top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 258 - உங்களுக்குப்பின் யார்?....

Updated: Jun 25, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-258

உங்களுக்குப்பின் யார்?...


 • எங்கள் ஊரில் ஒரு நூற்பாலை ஒன்று நன்றாக இயங்கிவந்தது. அதன் முழு நிர்வாத்தையும் முதலாளி ஒருவர் மட்டுமே கவனித்து வந்தார். தன் மனைவி, மக்களுக்கு வியாபாரத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அவரும் தெரியப்படுத்தவில்லை. திடீரென்று அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது மரண தேதி நெறுங்கியது. தனக்குபின் நிர்வாகத்தை யார் நடத்துவார் என்பதைப்பற்றி சிந்திக்கவில்லை. சில மாதங்களில் அவர் மறைந்தார். பலரும் அவர்களுக்கு உதவுகிறேன் என்று நிர்வாகத்தில் விளையாடி, இன்று எல்லா சொத்தும் கடனில் மூழ்கிவிட்டது. அவரது மனைவியும், இளம்பிள்ளைகளும் வாழ்க்கையை நடத்த கூலிவேலைக்கு செல்கின்றனர்.

 • நம் நாட்டின் முக்கியமான சிலநிறுவனங்களின் தலைமை எப்படி படிப்படியாக அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கப்பட்டதென்று கவனித்திருக்கிறீர்களா? ரிலையன்ஸ், பிர்லா, விப்ரோ நிறுவனங்கள் தங்களின் வாரிசுகளுக்கு எப்படி கொடுத்தது! ஐ.டி.சி, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள், அடுத்தடுத்த வல்லுநர்கள் கையில் கொடுத்தது. எல்லா பெரிய நிறுவனங்களிலும் ஒவ்வொரு பதவிக்கும், அடுத்து யாரென்று (2-3 தேர்வுகளை) முன்கூட்டியே யோசித்துவைக்க வேண்டியது தலைவர் & மனித வளத்துறையின் முக்கிய கடமை. அந்த பட்டியலில் தலைவர் பதவியும் அடங்கும்.

எல்லா ஊர்களிலும், தொழில்கள், கடைகள், வியாபாரங்களில் ஆங்காங்கே முக்கியமானவரின் மரணம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டிருக்கிறது. ஒரு சிலவற்றில், முதலாளிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தன் மனைவி, பிள்ளைகளை எல்லா முடிவுகளிலும் ஈடுபடுத்தி, எல்லாச் சூழ்நிலைகளுக்கும் தயார் படுத்திவிட்டிருக்கிறார்கள். உங்கள் தொழிலில், நீங்கள் என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.


எந்த ஒரு தலைவர், நிறுவனர், முதலாளி, நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு அடுத்துயார் என்று யோசித்து போதுமான பயிற்சிகளை படிப்படியாக கொடுத்து வருகிறாரோ, அந்த நிறுவனத்தால் எந்தவிதமான திடீர் இழப்புக்களையும் சமாளிக்க முடியும். அந்த திட்டமிடல் சரியாக இல்லாவிட்டால், திடீர் மாற்றங்களில் சிக்குண்டு சின்னபின்னமாகக்கூடும்.

என்னதான் நீங்கள் ஆயிரம் கைதேர்ந்த வல்லுனர்ளை வைத்திருந்தாலும், தனியார் சொந்த நிறுவனங்களுக்கு, அதன் குடும்ப உறுப்பினர் தலைமையேற்று, அந்த குடும்பத்தின் கண்ணோட்டத்தில் அந்த நிறுவனத்தை பாதுகாப்பது போல வராது. வல்லுனர்கள் நிறைய வழிகளை சொல்வார்கள். ஆனால், குடும்ப விவகாரங்களை கருத்தில் கொண்டு, தலைவர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். அந்த இறுதி முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இன்று நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்குப்பின் யார் அதை செய்வார் என்று யோசித்து, போதுமான கட்டமைப்பை, பயிற்சியை தொடர்ந்து கொடுத்துவருவது அதிமுக்கியம்.


இது வியாபாரம், தொழிற்சாலை என்ற எல்லையோடு நின்றுவிடாது. உங்கள் சிறிய குடும்பமும் உங்களுக்குப் பின்னால் எப்படி நடக்கும் என்று யோசிக்க வேண்டும். குடும்பத்தில் நீங்கள் மட்டுமே வருவாய் ஈட்டும் நபராக இருந்தால், உங்கள் இயலாமையும், மரணமும் குடும்பத்தை நிலைகுலைய வைத்திடுமே. உங்கள் ஊரில் அப்படி எத்தனை குடும்பங்களில், திடீர் மரணங்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை அடியோடு மாற்றி இருக்கிறதென்று கவனித்துப் பாருங்கள். அப்படி உங்கள் குடும்பம் சரிந்துவிடாமல் இருக்க, நீங்கள் என்ன வகையான காப்பீடு & வருவாய் வகைகளை செய்திருக்கிறீர்கள்?


முதலாளி இடத்தில், அடுத்த திறமையான ஆள் உட்காராத பட்சத்தில் என்ன நேர்கிறது;

 • உடனடியாக (முதல் மாதத்தில்) பெரிய பாதிப்பு தெரியாது, ஏனெனில் ஏற்கனவே இருக்கும் கொள்முதல் ஆணைகள் தொடர்ந்து செய்யப்படும். ஆனால் புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்கான வேலைகள் தொய்வடைந்துவிடும்;

 • சின்னச்சின்னதாய் வரவு-செலவுகளில் குளறுபடிகள் துவங்கும்; வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்;

 • உதவுகிறேன் என்ற பெயரில் பலர் வந்து நிறைய ஆலோசனைகள் சொல்லி குழப்புவார்கள்;

 • கடன் படிப்படியாக வளர்ந்து வியாபாரத்தை முற்றிலுமாய் மூழ்கடித்துவிடும்;

இந்த நிலை உங்கள் வியாபாரத்திற்கு வரவேண்டுமா? உங்கள் குடும்பம், நீங்கள் இல்லாதபட்சத்தில் கூலி வேலைக்குச் சென்று சாப்பிட வேண்டுமா? அப்படி ஒன்றும் ஆகாது என்று நினைத்திருந்த சிலருக்கு கொரோனா கால மரணங்கள் பேரிடியாக வந்தபோது புரிந்தது. அப்படி உங்கள் குடும்பமும், வியாபாரமும் சிதையாமல் இருக்க,

 • அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், என்ன செய்யவேண்டுமென்று சற்று யோசியுங்கள்.

 • நீங்கள் இல்லாவிட்டால், உங்களிடம் வாங்கிய பணத்தைக்கூட பலர் திருப்பித் தரமாட்டார்கள். அந்த நிலையை தவிர்க்க, உங்கள் வரவு-செலவுகளை குடும்பத்தினரை ஈடுபடுத்தி குறித்து வையுங்கள்;

 • போதுமான உயிர் / விபத்துக் காப்பீடுகளை எடுத்தவையுங்கள்.

 • வேலைகள், பொறுப்புக்களை பகிர்ந்தளித்து, போதுமான பயிற்சிகொடுங்கள்;

 • இரகசியங்களை குறைத்து வெளிப்படையான நிர்வாகத்தை கட்டமையுங்கள். உங்களுக்குப் பின் பொறுப்பேற்பவருக்கு, வெளிப்படையான கட்டமைப்பானது, நிர்வகிப்பதற்கு எளிதாகவும், அதிர்ச்சிகளை சமாளிப்பதாகவும் இருக்கும்;

இந்தப் பட்டியல் ஒரு பொதுவான வழிவகைதான். நிறுவனங்களின் தன்மை, வியாபார வகை, நபர்களின் முக்கியத்துவம் பொறுத்து சூழ்நிலைகள் மாறும். உங்கள் நிறுவனத்திற்கு எது பொருந்தும் என்று நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.


எதிர்மறையாக எதற்கு தேவையில்லாமல் யோசிக்க வேண்டும் என்று நினைத்திருக்காதீர்கள். ஒருவேளை நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டால் நஷ்டம் யாருக்கு. “தீ” என்று சொன்னால் வாய் சுட்டுவிடாது. ஆனால் தீ விபத்தை கையாளும் அடிப்படை கட்டமைப்பும், பயிற்சியும் இல்லாமல் இருந்தால் நஷ்டம் பெரிதாகிவிடுமே. அதேபோலத்தான், உங்கள் மரணம்! அதன்பின் யார் நிர்வகிப்பது? என்று யோசிப்பது ஒன்றும் துர்சகுனமல்ல! அதுவும் ஒருவகையான வியாபார திட்டமிடல் தான்.


உங்களுக்குப் பின், உங்கள் நிறுவனம், உங்கள் குடும்பம் எப்படி இருக்கும், எப்படி இருக்கவேண்டும், என்பதை சற்று இப்போதே யோசித்து, செய்யவேண்டியை உடனடியாக செய்யுங்கள். ஏனெனில், உங்கள் கடிகாரம் எப்போது நிற்கும் என்று உங்களால் கணிக்கவே முடியாது!


பெரிய திட்டத்தை வடிவமைத்து

எண்ணற்ற மூலதனத்தில் வளர்த்தெடுத்த வியாபாரம்

உங்களுக்கு பின்னால் யார் பார்ப்பார்கள்?

திடீரென்று நீங்கள் இல்லாவிட்டால்

அதை நிர்வகிக்க யார் இருக்கிறார்கள்?


இயக்குனர், மேலாளர், ஊழியர் போனால்

நீங்கள் புதியவர்கள் நியமித்து சமாளிப்பீர்கள்!

ஒருவேளை நீங்களே போய்விட்டால்

யார் வந்து சமாளிப்பார்?


உங்களுக்கு அடுத்து யார் நடத்துவார்?

என்ற கேள்விக்கு விடை இல்லாத காரணத்தினால்

எண்ணற்ற நல்ல வியாபாரங்கள், நிறுவனங்கள்

சுவடில்லாமல் மறைந்துவிட்டன!

அப்படி விட உங்களுக்கு ஆசையா? – இல்லை

உங்கள் காலத்தை கடந்து

நூற்றாண்டிற்கும் நிலைத்திருக்கச் செய்ய விருப்பமா?


- [ம.சு.கு 24.06.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Kommentarer


Post: Blog2 Post
bottom of page