“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-237
செய்வதெல்லாம் தேவையான செலவுகளா?
கொரோனா பெருந்தொற்று உலக வியாபாரசந்தையை முற்றிலுமாய் புரட்டிப்போட்டது. இணையத்தின் மூலம் வேலை செய்வது சாத்தியமில்லை என்று கருதிய நிறுவனங்கள்யாவும் இன்று வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் எல்லா ஊழியர்களும் வேலைசெய்ய வழியேற்படுத்தியது. உலகம் ஊரடங்கில் அடங்கும்போது, நிறுவனங்களுக்கு தங்களின் செலவினங்களை முற்றிலுமாய் குறைக்கவேண்டிய கட்டாயம். எதையெல்லாம் குறைக்கமுடியும் என்று ஆராய்ந்து, ஆட்குறைப்பு துவங்கி, வாடகை குறைப்பு, மின்கட்டண குறைப்பு, போக்குவரத்து செலவு குறைப்பு என்று எல்லா செலவுகளையும் அதிரடியாக குறைத்து சிக்கலான கட்டத்தை தாக்குப்பிடித்தார்கள். அப்படி நீங்கள் என்ன செலவீனங்களை குறைத்தீர்கள்?
நீங்கள் வெளியூர் பயனம் சென்றுவர வேண்டும். அதற்கான செலவுகள் சில ஆயிரங்கள் ஆகும். வெளியூர் செல்ல பேருந்து, இரயில், மகிழுந்து, விமானம் என்று பலதரப்பட்ட போக்குவரத்து வாய்ப்புகள் இருக்கிறது. இதில் எதை தேர்ந்தெடுத்து செல்வீர்கள் என்பது உங்களுக்கான கேள்வி? பயன முறையை தேர்ந்தெடுக்க என்னென்ன விடயங்களை அலசுவீர்கள்?
வியாபார ஏற்றத்-தாழ்வுகள் அவ்வப்போது வந்துபோகும். வியாபார சரிவுகளை சமாளிக்க ஒவ்வொருவரும் கையிலெடுக்கும் முதல் ஆயுதம் செலவினங்கள் குறைப்பு. வருவாயை பெருக்கும் வாய்ப்பானது சந்தை சார்ந்தது. சந்தையில் மந்தநிலை நிலவும்போது, நீங்கள் எவ்வளவு போராடினாலும் வருவாயை கூட்டுவது சாத்தியமில்லை. அப்படிப்பட்ட தருணங்களில் சந்தையில் தாக்குப்பிடுத்து நிற்க இருக்கும் ஒரே வழி, செலவுகளை கட்டுப்படுத்துவது. செலவுகளை உங்களின் குறைந்துவிட்ட வருவாய் வட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டால், எந்தவொரு வியாபார மந்தநிலையையும் தாக்குப்பிடித்து ஈடேறிவிடலாம். உங்கள் வியாபாரத்தில் அப்படிப்பட் சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்?
விமானப்பயனம் தான் சீக்கிரமாகவும், சொகுசாகவும் இருக்கும், ஆனால் அதற்கு உங்கள் வருவாய் ஒத்துழைக்குமா? ஒருவேலை இருக்கின்ற காசைக்கொண்டு விமானப் பயனத்தை முடித்துவிட்டால், குடும்பத்தை எப்படி நகர்த்துவது. உங்கள் பயன முறையை தேர்ந்தெடுக்கும் முன், முதற்கண் அந்த பயனம் தேவையான ஒன்றா? என்ற கேள்வியில் துவங்கி, அந்த பயனத்தின் அவசர-அவசியம் என்ன? எத்தனை மணிக்கு அங்கு இருக்க வேண்டும்? எந்தெந்த பயனமுறைக்கு பயனச்சீட்டு கிடைக்கும்? பயனக்கட்டணம் எவ்வளவு? அந்த செலவிற்கு ஈடாக அந்த பயனத்தில் ஈட்டவிருக்கும் வருவாய் எவ்வளவு? உங்கள் வாழ்க்கைத் தரம் என்ன? பயன உபாதைகளும் உங்கள் உடல் அனுசரிப்பும் எப்படி? என்று எண்ணற்ற விடயங்களை அலசுவீர்களல்லவா!!
வரவு-செலவுகளில், நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை விடயம்
உங்கள் தேவைகளுக்கான செலவுகள் என்ன?
உங்கள் ஆசைகளுக்கான செலவுகள் என்ன?
உங்கள் ஆடம்பரம் / பகட்டிற்கான செலவுகள் என்ன?
உங்கள் செலவுகளில் தேவையானவை, ஆடம்பரமானவை, தேவையில்லாதவை என்ற எப்படி இணங்கண்டு, செலவுகளை குறைப்பது?
உங்கள் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள் என்ன என்ற புரிதல் ஆழமாக வேண்டும் (உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, தொலைதொடர்பு, மருத்துவம்,....)
உங்கள் பணம் சம்பந்தப்பட்ட தேவைகள் என்ன என்பதை பட்டியலிடுங்கள் [வாடகை, கடன், முதலீடு, காப்பீடு, மாதாந்திர கட்டணங்கள்,..... ]
உங்களின் குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகள் என்ன? அவற்றை செயல்படுத்த தேவைப்படும் பொருள் எவ்வளவு என்ன என்பதை கணக்கிடுங்கள்!
உங்களின் வருமானம் குறைகின்ற பட்சத்தில் எந்த செலவுகளை தவிர்க்க முடியும்? எது முடியாது? எதை குறைத்துக் கொள்ள முடியும்? என்ற முன்கூட்டிய திட்டம்!
வியாபாரத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் என்ன? நிலையான செலவுகள் என்ன? வர்த்தக அளவிற்கு ஏற்ப மாறுபடும் செலவுகள் என்ன? என்ற தெளிவான கணக்கீடுகளும், அதற்கேற்ப வர்த்தக விரிவாக்க திட்டமிடல்களும் இருப்பது அவசியம்!
வியாபாரத்தில் செலவுகள் ஒருபுறம் இருக்க, கடன் மற்றும் அதன் வட்டி விகிதங்கள் என்ன? அந்த கடனுக்கான வட்டியை கட்டும் அளவிற்காவது வருமானம் வருகிறதா? என்பதில் கவனமாக இருக்க வேண்டும்!
ஒரு புறம் வியாபாரத்தில் நீங்கள் கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் உங்கள் வாடிக்கையாளர்கள் பணம் தர தாமதித்தால், அதனால் ஏற்படும் கூடுதல் வட்டிச் செலவினங்கள் எவ்வளவு, இந்த கடனுக்கான வியாபாரம் எந்த அளவோடு இருக்கவேண்டும் என்ற முறையான பண வரவு-செலவு திட்ட அறிக்கை இருக்க வேண்டும்;
குடும்ப வரவு-செலவு, வியாபார வரவு-செலவு, நாட்டின் பொருளாதார வரவு-செலவுகள் எதுவானாலும், எல்லாவற்றின் வெற்றியும் அதை திட்டமிட்டு கட்டுப்பாடுடன் நடத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. ஒரு குடம்பத் தலைவராக, வியாபாரியாக, தேசத்தின் நிர்வாகியாக நீங்கள் ஒருபுறம் உங்கள் வரவுகளை கூட்ட எவ்வளவு உழைத்தாலும், மறுபுறம் அந்த வருவாயின் செலவினங்கள் கட்டுப்படுத்தப் படவில்லை என்றால் பற்றாக்குறையும், கடனுமே மிஞ்சும். வருவாய் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு செலவினங்களின் மீதான கட்டும்பாடும் அதிமுக்கயம்.
உங்கள் செலவுகளை அத்தியாவசியத்தேவை, வாழ்க்கைத்தரம், இலட்சியங்கள் என்ற நோக்கத்தில் தொடர்ந்து அலசிக்கொண்டே இருங்கள்.
கூடுமானவரை சேமிப்பிற்குரிய தொகையை முதலில் எடுத்து வைத்துவிட்டு இருப்பதைக்கொண்டு செலவுகளை நிர்வகிக்கும் பழக்கத்திற்கு மாறுங்கள்.
வரவுகள் வளர, செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள் செல்வந்தராவதை யாரும் தடுக்கமுடியாதே!!
நீங்கள் கோடிகோடியாய் ஈட்டலாம்
உங்கள் செலவு அதற்கும் கூடதலாய் இருந்தால்
மிஞ்சுவது என்ன?
சம்பாதித்து செலவழிப்பதில் யாரும் பணக்காரர்கள் ஆவதில்லை
சம்பாதிப்பதில் சேமிப்பவர்கள் தான் பணக்காரராகின்றனர்
உங்கள் செலவுகள் அளவோடு இருந்து
எஞ்சியவற்றை முறையாக முதலீடு செய்துவந்தால்
உங்கள் சேமிப்புக்கள் அதிகரிப்பதோடு
உங்கள் செல்வமும் படிப்படியாய் பெருகும்;
உங்கள் பொருளாதார நிலைமை கட்டுக்குள் இருக்க ஒரேவழி
உங்கள் செலவினங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
வரவுக்கு மீறி செலவுகள் செய்தால்
எவ்வளவு சொத்திருந்தாலும்
எல்லாம் ஒருநாள் கரைந்துதான் போகும்!
வெற்றிக்கும், செழிபிற்கும், நிம்மதிக்கும்
உங்கள் செலவுகளை கவனியுங்கள்!
- [ம.சு.கு 03.06.2023]
Comments