top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 232 - பழைய தவறுகளுக்கு திரும்பிவிடாதீர்கள்...!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-232

பழைய தவறுகளுக்கு திரும்பிவிடாதீர்கள்!


  • எனக்கு தெரிந்த நண்பரின் குழந்தை, சென்ற கோடை விடுமுறைக்கு கையெழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தது. 15 நாட்கள் தொடர்ந்து நடந்த வகுப்பில், தொடர்ந்த பயிற்சியின் மூலம், அந்த பிள்ளையின் எழுத்துக்கள் ஒரே கோர்வையாகவும், அழகாகவும் மாறியிருந்தது. சென்றமாதம் நண்பரின் வீட்டில் அந்த குழந்தை எழுதியதை பார்த்தேன். சென்ற ஆண்டு பயிற்சி எடுத்ததற்கும், இப்போது எழுதுவதற்கும் சம்பந்தமே இல்லை. நண்பர் சொன்னார், குழந்தை திரும்பவும் பழைய கையெழுத்துக்கு மாறிவிட்டது. ஐந்தாயிரம் ரூபாய் செலவழித்து கற்ற கையெழுத்து பயிற்சி முற்றிலும் வீணாகிவிட்டதென்று. ஏன் என்று அந்த குழந்தையிடம் கேட்டேன். தெரியவில்லை – அப்படித்தான் வருகிறதென்று சொல்கிறது! என்ன நேர்ந்தது அந்த இடைப்பட்ட காலத்தில்?

  • உங்கள் நண்பர்கள், உறவுகள் மத்தியில், எத்தனை பேர் குண்டாக இருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர், தன் உடல் எடையை குறைக்க நீண்ட நாட்களாக முயற்சித்து தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்? என்று சற்று அலசிப்பாருங்கள். அவர்கள் ஏன், தன் புதிய எடைகுறைப்பு முயற்சியில் மீண்டும் மீண்டும் தோற்கிறார்கள்? என்று சற்று ஆழமாக அலசிப்பாருங்கள். உங்கள் அலசலில் கிடைத்த பதில் என்ன?

15 நாள் வகுப்பிற்கு சென்றவரை, தொடர்ந்து பயிற்சி செய்து கையெழுத்தை மேம்படுத்தி குழந்தை, மீதமுருந்த 25 நாள் விடுமுறையில், எந்த பயிற்சியும் செய்யவில்லை. பயிற்சியில் பழகியவை கைகள் மறக்க ஆரம்பித்தது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்றதும், பாடங்களை எழுதும்போது, குழந்தை, தன் புது கையெழுத்தைப் பற்றி கவனிக்காமல், தன் பழைய கிறுக்கல் முறையிலேயே எழுதியது. இதை பெற்றோர்கள் 1-2 மாதங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டனர். பின்னர் அந்த குழந்தையிடம் புதிய கையெழுத்தில் எழுத எவ்வளவு கட்டாயப்படுத்தியும், அந்த குழந்தையால் பள்ளி புத்தகங்களில் மாற்றவே முடியவில்லை.


புதிய கையெழுத்துப்பயிற்சி ஆரம்பத்தில் பலனளித்தது. ஆனால் சற்றே கவனக்குறைவினால், பயற்சிகள் தொடரப்படாமல், கைகள் அதை மறக்கத் துவங்கியது. அதேநேரத்தில், பள்ளி துவங்கியதும், பிள்ளை தன்னையறியாமல் பழைய கிறுக்கல் முறையை ஆரம்பித்துவிட்டது. பின்னர் புதிய கையெழுத்து சாத்தியமற்றுப் போனது. இந்தமுறை கோடை விடுமுறைக்கு நண்பர் மீண்டும் தன் குழந்தையை கையெழுத்துப் பயிற்சிக்கு அனுப்ப முயற்சித்தார். ஆனால் ஏனோ குழந்தை பயிற்சிக்கு செல்ல மறுத்துவிட்டது. நிறைய பயிற்சி செய்த குழந்தை, கவனக்குறைவினால், பழைய முறைக்கு சென்று மீண்டும் வெளிவரமுடாயமல் பழைய கிறுக்கல் கையெழுத்திலேயே சிக்கிக்கொண்டது.


எடைகுறைப்பில் தோற்ற என் நண்பர்கள், உறவினர்களைப்பற்றி அலசியதில், எனக்கு கிடைத்த விடை, அப்படிப்பட்டவர்கள், எந்த எடைகுறைப்பு முறையையும் முழுவதுமாக பின்பற்றவில்லை. ஒருவாரம் செய்துவிட்டு, பெரிதாய் மாற்றம் இல்லை என்று மீண்டும் பழைய உணவுமுறைகளுக்கு போய்விட்டார்கள். எடை குறைப்பை ஒரே வாரத்தில் எதிர்பார்த்து ஏமாந்தவர்கள்தான் இதில் ஏராளம். உங்கள் அலசலில் கிடைத்த பதில் என்ன?


ஏன் தெரிந்தோ-தெரியாமலோ ஒருவர், மாற்றத்தையும் / முன்னேற்றத்தை தவிர்த்து பழைய முறைமைகளுக்கு போகிறார்?

  • ஏற்கனவே பழகிப்போன ஒன்றிலிருந்து விடுபடுவது கடினமாக இருக்கக்கூடும் (உத; குடிகாரர்கள் எத்தனை முறை குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தாலும், மறுநாள் மீண்டும் குடிக்க கிளம்பி விடுகிறார்கள்)

  • புதிய முறைமைகள் குறித்து தெளிவான அறிவும், சிந்தனையும் வராத நிலையில், பழைய முறைமைகள் பாதுகாப்பானது என்று அவர்கள் நினைக்கக்கூடும்;

  • மற்றவர்கள் சொன்னதற்காக மாறுவதுபோல பாசாங்கு செய்துவிட்டு, மாற்றத்தை விரும்பாமல் பழைய முறைமைகளில் தொடரக்கூடும்;

  • ஊரோடு ஒத்து வாழ்கிறேன் என்று சொல்லி, மாற்றங்களை ஒதுக்கிவிட்டு கூட்டத்தோடு கோவிந்தா போட ஓடிவிடக்கூடும்;

நீங்கள் மாற்றத்தை விரும்பினால், முதற்கண் எக்காரணத்தைக்கொண்டும் பழைய தவறான முறைகளுக்கு போகமாட்டேன் என்ற மனவுறுதியை வளர்க்க வேண்டும்.

  • உங்கள் மனவுறுதியில் ஒவ்வொரு கணமும் கவனமாக இருக்க வேண்டும்;

  • வளர்ச்சியை நோக்கிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் தொடர்ந்து கவனியுங்கள்;

  • உங்கள் பழைய முறைகளின், தவறுகளின் விளைவுகளை அவ்வப்போது சிந்தித்துப்பாருங்கள்;

  • உங்களுக்கான இலட்சியத்தை, இலக்கை தெளிவாக நிர்ணயித்து, அதில் வரக்கூடிய சிக்கல்களை கனித்து கவனமாக திட்டமிட்டு சமாளியுங்கள்;

  • புதிய முறைகளில் செய்ய முடியவில்லை என்பதற்காக உடனே உங்களின் பழைய தவறான முறைகளுக்கு தாவிவிடாதீர்கள். புதியவைகள் கைகொடுக்கவில்லையென்றால், மாற்று வழிகளை சிந்தியுங்கள்;

  • புதிய முயற்சிகளை பரிசோதனை முறையில் தொடர்ந்து செய்துகொண்டே இருங்கள். பழையவற்றை களைய, புதிய சோதனைகள் மட்டுமே வழிதேடிக்கொடுக்கும்;

  • முன்னர் இருந்த நிலைக்கும், இன்று நீங்கள் கண்டுள்ள மாற்றத்தையும் தொடர்ந்து அளந்துகொண்டே இருங்கள். உங்களின் சிறுசிறு முன்னேற்றமும் உங்களை மேற்கொண்டு புதிய முயற்சிகளை செய்ய ஊக்கமளிக்கும்;

  • உங்களைச் சுற்றிலும் ஆக்கப்பூர்வமான சூழ்நிலையையும், ஆக்கப்பூர்வமான எண்ணங்கொண்ட மனிதர்களையும் வைத்துக்கொள்ளுங்கள்;

  • சில மாற்றங்கள் நிகழ சில நாட்கள் / வாரங்கள் / மாதங்கள் தேவைப்படும். ஒன்றும் நிகழவில்லை என்று அவசரப்படாதீர்கள். மாற்றத்திற்கான அதிகபட்ச நேரத்தை கொடுங்கள்;

உங்கள் மாற்றம், உங்கள் மனவுறுதியில்தான் இருக்கிறது. நீங்கள் மாற்றத்திற்கான வழிகளை தொடங்கியதும், எல்லாம் ஓரிரவில் மாறிவிடாது. நேற்று முயற்சித்தேன், ஒன்றும் மாறவில்லை என்று சொல்லி மீண்டும் பழைய முறைக்கு திரும்பினால், எந்த மாற்றமும் சாத்தியமில்லை.


உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த

நிறைய முன்னேற்றத்திற்கான வழிகளை

கடைபிடிக்கத் துவங்கியிருக்கலாம்!

அவற்றை பின்பற்றுவதில் சிக்கல்வரும்போது

உங்களின் பழைய பாணியில்

தவறான பாதையில் அதை தீர்க்க யோசனை வரலாம்!


எக்காரணத்தைக் கொண்டும்

ஒரு முன்னேற்றத்தை கையிலெடுத்த பின்னர்

பழைய தவறான முறைமைகளுக்கு போய்விடாதீர்கள்!

ஒருமுறை திரும்பப் போனால்

அது உங்களை திரும்பத்திரும்ப அழைத்து

பழைய முறைமைகளிலேயே ஆழ்த்திவிடும்!


மாற்றத்தை துவக்கிவிட்டால்

அதை கடைசி மூச்சுவரை பின்பற்றுங்கள்

ஏனெனில் உங்களின் மனவுறுதிமட்டுமே

எந்தவொரு மாற்றத்திற்குமான

முக்கியமான ஆரம்பப்புள்ளி!!



- [ம.சு.கு 29.05.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page