“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-270
கவன ஈர்ப்பு தேவையா?
கடைவீதிகளில் கவனித்தால். ஒவ்வொரு கடையும், தங்களின் பொருட்களை முன்பக்கத்தில் காட்சிபடுத்தி, மின்விளக்குகளை நன்றாக எரியவிட்டு, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். அதிலும் அதிக கடைகள் கொண்ட வியாபார போட்டி நிறைந்த பகுதியென்றால், அந்தந்த கடைக்காரர்கள் தங்கள் கடையின் தனித்துவத்தை வெளிப்படுத்த, எண்ணற்ற கவனஈர்ப்பு முயற்சிகள், ஒலிபெருக்கிகள், கானொளி விளம்பரங்கள் என்று முயிற்சிகளை மேற்கொள்வர். பல கடைகளில் வெளியில் ஆட்கள் நின்று கூவிக்கொண்டிருப்பார்கள்; கைபிடித்து இழுத்துச் செல்லாத குறையாக கெஞ்சுவார்கள். இவையனைத்தும் எதற்காக?
கடந்த 2014-ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் “குளிர்ந்த நீர் போட்டி” [ஐஸ்பக்கட் சேலஞ்] என்ற ஒன்று மிகவும் பிரசித்தமானது. இந்த போட்டியானது, ஒரு வாளி குளிர்ந்த நீரை [உரைநிலையில் உள்ள நீரை] எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு, தன் நண்பர்கள் யாராவது அடுத்ததாக இதை செய்ய வேண்டும் என்று சமூகவளை தளத்தில் அழைப்பதாகும். “இயக்கமரபணு நோய்” [ஏ.எல்.எஸ்] குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் ஆய்விற்கு போதுமான நிதி திரட்டுவதற்காகவும் இந்த சிறிய போட்டி சமூகவளைதளத்தில் துவங்கியது. உலகின் பிரபலமான தலைவர்கள் பலரும் இந்த போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் இது உலகின் கவனத்தையும் ஈர்த்தது. கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் [1200+ கோடி ரூபாய்] அளவிற்கு இந்த கவன ஈர்ப்பு போட்டியின் மூலம் நிதி திரட்டப்பட்டது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
போட்டி நிறைந்த சந்தையில், உங்கள் பொருட்களை விற்க வாடிக்கையாளர்களின் கவனத்தை உங்கள் வசம் ஈர்க்க வேண்டும். வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணற்ற வழிகளில் வியாபாரிகள் தொடர்ந்து முயிற்சித்துக் கொண்டே இருக்கின்றனர். பெரிய விளம்பரப் பதாகைகள், கானொளி விளம்பரங்கள், ஒன்றுக்கு-இரண்டு இலவசம் என்ற தள்ளுபடி அறிவிப்புக்கள் என்று எண்ணற்ற வழிமுறைகளில் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர், அதேபோல வழக்கமாக தெருவில் காய்கறிவிற்கும் தள்ளுவண்டிக்காரர், என்னென்ன காய்கறி இருக்கிறதென்று சத்தமாக கூவுவார். வீட்டு வேலையில் மூழ்கியுள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க, அந்த வண்டிக்காரரின் அரைகூவல் ஒரு சிறந்த வழி. காய்கறி வண்டி வந்திருப்பதும், அன்றைய தினம் என்னென்ன காய்கறி இருக்கிறதென்றும் அந்த அரைகூவலில் வீட்டிலிருப்பவர்கள் எளிதாக தெரிந்துகொள்வர். தேவைப்படுவோர் வெளிவந்து வாங்குவார்கள். இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க பல வழிகள் இருக்கின்றன. அவற்றை களத்திற்கேற்ப சரியாக புரந்து கையாள்பவர்கள் தங்களின் வியாபாரத்தை எளிதாக விரிவுபடுத்தி வெற்றிபெறுகின்றனர். வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதில் கவனம் செலுத்தாதவர்களின் விற்பனை மிகவும் குறைவாகவே இருக்கிறது;
“இயக்கமரபணு நோய்” என்ற நோய் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்துவிடுகிறது. பிரபலமான விஞ்ஞானி “ஸ்டீபன் ஹாக்கின்ஸ்” இந்த வகை நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோய் தாக்கப்பட்டால், உங்கள் உடலின் பல தசை இயக்கங்கள் முற்றிலுமாய் தடைபடும். உணவை நன்றாக மெல்ல முடியாது. இந்த மிகக் கொடிய நோய்க்கான மருந்துவ ஆராய்ச்சிக்கு நிறைய பொருளுதவி தேவைப்பட்டது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பேட்ரிக் குவின் என்பவருடன் சேர்ந்து துவங்கப்பட்ட இந்த கவன ஈர்ப்பு முயற்சி, வடஅமெரிக்க நாடுகிளிலும், ஐரோப்பாவிலும் வெகுவாக பரவியதன் மூலம், அந்த நோய்குறித்த ஆராய்ச்சிக்கு பெரிய தொகை எளிதாக திரட்டப்பட்டது. இப்படி உலகை வசப்படுத்தும் எளிமையான, ஆக்கப்பூர்வமான கவன ஈர்ப்பு முயற்சி குறித்த யோசனைகள் உங்களிடம் என்ன இருக்கிறது?
வரலாற்றிலும், இன்றைய காலத்திலும் கவன ஈர்ப்பிற்கு எப்படியெல்லாம் முயற்சிக்கிறார்கள் என்றால்;
சுதந்திர போராட்ட காலத்தில், ஆள்பவர்களின் கவனத்தை ஈர்க்க, உண்ணாவிரதப் போராட்டம், வேலைநிறுத்தப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், பாதயாத்திரை, மனிதசங்கிலி இயக்கம், என்று நிறைய செய்தார்கள்,
வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க, வானொலி, தொலைக்காட்சிகளில் எண்ணற்ற விளம்பரங்கள், தெருவெங்கும் சுவரொட்டிகள், இராட்சச வடிவிலான விளம்பர பதாகைகள், பலூன்கள் (ஊதற்பை) அன்றாடம் நாம் காண்கிறோம்;
வியாபாரத்தை அதிகரிக்க நிறைய தள்ளபடிகள், ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்ற அறிவிப்புக்கள் என்று எண்ணற்ற முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது;
வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதென்ற பெயரில் எண்ணற்ற தொலைபேசி அழைப்புக்கள், கருத்துகேட்புகள், குறுஞ்செய்திகள், சமூகவளைதள வாக்களிப்புகள் நிறைய தொடர்ந்து கொண்டிருக்கிறது;
இந்த பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். இவற்றில் உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த, உங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க, நீங்கள் என்னென்ன முயற்சிகளை இன்று வரை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். இனி மேற்கொண்டு என்னாமாதிரியான முயற்சிகள் மூலம் வாடிக்கையாளர்கள் வருகையை அதிகரிக்கலாம் என்று திட்டமிடுங்கள்.
இன்றைய போட்டிநிறைந்த உலகில், எந்த நிறுவனம் கவன ஈர்ப்பு முயற்சிகளில் திறம்பட செயல்பட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கிறதோ, அதன் வியாபாரம் படிப்படியாக விரிவடைந்து அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதையில் வேகமாக பயனிக்கும். இந்த கவனத் ஈர்க்கும் பயனத்தை தவறவிடுபவர்கள் சீக்கிரத்தில் கடையை சாத்தவேண்டிய நிலை உருவாகும்.
அரசின் கவனத்தை ஈர்க்க தெருவில் இறங்கி போராடுகின்றனர்;
வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்க்க கூவிக்கூவி விற்கின்றனர்;
கவனத்தை ஈர்க்காமல் இங்கு புதிதாய் எதுவும் சாத்தியமில்லை;
கவனத்தை ஈர்க்க வேண்டும்
உங்கள் நல்ல செயல்களால் அது நடந்தால் நன்று!
தவறான செயல்களெனில் மொத்தமும் கெட்டுவிடும்;
மக்களின் கவனத்தை ஈர்க்க
ஒலி, ஒளி அமைப்புக்கள் உதவலாம்;
பழைய வாடிக்கையாளர்களின் பரிந்துரைகள் உதவலாம்;
எல்லா வகையான விளம்பரமும், சமூகவளைதளமும் உதவலாம்;
மக்களின் கவனத்தை எப்படி? எந்த விடயத்தில்? எவ்வாறு?
ஆக்கப்பூர்வமாக ஈர்ப்பதென்பது வாழ்வின் ஒருவகை கலை!
அதை நன்கு கற்றவர் சிறந்த வியாபாரி ஆகிறார்;
தெரியாதவர் தொழிலாளியாய் அவருக்குகீ்ழ் பணியாற்றுகிறார்;
- [ம.சு.கு 06.07.2023]
留言