“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-229
அனுதினமும் விழித்திருங்கள்!
சில மாதங்களாக நன்றாக இயங்கி வரும் ஒரு புதிய உணவு விடுதியில், முக்கிய சமையல்காரர் உடல்நிலை சரியில்லாததால் ஒருநாள் விடுப்பெடுத்தார். முதலாளி, அன்றைய தினம், உணவு வகைகளை குறைத்துக் கொள்ளாமல், பழகுனர் சமையல்காரர்களை வைத்து எல்லாவற்றையும் தயார் செய்தார். அந்த விடுதி பெயர் பெற்றிருந்த சில குறிப்பிட்ட உணவு வகைகள் மிகவும் மோசமாக அன்று தயாராகியிருந்தது. அன்றைய தினம் உணவருந்தியவர்கள் விருப்பமின்றி சாப்பிட்டனர். அவர்களில் புதியவர்களின் எண்ணத்தில் உணவகத்தின் தரம் குறைந்தது என்ற மோசமான முத்திரை பதியவைத்தது. வழக்கமாக வருபவர்கள், வரவர தரத்தை குறைத்துவிட்டார்கள் என்று குறைகூறி சென்றனர். ஒரு நாள் தவறால் நிரந்தரமாக சில வாடிக்கையாளர்களை இழந்ததோடு, மேலும் தவறான கருத்துக்கள் பரிமாறுவதை விடுதியால் தடுக்கமுடியவில்லை.
நாம் அனைவரும் முயல்-ஆமை கதையை பள்ளியில் படித்திருக்கிறோம். எல்லைவரை தொடர்ந்து முன்னேறி முடிக்காமல், எதிராளியின் பலத்தை தவறாக கருதி, ஒரு சில மணித்துளிகள்தான் முயல் ஓய்வெடுத்தது. ஆனால், அந்த சில மணித்துளிகளில் ஆமை, தொடர்ந்து முன்னேறி எல்லையை கடந்துவிட்டது. முயலின் ஓய்வு சில கணங்களே ஆனாலும், அது வழிவகுத்த பாதிப்புகள் நிரந்தரமானவை. நம் அன்றாட செயல்களில் கூட, இதுபோன்ற கவனச்சிதறலின் விளைவுகள் வரக்கூடும். திட்டமிடல் மட்டுமின்றி அதனை செயல்படுத்தும் உற்சாகமும் தொடர்ந்து இருக்க வேண்டும். நம் அன்றாட வாழ்வில் திட்டமிடும் போது, நிறைய நேரம் இருக்கும். இன்னும் நிறைய நேரமிருக்கிறதென்று, சற்று ஓய்வெடுக்கத் துவங்கினால், கைவசமிருந்த பொன்னான நேரமெல்லாமல் கரைந்து எல்லாமே அவசரகதிக்கு தள்ளப்பட்டுவிடும்.
முக்கிய சமையல்காரர் இல்லாதபோது, உணவு விடுதிக்கு விடுமுறை அளித்திருந்தாலோ, அல்லது குறைவான உணவு வகைகளோடு நிறுத்தியிருந்தாலோ, அன்றைய தினத்தின் வருவாயிழப்போடு போயிருக்கும். ஆனால், சமாளித்துவிடலாம் என்று எண்ணி, சரிவர செய்யாமல் விட்டதால், நிரந்தரமாக சில வாடிக்கையாளர்கள் இழக்க நேரிட்டதோடல்லாமல், அந்த கருத்து பரவுவதற்கும் வழியாகிவிட்டது. அதை சரிசெய்ய, நீண்டகாலம் பிடிக்கும். ஒருவேலை இந்ததவறு அடிக்கடி நடந்தால், எல்லாம் ஒட்டுமொத்தமாக நிரந்தரமாக பாழாகிவிடும்.
முயல்-ஆமை கதை, பள்ளியின் முதல் நிலைப்பாடம். ஆசிரியர் எத்தனை முறை சொல்லியிருந்தாலும், ஏனோ, நாமெல்லாம் அதை மறந்துவிட்டு, இன்னும் ஓய்வெடுப்பதிலேயே குறியாக இருக்கிறோம். கையிருக்கும் எந்தவொரு செயலையும், செயல்களை ஒத்திவைப்பதிலேயே பெரும்பாலும் குறியாக இருக்கிறோம். அந்த நாளை என்ற நாள், என்றுமே வருவதில்லை என்ற நிதர்சனம் புரிவதற்குள், நம்வாழ்க்கை முடிந்துவிடுகிறது. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியதை நிறைவேற்றி, திட்டமிடலின் மூலம் அடுத்த நாள் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்பவர்களுக்கு, எந்த ஒரு சவாலும் தடை கற்களாகாமல் படிக்கற்களாக மாறிவிடுகின்றன.
நீங்கள் வெற்றபெற ஆசையிருந்தால்
அனுதினமும் உங்கள் இருப்பிலும், செயலிலும் கவனமாக இருங்கள்;
எங்கும், எப்போதும், எதிலும் உங்களுக்கான ஒரு கற்றல் இருக்கிறதென்பதை மறவாமல் தெரிந்துகொள்ளுங்கள்;
வெற்றிக்கு அடிப்படை: உங்கள் உடல் நலம், மனநலத்தை பராமரிக்க உரிய பயிற்சிகளைக் கடைப்பிடிக்கவும்;
எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.
எல்லாமே நாம் எண்ணிய வண்ணம் நடக்கும் என்று கனவு கண்டுகொண்டிருக்காதீர்கள். எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், உங்கள் கைமீறி போகக்கூடும் என்பதை மறவாமல், விழிப்புடன் இருங்கள்;
நிகழ்வுகளுக்கு ஏற்ப, மாற்றங்களை கையாளும் நுண்ணறிவும் மேம்படுத்திக் கொண்டே இருங்கள்;
எல்லா சமயத்திலும், செயல் மட்டுமே வெற்றி ஆகிவிடாது. சில சமயங்களில், பின்வாங்குவதும், அமைதிகாப்பதும் கூட சிறந்த வழியாக இருக்கக்கூடும். எந்த சூழ்நிலையில், எது பொருத்தமானது என்பதை தொடர்ந்து விழிப்புடன் கவனித்து முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான்!
காலம் பொன் போன்றதென்ற பொன்மொழியை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
இங்கு உங்களுக்கானது, உங்களைச் சுற்றியே இருக்கிறது. உங்களால் அவற்றை அடையாளம் காண முடியாமல் தவறவிட்டால், இழப்பு உங்களுக்கு மட்டுமே. ஏனெனில், உலகம் எதனாலும், யாராலும், எப்போதும் எதையும் இழப்பதும் இல்லை, பெறுவதும் இல்லை. தவறவிடும் வாய்ப்புக்கள் உங்கள் செயலையும், வெற்றியையும் தாமதப்படுத்தும்.
எல்லா நேரங்களிலும், எல்லா விடயங்களிலும் விழிப்புடன் இருப்பவர்களால் மட்டுமே, கைகூடும் எல்லா வாய்ப்புக்களையும் வெற்றிகரமானதாக மாற்ற முடிகிறது. ஒருநாள், ஒரு வாய்ப்பை தவறவிட்டால், அதற்காக பலநாள் காத்திருக்க நேரிடலாம். ஒரு சில சமயங்களில், அந்த வாய்ப்பு மீண்டும் உங்கள் காலத்திற்குள் வராமலே கூட போகலாம். நீங்கள் வெற்றிகாண ஆசைப்பட்டால், எல்லா கனங்களிலும், விழிப்புடன் இருக்கவேண்டியது எல்லாவற்றையும் விட முக்கியமாகும்.
விழிப்புநிலை மட்டுமே உங்கள்
வெற்றிக்கான இயக்கநிலை;
ஒரு நாள் ஓய்ந்திருந்தால்
வெற்றி ஒருவாரம் தள்ளிப்போகும்;
இரண்டு நாள் ஓய்ந்திருந்தால்
வெற்றி ஒருமாதம் தள்ளிப்போகும்;
எங்கும், எதிலும், எக்கணமும்
விழிப்புடன் இருப்பவர்கள்
எல்லாச் சூழ்நிலைகளிலும்
ஏதாவதொரு வழிகண்டுபிடித்து
தோல்விகளை வெற்றிகளாக்குகின்றனர்;
மறந்துவிடாதீர்கள்
விழிப்புநிலை மட்டுமே
உங்கள் வெற்றிகான
ஒரே இயக்கநிலை......
- [ம.சு.கு 26.05.2023]
[புதிய சேர்ப்பு]
ஒருநாள் விழித்திருந்து எல்லாவற்றையும் திட்டமிட்டு
செயல்படுத்த வழியேற்படுத்திவிட்டு சென்றுவிட்டால்
சிலதினங்களில் எல்லா திட்டமிடலும் கேட்பாரற்றுப் போகும்;
அனுதினமும் அதை கவனிக்க வேண்டும்
முன்னர் எடுத்த முடிவுகள் காலப்போக்கில் தவறாக மாறலாம்
அனுதினமும் விழித்திருந்து சிக்கல்வரும் முன்
மாற்றங்களை தொடர்ந்து வழிநடத்த வேண்டும்;
உங்கள் கவனமும் விழிப்பு நிலையுமே உங்களின் வெற்றி
கவனம் சிதறும்போது தவறு நேர்கிறது
தவறு நஷ்டத்தை விளைவிக்கிறது
விழிப்பற்ற சோம்பேறித்தனத்தில்
எல்லா மாற்றமும் தள்ளிப்போவதோடு
இழப்புக்கள் சிறிதாய் துவங்கி வளருகிறது!
வெற்றிபெற விரும்பினால்
அனுதினமும் விழித்திருங்கள்!
Comments