top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 288 - எதோடு ஒப்பிடுகிறீர்கள்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-288

எதோடு ஒப்பிடுகிறீர்கள்?


  • உங்கள் பணத்தை வங்கியின் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கிறீர்கள். அதற்கு, வருடத்திற்கு 3% வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டு ஆலோசகரான உங்களினு ஒரு நண்பர், சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை, பரஸ்பர நிதி [மியூச்சுவல் ஃபண்டு] திட்டத்தில் முதலீடு செய்தால் 8%-12% வரை வருடாந்திர இலாபம் ஈட்டலாம் என்று பரிந்துரைக்கிறார். ஒருவேளை சந்தை மாற்றங்களால் பெரிய சரிவு நேரந்தாலும், கட்டாயம் 5%-க்கு மேல் பலன் இருக்கும் என்று கூறுகிறார். நீங்கள் சிந்திக்க ஆரம்பிக்கிறீர்கள் – பணத்தை சேமிப்புக் கணக்கில் தொடரவிட்டி 3% வட்டி பெறுவது உகந்ததா? பரஸ்பர நிதியில் முதலீடு செய்து 8+% இலாபம் ஈட்டுவது உகந்ததா? என்று. கிட்டத்தட்ட எல்லோரும் 8+% முதலீட்டிற்குத் தான் முடிவெடுப்பார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் உங்கள் பரிசீலனையில் இருந்த இரண்டு முதலீடுகள் மட்டும் தான் உங்களுக்கிருந்த வாய்ப்பா? ஏன் வேறு முதலீடுகளை பற்றி சிந்திக்கவில்லை?

  • பெரிய மென்பொருள் நிறுவனம் ஒன்று, தன் போட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய செயலிக்கு போட்டியாக, இன்னொரு செயலியை அவசரமாக தயாரித்து வந்தது. அந்த செயலியின் அம்சங்கள், தேவைகள் குறித்த முடிவுகளை பெரும்பாலும் போட்டி நிறுவனத்தின் செயலியை குறிவைத்தே முடிவெடுக்கப்பட்டு வந்தன. 3-4 மாதங்களில், போட்டி நிறுவனத்தின் செயலி, பயனாளர்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யமுடியாததால், சந்தையில் வரவேற்பை இழந்தது நிறுத்தபட்டது. அந்த காலகட்டத்தில், பலகோடி ரூபாய் முதலீட்டில் அவசரமாக போட்டிக்கு தயாரிக்கப்பட்ட செயலியும் வெளிவந்திருந்தது. இந்த போட்டி செயலியும் பெரிய பின்னடைவை சந்திக்க, பயனாளர்களின் தேவை குறித்த தெளிவான சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த செயலியை முற்றிலுமாய் மாற்றியமைக்கு, இரட்டிப்பு செலவானது. இதை அந்த நிறுவனம் முதல் முயற்சியிலேயே பயனாளர்களின் தேவைகளை புரிந்து செய்திருந்தால் மிகப்பெரிய நஷ்டம் தவர்க்கப்பட்டிருக்கலாம். தன் போட்டியாளரின் செயலியை மட்டும் ஒப்பீடு செய்து தயாரித்தது, அவர்கள் வீழ்ச்சியில் இவர்களும் விழவேண்டி வந்தது. இப்படி நீங்கள் யாருக்கேனும் போட்டியாய் எதையாவது செய்திருக்கிறீர்களா? அதில் வெற்றி கண்டீர்களா அல்லது தோல்வியா?

பங்குத் சந்தையில் முதலீடு செய்தால், சில அபாயங்கள் இருந்தாலும், 20+% இலாபம் கிடைத்திருக்கும். ஏதேனும் வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டிருந்தால் குறைந்தது 3% வரை வாடகை கிடைத்திருப்பதோடு, சொத்தின் மதிப்பு படிப்படியாய் உயர்ந்திருக்கும். தனி நபர்களுக்கு கடன் கொடுத்திருந்தால் 18%-24% வட்டி கிடைத்திருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்தால், இலாபம் இன்னும் அதிகம் கிடைத்திருக்கலாம். இவைகளில் நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எல்லா வாய்ப்புக்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பது சிறந்ததா? அல்லது சேமிப்பு வட்டிவிகிதம் & பரஸ்பர நிதி முதலீட்டு இலாபம் இரண்டை மட்டும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பது நல்லதா? இப்படி முடிவெடுக்க வேண்டிய தருணங்களில், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?


வியாபாரச் சந்தையில் உங்கள் இருப்பை நிலைநிறுத்த, தொடர்ந்து புதியவற்றை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அதிலும் உங்கள் போட்டி நிறுவனங்களை எதாவதொன்றை புதிதாக அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்தினால், நீங்களும் அதற்கு இணையான அல்லது அதனினும் மேம்பட்ட பொருளை அறிமுகப்படுத்துவது அவசியத் தேவையாகிறது. அவசர-அவசியத்திற்காக செய்யும்போது, நீங்கள் எதோடு ஒப்பிட்டு என்ன செய்கிறீர்கள் என்பதுதான் இங்கு கேள்வி. அவசரத்தை கருத்தில்கொண்டு, போட்டியாளர்களின் செயலி அம்சங்களை மட்டுமே ஒப்பிட்டு சிறுசிறு மேம்பாடுகளுடன் புதிய செயலியை உருவாக்குவது ஒருபுறம் இருக்க, சந்தையில் பயனாளர்களின் தேவையை கேட்டறிந்து, அவர்கள் பயன்பாட்டு முறைமைகளை புரிந்துகொண்டு, பல்வேறு மாறுபட்ட செயலிகள், மென்பொருட்களை ஒப்பிட்டு, அவர்களின் தேவைக்கேற்ப சரியான அம்சங்களுடன் செயலியை உருவாக்கி சந்தைப்படுத்தினால், அது பயனாளர் மத்தியில் பெரிய வரவேற்பை பெற வாய்ப்பு அதிகரிக்கும்.. அவசரத்தில் போட்டிக்காக ஏதாவதொன்றை செய்தால், அவர்கள் வீழ்கின்ற போது, நீங்கள் சேர்ந்து விழவேண்டியதுதான்;


உங்கள் அன்றாட வாழ்வில், நிறைய தருணங்களில் நீங்கள் முடிவெடுக்கவேண்டும். அப்போது, முடிவெடுக்க நீங்கள் எவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?

  • உங்கள் பிள்ளையை கல்லூரியில் சேர்க்க எத்தனை கல்லூரிகளை, எத்தனை பாடப்பிரிவுகளை அலசிப்பார்த்திருக்கிறீர்கள்? ஒருவேளை அருகாமையில் இருக்கும் ஒன்றிரண்டு கல்லூரிகளை மட்டும் பார்த்து முடிவெடுத்தால், உங்கள் பிள்ளைக்கு சிறந்து கல்வி கிடைக்குமா?

  • கணக்குவழக்குகளில் அனுபவம் வாய்ந்த நீங்கள், வேலைசெய்துவந்த நூற்பாலை முடியதால் வேறு வேலை தேடும்போது, மீண்டும் நூற்பாலையில் மட்டுமே வேலைதேடுவீர்களா? அல்லது கணக்குகள் எல்லா துறையிலும் பொதுவானதுதான் என்று வேறுதுறைகிளிலும் தேடுவீர்களா?

  • விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு 3 நாள் சுற்றுலா செல்ல யோசிக்கும்போது குடும்பத்தினர் ஊட்டி, மூனார் என்று இரண்டு இடங்களை சொல்ல, அந்த இரண்டு இடங்களை மட்டும் பரிசீலிப்பீர்களா? அல்லது கொடைக்கானல், மகாபலிபுரம், மதுரை, கன்னியாகுமரி என்று இன்னும் சென்றவராத பலபுதிய சுற்றுலாத் தலங்களையும் கருத்தில் கொண்டு யோசிப்பீர்களா?

  • பக்கத்து ஊரில் புதிதாக கிளைதிறக்க முடிவு செய்து இடம் தேடுகிறீர்கள். அந்த ஊரில் நீங்கள் வழக்கமாக போய்வரும் இரண்டு பகுதிகளில் இருந்தால் நன்றாக இருக்குமென்று யோசிக்கிறீர்கள். பெரிய ஊரான அங்கு, வியாபாரம் நன்றாக நடக்க வாய்ப்பிருக்கும் இன்னும் பல இடங்கள் இருக்க, உங்களுக்கு பழக்கப்பட்ட இடத்தோடு ஒப்பீட்டை முடிப்பீர்களா? அல்லது புதிய பகுதிகளை காண முயற்சிப்பீர்களா?

இப்படி அன்றாட வாழ்வில், வியாபாரச் சூழலில், முடிவுகளை எடுக்கும் தேவைவரும்போது, எத்தனை விடயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்கிறீர்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயம். அதேசமயம் நிறைய ஒப்பீடுகள் செய்கிறேன் என்ற பெயரில், ஒப்பீடுகளைமட்டுமே செய்து குழம்பிப்போய் நிற்பதும் முட்டாள்தனம்.


“இதற்கு அது பரவாயில்லை” என்ற நிலையில், ஒன்றோடு இன்னொன்றை ஒப்பிட்டு முடிவெடுப்பது அவசரத்திலும், கட்டாயத்திலும் எடுப்பதாகும். இந்த முடிவை தவறென்று சொல்ல முடியாது. ஆனால் உங்களுக்கு போதுமான நேரமும், அறிவும், வாய்ப்பும் இருக்கும்போது, ஏன் அப்படி ஒன்றிரண்டோடு மட்டும் ஓப்பீட்டை நிறுத்தவேண்டும். உங்கள் ஒப்பீட்டுப் பொருளைத் தாண்டி, சந்தையில் இன்னும் சிறந்த பொருள் இருக்கக்கூடும். நீங்கள் அவற்றை தேடாவிட்டால், அவற்றின் இருப்பு தெரியாமலே போய்விடும்.


“எதை எதோடு ஒப்பிடுகிறீர்கள்” என்பது முடிவெடுப்பதின் முக்கிய அம்சம்!

“இதற்கு அது பரவாயில்லை” என்று அவசரத்தில் முடிவெடுத்தால்

இன்னும் சிறந்தவைகள் பற்றி பின்னாளில் தெரியவரும்போது

“தவறு செய்துவிட்டோமே” என்று வருந்தவேண்டி வரும்!


நம் கண்முன் இருப்பவை மட்டுமே வாய்ப்பல்ல

நம் கண்களுக்கு அப்பாலும் நிறைய வாய்ப்புக்கள் இருக்கிறது!


உங்களிடம் இருக்கும் நேரத்தைப் பொறுத்து

உங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பொறுத்து

உங்களிடம் இருக்கும் தனித்திறமைகளைப் பொறுத்து

எத்தனை விடயங்களோடு ஒப்பிடுவதென்று முடிவெடுங்கள்!

நேரம், செல்வம், திறமை இல்லாவிட்டால்

நிறைய ஒப்பீடுகள் செய்வதில் பெரிதாய் பலனிருக்காது!



- [ம.சு.கு 24.07.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page