top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 307 - ஊழியர்கள் – மனிதர்கள்! இயந்திரமல்ல!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-307

ஊழியர்கள் - மனிதர்கள்! இயந்திரமல்ல!.."


  • ஒரு கட்டுமான தளத்தில், பழுதூக்கும் இயந்திர ஓட்டுனர், மாலையில் தன் பணியை முடித்துவிட்டு கிளம்பினார். அடுத்த பணிநேரத்திற்குரிய ஓட்டுனர் வராத காரணத்தினால், இரவு வேலையை இந்த முதல் ஓட்டுனரை கூடுதலாக கவனிக்குமாறு அவரது மேலாளர் உத்தரவிட்டார். ஊழியர் சற்று களைப்பாக இருக்கிறதென்று கூறினாலும், வேறு வழியில்லாத காரணத்தினால், உத்தரவை ஏற்று பணியாற்றினார். நள்ளிரவு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட பழுதூக்கும்போது, சிறிய மற்ற ஊழியர்கள் தகவலில் ஏற்பட்ட சிறிய குழப்பத்தினாலும், ஓட்டுனரின் களைப்பினாலும் சிறிய விபத்து நேர்ந்தது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லாவிட்டாலும், தூக்கப்பட்ட சில பொருட்கள் உடைந்துவிட்டன. இந்த விபத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை மேற்கோள்காட்டி, அந்த ஓட்டுனரை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். மேலும் அவருக்கு தரவேண்டிய பணிக்கொடை மற்றும் இதர நிதிகளை நஷ்டத்திற்கு ஈடாக பிடித்தம் செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது!

  • ஒரு தொலைபேசி நிறுவன வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பு வந்தது. பெரும்பாலான சேவை உதவிகள் தானியங்கி ஆக்கப்பட்டதால், ஊழியருக்கு பதிலாய், இயந்திரத்தின் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்த பதில்களும், தீர்வுகளும் வாடிக்கையாளருக்கு உடனடியாக வழங்கப்பட்டன. இந்த முறை அழைத்த வாடிக்கையாளரின் பிரச்சனை மாறுபட்டிருந்தது. அதற்கான சரியான தேர்வு பொத்தான் எதுவும் தானியங்கியில் சொல்லப்படாததால் வாடிக்கையாளர் செய்வதறியாது முழித்தார். கிட்டத்தட்ட 10-12 முறை அன்றைய தினம் முயன்றும் அவருக்கு அந்த தானியங்கியில் விடை கிடைக்கவில்லை. மேற்கொண்டு சேவை அலுவலரிடம் பேசவும் வழி தெரியவில்லை. மாலையில் வாடிக்கையாளரின் அன்றைய சேவை அழைப்புக்கள் குறித்த அறிக்கையை மேலோட்டமாக பார்த்த மேலதிகாரி, ஒரு குறிப்பட்ட எண்ணிலிருந்து தொடர்ந்து பலமுறை முயன்றிருப்பது கண்டு, தன் ஊழியரிடம் அந்த எண்ணை அழைத்து பிரச்சனை தீர்ந்ததா என்று கேட்டறியச்சொன்னார். ஊழியர் வாடிக்கையாளரை அழைத்தபோது, அவர் மிகவும் கோபமாக இருந்தார். அந்த அலுவலரின் பொறுமையான அனுகுமுறையில் அவர் சாந்தமடைந்து பிரச்சனையை கூற, ஒரு நிமிடத்தில் அவரது கைபேசியில் இருந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது. இயந்திரத்தால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அவ்வப்போது மனித மூளையின் சிறிய பங்களிப்பிருந்தால்தான், சில சிக்கல்களுக்கு தீர்வுகிடைக்கும்!

களத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட பணிநேரத்திற்குப்பின் ஓய்வு கட்டாயம், ஏனெனில் மனித உடல் தொடர்ந்து 24 மணிநேரமும் விழிப்புடன் இயங்க கட்டமைக்கப்படவில்லை. அந்த ஓய்வு கொடுப்பதற்கான பணிநேர முறைமைகள் இருந்தாலும், ஆட்கள் குறைபாட்டால் ஊழியர்களை அதிக நேரம் வேலைவாங்குவது சர்வசாதாரணமாக நடக்கிறது. ஆனால், அப்படி கூடுதலான நேரம் வேலைவாங்கும்போது, களைப்பினால் சில தவறுகள் நேரக்கூடும். அதற்காக அந்த ஊழியரை கடுமையாக தண்டிப்பது நியாயமாகாது. அந்த வழக்கில் நீதிமன்றம் ஊழியருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதோடு, நஷ்டஈடும் வழங்க உத்தரவிட்டது. இந்த யதார்த்தத்தை அந்த நிறுவனமே புரிந்து செய்திருந்தால், தேவையற்ற வழக்கும், ஊழியர்களின் நம்பிக்கை இழப்பும் இருந்திருக்காது.


இயந்திரத்தை இயக்கும்போதும், அந்த இயந்திரம் அதிக சூடேறி பழுதாவதை தவிர்க்க, குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை இயந்திரத்தை நிறுத்தி ஓய்வு கொடுக்கிறார்கள். உயிரில்லாத இயந்திரத்திற்கே ஓய்வு தேவைப்படும்போது, உயிரும்-சதையுமாக இருக்கும் மனிதனுக்கு குறைந்தபட்ச ஓய்வு கொடுக்கப்படாவிட்டால், மனித தவறுகள் நேர வாய்ப்புகள் அதிகமாகிவிடுமே! ஓய்வு கொடுக்காமல் வேலைவாங்க முயற்சித்து, விபத்து ஏற்பட்டால், நஷ்டம் எல்லோருக்கும்தானே!!


வாடிக்கையாளர் சேவையில் இயந்திரமயமும், தானியங்கி பதில்களும், பல வழக்கமான பிரச்சனைகளுக்கு சீக்கிரம் தீர்வளிக்கிறது. ஆனால் அன்றாட வாழ்வில் எப்போதும் பிரச்சனைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. தினம் தினம் புதுப்புது பிரச்சனைகள் உருவாகும்போது, அவற்றை இயந்திரங்களால் கையாள முடிவதில்லை. புதிய பிரச்சனைகளுக்கு மனித மூளையின் தீர்வுகள் தேவைப்படுகிறது. அதேசமயம் மனிதனால் இயந்திரத்தைப் போல ஒரேமாதிரி எல்லா நேரத்திலும் இயங்கமுடியாது. இயந்திரங்களுக்கு உணர்வுகள் இல்லை. ஆனால் பலவிதமான உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டுத்தான் மனிதன் இயங்கவேண்டும்.


இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப மனிதர்களின் பங்களிப்பு வேறுபடும். மனிதர்களின் வேலையை இயந்திரங்களுடன் ஒப்பிட்டால், அது முட்டாள்தனமாகிவிடும். திரும்பத்திரும்ப ஒன்றையே செய்யவேண்டிய இடங்களில் மனிதனைவிட இயந்திரம் சிறந்து விளங்கலாம். ஆனால் தினம்தினம் புதியவற்றை யோசித்து செய்யவேண்டிய இடங்களில் இயந்திரம் ஒன்றும் செய்யமுடியாது. அங்கு மனிதனின் அறிவுப் பங்களிப்பு அவசியமாகிறது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு பணியாளர்களிடம் வேலைவாங்க வேண்டும். மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், ஊழியர்களை அடிமைகளாக நடத்திய காலம் மலையேறிப் போய்விட்டது. இன்று ஊழியர்களின் மீது நிறுவனம் அக்கறை செலுத்தாவிட்டால், சீக்கிரத்தில் அந்த ஊழியர் புதிய வேலைக்கு நகர்ந்து விடுகிறார். ஒரு ஊழியர் விலகினால், அந்த இடத்திற்கு புதிய ஊழியரை நியமித்து, உரியபயிற்சி கொடுத்து முடிக்க பல நாட்கள் / வாரங்களாகும். அந்த நேரம் அனைத்துமே நிறுவனத்திற்கு பேரிழப்புதான்.


நீங்கள் பல ஊழியர்கள் பணியமர்த்தி வேலைவாங்குகிறீர்களா! அப்படியானால் நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்களின் சிறிய பட்டியல் இதோ!!

  • ஊழியர்கள் நிறுவனத்திற்காக நிறைய உழைக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது சரிதான். அதேசமயம் அவர் தன் சொந்த வாழ்க்கைக்கும் போதுமான நேரம் ஒதுக்கினால்தான், நீண்டகால நோக்கில் அவரால் தொடர முடியும்;

  • முதலாளிக்கு மட்டும்தான் கோபம், மகிழ்ச்சி வரும் என்றில்லை. ஊழியர்களும் உணர்ச்சிவசப்பட வாய்ப்புக்கள் இருக்கிறது. ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறினால், அவர்களை நீண்டகாலம் தக்கவைப்பது கடினம்;

  • ஊழியர்களின் திறமைகளுக்கும், ஆற்றலுக்கும் அளவிருக்கிறது. இயந்திரத்தைப்போல ஓய்வில்லாமல் அவர்களால் உழைக்க முடியாது. அதை புரிந்துகொண்டு வேலை அளவுகளை தீர்மானிக்க வேண்டும்;

  • படைப்பாற்றல் தேவைப்படும் இடங்களில் மனிதனை நியமித்து ஊக்குவித்தால் பல புதுமைகள் படைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் புதியவற்றை படைக்க மனிதன் தான் சிறந்த மிருகம்;

  • ஊழியர்களின் கருத்துக்களை காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்கள் பிரச்சனைகளை உடனே தீர்க்க முடியாவிட்டாலும், நீங்கள் அவர்களுடன் இருக்கிறீர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு உறுதி செய்தாலே போதும், அவர்களாக பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான முடிவுகளை தேடிவிடுவார்கள்;

  • கூடியவரை, வரிக்குவரியாக உத்தரவுகளை கொடுக்காமல், என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிவிட்டு நிறுத்துங்கள். எப்படி செய்யவேண்டுமென்பதை அவர்களே சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானிக்கட்டும்;

  • எப்போதும் தர்ம-நியாயங்களை நீங்கள் சொல்லிலும்-செயலிலும் கடைபிடியுங்கள். நீங்கள் ஒருமுறை தவறவிட்டால், ஊழியர்கள் எல்லோரும் பலமுறை தவற விடுவார்கள்; அவற்றை தட்டிக்கேட்கும் உரிமை உங்களிடம் இருக்காது;

ஊழியர்களை வளர்ச்சிநோக்கி வழிநடத்துங்கள்!

ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!

ஊழியர்களின் பிரச்சனைகளை செவிகொடுத்து கேளுங்கள்!


ஊழியர்கள் தான் உங்கள் வெற்றியின் பலம்!

சிறிய வெற்றிகளை தனியாக படைக்கலாம் – ஆனால்

பெரிய வெற்றிக்கு ஊழியர்கள்தான் முக்கிய ஆதாரம்!


மனிதர்களிடம் இயந்திரத்திற்கு இணையான

கட்டுப்பாட்டையும், கடமை தவறாமையையும் எதிர்பார்க்காதீர்கள்!

மாறாய் புதுமைகளை, படைப்பாற்றலை எதிர்பாருங்கள்!

உங்கள் ஊழியர் என்பவர்

இயந்திரமல்ல! இரத்தமும், சதையும், சிந்தனையும் உள்ள ஒரு உயிர்!!


- [ம.சு.கு 12.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Komentáře


Post: Blog2 Post
bottom of page