாரத்தான் பந்தயத்தன்று 42 கிலோமீட்டர் ஓடமுடியும். கால்கள் தினமும் ஓடி பழக்கப்பட்டதால், அந்த தூரத்தை எளிதாகவே அவருடைய கால்கள் கடக்கும்.


ஆனால், இங்கு நமக்கு இருக்கும் கேள்வி வேறு !


  • தினமும் 140-150 நிமிடங்களில் ஓடிப் பயிற்சி செய்பவரால் எப்படி 120 நிமிடங்களுக்கு குறைவாக போட்டியன்று ஓட முடியும்?

  • பயிற்சிகளின் போது சோம்பேறித்தனமும், சலிப்பும் இருப்பது இயல்புதான். ஆனால் எப்படிப் போட்டியின்போது மட்டும் முழு உத்வேகம் ஏற்பட்டு புதிய சாதனைகளைப் படைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள் ?

  • அன்றாடும் பழக்கப்பட்ட கால்களுக்கு, அதே வேகம் தானே வரும். திடீரென்று போட்டியில் வேகத்தை அதிகரித்தால் சீக்கிரமே சோர்வடைய மாட்டார்களா என்ன? பழக்கப்படாத வேகம் விபத்தை ஏற்படுத்தாதா?


கடைசி நிமிட அதிசயத்தை எதிர்பார்த்தல்


இந்தக் கேள்விகள் விளையாட்டுத் துறைக்கானது மட்டுமன்று. உங்களின் வாழ்க்கை பாதைக்கும், இலட்சியங்களை அடைய நீங்கள் திட்டமிட்டவைகளுக்கும் பொருத்திப் பாருங்கள். அன்றாடம் செய்வதையே எந்த ஒரு மாற்றமும், முன்னேற்றமும் இன்றி செய்துகொண்டிருந்தால், இலக்குகளை எப்படி குறிப்பிட்ட தேதிக்குள் அடைவது ? கடைசி நிமிடத்தில் அதிசயங்கள் நிகழும் என்று எதிர்பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் என்ன திரைப்பட கதாநாயகரா – அசாத்தியங்கள் அன்றைக்கு நிகழ?


இறுதி நாட்களில் வேகமாக செய்து முடித்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள், அதை கட்டாயம் காலக்கெடுவுக்குள் முடிக்க முடிவதில்லை. அப்படியே முடிந்தாலும், கடைசி நேர அவசரத்தில் செய்பவர்கள் தரத்திலே குறை ஏற்படுத்தி விடுகின்றனர்.


இலக்கு தினம்தினம் அடையப்படவேண்டியது


விளையாட்டில், 140 நிமிடங்களில் முடிக்கும் இலக்கை, அன்றாட பயிற்சியின் மூலம் ஒவ்வொரு நிமிடமாய் குறைத்து 139,...138,..... 137,.... என்று கால்களையும், உடலையும் பழக்கப்படுத்தினால், நம்முடைய கால்கள் எந்தநாளும் 120 நிமிடங்களுக்குள் இலக்கை கடக்க தயாராய் இருக்கும்.


போட்டி நாளன்று மட்டும் நான் இலக்கை அடைந்துவிடுவேன் என்று சொல்லித் திரிபவர்களால் என்றுமே இலக்கை அடைய முடியாது. அன்றாடம் அந்த இலக்கை அடைந்து பயிற்சி செய்து விட்டால், போட்டியின்போது கண்னைக் கட்டியும் போட்டியை வெல்லலாம்.


அன்றாடம் பழக்கப்பட்ட கால்களால், அதன் பழகிய வேகத்தை எளிதில் மறுமுறை நிகழ்விக்க முடியும். அன்றாடம் பழக்கப்படுத்துவதென்பது, தினம்தினம் உங்களை நீங்கள வெற்றி கொள்ளுவதாகும்.


திருவிழா என்றே தயாராகுங்கள்


ஒவ்வொரு நாளும் இலக்குகளை வகுத்து வெற்றி கொள்ள வேண்டும். திருவிழா நாள் மட்டும் சாதிப்போம் என்பவரால் எதையுமே சாதிக்க முடியாது. தினம் தினம் தன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி பயிற்சிகளை மேம்படுத்தி புதிய உச்சத்தை தொடுபவன், என்றென்றும் வெற்றி பெறத் தகுதிபெறுகிறான்.


வெற்றிபெற நினைப்பவனுக்கு, போட்டி நடக்கும் அந்த ஒரு நாள் மட்டுமே திருவிழா நாள் அல்ல. எல்லா நாளும் திருவிழா என்று எண்ணிக்கொண்டு தினம்தினம் தனது ஆற்றலை மேம்படுத்தி சாதிப்பவனால் மட்டுமே சரித்திரம் போற்றும் சாதனையாளனாக முடியும்.


மறவாதீர் !!


வெற்றி பெற பயிற்சி செய்யவேண்டும்

செய்யும் பயிற்சி இன்றைய கடமை என்றில்லாமல்,

அன்றாடம் புதிய வெற்றிகளை நோக்கி இருத்தல் வேண்டும்.


ஒவ்வொரு நாளும் திருவிழாதான்.

தினம் தினம் உங்களை நீங்கள் வெற்றி கொண்டால்,

நாளடைவில் உங்களை வெற்றி கொள்ள – உலகில்

உங்களை தவிர வேறொருவரும் இல்லை என்றாகிடுமே!!



- [ம.சு.கு – 05-02-2022]




Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page