“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-328
வேண்டாதவற்றை சீக்கிரம் விலக்குங்கள்..!
ஒருவர் வீட்டை காலி செய்து வேறு ஒரு சிறிய வீட்டிற்கு இடம் மாற்றினார். தன்னிடம் உள்ள பொருட்களுக்கு புதிய இடம் போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அவரது மனைவியின் அறிவுரையின் பேரில், தேவையில்லாத சிலவற்றை கழிக்க ஆரம்பித்தார். 10-20 ஆண்டுகளாக இது தேவைப்படும், அது தேவைப்படும் என்று எடுத்துவைத்தவைகளை பார்த்து அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சமயத்தில் தேவைப்படும் என்று எடுத்து அலமாரியின் உள்ளும், பெட்டிக்குள்ளும் போட்டு வைத்துவிடுகிறோம். சில மாதங்களில் அதை அப்படியே மறந்து விடுகிறோம். அப்படித்தான் அவரது வீட்டில் எண்ணற்றவற்றை சேர்த்து வைத்திருந்தார்கள். எண்ணற்ற பெட்டிகள் தேவையில்லை என்றை காலியானபோது, அவர்களின் புதுவீடு சிறிதாக இருந்தாலும், அளவான பொருட்களுடன் விசாலமாகவும், போதுமானதாகவும் இருந்து. அப்படி உங்கள் வீட்டில் என்னென்ன பொருட்களை தேவையில்லாமல் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்?
ஒரு தொழிற்சாலையில் நிறைய பொருட்கள் குவிந்திருந்தன. எண்ணற்ற இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களும், எண்ணற்ற உபகரணங்களும் இருந்தன. ஒரு புறம் மூலப்பொருட்கள் நிறைய குவிந்திருந்தன. இனி புதிதாய் வரும் பொருட்கள் வைக்க இடமில்லை. அதேசமயம் உள்ளே இருக்கும் பொருட்களும் வெளியேறுவதாய் தெரியவில்லை. அந்த இருப்புக்களையெல்லாம் தணிக்கை செய்த அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், 20% உதிரி பாகங்களுக்கான மூல இயந்திரம் இப்போது நிறுவனத்தில் இல்லை, 25% மூலப்பொருட்கள் (இரசாயனம் சார்ந்தவை) காலாவதியாகி விட்டன, 15% மூலப்பொருட்கள் சார்ந்த உற்பத்தி முன்னரே நிறுத்தப்பட்டுவிட்டன, 10% உதிரி பாகங்களும், உபகரணங்களும் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 50% மேலான பொருட்கள் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதோடு, அந்த நிறுவனத்தின் நடப்பு மூலதனம் சில கோடிகளையும் முடக்கியிருக்கிறது!!
வீட்டில் தேவையில்லாதவற்றை, நாளைக்கு ஒருவேளை தேவைப்பட்டால், அன்றைக்கு தேவையில்லாமல் காசு கொடுத்து வாங்கவேண்டிவரும் என்பதற்காக, எல்லா பொருட்களையும் அப்படியே வைக்கிறோம். இது வீட்டில் மட்டுமல்ல, பல அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் பொதுவாக நடக்கும் விடயமே. தேவையில்லாத பொருட்கள், தேவையில்லாத காகிதங்கள், அறிக்கைகள், கோப்புகள் என்று சேர்த்துக் கொண்டே இருந்தால், நிறுவனத்தில் இடப் பற்றாக்குறைதான் வருகிறது. மேலும் எதை வைத்திருக்கிறோம், எங்கு வைத்திருக்கிறோம் என்ற குழப்பம் அதிகரிக்கிறது.
இடப்பற்றாக்குறை ஒருபக்கம்;
குவியலினுள் எங்கிருக்கிறதென்று தேடுவதற்கு எண்ணற்ற தேரம் வீணாவதொரு பக்கம்;
இருப்பது தெரியாமல், அதையே திரும்பவும் புதிதாய் வாங்குவது ஒருபக்கம்;
தேவையில்லாத நடப்பு மூலதன முடக்கம் ஒருபக்கம்;
இப்படி தேவையில்லாதவற்றை நிறைய சேர்த்தால், எண்ணற்ற சிக்கல்களுடன், உங்கள் வளர்ச்சியும் நிறைய தடைபடும். சில சமயம் உங்களிடம் இருப்பது, எங்கு, எப்போது தேவைப்படும் என்று தெரியாது. ஆனால் அது இருந்தால், அவசர காலங்களில் உதவியாக இருக்கும். அப்படி இருந்தால் பரவாயில்லை என்று நிறைய பொருட்களை வைப்பதற்கு அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் இடவசதி இருக்கவேண்டும்.
கிராமங்களில் எதையும் அவ்வளவு சீக்கிரம் தூக்கிவீசமாட்டார்கள். ஒரு பழுதுபட்ட கதவைக்கூட வீட்டின் பின்புறம் போட்டு வைப்பார்கள். அதன் மரமும், பலகையும் வேறு பயன்பாட்டிற்கு தேவைப்படும் என்பதற்காக. ஆனால் இடப்பற்றாக்குறையுடன் வாழும் நகரங்களில் அது சாத்தியமில்லை. இங்கே சதுர அடி கணக்கில் இடமும், வீடும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. கடை & நிறுவனங்களின் வாடகை சதுர அடிகளில் இருக்கும்போது, இப்படி தேவையற்ற பொருட்களை வைத்து இடத்தை அடைத்து, தேவையில்லாமல் வாடகை கொடுப்பது முட்டாள்தனம் தானே!
என்னென்ன வகையான தேவையற்றவற்றை, தேவையில்லாமல் சுமந்து கொண்டிருக்கிறோம்:
தேவையற்ற மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள், உபகரணங்கள்
தேவையற்ற இடம், அதற்கான வாடகை, வட்டி....
தேவையற்ற செலவுகள், அதனால் உருவாகும் கடன்கள்....
அளவிற்கதிகமான ஊழியர்கள், அதனால் ஏற்படும் உற்பத்தி பாதிப்பு.....
தேவையில்லாத வேலை தாமதங்கள் (நாளை செய்யலாம் என்று தள்ளிப்போடும் பழக்கம்)
தேவையில்லாத சண்டை-சச்சரவுகள், வழக்குகள்
தேவையில்லாத போட்டி பொறாமைகள், வஞ்சனைகள், சூதுகள்
நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தேவையில்லாதவற்றிலிருந்து விலகி இருக்கிறீர்களோ, தேவையில்லாதவற்றை உடனுக்குடன் விலக்குகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு, உங்கள் பணம் முடங்குவதை தவிர்ப்பதுடன், வேலையின் வேகம் அதிகரித்து, உற்பத்தி அதிகரிக்கும்.
உங்களிடம் நிறைய பொருட்கள் வந்துகொண்டே இருக்கும்
அவற்றில் எதுவெல்லாம் இப்போது பயன்படும்
எதுவெல்லாம் நாளை பயன்படும்
எந்த பொருட்கள் உங்களுக்கு தேவையே இல்லை!
இந்த கேள்விகளுக்கான பதில்களுக்கு ஏற்ப
அந்த பொருளை பத்திரப்படுத்துவதா இல்லை விடுவதா!
என்று தீர்மாணிக்க வேண்டும்!!
இன்று தேவையில்லை – ஆனால்
எதிர்காலத்தில் என்றைக்காவது தேவைப்படலாம் என்று
எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டே இருந்தால்,
இருக்கிற வீட்டைப்போல இரண்டுமடங்கு
பொருள் வைக்க கட்டவேண்டிய காட்டாயம்தான் வரும்!!
தேவையானதை பத்திரப்படுத்துங்கள்
தேவையற்றதை சீக்கிரத்தில் கழித்துவிடுங்கள்
இது பொருள், நேரம், மனிதர்கள் என்று எல்லாவற்றிக்கும்
வெவ்வேறு விதங்களில் பொதுவான விதிதான்!!
- [ம.சு.கு 03.09.2023]
Comments