top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 302 - கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்!!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-302

கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்.!


  • பல மேலான்மைப் பாடங்களில் சொல்லப்படும் ஒரு சாதாராண உதாரணம் – சோப்பு (வழலை) தயாரிக்கும் நிறுவனத்திற்கு, சில கடைக்காரர்களிடம் இருந்து குறைகள் வந்திருந்தன. அதில் முக்கியமானது, மொத்தமாக வாங்கப்படும் போது, அவற்றில் ஒருசில சோப்பு பெட்டிகள் உள்ளே காலியாக இருப்பதாக தெரிவித்தனர். இயந்திரத்தை கொண்டு பெட்டிக்குள் சோப்புக்கள் நிரப்பப்படுவதால், மனிதத்தவறுகள் ஏதுமில்லை என்பதை உறுதிசெய்த நிறுவனம், எப்படி இயந்திரத்தை தவறில்லாமல் செய்யவைப்பதென்று யோசித்தனர். பல வல்லுனர்களும், பொறியாளர்களும் அதற்கென்று புதிய சோதனை இயந்திரம் வாங்கலாம், லேசர் கருவி பொருத்தலாம் என்று பல தீர்வுகளை பரிந்துரைத்தனர். எல்லாவற்றிற்கும் பல இலட்சங்கள் முதலீடும், சிறிது கால அவகாசமும் தேவைப்பட்டது. ஆனால் ஒரு கடைநிலை ஊழியர், முதலீடில்லாமல், எளிதாக இந்த பிரச்சனையை ஒரு காற்றாடியைக் கொண்டு தீர்த்துவைத்தார். பெரிய காற்றாடியை, சோப்பு நிரம்பிய பெட்டிகள் வரும் பாதையில் வைத்தார். காற்றின் வேகத்திற்கு காலி பெட்டிகள் தூக்கிவீசப்பட்டன......

  • இன்னுமொரு மேலான்மைக்கல்வி பாட உதாரணம் - ஒரு பெரிய இயந்திரத்தை தயாரித்துமுடித்து, வாடிக்கையாளருக்கு அனுப்புவதற்கு சரக்கு வாகனத்தில் (பெரிய லாரியில்) ஏற்றினார்கள். இயந்திரம் ஏற்றியபின் சரக்கின் உயரம் 2-3 இன்சுகள் கூடுதலாக இருந்தது. இதைவிட கீழ்மட்டம் கொண்ட சரக்குவாகனம் ஏதுமில்லை. இப்போது சரக்கு வெளியே வரவேண்டும். இயந்திரத்தை தயாரிக்கும்போது, நுழைவாயிலை பற்றி யோசித்தவர்கள், வாகனத்தின் உயரத்தைப் பற்றி யோசிக்கவில்லை. இப்போது 2-3 இன்ச் பிரச்சனைக்காக வாயிலை உடைத்து சேதாரப்படுத்த வேண்டுமா என்று கேள்வி எழுகிறது. பலரும் பலவிதமான யோசனைகளை கூறுகிறார்கள். வாயில் காப்பாளர், அந்த வாகன ஓட்டுனரிடம், சக்கரத்தின் காற்றை பாதியளவு குறைத்துவிட்டு வண்டியை வெளியே எடுக்க சொல்கிறார். சரக்கு சேதாரமில்லாமல் இலாவகமாக வெளிவந்தபின், மீண்டும் காற்றை நிரப்பிக்கொள்கிறார்கள். பெரிய செலவில்லாத யோசனை.....

சோப்பில்லா காலிப்பெட்டி பிரச்சனையை தீர்க்க எண்ணற்ற இயந்திரங்கள் குறித்து யோசித்தவர்கள், காற்றின் வேகத்தை இலாவகமாக பயன்படுத்தலாம் என்ற எளிய வழியை யோசிக்கவே இல்லை!! ஒரே கோணத்தில் யோசித்தால், பல பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்காமல் ஆரம்பித்த இடத்திலேயே வந்து முட்டிமோதி நிற்க நேரிடலாம். பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வெளியிலிருந்து யோசியுங்கள். நீங்கள் சிந்திக்கும் கோணம் மாறினால், தீர்வுகளின் சாத்தியக்கூறுகளும் மாறுபடும்.


இயந்திரத்தின் உயரத்தை எப்படி குறைப்பது அல்லது வாயிலின் உயரத்தை எப்படி அதிகரிப்பதென்று பொறியாளர்கள் யோசித்துக்கொண்டிருக்க, வண்டியின் உயரத்தை எப்படி குறைப்பதென்று ஒருவர் யோசித்தார். எளிமையான தீர்வு பிறந்தது. இதேபோலத்தான் ஐரோப்பாவில் ஒருசமயம் பெரிய இயந்திரத்தை மேம்பாலத்தை கடந்து கொண்டுசெல்ல, பாலத்தையே இடிக்கவேண்டிய சூழ்நிலை எழுந்தபோது, இரண்டடிக்கு, சாலையை தோண்டி, போதிய உயர இடைவெளியை உருவாக்கி வாகனம் செல்ல வழியமைத்தார்கள். பாலத்தை இடித்துக்கட்டுவதைவிட, சாலையை தோண்டி சீரமைப்பது மிக எளிதாக இருந்தது. பிரச்சனையை மேலே மட்டும் பார்க்காமல், அதை கீழேயும் பார்த்தால் [அதாவது அடிப்படையை] மாற்று வழிகள் தானாய் கிடைக்கும்.


பிரச்சனைகள் பலவிதங்களில் வரும். எல்லாவற்றிற்கும் ஒரே கோணத்தில் தீர்வுகளை யோசித்தால், விடை கிடைப்பது கஷ்டம். உங்கள் சிந்தனைகளும், கோணங்களும் மாறவேண்டும்.

  • பிரச்சனை வந்தால் எப்படி தீர்ப்பதென்று யோசிக்கும் இடத்தில், பிரச்சனை எப்படி வராமல் தடுப்பதென்று யோசித்து செயல்படுத்தினால் நன்றுதானே!

  • சில பிரச்சனைகளுக்கு விடை கிடைக்காமல் திணற நேரிட்டால், அந்த பிரச்சனை உருவான விதத்தின் ஊடே பயனித்துப் பிரச்சனைகளின் அடிப்படைகளை பாருங்கள். அதைத் தீர்க்க எங்காவதொரு வழி கிடைக்கும்;

  • எதுவுமே பிடிபடாத இடத்தில், ஏதாவது ஓரிரு மாறுபட்ட வழிமுறைகளை சிந்தையில் ஒடவிட்டு அலசுங்கள்.

  • தயாரிப்பாளராக எதிர்கொள்கிற பிரச்சனைக்கு, வாடிக்கையாளராக இருந்து யோசித்துப் பாருங்கள். ஏதாவதொரு சமரசமான தீர்வு கிடைக்கும்;

  • ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று உங்களை நீங்களே கேளுங்கள். அதன் விடைகள் வேறுபட்ட கண்ணோட்டத்தையும், தீர்வையும் தரக்கூடும்;

  • ஏன் அப்படி செய்யக்கூடாதென்று உங்களை நீங்கள் கேளுங்கள். உலகம் ஒத்துவராதென்று ஒதுக்கிய பல வழிமுறைகள், பின்னாளில் சிறந்தவைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

  • எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்ற ஆக்கப்பூர்வமான எண்ணத்துடன் தேடுங்கள். கிடைக்கும் என்று தேடுபவர்களின் கண்களுக்கு மட்டுமே ஏதாவதொரு விதத்தில் தீர்வு கிடைக்கிறது;

பிரச்சனைகள் புதுப்புது கோணங்களில்

வந்து கொண்டேதான் இருக்கும்;

அவற்றிற்கான தீர்வுகள்

ஏற்கனே தெரிந்த முறைமைகளில் இருக்கலாம் -அல்லது

புதிய முறைகளில் சோதித்தறிய வேண்டியதுதான்!


பழைய முறைமைகள் தெரிந்தாலும்

புதிய வழிமுறைகளை தொடர்ந்து யோசியுங்கள்;

கால மாற்றத்தில், அறிவியல் முன்னேற்றத்தில்

புதிய பாதைகள் நிறைய உருவாகின்றன – அவற்றை

தேடிப்பிடிக்க நீங்கள்தான் முயற்சிக்கவேண்டும்!


மாற்றத்தை விரும்பினால் சற்று

மாற்றியோசித்தால் மட்டுமே முடியும்!


- [ம.சு.கு 07.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page