“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-238
தவறுகளை மீண்டும் பேசலாமா..??
இரண்டு பெண்கள் சிறந்த தோழிகளாக ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்குமுன் வரை பல ஆண்டுகளாக இருந்து வந்தார்கள். அப்படி என்ன நிகழ்வு அவர்கள் நட்பை பாதித்தது? ஒரு தோழி செய்த சிறு தவறை, அவள் பெற்றோரிடம் எதேச்சையாக இன்னொருவர் சொல்லிவிட்டார். அதனால் அவர்கள் வீட்டில் சற்று கட்டுப்பாடுகள் அதிகரித்துவிட்டன. அதனால் பாதிப்பு பெரிதாய் ஒன்று ஏற்படவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பெண், ஒவ்வொரு கலந்துரையாடலிலும், அவர் தோழி தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக அவள் முன்னிலையிலேயே சுட்டிக்காட்டினார். அப்படியான ஒவ்வொரு சுட்டிக் காட்டலிலும், அந்த மற்றொரு பெண்ணுக்கு அவமானமாக இருந்தது. இது அடிக்கடி நிகழ, அந்த பெண் படிப்படியாய் இந்த தோழியை தவிர்க்க ஆரம்பித்துவிட்டார். எதேச்சையாக செய்த தவறை தொடர்ந்து எல்லோர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டுவது சரியா?
ஒரு குழந்தை, எங்கோ விளையாடும்போது கேட்டதொரு தவறான வார்த்தை வீட்டில் பேசிவிட்டது. அதற்கு அவரது தாயார் அந்த குழந்தையை கடுமையாக திட்டினார். குழந்தை அழுதுகொண்டே இனிமேல் அப்படி பேசமாட்டேன் என்று சொல்லி உறங்கிவிட்டது. ஓரிரு வாரங்களில் அந்த வார்த்தையை யாரும் எங்கும் பேசாமல் இருந்தால், அந்த குழந்தை அதை படிப்படியாக மறந்துவிடும். அதேசமயம், பெற்றோர்கள் அந்த குழந்தை செய்யும் தவறுகளுக்கு திட்டும்போது, அந்த வார்த்தை உபயோகத்தைக் குறித்து நினைவுகூறி திட்டினால், அந்த குழந்தைக்கு மீண்டும் மீண்டும் அந்த வார்த்தை நினைவூட்டப் பட்டுக்கொண்டே இருக்கும். அப்படி யாராவது நினைவுபடுத்திக்கொண்டே இருந்தால், யார்தான் அந்த வார்த்தையை மறப்பார்கள்?
சரியாகச் சொன்னால், அந்த ஒரு நிகழ்வு அவர்கள் நட்பை பாதிக்கவில்லை. அந்த நிகழ்வைத் தொடர்ந்து ஏனைய பின்னூட்ட செயல்கள் தான், நெருடலான வார்த்தைகள்தான் அவர்களின் நட்பை வெகுவாக பாதித்தது. அந்த தவறுக்கு தோழி ஏற்கனவே பலமுறை மன்னிப்பு கேட்டாலும், ஏனோ இன்னொருவர் தொடர்ந்து அதை சுட்டிக்காட்டி அவரை வெறுப்பேற்றிக்கொண்டே இருந்தார். அப்படி உங்கள் நண்பர்கள், பலர் முன்னிலையில் ஒரே தவறை திரும்பத்திரும்ப சொல்லி கிண்டல் செய்தால், நீங்களென்ன செய்வீர்கள்?
குழந்தைகளோ, பெரியவர்களோ, சிலசமயங்களில் வாய்தவறி சில தவறான வார்த்தைப் பிரயோகங்கள் வருவது இயல்புதான். அது தவறென்றால், உடனுக்குடன் சுட்டிக்காட்டி முடித்துவிட வேண்டும். அதைவிடுத்த ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், நட்புக்களுடன் உறவாடும் போதும், அந்த தவறான வார்த்தைப் பிரயோகத்தை நினைவுகூர்ந்து அவமானப்படுத்தினால், அந்த வார்த்தையும், நிகழ்வுகளும் மனதில் தீராத வடுக்களாகிவிடுமே! மறக்கப்படவேண்டியவைகளை நீங்களே நினைவுகூர்ந்து கொண்டிருந்தால், மனநிம்மதி எப்படி கிடைக்கும்?
சில தவறுகள் நடப்பது மனித இயல்புதான். யாராயினும் சற்று கவனமாக இருந்து அதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் கவனத்தை கடந்து அந்த தவறுகள் நடந்துவிட்டால், அதைப்பற்றி எத்தனை நாட்களுக்கு பேசுவது. அரைத்தமாவையே பலமுறை அரைத்துக்கொண்டிருப்பதில் பயனென்ன? அப்படி செய்த தவறுகளையே திரும்பப் பேசினால்
தேவையற்ற மன உளைச்சலும், நிம்மதியிழப்பும் தான் அதிகம் ஏற்படும்;
நன்றாக இருக்கும் உறவுகள் மெதுவாய் விலகிப்போகும்; தொட்டும் தொடமாலும் இருக்கும் உறவுகள் முற்றிலும் அற்றுப்போகும்;
உங்கள் வளர்ச்சி எதிர்மறை எண்ணங்களால் தடைபட ஆரம்பிக்கும்;
உங்கள் தன்னம்பிக்கையும், உங்கள் குழுவினரின் தன்னம்பிக்கையும் சரிவடையும்;
ஆக்கப்பூர்வமாக முன்னேற்றம் நடக்க வேண்டிய இடங்களில், தேவையற்ற எதிர்மறை வார்த்தைகள், குறை சுட்டிக்காட்டல்கள் குழுவின் ஆர்வத்தைக் குறைத்து வெற்றியை தாமதப்படுத்தும்;
குறைகளை தொடர்ந்த பெரிதுபடுத்தும் குணம், ஆக்கப்பூர்வ சிந்தனைகளை குறைத்து, நிரந்தர குறை சொல்லியாக சமுதாயத்தால் முத்திரை குத்தப்படும்;
அதேசமயம், செய்த தவறுகள் ஒருவருக்கு பாடமாக நினைவில் இருந்தால் தான், மேற்கொண்டு கற்றலில் கவனம் செலுத்தி, உறவுகளை மேம்படுத்த வழிவகுக்கும். முந்தைய தவறுகளை மற்றவர்களும் அறிந்துகொண்டால், மேற்கொண்டு அதேதவறு திரும்ப நிகழாமல் இருக்கும். தவறுகள் சிறந்த படிப்பினை. ஆனால் எல்லோரும் அதை படிப்பினையாக எடுத்துக் கொள்வதில்லை. தவறுகளை தங்களின் அவமானமாக எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நிறைய இருக்க, நீங்கள் என்ன பேசவேண்டும் என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள்;
சிறுசிறு தவறுகள் நிகழ்வது மனித இயல்பு
ஆறறிவு கொண்ட ஜீவன் கவனக்குறைவால்
தவறுகளை அவ்வப்போது செய்துகொண்டேதான் இருக்கும்!
அப்படி ஒருவர் என்றோ செய்த தவறை
இன்றைக்கும் சொல்லிக் காண்பித்து
மற்றவர்கள் முன்னிலையில் அவர்களை அவமானப்படுத்தினால்
அவருக்கு உங்களோடு மேற்கொண்டு பேச விருப்பம் இருக்குமா?
அவருக்கு உங்களோடு உறவு பாராட்ட மனம் வருமா?
உன்னால் அன்று முடியவில்லை, அதனால்
இன்றும் முடியாது என்று தொடர்ந்து எதிர்மறையாகவும்
பழைய தோல்விகளையுமே சொல்லிக்கொண்டிருந்தால்
உங்களால் இன்று தன்னம்பிக்கையுடனும் உத்வேகத்துடன்
உழைத்து வெற்றிகான முடியுமா?
தவறுகள் / தோல்விகளை மறந்து வெற்றிகான
தொடர்ந்து எதிர்மறை விடயங்கள் பேசுவதை தவிர்த்து
ஆக்கப்பூர்வமாக வெற்றிகான முடியுமென்று சொல்லுங்கள்
தவறுகளை பாடமாகக் கொண்டு
திருத்தங்களை கவனமாகச் செய்தால்
எல்லா தோல்விகளும் கட்டாயம் வெற்றியாக மாறுமே!!
- [ம.சு.கு 04.06.2023]
Comments