top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 278 - சட்டவிதிகளுக்குள் ஆக்ரோஷமாக விளையாடுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-278

சட்டவிதிகளுக்குள் ஆக்ரோஷமாக விளையாடுங்கள்!!


 • விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் அனைவரின் கனவும், என்றாவதொரு நாள், அவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே. உலகம் முழுவதும் ஆயரிக்கணக்கான வீரர்கள் ஒலிம்பிக் மேடை கனவுகளுடன் அனுதினமும் கடுமையாக பயிற்சி செய்கிறார்கள். அப்படி பயிற்சி செய்யும் வீரர்களில் வெகுசிலர், தவறான வழிகாட்டுதலில் சிக்கி, ஊக்கமருந்து எடுத்துக்கொண்டு குறுக்குவழியில் வெற்றிகாண முயிற்சிக்கிறார்கள். ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக, கடந்த 55 ஆண்டுகளில், இதுவை 154 வெற்றியாளர்களிடமிருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.

 • 85 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட ஜெர்மனியின் வோல்ஸ்வேகன் வாகன தயாரிப்பு நிறுவனம், பல பிரசித்திபெற்ற வாகனங்களை தயாரித்து, தனக்கென உலகளவில் தனிப்பட்ட முத்திரையோடு இயங்கிவந்தது. அமெரிக்காவின் டீசல் வாகன புகைவெளியீட்டு கட்டுப்பாடுவிதிகள் சற்று கடுமையானவை. அந்த கட்டுப்பாட்டு சோதனைகளை ஏமாற்ற, அந்த நிறுவனம் வாகன இயந்திரங்களில் சில ஏமாற்று வேலைகளை செய்து, தவறான தகவல்களை கொடுத்து அனுமதிகளை பெற்றது. எல்லா ஏமாற்று வேலைகளும் நீண்டகாலம் நீடிக்கமுடியாதே! இந்த ஏமாற்று வேலை தெரியவந்தபோது, அந்த நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை அபராதமாக கட்டியதோடு, வாகனங்களின் பாகங்களையும் மாற்றிக் கொடுத்தது.

ஒலிம்பிக்கில் பதக்கம் பறிக்கப்பட்ட 154 வீரர்களும், ஆயிராயிரம் கனவுகளுடன் ஆக்ரோஷமாக களத்தில் விளையாடியவர்களே. ஆனால், விளையாட்டின் அடிப்படை சட்டவதிகளை மீறியதால், ஏனைய வீரர்களை முறைகேடாக வெற்றிகாண முயற்சித்ததால், பெரும் கனவுகளுடன் வென்ற பதக்கம் பறிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது. 2019 ஆண்டிற்கான சர்வதேச பரிசோதனை அறிக்கையில், கிட்டத்தட்ட ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களில் 17%பேர் இந்தியர்கள் எனும்தகவல் பெருத்த ஏமாற்றத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. இது ஒலிம்பிக் என்றில்லாமல், உள்ளூர் அளவில் நடக்கும் போட்டிகளிலும் அரங்கேறுவது பெரிய அவமானத்திற்குரிய விடயமே.


வாகனங்களுக்கு புகழ்பெற்ற வோல்ஸ்வேகன் நிறுவனம், கிட்டதட்ட 25000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஒரு சிறு ஏமாற்று வேலையால் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த ஏமாற்று வேலையால், அவர்கள் சிலநூறு கோடிகள் சம்பாதித்திருக்கலாம். ஆனால் ஏமாற்று வேலை வெளியில் தெரிந்தபோது, அவர்களின் பழம்பெருமைப் புகழெல்லாம் தலைகுனிந்ததோடு, பல ஆண்டுகளாய் சம்பாதித்த இலாபம்யாவும் அபராத்த்தில் கரைந்தது. பணவிரயம் ஒருபுறம் இருக்க, ஆண்டாண்டுகாலமாய் சேர்த்த நற்பெயரெல்லாம் ஒரே தவறில் சீரழிந்தது.


நாட்டின் புகைக்கட்டுப்பாட்டு கொள்கைக்கு ஏற்ப அவர்களின் வாகனத்தை வடிவமைத்திருந்தால், வாகனத்தில் விலை சில ஆயிரங்கள் கூடியிருக்கும். அவர்கள் நிறுவனத்தின் பெயருக்கும், புகழுக்கும், சந்தை அந்த விலை உயர்வை சாதாரனமாக ஏற்றுக்கொண்டிருக்கும். ஆனால், அந்த நிறுவன தலைமை அதிகாரி தவறான பாதையை, ஏமாற்று வேலையை தேர்ந்தெடுத்தது, பொருள் நஷ்டத்தோடு, நிறுவனத்தின் நற்பெயருக்கும் பெரிய கலங்கத்தை சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. இது போன்று, நம் நாட்டிலும், சர்வதேச அளவிலும், அவ்வப்போது பெரிய நிறுவனங்கள் தவறான செயலுக்கு மாட்டிக்கொண்டு நற்பெயரை இழக்கின்றனர். அவர்களைப்போல, உங்கள் நிறுவனமும் ஒருநாள் தவறான செயல்களுக்காக அவமானப்பட வேண்டுமா?


உங்கள் அன்றாட வாழ்வில், வியாபாரத்தில், விளையாட்டில், அந்த சட்டவிதிகளுக்கு உட்பட்டு விளையாட வேண்டும் என்பது அவசியம். ஆனால், சட்டத்திற்கு உட்படுகிறேன் என்றபேரில், அமைதியாகவும், சாந்தமாகவும் சந்தையில் நின்றால், இந்த உலகம் உங்களை எளிதாக ஏறிமிதித்து சென்றுவிடும். வெறுமனே சட்டத்தை பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது ஒருபுறம் முக்கியமாக இருக்க, மறுபுறம் களத்தில் ஆக்ரோஷமாக முன்னேறினால் மட்டுமே, களத்தில் நீடித்திருக்க முடியும். உங்கள் தனித்திறமைகளால் வாடிக்கையாளர்களை வெல்லவேண்டும். உங்கள் உயர்ந்த சேவையாலும், தரமான பொருட்களாலும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க வேண்டும்.

 • விளையாட்டில், அதன் விதிகளுக்கு உட்பட்டு விளையாடினால் தான், நீங்கள் தகுதியோடு களத்தில் இருக்க முடியும். அதேசமயம், மற்ற வீரர்களைவிட ஆக்ரோஷமாக விளையாடினால்தான் ஏனைய வீரர்களை முந்திக்கொண்டு முன்னேற முடியும்;

 • வியாபாரத்தில், அரசின் சட்டதிட்டங்களுக்கும், வர்த்தக நாணயங்களுக்கும் கட்டுப்பட்டால் தான், வியாபாரம் நீண்ட நாள் நீடிக்கும். அதேசமயம், தரக்கட்டுப்பாடு, விளம்பரம், வாடி்கையாளர் சேவை என்று ஆக்ரோஷமாக செயல்பட்டால்தான், புதிய வாடிக்கையாளர்களை வென்று வியாபாரத்தை வளர்க்க முடியும்;

 • பள்ளியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, வகுப்புக்களுக்கு விடுப்பெடுக்காமல் வந்து, ஒழுக்கமாக நடந்துகொண்டால் மட்டுமே தேர்வெழுத அனுமதிப்பார்கள். அதேசமயம், வகுப்பில் கவனிப்பதைத் தாண்டி, பாடங்களை வீட்டில் படித்தும், சமுதாயத்தை கவனித்தும், சான்றோர்களின் நூல்கள் பல வாசித்தும், ஏன், எதற்கு, எப்படி? என்ற கேள்விகேட்டு பாடங்களை புரிந்துகொண்டால் மட்டுமே கல்வியில் வெற்றிகாண முடியும்; சராசரியாக படிப்பவர்கள், பெயருக்குத்தான் பட்டதாரிகளாக இருக்கமுடியுமே தவிர, அவர்கள் படிப்பின் மூலம் சாதிப்பது பூஜ்ஜியமாகவே இருக்கும்;

 • வழக்கறிஞர்கள், நாட்டின் சட்டங்களை நிலைநிறுத்துவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள். அந்த வழக்கறிஞர்கள் தவறானவர்கள் பின்நின்று சட்டங்களை வளைக்கும்போது, சமுதாயத்தின் அமைதி சீர்குலைகிறது. தேசத்தின் சட்டவிதிகளை நிலைநிறுத்தும் கடமை உணர்வுடன், அநியாயங்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக திறமையாக வாதிட்டால், அவர்கள் வளர்வதோடு சமுதாயமும் பயனடையும்.

நீங்கள் செய்கின்ற வேலை எதுவாக இருந்தாலும்,

 • அதன் சட்டவிதிகளை முழுமையாக தெரிந்து கொண்டு, எப்போதும், செயலில் நேர்மை-நாணயத்தை கடைபிடியுங்கள்.

 • உங்கள் போட்டியாளர்களைவிட 10% கூடுதலான தரம், வாடிக்கையாளர் சேவை இருக்கும் வகையில் தொடர்ந்த உங்கள் நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கட்டமையுங்கள்.

 • அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு தவறுகளில் பாடம் கற்று, அவற்றை நிரந்தரமாக சரிசெய்யுங்கள்;

 • தேவைப்படும் இடங்களில், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுங்கள்;

சட்டத்தை மீறியவர்கள், அநியாயக்காரர்கள் யாரும்

நீண்டகாலம் தொடர்ந்து ஜெயித்துவிடவில்லை;

அவர்கள் ஒருமுறை தோற்கும்போது

அது அவர்களின் நிரந்தர தோல்வியாகிவிடுகிறது;


சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விளையாடும்போது

ஈட்டும் இலாபம் குறைவாக இருந்தாலும்

அது நிரந்தர நிலைக்கான ஒருவழியென்பதை மறவாதீர்!


சட்டதிட்டங்குளுக்கு உட்பட்டு செயல்படும்போது

சாந்தமாக செயல்படவேண்டுமென்ற விதியொன்றுமில்லை

ஆக்ரோஷமாக களத்தில் போராடுங்கள்!

விளையாட்டோ, கல்வியோ, வியாபாரமோ

உங்களின் ஆக்ரோஷமும் வேகமும் உலகம் உணரட்டும்;

போட்டியாளர்கள் எட்டிப்பிடுக்கமுடியாத வேகத்தில்

தரத்தில், வாடிக்கையாளர் சேவையில்

களத்தில் ஆக்ரோஷமாக ஒடினால்

வெற்றியை உங்கள் சொந்த சொத்தாக்கலாம்!!


- [ம.சு.கு 14.07.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page