“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-296
கதைகளை நம்புகிறீர்களா..?
தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். எந்த விளம்பரத்திலாவது, ஆரம்பித்தவுடன் இன்ன பொருள், இன்ன நன்மை என்று எடுத்தவுடன் சொல்கிறார்களா? முதல் 10-15 நொடிகளுக்கு ஒரு சிறிய கதையை சொல்லி அந்த பொருளை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த பொருளை குறித்து யோசிப்பதற்கு முன், அந்த கதையைத் தான் மனிதனின் மூளை முதலில் அலசுகிறது. இருக்கின்ற 15-20 நொடிகளில், அவர்களின் பொருள் குறித்து தெளிவாக விளக்கலாம். ஆனால் அதற்குபதிலாக கதையை முன்னிறுத்தித்தான் எல்லா விளம்பரங்களும் வருகின்றன. அது சோப்போ-சீப்போ, வண்டியோ-இயந்தரமோ, பழச்சாரோ-மதுவகையோ, சைவமோ-அசைவமோ, பொருள் எதுவானாலும், எல்லாம் ஒரு குட்டிகதையை முன்னிறுத்தி உங்கள் மனதை மயக்க முயற்சிக்கிறது!
மக்களின் நன்கொடை வழங்குவது குறித்து ஒரு சிறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு குறிப்பிட்ட குழுவிடம், பசியால் வாடும் மக்களைப் பற்றி சொல்லும்போது, உணவிற்கும், உதவிக்கும் ஏங்கும் சில குழந்தைகளின் தத்ரூப புகைப்படங்களை காண்பிக்கப்பட்டன. அவர்களின் பசியைப் போக்க உதவுமாறு கேட்டபோது, கிட்டதட்ட 75% பேர் உதவிகளை வழங்கினர். அதேசமயம், மற்றொரு குழுவிடம், உணவின்றி ஏங்கும் மக்கள் குறித்த புள்ளிவிவரமும், பட்டினிச் சாவுகள் குறித்த எண்ணிக்கையும் தெரிவிக்கப்பட்டன. அந்த புள்ளிவிவரங்களை கேட்ட மக்களில் 40% பேர் சிறிய நன்கொடைகளை வழங்கினர். மற்றவர்கள் அதைபெரிதாய் பொருட்படுத்தவில்லை. ஏன்?
விளம்பரங்களில், பொருளின் படத்தை அச்சிடுவதைவிட, அதை விளம்பரப்படுத்த வரும் நடிகரின் முகத்தை பெரிதாக அச்சிட்டிருப்பார்கள். பொருளை அறிமுகப்படுத்தி விளக்கும்முன், துவக்கத்தில் ஒரு குட்டி கதையைச் சொல்லி விற்கப்படும் பொருளோடு தொடர்புபடுத்தி பொருளை அறிமுகப்படுத்துவார்கள். யாராவது ஒரு நடிகரை முன்னிறுத்தி அந்த குட்டிகதை புனையப்பட்டு, இறுதியில் அந்த நடிகர் இந்த சூழ்நிலைக்கு இந்த பொருள்தான் சிறந்ததென்று பரிந்துரைப்பார். இப்படி கதைகளோடு சொல்லப்பட்ட விளம்பரங்களை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால் வெறும் புள்ளிவிவரங்களாக சொல்லப்படும் வானிலை அளிக்கையையும், பொருளாதார நிலையையும் எத்தனை பேர் கவனிக்கிறார்கள்? அதை எத்தனைபேர் நினைவில் வைக்கிறார்கள்?
தொண்டு நிறுவனங்கள், மக்களிடம் உதவிகேட்கும்போது, உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் குழந்தைகளின் முகங்களை முன்னிறுத்திய போது, அது அவர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதே செய்தியை குறித்து புள்ளிவிவரங்கள் மூலம் சொன்னால், மனிதர்களின் மனதில் பெரிதாய் எந்தவொரு தாக்கமும் இருப்பதில்லை. கதைகளும், முகங்களும் ஏற்படுத்தும் தாக்கத்தை புள்ளிவிவரங்களால் செய்யமுடிவதில்லை. இப்படித்தான் தொண்டு நிறுவனங்கள் முதல், தீவிரவாத அமைப்புக்கள் வரை எல்லோரும் கதைகளையும், பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படங்களையும் வைத்து நிதி திரட்டிக் கொள்கிறார்கள்.
என்னுடைய இந்த கட்டுரைத் தொடரின் எல்லா அத்தியாயங்களிலும், துவக்கத்தில் ஒன்றிரண்டு கதைகளை உதாரணங்களாகக் கொண்டே தொகுத்திருக்கிறேன். ஏனெனில் சிறிய கதைகளுடனும், உதாரணங்களுடனும் சொன்னால் மட்டுமே, அவை எளிதாக புரிந்துகொள்ளப் படுகிறது. அந்த கதைகள் அவர்களுக்கு எளிதாக நியாபகத்தில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கையை விளக்க எல்லோரும் அவர்களுக்கென்று கதையை புனைகிறார்கள். அல்லது எங்கேனும் நடந்த சம்பவத்தை, வார்த்தை ஜாலத்தில் கவர்ச்சிகரமான கதையாக்கி மக்களை கவர்கிறார்கள். மக்களிடம் வாக்குசேகரிக்கும்போதுகூட, மக்களுக்கு பரிட்சையமான தலைவனின் புகைப்படத்தை பெரிதாக அச்சிட்டு ஈர்க்கத்தானே முயற்சிக்கிறார்கள்.
இந்த கதைகளுக்கும், உங்கள் வெற்றிக்கான முயற்சிகளுக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் யோசிக்கிறீர்களா? யதார்த்தத்தில் உங்கள் வளர்ச்சியும், வீழ்ச்சியும் இந்த கதைகளை சார்ந்தே இருக்கிறது. ஒரு சிலர் கூறும் கதைகளை நம்பி பொருட்களை இழக்கிறார்கள். ஒருசிலரின் கதைகள் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்து முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. அன்றாடம் உங்களிடம் நிறைய கதைகள் சொல்லப்படலாம். அதேபோல, நீங்களும் நிறைய கதைகளை சொல்லலாம். உங்கள் வளர்ச்சிக்கு, இந்த கதைகளை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் இங்கு முக்கியம்.
சில கதைகளை கேட்கும்போது, அதன் அடிப்படைகளை நீங்கள் கேள்வி கேட்கவேண்டும்:
இந்த கதையின் குறிக்கோள் என்ன?
இந்த கதையை சொல்பவர் ஏதேனுமொரு சார்புத்தன்மையில் சொல்கிறாரா?
இந்த கதைகளின் அடிப்படை புனைவுகள் என்ன?
இந்த கதை சமுதாயத்தில் / வியாபார சந்தையில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?
எந்தவொரு கதையையும் இப்படி ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்டு அலசினால் மட்டுமே, அவை ஆக்கத்தை நோக்கியதா? அழிவை நோக்கியதா? என்று புரிந்துகொள்ள முடியும்.
ஒருபுறம் எதையும் ஏற்கும்முன்னர், அந்த கதைக்கான மூலக்கூறுகளை நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்க, மறுபுறம் நீங்கள் எதை விற்பதானாலும், புதிய கதைகளை நீங்கள் உருவாக்க வேண்டும். கதைகள் இல்லாமல் உங்களால் எதையும் விற்கமுடியாது. பிச்சை எடுப்பவன் கூட, பசிக்கிறது, இரண்டுநாள் சாப்பிடவில்லை என்று கதை சொல்லித்தான் உங்களை மனமிளகச் செய்கிறான்.
கதைகளைக் கொண்டு எப்படி உங்கள் கருத்துக்களை மக்களிடம் விதைப்பதென்று திட்டமிடுங்கள்;
கதைகளைக் கொண்டு எப்படி உங்கள் பொருட்களை மக்களிடம் விற்பதென்று திட்டமிடுங்கள்;
கதைகளைக் கொண்டு எப்படி உங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகமூட்டுவதென்று யோசியுங்கள்;
கதைகளைக் கொண்டு எப்படி உங்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதென்று சிந்தியுங்கள்;
கதைகள் தான் எல்லாமே!
கதைகள் நம்பத் தகுந்தவையோ? இல்லையோ?
கதைகள் பயனுள்ளதோ? இல்லையோ?
கதைகள் தான் எல்லாமே!
கதைகளைக் கொண்டு சரித்திரம் படைத்தவரும் இருக்கிறார்!
கதைகளைக் கொண்டு நாசம் விளைவித்தவரும் இருக்கிறார்!
கதைகள் கற்பனையாகவும் இருக்கலாம்!
கதைகள் காலச்சுவடாகவும் இருக்கலாம்!
கதைகளை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?
கதைகளை நீங்கள் எப்படி உபயோகிக்கிறீர்கள்?
கதைகள் தான் எல்லாமே!
கதைகளைக்கொண்டு நீங்கள் வளரலாம்!
கதைகளில் ஏமாந்து வீழ்ச்சியும் காணலாம்!
கதைகள் தான் எல்லாமே!
- [ம.சு.கு 01.08.2023]
Commentaires