“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-342
கவனச் சிதறல்களை தவிர்க்க...!
ஒவ்வொரு நாளும், அலுவலகம் செல்லும் போது, அன்றைய தினம் என்னென்ன செயல்களை செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுக்கொண்டு, ஒரு மனக்கணக்கு போட்டுக்கொண்டே வருகிறோம். ஆனால், அலுவலகத்தில் வேலையை ஆரம்பித்தவுடன், அடிக்கடி ஏதேனுமொரு தொலைப்பேசி அழைப்பு வந்து வேலையை இடையூறு செய்யும். அல்லது சக ஊழியர் யாராவது வந்து பேச ஆரம்பித்தால், 15-30 நிமிடங்கள் காணாமல் போய்விடும். ஒரு காரியத்தை முடிக்கலாம் என்று எடுத்து செய்துகொண்டிருக்கும்போது, வேறு ஏதேனுமொரு வேலை வருகிறது. எந்தவொரு சிந்தனையும் இல்லாமல், உங்கள் கவனம் அந்த புதிய காரியத்தின் மீது சென்றுவிடுகிறது. அரைமணிநேரம் கழிந்தபின்தான், முதலில் தொடங்கிய வேலை அப்படியே இருப்பது உங்களுக்கு உறைக்கிறது. இப்படி அனுதினமும் நடந்துகொண்டிருந்தால், உங்கள் இலட்சியத்தை எப்படி சீக்கிரம் அடைவது?
10-15 ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் படிப்பின் மீது கொண்டிருந்து கவனத்தின் அளவில் பாதியளவுகூட இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடம் இல்லை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மாணவர்கள் கல்லூரி வகுப்பில் அமர்ந்திருந்தாலும், அவர்களின் கவனம் பேராசிரியரின் விளக்கங்களின் மேல் இருப்பதில்லை. தங்கள் மேசையில் வைத்திருக்கும் கைபேசியின் மேல்தான் இருக்கிறது. அன்று கல்லூரிக்கு வராமல் விடுப்பெடுத்து ஓரிருநாள் திரைப்படத்திற்கு சென்றார்கள். இன்று தினமும் கல்லூரிக்கு வந்து முழுப்பொழுதையும் கைப்பேசியிலேயே கழிப்பதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு கல்லூரியில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து 50%-க்கும் கீழ் சென்றுவிட்டதாக குறைகூறுகின்றனர். இவையனைத்தும், கைப்பேசியெனும் ஒரு மாயாஜால கருவியின் மறுபக்க விளைவு என்று புரிந்திருந்தும், யாரும் திருந்துவதும் இல்லை – திருத்துவதும் இல்லை!
அலுவலகத்தில் ஒரு மேலாளராக இருப்பவருக்கு தொடர்ந்து பல திசைகளில் இருந்து வேலைகளும், கவனச் சிதறல்களும் வந்து கொண்டேதான் இருக்கும். கையில் இருக்கும் வேலையின் அவசர-அவசியத்தைப் பொறுத்து, மற்ற வேலைகளின் மீதான கவனத்தை குறைப்பதும் / தவிர்ப்பதும் கவனத்தோடு செய்யவேண்டும். அந்த கவனச் சிதறலை கவனிக்காமல் விட்டு, புதியவற்றின் பின்னால் ஓடினால், எதையுமே முடிக்கமுடியாமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
இன்று கவனச்சிதறல்கள் வெளியிலிருந்து வரவேண்டியதில்லை. எல்லோரும் அதை கையிலேயே எடுத்துக்கொண்டு திரிகிறார்கள். ஒரு “கீக்” சத்தம் வந்தால், உடனே அந்த கைபேசியை எடுத்த என்னவென்று முழுவதுமாக பார்த்துவிட்டு கீழே வைக்க 10-15 நிமிடம் ஆகிறது. படிக்க உட்காரும் மாணவர்கள், தங்கள் அருகில் கைபேசியை வைத்திருந்தால், ஒரு மணநேரத்திற்கு ஒருபக்கம் கூட படித்து முடிப்பதில்லை. அதற்குள் ஏதாவதொரு நண்பன் குறுஞ்செய்தி அனுப்பி, அந்த மாணவனை கைப்பேசியை எடுக்கவைப்பான். கைப்பேசியில் அந்த குறுஞ்செய்தியை மட்டும் பார்த்துவிட்டு கீழே வைக்காமல், சமூகவளைதளங்களை திறந்து என்ன வந்திருக்கிறதென்று பார்க்கத்துவங்கி 15 நிமிடங்களை ஓடி விடுகின்றன. சிலசமயங்களில் மணிக்கணக்கிலும் அதில் இலயித்துவிடுகிறார்கள். தன் நண்பன்/நண்பியோடு ஒரு நிமடத்தில் நேருக்கு நேர் பேசி முடிக்கவேண்டிய விடயத்தை ஒன்பது மணிநேரம் கைப்பேசியில் செய்திகளாய் பரிமாறி நேரத்தை வீண்டிக்கின்றனர்.
இப்படி படிப்பிலிருந்து கவனம் தவறுவதை யார் கவனிக்க வேண்டும். மாணவர்களை, அவர்களின் பெற்றோர்கள் காவலர் போல் எப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்க முடியுமா? அதை அந்த மாணவர்கள் விரும்புவார்களா? அப்படியிருக்கக் கூடாதென்றால், இந்த கவனச் சிதறல்களை கவனமாக யார் கையாள வேண்டும்?
இன்றைய காலகட்டத்தில் கைப்பேசி அவசியம்தான். ஆனால் அதில் கவனத்தை செலுத்தி,
மாணவர்கள் படிப்பை கவனிக்காமல் விட்டால், யாருக்கு நஷ்டம்?
அலுவலகத்தில் வேலைகளை கவனிக்காமல் கைப்பேசியில் நேரம் கழித்தால் எப்படி வேலைகள் முடியும். வேலைமுடியாவிட்டால் எப்படி மேலதிகாரி உங்களை சும்மா விடுவார்?
வீட்டில் தொடர்நாடங்களை பார்த்துக்கொண்டு சமையலில் சொத்ப்பினால், யார் அந்த உணவை உண்பது?
ஓட்டப்பந்தயத்தில் களத்தை கவனிக்காமல் பக்கத்து வீரரின் செயல்பாட்டை கவனித்தால், வேறொருவர் உங்கள் முந்துவது தெரியாமலே போய்விடுமே!
விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க மேனகையை இந்திரன் அனுப்பி வெற்றிகொண்டார். உங்கள் கவனத்தை சிதைக்க, ஆசை வார்த்தைகள் நிறைய வரும். சில கவனச்சிதறல்கள், எதிரிகளால் திட்டமிட்டு நடத்தப்படலாம். பல கவனச் சிதறல்கள், அன்றாட வாழ்வில் வழக்கம்போல வந்துபோகும். கவனச் சிதறல்களை பெரும்பாலும் உங்களால் தவிர்க்கமுடியாது. ஆனால் அப்படி கவனச் சிதறல் ஏற்படுவதை உடனுக்குடன் உணர்ந்து உங்கள் கவனத்தை இழுத்துவந்து செய்யும் செயலில் உட்கார வைக்கவேண்டியது உங்களின் கடமை. அதை செய்யத் தவறும்போதும் / தாமதிக்கும்போதும், எண்ணற்ற நேரங்கள் தேவையற்றவற்றில் வீணாகிவிடுகின்றன.
உங்களை கவனச்சிதறல்களை தவிர்க்க, என்ன செய்யலாம்;
படிப்பதற்கும் / வேலை செய்வதற்கும் ஏற்றதொரு தனிமையான இடத்தை நிர்ணயித்து, மற்றவர்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்;
முடிந்தவரை, கைபேசியில் அழைப்பு மணியை தற்காலிகமாக நிறுத்திவையுங்கள்;
என்ன செய்ய வேண்டும், மற்ற வேலைகளை எப்போதைக்கு தள்ளிப்போட வேண்டும் என்று தெளிவுபட முன்கூட்டியே தீர்மாணித்து வையுங்கள்;
முடிந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு உங்கள் இணையத்தை துண்டித்து வையுங்கள்;
பிற ஒலிகள் உங்கள் கவனத்தை ஈர்க்காத வண்ணம் காதுகளில் ஏதேனுமொன்றை அணிந்து கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட காலநேரத்திற்கொரு முறை இடைவெளி எடுத்த மற்ற அவசர காரியங்களை அதற்குள் பார்த்து எல்லாவற்றையும் சமன் செய்து கொண்டு செல்லுங்கள்;
தேவைப்பட்டால், உங்கள் செயல்களை உங்கள் குடும்ப உறுப்பினர், நண்பர், சக ஊழியர் ஒருவரிடம் கண்காணித்து சுட்டிக்காட்டச் சொல்லுங்கள்;
உங்கள் ஒன்றுபட்ட கவனம்தான் வெற்றி. கவனம் சிதறுவது இயல்பு. அதை நீங்கள் எவ்வளவு சீக்கிரத்தில் பிடித்திழுத்து மீண்டும் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைப்பொறுத்து உங்கள் வெற்றியின் வேகம் அதிகரிக்கும்;
ஒன்றைச் செய்துகொண்டிருக்கும்போது
ஒன்பது புதிய வேலைகள் வருகின்றன;
செய்வதில் கவனம் செலுத்தி முடிக்காமல்
புதியவற்றை செய்வதற்கு தாவினால்
இருப்பதும் முடியாது, புதியதும் முடியாது;
ஒருசெயலை முடிக்க, அந்த
ஒரு செயலில் முழுக்கவனமும் செலுத்தினால்தான் முடியும்ந
ஏதேனும் காரணங்களால் கவனம் சிதறும் போதெல்லாம்
அதை பிடித்திழுத்துவந்து
செய்வதை கவனமாகச் செய்பவர்களே
இருப்பதை நன்றாக முடித்து
அடுத்ததை எடுத்து செயல்பட முடிகிறது;
கவனம் சிதறாமல் கவனம் செலுத்தி
எல்லாவற்றிலும் வெற்றி காண வாழ்த்துக்கள்!!
- [ம.சு.கு 16.09.2023]
コメント