top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 298 - விலை – உழைப்பிற்கா? பொருளுக்கா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-298

விலை - உழைப்பிற்கா? பொருளுக்கா?...


  • எழுதுபொருட்கள் விற்கும் கடையில், இரண்டு வகையான காகிதங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு காகித சுருள் 10 ரூபாய் என்றும், அதே அளவுள்ள இன்னொரு காகித சுருள் 50 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டபோது, முதல் சுருள் இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட காகிதம் என்றும், இரண்டாவது சுருள் கையினால் தயாரிக்கப்பட்ட காகிதம் என்றும் விளக்கினார்கள். இயந்திரத்தில் நிமிடத்திற்கு 10 சுருள் தரமாகவும், ஒரே சீராகவும் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. அதே காகித சுருளை கையினால் தயாரிக்க 1-2 நாள் ஆகிறது. அந்த உழைப்பிற்கேற்ற விலையை நிர்ணயிக்கிறார்கள். ஆனால் மக்கள் அத்தனை அதிகவிலை கொடுத்த காகிதத்தை வாங்கி உபயோகிப்பது வாடிக்கையாளர்களுக்கு கட்டுபடி ஆகாது. அவர்கள் தரமான இயந்திர காகதங்களை அதிகம் வாங்குகின்றனர். கையினால் செய்யப்பட்டவைகளை, வெகுசில ஆடம்பர தேவைகளுக்கும், பகட்டிற்கும் வாங்கி உபயோகிக்கின்றனர்.

  • புதிதாக கட்டப்படும் கோவிலுக்கு, விநாயகர் சிலை செய்ய ஒரு சிற்பக் கலைக்கூடத்தை அனுகினார்கள். ஒரு குறிப்பிட்ட வடிவ சிலையை தேர்வு செய்து விலை பேசினர். சிற்பி, இரண்டு தேர்வுகளைச் சொன்னார். அவர்களின் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து உளி கொண்டு சிலையை வடிக்க குறைந்தது 40-45 நாட்கள் ஆவதால், அதன் விலை 1,00,000/- ரூபாய் ஆகும் என்றார். அதேசமயம், அதேசிலையை இன்றைய இயந்திரங்களைக் கொண்டு மூன்று நாட்களில் வடித்துக்கொடுப்பதானால், 50,000/- ரூபாய் ஆகுமென்றார். மேலும் இயந்திரங்களைக் கொண்டு செய்யும் சிலையின் தரமும், வெளிப்பாடும் கூடுதல் நேர்த்தியுடன் இருக்கும் என்றார். கோவில் நிர்வாகிகள், இறைவனின் சிலைக்கு, எந்த முறையை தேர்ந்தெடுப்பதென்று சற்று குழம்பிப் போனார்கள். இறுதியில், வருவாய் பற்றாக்குறை & நேரத்தை கருத்தில் கொண்டு, இயந்திர வடிவமைப்பையே தேர்வு செய்தனர். அதை முறைப்படி விரதம் அனுஷ்டித்து இயந்திரத்தில் செய்து கொடுப்பதாக சிற்பி ஒப்புக்கொண்டு முன்பணம் பெற்றார்.

மக்களின் அன்றாட எழுதும் தேவைகளுக்கு விலை உயர்ந்த கையினால் செய்யப்பட்ட காகிதம் கட்டுபடியாகாது. கையினால் தயாரிக்கப்பட்ட காகிதங்களில் உழைப்பாளர்களின் வேர்வைக்கு விலை சேர்க்கப்பட்டிருக்கிறது. அதில் தவறேதுமில்லை! ஆனால் சந்தையில் கூடுதல் விலைக்கு வாங்கி உபயோகிக்க மக்களின் பொருளாதாரம் இடமளிக்காது. அதே போலத்தான் கைத்தறி துணிகளும்!! மணிக்கு இலட்சம் மீட்டர்கள் இயந்திரத்தில் நெய்யப்பட்டு மலிவு விலையில் விததமாக சேலைகள் ஒருபுறம் விற்பனைக்கு இருக்க, மறுபுறம் ஒரு சேலை நெசவு செய்ய 2-10 தினங்கள் கஷ்டப்படும் நெசவாளர்களின் கூலி சேர்க்கப்பட்டு கைத்தறிப் புடவைகள் கூடுதல் விலையில் சந்தையில் விற்பனைக்கு போராடிக் கொண்டிருக்கின்றன.


சிற்பி 40 நாட்கள் கைவலிக்க கடுமையாக வேலை செய்து ஒருசிலையை வடிவமைப்பதால், அவரது கூலி நாளொன்றுக்கு 1000 வீதம் அந்த சிலையில் சேர்க்கிறார். அதேசமயம், கற்களை வெட்டவும், குடையவும் நிறைய கையடக்க இயந்திரங்கள் இன்று இருக்கின்றன. ஒரு நேர்த்தியான சிற்பி, அதைக்கொண்டு பெரிய சிலைகளைக்கூட 2-3 நாட்களில் சிறப்பாக செய்துமுடிக்கிறார். அவரது உழைப்பின் கூலியை சேர்த்தால் பொருளின் விலை, குறைவாக இருக்கிறது. இப்படித்தான் இன்று எண்ணற்ற தொழில்களில் (விவசாயம் உட்பட) பல வேலைகள் இயந்திரங்களைக் கொண்டு சீக்கிரமாக நடந்துவிடுகிறது. நீண்ட உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கப் பெறாமல் தவித்தவர்கள், இன்று உற்பத்தியை பெருக்கி விலையை குறைத்து எளிதாக விற்கின்றனர்.


பொருளின் விலை, அதன் தன்மையையும், உபயோகத்தையும் பொருத்தும் நிர்ணயிக்கப்படும்போது, அதை வாங்குபவர்களுக்கு கட்டுபடியாகிறது. அதை செய்ய எனக்கு 1 மாதமானது, அதனால் விலை கூடுதல் என்று சொன்னால், இன்று அந்த கூடுதல் விலை கொடுக்க சந்தை தயாராக இல்லை.

வியாபாரத்தில், பொருளின் விலையை நிர்ணயிப்பது ஒரு கலை. வாடிக்கையாளர்களைக் கவர விலையை குறைத்தால், இலாபம் குறையும். அதேசமயம் விலை அதிகமிருந்தால், வாடிக்கையாளர் வேறு கடைக்கோ, மாற்று பொருளுக்கோ சென்று விடுவார்.


விலையை நிர்ணயிப்பதில் இரண்டு கூறுகள் உள்ளன.

  1. விற்பனையில் உங்கள் இலாப சதவிகிதம் எவ்வளவு வைக்கவேண்டும்

  2. பொருளின் உற்பத்திவிலை / அடக்கவிலை எந்தளவு உள்ளது

இலாபத்தின் சதவிகிதத்தை, சந்தையிலுள்ள போட்டியும், வாடிக்கையாளர் தேவையும் சேர்ந்து தீர்மாணிக்கும். ஆனால் பொருளுக்கான உற்பத்திவிலை / அடக்கவிலையை எப்படி நிர்ணயிப்பது. ஒரு பொருளை தயாரிக்க உங்களுக்கு 10 நாட்கள் ஆனது என்பதற்காக, அதை நீங்கள் கூடுதல் விலை சொன்னால், இன்னொருவன் பாதிவிலைக்கு விற்று வியாபாரத்தை முடித்துவிடுவான். நீங்கள் மெதுவாக செய்வதற்கு சந்தை ஏன் அதிக விலை கொடுக்கவேண்டும்?


ஒருவர் கடுமையாக உழைத்து, ஒரு செயலை செய்துமுடித்தால், அதற்கு அவர் அதிக மதிப்பு கொடுப்பார். இது பொதுவான மனித இயல்பு. ஆனால் சந்தை அந்த மதிப்பை அளிக்காது. எல்லோரும், தங்கள் உழைப்பை சந்தை அங்கீகரிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும், உரிய விலை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் வியாபாரச் சந்தை இரக்கமற்றது. இங்கு பொருளுக்குரிய விலைதான் கிடைக்கும். உங்கள் உழைப்பிற்குரிய ஊதியத்தை கணக்கிட்டு எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.


யதார்த்த உலகில், நீங்கள் கணக்கிடும் மதிப்பும், சந்தை கணக்கிடும் மதிப்பும் வேறுபட்டிருக்கும். உங்களுக்கு மதிப்புடையதாக இருப்பது, மற்றவர்களுக்கு இருக்காது. நீங்கள் அதிக உழைப்பை போட்டிருக்கிறீர்கள் என்பதற்காக, எதுவொன்றின் மதிப்பும் அதிகரித்துவிடாது.

  • ஒருவர் பரிசுச் சீட்டில் 1000 ரூபாய் கிடைத்தால் செலவு செய்வது போல, கடுமையாக உழைத்து சம்பாதித்த 1000 ரூபாயை செலவு செய்யமாட்டார். கையிலிருக்கும் பணம் இரண்டு சூழ்நிலையிலும் ஒரேமாதிரியான 1000 ரூபாய் தான். ஆனால் அது எப்படி வந்தது என்பதைப் பொருத்து, மனிதமனம் அதற்கு மாறுபட்ட மதிப்பளிக்கிறது.

  • நீங்கள் ஆறுமாத காலம் கஷ்டப்பட்டு ஒரு புத்தகத்தை எழுதுகிறீர்கள். ஆனால் எந்தவொரு பதிப்பாளரும் அதை அச்சிடத் தயாராக இல்லை. உங்களைப் பொருத்தமட்டில் அது உங்களின் கடுமையான உழைப்பில் வந்த சிறந்த படைப்பு. ஆனால் சந்தையில் அந்த புத்தகத்திற்கு வரவேற்பு இருக்காது என்று பதிப்பாளர்கள் எண்ணுவதால், அதை யாரும் அச்சேற்ற தயாராக இல்லை.


உங்கள் உழைப்பை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை;

பொருளின் தேவையையும், தரத்தையுமே சந்தை பார்க்கப்போகிறது;


நீங்கள் உழைத்தது உண்மைதான்!

அதற்கேற்ற அங்கீகாரமும், விலையும் கிடைக்கவேண்டும்

என்ற உங்களின் எதிர்பார்ப்பும் சரிதான் – ஆனால்

சந்தையின் நிதர்சனத்தை புரிந்துகொண்டு

சாமர்த்தியமாகி விடுங்கள்!


- [ம.சு.கு 03.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page