top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 251 - வாடிக்கையாளர் பரிந்துரைகள் அதிகரிக்க!!"

Updated: Jun 18, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-251

வாடிக்கையாளர் பரிந்துரைகள் அதிகரிக்க!!


 • இன்றைய காலத்தில், பல பெரிய கடைகளில் நீங்கள் பொருட்களை வாங்கி முடிக்கும் போது, உங்களின் கருத்துக்களை, கடையில் உங்கள் அனுபவம் குறித்து மதிப்பீட்டை பதிவு செய்யுமாறு ஒரு பெரிய கைபேசி ஒன்றை நீட்டுகிறார்கள். ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டு வரும்போது, குறிப்பிட்ட வலைதளத்தில் உங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு கேட்கிறார்கள். நீங்கள் ஒரு பொருளை வலைதளங்களில் வாங்கும் முன், அதை முன்னர் வாங்கியவர்களின் கருத்துபதிவுகளை, அந்த கடைக்கு / பொருளுக்கு கொடுத்த நட்சத்திர மதிப்பீட்டை பார்த்து வாங்குகிறீர்கள் வாங்குவது குறித்து முடிவு செய்கிறீர்கள். புதிதாக வந்த திரைப்படத்தை பார்க்க செல்லும் முன் உங்கள் நண்பர்களிடம் படத்தைப் பற்றி கேட்கிறீர்கள். ஒரு வேலை “படம் சரியில்லை”, “சுமார்”, “போர்” என்று சொன்னால், உடனே நீங்கள் அந்தப்படத்தை தவிரத்து விடுகிறீர்கள். இப்படியான கருத்துக்கள் உங்கள் வியாபாரத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா?

 • எங்கள் பகுதியில் ஒரு தையல்காரர் மிகவும் பிரசித்தம். அவரது தையல் நிலையம் ஒரு குடியிருப்பு பகுதியின் கடைகோடியில் இருந்தது. சாதாரணமாக அப்படி ஒரு தையல் கடை இருப்பது யாருக்கும் தெரியாது. ஒரு விளம்பரப் பலகைகூட வைக்கவில்லை. ஆனால் அங்கு கூட்டம் நிரம்பிவழிகிறது. அவர் கடை ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிறது. முதல் 3-4 வருடங்கள் சிறிய அளவில் தான் இருந்தது. இப்போது 12 நபர்களை வேலைக்கு வைத்திருக்கிறார். அவரிடம் வரும் பெண் வாடிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார்கள். அவரது தரமான, நேர்த்தியான, புதுப்புத வடிவமைப்புக்களுடனான தையல் முறை, வாடிக்கையாளருக்கு மிகவும் பிடித்தம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் குறைந்தபட்சம் 5-6 வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். பக்கத்து ஊரிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து போகின்றனர். இதில் இன்னமும் முக்கியமான விடயம் என்னவென்றால், மற்ற பெரிய கடைகளைவிட இவரிடம் கட்டணம் சற்றுஅதிகம். ஆனால் வாடிக்கையாளர்கள் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.

பல நபர்களை வேலைக்கு அமர்த்தி கடையை நடத்தும்போது, வாடிக்கையாளர்கள் எல்லோருடனும் முதலாளியால் பேச முடியாது. அதே சமயம், தன் ஊழியர்கள் அனைவரும் வாடிக்கையாளர் சேவையில் கவனமாக இருக்கிறார்களா? என்று கண்காணிப்பதும் சிரமம். ஆங்காங்கே நிறை-குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளுடன் செல்லும் வாடிக்கையாளர் அடுத்த முறை அந்த கடைக்கு வருவது சந்தேகம். அதிரிப்தியான வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரைப்பார்களா என்பதும் கேள்விக்குறியே!


அந்த வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட குறையென்ன என்று கேட்டு சரிசெய்யாவிட்டால், அந்த குறை அடுத்த வாடிக்கையாளருக்கும் தொடரக்கூடும். அதை உடனுக்குடன் தெரிந்து சரிசெய்வதற்காகவே அவர்களின் கருத்துக்களை கேட்கும் முறையை செயல்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களின் வருகையை சார்ந்துள்ள எல்லா நிறுவனங்களும், வருகின்ற வாடிக்கையாளர்கள் புதியவர்களுக்கு பரிந்துரைக்க, அவர்களுக்கான சேவையை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகளை, அதிக கவனம் செலுத்தி சரிசெய்யும்போது, அவர்கள் மற்றவர்களுக்கு தைரியமாக பரிந்துரைக்கிறார்கள். அவர்களின் பரிந்துரை புதிய வாடிக்கையாளர்களை அழைத்து வருகிறது.


எங்கள் ஊரில் உள்ள தையல்காரரைப் பற்றி குறிப்பிட்டேன். அதேபோல, ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு பகுகுதியிலும் சில பிரசித்தி பெற்ற மளிகைக்கடை, துணிக்கடை, திண்பண்டக்கடை, இயந்திர பழுதுபார்க்கும் கடை, மருத்துவமனை என்று நிறைய இருக்கும். இவை அனைத்தும் அங்கு பல ஆண்டுகளாய் கோலோச்சி இருக்கும். அவர்கள் பெரிய விளம்பரங்களை நம்புவதில்லை. அவர்களிடம் வருகின்ற வாடிக்கையாளர்கள் மனநிறைவுடன் செல்கிறார்களா என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அவ்வப்போது சிறு தவறுகள் நேரும் பட்சத்தில், உடனடி திருத்துங்கள் செய்வதோடு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு மாற்றுப்பொருளை வழங்கி திருப்திபடுத்துகின்றனர். அவர்களின் சேவை, பக்கத்து ஊரிலிருந்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அப்படி வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறுவனமாக உங்கள் கடையை மாற்ற நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்கிறீர்களா?


வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளின் பேரில் வியாபாரம் வளர்வதால் என்ன பலன்கள்?

 • விளம்பரச் செலவு வெகுவாக குறைந்து இலாபம் அதிகரிக்கும்;

 • வாடிக்கையாளர்களுடன் நீண்டகால தொடர்பு இருக்கும்;

 • ஊழியர்களும் நிறுவனத்தின் மீது நம்பிக்கையுடன் நீண்டகாலம் பணியாற்றுவார்கள்;

 • வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வெல்வது, நிறுவனத்தின் நற்பெயரை வளர்ப்பதோடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் உறுதிபடுத்தும்;

 • ஒரு ஊரிலிருந்து அடுத்தடுத்த ஊர்களுக்கு கடையை விரிவுபடுத்துவது சாத்தியமாகிறது;

 • உங்கள் நிறுவனத்திற்கு மூலப்பொருட்களை வழங்குவதற்கு, வியாபாரிகள் தேடிப்பிடித்து வருவார்கள்;

அப்படி வாடிக்கையாளர் விரும்பும், பரிந்துரைக்கும் நிறுவனமாக உங்கள் நிறுவனத்தை கட்டமைக்க, நீங்கள் என்ன செய்யவேண்டும்;

 • ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட் தேவைகளை புரிந்து, அவர்களுக்கு உரியவற்றை தரமாக வழங்குவது அடிப்படை தேவை;

 • நீங்கள் வாக்கு தவறாதவராக இருக்கவேண்டும். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றை தருகிறேன் என்று சொன்னால், எந்தவொரு சாக்குபோக்கும் சொல்லாமல், ஒரு மணிநேரம் முன்னதாக நீங்கள் அவர்களுக்கு அதை தயாரித்து கொடுக்க வேண்டும்;

 • விலையும், இலாபமும் முக்கியம்தான். அதேசமயம் வாடிக்கையாளர் சேவை அதைவிட முக்கியம் என்று நீங்களும், உங்கள் ஊழியர்களும் முழுமனதோடு செயல்பட வேண்டும்;

 • வாடிக்கையாளர்களின் பரிந்துரை, கருத்துக்கள், மதிப்பீடுகளை சமூக வலைதளங்களில் பகிர்வதன் மூலம், இணையவழி விளம்பரமும், வியாபாரமும் அதிகரிக்கும்;

இதுவொரு சிறிய உதாரணப்பட்டியல் தான். உங்கள் வியாபாரம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, எதை, எப்படி செய்ய வேண்டுமென்று நீங்கள் தான் அலசிப்பார்த்து செயல்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் தான் உங்கள் வியாபாரத்தின் மிகப்பெரிய சொத்து. எப்படி பணத்தைக்கொண்டு பணத்தை சம்பாதிக்கிறோமோ, அதேபோல, வாடிக்கையாளர்களைக் கொண்டு புதிய வாடிக்கையாளர்களை சம்பாதிக்கும் நிறுவனம், நீண்ட காலம் நிலைத்திருப்பதோடு, பல மடங்கி விரிவாக்கமும் அடைகிறது. உங்கள் நிறுவனத்தை அப்படி வளர்க்க என்ன செய்ய வேண்டுமென்று திட்டமிடுங்கள்!


சந்தையில் வாடிக்கையாளர்கள் நிறைய இருக்கலாம்

உங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க

விளம்பரத்தை கடந்து

வாடிக்கையாளர் பரிந்துரையை வென்றிடுங்கள்!!


நீங்கள் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம்;

வாடிக்கையாளர் பலமாக பரிந்துரைத்தால்

உங்கள் கடையை தேடிப்பிடித்து வருவார்கள்!


கவலையில்லாமல் வாடிக்கையாளர்களின்

உள்ளங்களை வெல்லுங்கள்!

உங்கள் வியாபாரத்தின் வளர்ச்சிக்கு

அவர்கள் தானாகவே வழிவகை செய்துவிடுவார்கள்!!- [ம.சு.கு 17.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Commentaires


Post: Blog2 Post
bottom of page