top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 259 - எல்லாவற்றிற்கும் ஒருநாள் முடிவுண்டல்லவா...?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-259

எல்லாவற்றிற்கும் ஒருநாள் முடிவுண்டல்லவா...?


  • நீங்கள் மனம்கவர்ந்த அழகான கண்ணாடிக்குவளை ஒன்றை தினமும் பயன்படுத்தி வருகிறீர்கள். அதில் தினமும் ஒரு குவளை தேனீர் பருகினால் உங்களுக்கு ஒருவகை மனநிறைவு. ஏதோ அவசரத்தில் உங்கள் மனைவி-மக்கள் அந்த குவளையை உடைத்துவிட்டனர். அந்த குவளையை உடைத்ததற்காக போதுமான அளவு அவர்களை திட்டித் தீர்த்துவிட்டீர்கள். திட்டியதன் மூலம் மனநிம்மதி கிடைத்ததா? நீங்கள் மனம்வருந்துவது கண்டு உங்கள் மனைவியும்-பிள்ளையும் அப்போதே பலமுறை மன்னிப்பு கோருகிறார்கள். ஆனால் ஏனோ உங்கள் மனம் சாந்தமடையவில்லை! ஒருநிமிடம் யோசியுங்கள் - அந்தக் குவளையை எத்தனை காலங்களுக்கு உங்களால் பத்திரமாக வைக்க முடியும்? அப்படியெந்த கண்ணாடிப் பொருளை நீங்கள் 25-30 ஆண்டுகளாய் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்?

  • உங்கள் நிறுவனத்தை அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கைக்குரிய இரண்டு ஊழியர்கள் உங்களுடைய 10-15 வருட பயனத்தில் உடனிருந்தா்கள். அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து பார்த்துக் கொண்டீர்கள். இருவரும் திடீரென்று ஒருநாள் உங்களை விட்டு பிரிவதாய் சொல்கிறார்கள். ஒருவன் தன் மனைவியின் விருப்பப்படி அவருடைய ஊருக்கு குடிபெயர்வதாக காரணம் சொல்கிறார். இன்னொருவர், பக்கத்து ஊரில், சுயமாக தொழில் துவங்குவதாக சொல்கிறார். உங்களால் என்ன சொல்ல முடியும். இருவரையும் மலைபோல நம்பியிருந்தீர்கள். உங்களை நட்டாற்றில் அவர்கள் விட்டுச் செல்வதாக கருதுகிறீர்கள். உண்மையில் அவர்கள் யாரும் உங்களை ஏமாற்றவில்லை. அவர்கள் சூழ்நிலை உங்களிடமிருந்து பிரித்துச் செல்கிறது. ஏன் வருந்துகிறீர்கள்? ஏன் அவர்களை நொந்து கொள்கிறீர்கள்? உங்கள் ஊழியர்களும் ஒருநாள் முதலாளியாக விரும்புவதில் தவறென்ன இருக்கிறது?

நீங்கள் ஆசையாசையாய் திட்டமிட்டு கட்டிய வீடு ஒருநாள் பலமிழந்து விழும். அதை நினைத்து வருந்துவதில் பயனேதும் உண்டா? நீங்கள் எழுதிவைத்த எழுத்துக்கள் ஒருநாள் அழிந்துபோகும்! சேர்த்துவைத்த செல்வங்கள் ஒருநாள் கரைந்து போகும். நிறைய உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்த தேகம் ஒருநாள் தொய்ந்து மண்ணுக்கு போகும். இப்படி எல்லாவற்றிற்கும் ஒருநாள் முடிவு வருவது உறுதி எனும்போது, எதற்காக அந்த கண்ணாடிக்குவளை உடைந்ததற்கு அத்தனை வருத்தம் கொள்கிறீர்கள்?


மலைபோல நம்பிய பிள்ளைகளே கருத்துவேற்றுமையில் தனிக்குடித்தனம் போகும்போது, ஊழியர்கள் அவர்களின் எதிர்காலம் கருதி வெளியேறுவதில் தவறென்ன இருக்கிறது? அப்படி பிரிவே இல்லாமல், உங்களோடு பிறந்து உங்களோடு மடியும் உயிரென்று ஒன்று உண்டா ? ஈன்றபோதிருந்த தாய் உங்களுக்கு முன்னால் போகிறார். இடையில் வந்த மனைவியும், பிள்ளைகளும் உங்களுக்கு பின்னால் செல்கிறார்கள். சிலசமயம் அவர்கள் முந்திக்கொள்ளவும் செய்கிறார்கள். உங்களால் அதை தடுக்க முடியுமா? ஏன் இந்த யதார்த்தத்தை ஏற்க மறுத்து எல்லை மீறி வருந்துகிறீர்கள்.


50 வயது தாயிடம் அவள் மகன் இறந்துவிட்டார் என்று சொல்லுங்கள், அவர் அழுது புலம்பி மனமுடைந்து போவார், அதேபோல 90 வயது தாயிடம் அவர் மகனின் மரணச் செய்தியை சொல்லுங்கள். ஒரு நிமிட மவுனமும், ஒருதுளி கண்ணீரோடும் அவர் கடந்து விடுவார். தன் 90 வயதிற்குள் பலநூறு மரணங்களை பார்த்து சலித்துவிட்டார். கணவனோ, மகனோ, மகளோ, பேரனோ ஒருநாள் போகத்தான் செய்வார் என்று அனுபவத்தில் ஏற்றுக்கொண்டார். யார் முன்னே என்பது நம்கையில் இல்லை என்பதையும் உணர்திருப்பார். அந்த அனுப முதிர்ச்சி, சிறிச கண்ணீரோடு இழப்பை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. அதைக்கடந்து அவர் வாழ்க்கையை தொடர்கிறார். அப்படி நீங்கள் என்ன இழப்பை ஏற்றுக்கொண்டு மீண்டு வந்தீர்கள்?


இன்றைய நிலப்பரப்பு, நேற்று கடலாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நாளை அது மீண்டும் கடலாகலாம். ஆனால் அது நம் 100 ஆண்டு காலத்தில் இல்லாமல், கோடானுகோடி ஆண்டுகளில் நடக்கும். அதைப்பற்றி நாம் யோசித்து, நம் பூமி தண்ணீருக்குள் போகுமென்று ஏன் வருந்த வேண்டும்? அப்படி போகின்ற நாள் வந்தால், அதற்கான மாற்றத்தை அப்போது செய்துகொள்வோம். இன்றைக்கு நம்மைவிட்டு பிரிபவைகளையும், பிரிபவர்களையும் ஏன் அதீதமாக யோசித்து வருந்த வேண்டும்!


ஏன் இந்த கட்டுரையை தத்துவமாக எழுதுகிறேன் என்று யோசிக்காதீர்கள். பிரிவும், இழப்பும் வாழ்க்கையின் அங்கம். முன்ஜாக்கிரதையாக இருந்து சிலவற்றை தள்ளிப்போடலாம். ஆனால் முற்றிலுமாய் தவிர்க்க முடியாது. அந்த பிறிவையும், இழப்பையும், குடும்பத்திலும், வியாபாரத்திலும் தாங்கி கடந்துசெல்ல உங்கள் மனம் பக்குவப்பட வேண்டும். உங்கள் வளர்ச்சிக்கு இந்த பக்குவநிலை அதிமுக்கியம். பக்குவமில்லாமல், இந்த இழப்புகளுக்கு அதீதமாக உணர்ச்சிவயப்பட்டு செயல்பட்டால், விளைவுகள் விபரீதமாகலாம்.

போட்டி நிறுவனம் உங்களை ஏமாற்றி வெல்லலாம். ஏமாற்றியதற்காக அவர்களை தாக்குவது சரியா? அம்மணி தாக்கினால், சிறை செல்லப்போவது யார்? நண்பணோ, பிள்ளையோ, உறவுகளோ, சக ஊழியரோ – யார் வேண்டுமானாலும் உங்களை மதிக்காமல் போகலாம். அதற்காக அவர்களோடு சண்டையிடுவதில் என்ன பயன்? வாழ்வின் யதார்த்தத்தை, வியாபாரத்தின் மாற்றத்தை, சமுதாயத்தின் சுயநலத்தை புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள். மாற்றத்தை / இழப்பை, பக்குவமாக கையாண்டு கடந்து செல்லுங்கள்!!


குடும்பமோ, தொழிலோ,

உங்களோடு பயணம் செய்பவர்கள்

ஒருநாள் உங்களை விட்டு பிரியத்தான் செய்வார்கள்!

பிரிவிற்கான காரணம்

கருத்து வேற்றுமையாக இருக்கலாம்!

அவர்கள் எதிர்காலம் கருதியதாக இருக்கலாம்! – அல்லது

அவர்கள் மரணமாகக்கூட இருக்கலாம்;

பிரிவென்பது தவிர்க்க முடியாதது தானே!


நீங்கள் ஆசைப்பட்டு சேர்த்தவைகளை

உங்கள் பிள்ளைகள் அழிக்கலாம்;

அதற்காக மனமொடிந்து நிற்பதில் பயனென்ன?

அப்படி அழிவில்லாத ஒன்றை

யாரால் சேர்க்க முடியும்?


கல் மண்ணாவதும், மண் கல்லாவதும்

காலசுழற்சியில் தவிர்க்க முடியாத மாற்றம்!

பிறந்தது ஒருநாள் மடியத்தான் வேண்டும்!

உருவாக்கியது ஒருநாள் அழியத்தான் வேண்டும்!

இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல்

அதீதமாக வேதனை கொள்வதில் பயனென்ன?


இழப்பென்றால் எல்லோருக்கும் வருத்தம்தான்!

ஆனால் அந்த வருத்தம்

உங்கள் உடலை எல்லைமீறி வருத்துமளவிற்கு

ஏன் அதீதமாக அதை அசைபோடுகிறீர்கள்!


எல்லாம் மாறும் - நீங்களும், நானும் மாறுவோம்!

எல்லாவற்றின் எல்லையை உணர்ந்து

மாற்றத்தை வரவேற்போம்!


- [ம.சு.கு 25.06.2023]

.

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page