“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-231
அடுத்த தலைமுறையை பற்றி யோசியுங்கள்..!"
வீட்டில் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வருவது இயல்பு. ஆனால், அப்போது, அவர்களுக்கிடைய எழும் வாக்குவாதத்தை குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பது அதிமுக்கியம். தகாத வார்த்தைகள் பேசுவதும், குழந்தைகளிடம் குறை கூறுவதுமாக இருந்தால், அந்த குழந்தைகளும் அதே வார்த்தைகளை பழகிவிடுகிறார்கள். மேலும், குழந்தைகளுக்கு நற்குணங்களை சொல்லி வளர்க்க முற்படும்போது, அவர்கள் முன்னிலையில், பெற்றோரும் கவனமாக அந்த நற்குணங்களை செயல்படுத்திக் காட்ட வேண்டும். பொய் சொல்லக்கூடாதென்று சொல்லிக் கொடுத்துவிட்டு, எல்லோரிடமும் பெற்றோர்கள் பொய் சொல்வதை அவர்கள் பார்த்தால், அந்த குழந்தைகள் எப்படி உங்கள் சொற்களை ஏற்பார்கள்?
தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நிறைய தொழிற்சாலைகள் துவங்கப்படுகின்றன. அப்படி துவங்கப்பட்ட பல்லாயிரம் தொழிற்சாலைகளில், இன்று எண்ணற்றவை உலகம் முழுவதும் மூடப்பட்டுவிட்டன – ஏன்? பொருளாதார நெருக்கடி தவிர்த்து, நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படுவதற்கான ஒரே காரணம், சுற்றுச்சூழல் பாதிப்பு. சுத்தமான காற்றையும், தூய்மையான நீரையும் அனுபவித்த முந்தைய தலைமுறை, அவற்றின் முக்கியத்துவத்தை தட்டிக்கேட்டிருக்க வேண்டும். இதனை செய்யாததால், நமது தலைமுறைக்கு சுத்தமற்ற வளங்களை சுத்திகரித்து பயன்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. இனிமேலும் இந்த மாசுபாடு தொடர்ந்தால், அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுச் செல்வோம் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது;
குழந்தைகள் எதை கற்கவேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ, அவ்வண்ணமே நாமும் நடந்துகொள்ள வேண்டும். கேடான வார்த்தைகள் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். பெற்றோர் தவறான வார்த்தைகளைக் கூறுவதால், குழந்தைகள் அதை நகலெடுத்து பயன்படுத்தக்கூடும். அடுத்த தலைமுறை நல்லபடியாக உருவாக வேண்டுமானால், நம்முடைய ஒவ்வொரு செயலிலும் அதற்கான முனைப்பு இருக்க வேண்டும். அடுத்த தலைமுறை பற்றி யோசிக்காமல், நம் மனம்போன போக்கில் வாழ்ந்தால், நம்முடைய தவறான செயல்களை மட்டுமே அடுத்த தலைமுறையினர் கற்பார்கள். அது, அடுத்தடுத்த தலைமுறைகளின் சீரழிவிற்கு வித்தாகிவிடும்.
சென்ற தலைமுறையைத் கவனக்குறைவைத் தொடர்ந்து, இன்றும் நாம் மாசுபாடுகளை தொடர்ந்தால், கட்டாயம் அடுத்த தலைமுறைக்கு மனித இனம் வாழ்வதற்கு தகுதியில்லாத தரிசு நிலத்தை மட்டுமே விட்டுச்செல்லும் நிலைவரும்.
இந்த பூமிக்கு நாம் எதையும் கொண்டுவரவில்லை. இங்கிருந்து நாம் எதையும் எடுத்துச் செல்லப்போவதும் இல்லை. ஆனால், வாழ்கின்ற இடைப்பட்ட காலத்தில், பூமிக்கு அடியில் இருப்பதை எல்லாம் வெளியில் எடுத்து, அடுத்த சந்ததியினர் பற்றி கவலையே இல்லாமல், எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கி காற்றையும், நீரையும் முற்றிலும் மாசுபடுத்துவது சரியா? மழைநீரை சேமிக்க அரசு எத்தனை கேட்டுக்கொண்டாலும், பொதுமக்கள் அதனை பொருட்படுத்துவதே இல்லை.. மாறாக, அனுதினமும் நூற்றுக்கணக்கான புதிய ஆழ்துழாய் கிணறுகள் தோன்றி, நீர்வளத்தையும், எண்ணெய் வளத்தையும் உறிஞ்சிக்கொண்டே இருக்கிறனர். பூமியிலிருந்து அளவுக்கு அதிகமாக உறிஞ்சும்போது, பூமியில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? அடுத்த தலைமுறைக்கு என்ன மிஞ்சும்? என்று விழிப்புணர்வு இங்கு யாருக்கும் இல்லை. ஒரு சிலர், இதை எதிர்த்துக்குரல் கொடுக்கிறார்கள் – ஆனால் குரல் மட்டுமே கொடுக்கிறார்கள். ஆக்கப்பூர்வமான செயல் ஏதும் பெரிதாய் இதுவரை இல்லை!
முன்னனி இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த 'உன்னால் முடியும் தம்பி' என்ற படத்தில், ஒரு சமையல்காரர் தினமும் இரண்டு மரங்களை நட்டு வளர்ப்பதை தன் பொறுப்பாகக் கடைப்பிடிக்கிறார். 'மண்ணின் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்' என்ற அவரது தத்துவம் அடுத்த தலைமுறையின் செழுமைக்கு வித்திடுகிறது. அடுத்த தலைமுறை என்பது, நம் பிள்ளைகள் மட்டுமல்ல, இன்று வித்திடும் இந்த மரம், செடி கொடிகளும்தான் என்பதை அவர் தெளிவுபடுத்துவார். இன்று நாற்பதுகளைத் கடந்தவர்களுக்கு கட்டாயம் அந்த படமும், அந்த பாடமும் நினைவிருக்கும். ஆனால், அடுத்த தலைமுறையை வளப்படுத்தும் நோக்கில், நாமென்ன செய்தோம் என்று உங்களை நீங்களே அலசுங்கள்!
கடந்து இரண்டு நூற்றாண்டுகளாய், இந்த பூமியை எந்தளவிற்கு சீரழிக்கமுடியுமோ, அந்தளவிற்கு, மனித இனம் வெகுவேகமாக சீரழித்துவிட்டது. காரணம் பேராசை! எனக்கு இன்றைய வாழ்வு இனிமையாக இருந்தால் போதும், நாளை என்னவானால் எனக்கென்ன என்ற தான்தோன்றித்தனமான சிந்தனையும் எண்ணமும் தான் இந்த சீரழிவை அதிவேகப்படுத்தியது. ஆங்காங்கே ஏற்படும் இயற்கை மாற்றங்கள், பேரழிவுகளால் உலகநாடுகள் உணர்ந்து விழித்துக்கொண்டுவிட்ட போதிலும், இன்னும் அதற்கான சீர்திருத்த வேலைகள் ஆமை வேகத்தில்தான் நடந்துகொண்டிருக்கிறது. எண்ணற்ற நிறுவனங்கள் இவைகுறித்து குரல் கொடுத்தாலும், எல்லாம் பூகோள அரசியல் நாடகமாகவே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அடுத்த தலைமுறையின் வளத்திற்கு நம்மால் என்னவெல்லாம் செய்யமுடியுமென்ற யோசியுங்கள்;
பசுமையாய் இருந்த பூமியை, பாலைவனமாக்காமல், மேலும் சோலைவனம் ஆக்க வேண்டுவன செய்யுங்கள்;
உங்கள் குழந்தைகளுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அள்ளி வழங்குங்கள்;
உரிய காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பாரம்பரிய முறைமைகளை, மூடப்பழக்கமாக்காமல், புரிந்தும், உணர்ந்தும் தொடருங்கள்;
எது தொடர்வது நன்றென்று எண்ணுகிறீர்களோ, அதை முன்னின்று செய்து முன்னுதாரனமாகுங்கள்;
முதலாளித்துவம், கம்யூனிசம் என்று சித்தாந்தம் பேசாமல், மனிதநேயம் என்ற நிதர்சனம் உணருங்கள்;
அன்றாட நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடித்து அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுங்கள்;
அடுத்த தலைமுறைக்கு ஒரு செழிப்பான உலகத்தை கொடுப்பது நம் பொறுப்பு. சுற்றுச்சூழலை பாதுகாத்தும், நல்ல பழக்க வழக்கங்களை ஊக்குவித்தும், பாரம்பரியத்தை காப்பாற்றியும், நாம் இன்றே செயல்பட வேண்டும். இன்று நாமெடுக்கும், முயற்சிகளே நாளைய தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும்!
இன்று நீங்கள் எதை செய்வதானாலும்
அது சரியா-தவறா என்று முடிவு செய்ய
மிக எளிதான ஒரு வழி - அந்த செயல்
இன்றைய சமுதாயத்திற்கும்
உங்களின் அடுத்த தலைமுறைக்கும்
பயனளிக்கக்கூடியதா என்று பாருங்கள்!
இன்றைய இலாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு
எதிர்காலத்தை சூனியமாக்கிவிடாதீர்கள்!
இன்றொரு நாளோடு எல்லாம் முடிந்துவிடாது
நாளை நீங்கள் இந்த உலகை சந்திக்க வேண்டும்
உங்கள் பிள்ளையும் இந்த உலகை சந்திக்க வேண்டும்!
உங்கள் செயல் உங்களையும், உங்கள் தலைமுறையையும்
சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யுமானால்
அதைவிட பொன்னான செயல் வேறொன்றுமில்லை!!
- [ம.சு.கு 28.05.2023]
Comments