ம.சு.கு
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 239 - உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...!"
Updated: Jun 6
“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-239
உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..!
ஒரு தொலைபேசி வாடிக்கையாளர், அதன் சேவை மையத்திற்கு தொடர்புகொண்டு சத்தம் போட ஆரம்பித்தார். அவரது தொலைபேசிக்கு தேவையில்லாத நிறைய அழைப்புகள் வருவதாகவும், நிறுவனம் ஏன் தன் எண்ணை வியாபார நோக்கில் விற்றது என்றும் சத்தம் போட்டார். சேவை அதிகாரி நிலைமை உணர்ந்து, அந்த வாடிக்கையாளர் சொல்வதை பொறுமையாக கேட்டார். அவரது இன்னலுக்கு முதலில் வருத்தம் தெரிவித்து, பின் எந்த மாதிரியான அழைப்புகள் வருகின்றன என்று தெளிவாக கேட்டார். இறுதியில் அந்த வாடிக்கையாளர் சமீபத்தில் நடந்த பொருட்காட்சியில் பரிசுச்சீட்டு ஒன்றிற்கு தன் முகவரி & தொலைபேசி எண்களை கொடுத்துதான் அந்த உள்ளூர் விளம்பர அழைப்புகளுக்கு காரணம் என்பது புரிந்தது. இறுதியில் அந்த வாடிக்கையாளர், சேவை அதிகாரியிடம் தன் கோபமான பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து முடித்தார், கோபத்தோடு வந்த வாடிக்கையாளரின் உணர்வுகளை ஊழியர் புரிந்து கொண்டு பொறுமையாக அனுகியதால் அந்த வாடிக்கையாளரின் உள்ளத்தை அவரால் வெல்ல முடிந்தது.
நிறுவனத்தில், நன்றாக வேலைசெய்யும் பெண் ஊழியர் ஒருசில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறியிருந்தது. மிகவும் அன்பான அவர் ஏனோ மற்ற ஊழியர்கள் மேல் எரிந்து விழுந்தார். இதை கவனித்த மேலாளர், அந்த பெண்னை தன் மனிதவளத் துறை பெண் அதிகாரியுடன் சேர்ந்து பேச அழைத்தார். ஆரம்பத்தில் அந்த பெண் நிலைமை கைமீறிவிட்டதாக கருதி தன்னை பணியிலிருந்து நீக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் நிறுவனத்தின் மீதான தவறுகளை சுட்டிக்காட்டத் துவங்கினார். சூழ்நிலையை புரிந்துகொண்ட மேலாளரும், மனிதவளத்துறை பெண் அதிகாரியும், அந்த பெண்ணின் கருத்துக்களை யாவற்றையும் முழுவதுமாக கேட்டார்கள். அவற்றிற்கு இடையே அந்த பெண் தற்சமயம் சந்தித்து வரும் குடும்ப பிரச்சனைகளையும் கேட்டறிந்தனர். நிறுவனத்தின் வேலைப்பளுவால் குடும்பத்தில் சிக்கல் பெரிதாவதும் புரிந்தது. அந்த பெண் ஊழியர், தான் சொல்வதை பொறுமையாக கேட்கிறார்கள் என்பதை உணர்ந்து மனம் அமைதியடைந்தார். இறுதியில் அவருக்கு 1 மாத கால அலுவலக விடுப்பு கொடுக்கப்பட்டு குடும்பத்துடன் இருக்க வழிவகை செய்யப்பட்டது.
உங்கள் வேலையை நீங்கள் சரியாக செய்துகொண்டிருந்தாலும், யாரோ செய்கின்ற தவறுக்கு, சிலசமயம் நீங்கள் பதில் சொல்லவேண்டி வரலாம். அந்த வாடிகையாளர் சற்று சத்தம் போடவும் நேரலாம். அவரது கோபத்திற்கு எதிராக நீங்கள் வாதாடினால், வாக்குவாதம் தேவையில்லாமல் முற்றிப்போகும். அந்த வாடிக்கையாளருக்கு ஏதோ மன அதிருப்தி, அதனால்தான் கோபப்படுகிறார் என்பதை உணர்ந்து அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொறுமையாக கேட்டால், அவரும் சாந்தமடைவார். தன் குறைகள் கேட்கப்படுகின்றன, தீர்வுகிடைக்கும் என்ற நம்பிக்கை வரும்போது, யாருடைய கோபமும் தானாக தனிந்துவிடும். அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படாமல் கவனக்குறைவான அணுகுமுறை அவர்களை மேலும் உணர்ச்சிவசப்படச் செய்யும்.
வேலைக்கு செல்பவர்கள் பலதரப்பட்ட குடும்ப, சமுதாய பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் பணிகளை தொடர்கிறார்கள். சில சமயங்கள் அந்த பிரச்சனைகள் பெரிதாகி மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும். அப்படி சிக்கலில் இருக்கும் ஊழியர்களின் உற்பத்தித் திறன் குறைந்து, கவனக்குறைவினால் தவறுகள் நேரலாம். ஒரு சில ஊழியர்கள் விபரீதமான தற்கொலை முடிவுகளுக்குச் செல்வதும் அவ்வப்போது நடக்கிறது. அப்படி ஊழியர்களில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிலைமையை சரிசெய்யும் முக்கிய கடமை மேலாளருக்கும், மனித வளத்துறை ஊழியர்களுக்கும் இருக்கிறது. ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் சிறுசிறு பிரச்சனைகளை நிறுவனம் தீர்க்க வழிவகை செய்தால், ஊழியர்களுக்கு நிறுவனத்தின் மீதும், சக ஊழியர்கள் மீதும் பரஸ்பர நம்பிக்கை வளர்வதோடு, நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
ஊழியர்களோ, குடும்பத்தினரோ, உறவுகளோ, நண்பர்களோ, வாடிக்கையாளர்களோ, நீங்கள் சந்திக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கென தனியொரு எண்ணவோட்டமும், சூழ்நிலையும், உணர்வு நிலையும் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் அவ்வப்போது உணர்ச்சிவயப்படுவது போல, அவர்களும் ஏதேனும் ஒரு உணர்வு நிலையில் இருக்கக்கூடும். அவர்களோடு பேசும்போதும், வர்த்தகம் செய்யும்போதும், அவற்றை உங்கள் கண்ணோட்டத்தில் மட்டும் பார்த்தால் போதாது. மற்றவரின் கண்ணோட்டத்திலும் பார்த்து அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால், அவர்களுடனான உறவு மேம்பட வழியேற்படும். மாறாக உங்கள் கருத்துக்களை அவர்கள் மேல் திணித்தால், அந்த உறவுகள் உடனடியாகவோ அல்லது படிப்படியாகவோ பாதிக்கப்படும்.
நீங்கள் பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்போது
அவர்களுடனான பரஸ்பர நம்பிக்கை வழுப்பெறுகிறது
அவர்கள் உணர்வு ரீதியாக உங்களுடன் இணைந்திருப்பார்கள்
சின்னச்சின்ன மனகசப்புக்களும், கருத்து வேறுபாடுகளும் களையப்படும்
பலதரப்பட்ட மக்களையும் அரவணைத்து நிறுவனத்தை வழிநடத்த முடியும்
அவர்களும் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்
மனித வாழ்வை நகர்த்துவது
அவரவரின் உணர்வுகளே!
மனித வாழ்வின் மத்தியப்புள்ளியான
மனித உணர்வுகளை நீங்கள் மதிக்கிறீர்களா?
சமுதாயம் சீருடன் இருக்க
சகமனிதனின் உணர்வுகளை மதிக்கவேண்டும்!
அதற்குமுன் உங்கள் உணர்வுகளை நீங்கள் மதிக்க வேண்டுமே?
இன்று எதையெதை வேண்டாவெறுப்பாக செய்தீர்கள்?
இன்று நீங்கள் விரும்பியவொன்றை எதற்காக இழந்தீர்கள்?
இன்று நீங்கள் குடும்பத்தில் காட்டிய கோபம் நியாயமானதா?
இன்று யாருடைய விருப்பத்திற்கு நேரெதிராக செய்தீர்கள்?
இன்று யாரை கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தீர்கள்?
இவையனைத்தும் தினம்தினம் உங்களுக்கும் எனக்கும் நடக்கும்!
நாளை இதை உணர்வுரீதியாக எப்படி மேம்படுத்துவதென்று யோசிப்போம்!!
மனித உறவுகளை ஆக்கப்பூர்வமான செயல்களாலும்
மனித உணர்வுகளை மதிப்பதன் மூலமும் மேன்மைபடுத்துவோம்!
- [ம.சு.கு 05.06.2023]