top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 309 - வியாபாரமும் – செயல்திறன் அளவீடுகளும்!"

Updated: Aug 15, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-309

வியாபாரமும் - செயல்திறன் அளவீடுகளும்...!"


  • ஒரு வாடிக்கையாளர் சேவை நிறுவனம், தன் வியாபாரத்தை விரிவுபடுத்த விளம்பரங்களை அதிகப்படுத்தி புதியவாடிக்கையாளர்களை சேர்க்க கடுமையாக முயற்சித்தது. சந்தைப்படுத்தல் துறைக்கு அதிக அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் நியமித்து புதிய வாடிக்கையாளர் சேர்ப்பை வேகமாக அதிகரித்தது. நிறுவனத்தின் திட்டம் நன்றாக செயல்பட்டது. ஆயிரமாயிரம் புதிய வாடிக்கையாளர்கள் ஓவ்வொரு மாதமும் புதிதாய் சேர்ந்தனர். ஆனால் ஆண்டு இறுதியில் வர்த்தக அளவையும், இலாபக் கணக்கையும் பார்த்தபோது, முதலாளிக்கு பேரதிர்ச்சி. வர்த்தக அளவில் பெரிதாய் மாற்றமேதுமில்லை. இலாபகரமாக இருந்ததுவந்த வியாபாரம், அதிக விளம்பரச்செலவால் நஷ்டமாக மாறியிருந்தது. ஏன் என்று பார்க்கும்போது, புதிய வாடிக்கையாளர்கள் ஒருபுறம் சேர, மறுபுறம் சேவை குறைபாட்டின் காரணமாக பழைய வாடிக்கையாளர்கள் பலர் விலகியிருந்தனர்!

  • அரசாங்க முதன்மை போட்டித் தேர்விற்கு ஒருவர் தயாராகிக் கொண்டிருந்தார். முதன்மைத் தேர்வு மிகவும் கடுமையாக இருக்கும் என்பதை அறிந்து, பல புத்தகங்களை, நடப்புச் செய்திகளை படித்தறியவேண்டிய அவசியம் இருந்தது. மொழிப்பாடம், கணிதம், நாட்டு நடப்பு என்று பல பாடங்கள் கொண்ட தேர்வில், ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வும் கடுமையாக இருக்கும். நாட்டு நடப்பு குறித்த விடயங்களை படிக்க ஆரம்பித்த அவர் தொடர்ந்து 4-5 மாதங்கள் அதிலேயே மூழ்கினார். கிட்டதட்ட தேர்வு நாட்கள் நெறுங்கத் துவங்கி விட்டன. ஆனால் மற்ற பாடங்களை அவ்வளவாக படிக்கவில்லை. ஒருபாடத்தில் மூழ்கி நிறைய நேரம் செலவிட்டதால், ஏனையவற்றை படிக்க நேரமில்லாத சூழ்நிலை. இப்படித்தான் பல தேர்வுகளுக்கு தயாராகின்றவர்கள் திணறுகிறார்கள்.

வியாபார வளர்ச்சிக்கு, புதிய வாடிக்கையாளர் சேர்க்கை முக்கியம். அதேசமயம், இருக்கின்ற வாடிக்கையாளர்கள் தக்கவைப்பதும் முக்கியம்தானே. புதிய வாடிக்கையாளரோ, பழையவர்களோ, யாரானாலும் அவர்கள் உங்களிடம் வருவதற்கு காரணம் முறையான சேவை எதிர்பார்ப்பு. அந்த சேவை சரிவர இல்லையென்றால், உங்களின் இருப்பில் என்ன பயன்? வியாபார விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி, அதிக விளம்பரச் செலவு செய்தவர், இருக்கின்ற வாடிக்கையாளர்கள் தேவையை, சேவை குறைபாடுகளை கவனிக்காமல் விட்டதால், வாடிக்கையாளர் வளர்ச்சி பயனற்றதாய் போனது. உங்கள் வியாபாரத்தின் வாடிக்கையாளர் சேர்ப்பு ஒரு முக்கிய வளர்ச்சிக் குறியீடாக இருக்கலாம். ஆனால் அதைச் சார்ந்த மற்ற குறியீடுகளின் செயல்திறனும் அதிமுக்கியம். வாடிக்கையாளர் தக்கவைப்பு, வாடிக்கையாளர் சேவை திருப்தி என்று எண்ணற்ற முக்கிய குறியீடுகளை வியாபாரத்தில் கவனிக்கத் தவறியதால், வளர்ச்சித் திட்டம் முழுமையடையவில்லை.


தேர்விற்கு என்ன படிக்க வேண்டும்? எவ்வளவு படிக்கவேண்டும்? எதற்குள் எத்தனை முடிக்கவேண்டும்? என்ற திட்டமிடலும், அந்த திட்டப்படி அன்றாடம் செயல்படுகிறோமா? முடித்தவை எவ்வளவு? தவறவிட்டவை எவ்வளவு? என்ற அளவீடுகளை கவனிக்கத் தவறும் பட்சத்தில், பலவற்றை படிக்கமுடியாமல் தவறவிட நேர்கிறது. 1 மாதம் மட்டுமே இருக்கும் பட்சத்தில், 6 பாடங்களை இருந்தால், சராசரியாக 5 நாட்கள் தான் செலவிடமுடியும். ஆனால் கவனிக்காமல் ஒரே பாடத்தில் 20 நாள் மூழ்கினால் என்னாவது. என்னென்ன? எத்தனையெத்தனை? எப்பெப்போது? எங்கெங்கு? என்ற குறியீடுகள் வியாபாரத்திற்கு மட்டுமல்லாமல், கல்வி, விளையாட்டு, அன்றாட வாழ்க்கை என்று எல்லாவற்றிலும் கவனிக்கவேண்டிய அவசியம் இன்றைய அவசர உலகில் நிலவுகிறது!


ஒரு நிறுவனத்தின் அனைத்து முக்கிய செயல்திறன் குறியீடுகளையும் பட்டியலிட வேண்டும். யார்யார் எந்தெந்த குறியீடுகளுக்கு பொருப்பேற்க வேண்டுமென்ற தெளிவு நிறுவனத்தில் இருக்க வேண்டும். புதிய வாடிக்கையாளர் சேர்க்கையை சந்தைபடுத்தும் துறை தலைவர், வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டு குறியீடுகளை சேவைத் துறை தலைவர், பண வரவு-செலவு குறியீடுகளை நிதித்துறை தலைவர் என்று ஒவ்வொருவரும் பொருப்பெடுத்து அன்றாடம் கவனித்தால் மட்டுமே, அவற்றில் எந்தவித சரிவும் ஏற்படாமல் தொடர்ந்து வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும்.

  • புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கை ஒருபுறம் இருக்க, பழைய வாடிக்கையாளர்கள் எத்தனை பேர் தொடர்கிறார்கள், அவர்களுக்கான சேவை திருப்தி எந்தளவு உள்ளது என்ற குறியீடுகளும் முக்கியம்!

  • வர்த்தகத்தில் 10% இலாபம் வருகிறதென்று சந்தோஷம் இருக்கலாம். ஆனால் நீங்கள் முதலீடு செய்துள்ள தொகைக்கு எத்தனை சதவிகிதம் இலாபம் / பங்கு என்ற குறியீடுகளை கவனிக்காவிட்டால் அந்த இலாபத்தினால் பெரிய பயனிருக்காது!

  • ஊழியர்கள் தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வார்கள். தினம்தினம் தவறாமல் வேலை நடக்கும். ஆனால் உற்பத்தி அளவு தொடர்ந்து வளர்ச்சி காண்கிறதா? என்று கேட்டால், ஊழியர் உற்பத்தியளவு குறியீடுகள் இல்லாமல் எப்படி பதில் சொல்வது!

நீங்கள் நன்றாக வேலைசெய்யலாம். உங்கள் ஊழியர்களும் நன்றாக வேலைசெய்யலாம். ஆனால், உங்கள் வேலையினால் வளர்ச்சி ஏற்படுகிறதா? அல்லது ஆங்காங்கே பின்னடைவு ஏற்படுகிறதா என்று எப்படி தெரியும்! உங்கள் இலக்கை நோக்கி சரியாக முன்னேறுகிறீர்களா? இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று எப்படித் தெரியும்.


துறை எதுவானாலும், நிறுவனம் எதுவானாலும், அங்கு நடக்கும் எல்லாச் செயல்களுக்கும் முக்கிய செயல்திறன் குறியீடுகள் என்ன என்று நிர்ணயித்து, அவற்றைத் தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே, உங்கள் நிறுவனம் முழுமையான வளர்ச்சியை நோக்கி பயனிக்கமுடியும்;

  • வாடிக்கையாளர் சேர்க்கை, தக்கவைப்பு தெரியவேண்டும்;

  • செலவுகளின் அளவு, இலாபத்தின் அளவு, முதலீட்டிற்கான பங்கு தெரியவேண்டும்;

  • ஊழியர்களின் உற்பத்தியளவு, செயல்திறம் தெரியவேண்டும்;

  • இயந்திரங்களின் செயல்பாடு, உற்பத்தியளவு, செலவுகள் பற்றித் தெரியவேண்டும்;

  • வாங்கப்படும் பொருட்களின் தரம், விலை, நேரம் பற்றித் தெரியவேண்டும்;

  • புதிய ஆராய்ச்சிகள், அதற்கான முதலீடு பற்றித் தெரியவேண்டும்;

  • சமுதாயத்தின் தாக்கம், பாதிப்பு குறித்து தெரியவேண்டும்;

  • சந்தை நிலவரம், போட்டியாளர்கள் நிலவரம் குறித்து தெரியவேண்டும்;

இப்படி ஒவ்வொரு வியாபாரத்திலும், எண்ணற்ற விடயங்களை தொடர்ந்து தெரிந்துகொண்டே இருக்க வேண்டும். இவையனைத்தும் செயல் திறம் குறியீடுகளாய் பட்டியலிட்டு, தினம்தினம் கவனித்து நிர்வகித்தால் மட்டுமே, எதை நோக்கி, எப்படி முன்னேறுகிறோம் என்று சொல்லமுடியும்; உங்கள் நிறுவனத்தில் இப்படியான செயல்திறன் குறியீடுகள் இல்லாவிட்டால், உங்களால் எப்படி வளர்ச்சியை கணக்கிட முடியும்?


என்ன செய்யவேண்டும் - என்ன செய்துகொண்டிருக்கிறோம்!

எவ்வளவு செய்யவேண்டும் – எவ்வளவு செய்திருக்கிறோம்!

என்று அளவிடத் தவறினால்

இப்போது எங்கிருக்கிறீர்கள், இலக்கு எப்போது சாத்தியப்படும்

என்று எப்படி அறிந்துகொள்ள முடியும்!


படிப்போ, வியாபாரமோ, விளையாட்டோ, கேளிக்கையோ

செய்வது எதுவானாலும் - எப்படி செய்கிறோம் என்பதைத் தாண்டி

என்னென்ன? எப்போது? எவ்வளவு? செய்யவேண்டுமென்ற

செயல்திறன் குறியீடு நிர்ணயித்து

செய்வதை சரியாக செய்கிறோமா? என்று அளவீடு தெரிந்து செய்தால்

உங்கள் இலக்குநோக்கிய பயணம் சரியாகப் போகும்!!


நீங்கள் வளர்ச்சியும், வெற்றியும் காணவிரும்பினால்

நீங்கள் செய்யவேண்டியவற்றிற்குரிய

எல்லா முக்கிய செயல்திறம் குறியீடுகளையும் சரிவர நிர்ணயித்து

உரியவரை பொறுப்பேற்கச் செய்து நிர்வகித்தால்

வெற்றி நிச்சயம்!


- [ம.சு.கு 14.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page