top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 227 - தினமும் ஒருபடி முன்னேற்றம்...!"

Updated: May 30, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-227

தினமும் ஒருபடி முன்னேற்றம்....!


  • பள்ளி விளையாட்டு தினவிழாவில் நடத்தப்படும் 5 கி.மீ ஒட்டப்போட்டியில், யார் முதலில் வருவார்கள் என்று இரண்டு பருமனான பள்ளி நண்பர்களுக்கிடைய போட்டி ஏற்பட்டது.? இன்னும் ஆறு மாதத்தில் நடக்கவிருக்கும் இந்த போட்டிக்கு இருவரும் பயிற்சியை ஆரம்பித்தனர். முதல் நண்பன் போட்டி நிர்ணயமான அடுத்த தினம் கஷ்டப்பட்டு 5 கி.மீ. ஓடிப்பார்த்தான். மிகுந்த சிரமங்களுக்கிடையே போட்டி தூரத்தை கடந்தான். இரண்டவது நண்பன் முதல் நாள் பயிற்சியில் 1 கி.மீ மட்டுமே ஓடினான். இதை கேள்விப்பட்ட முதல் நண்பனுக்கு, தான் வென்றுவிடுவேன் என்று நம்பிக்கை பிறந்தது. மாதம் 1-2 முறை மட்டும் சிற்சில உடற்பயிற்சிகள் செய்துவந்தான். அதேசமயம் இரண்டாவது நண்பன் 1 கி.மீ.-இல் துவங்கி தினமும் சிறிதுசிறிதாக தூரத்தை அதிகரித்தான். கிட்டதட்ட நான்கு மாத காலத்தில், அவனால் அந்த 5 கி.மீ தூரத்தை இலகுவாக ஒட முடிந்தது. போட்டி தினத்தில் இவர்கள் இருவரில் யார் வெல்வார்கள்? ஏன்?

  • நீங்கள் சமையல் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள். உங்கள் தாயிடம் கேட்டு இரசம் செய்யும் முறையை கற்றுக்கொள்கிறீர்கள். 4-5 முறை அதை செய்தபோது, இரசம் நன்றாக வர ஆரம்பித்தது. இப்படி நூற்றுக்கணக்கான உணவு வகைகளை செய்து பழக வேண்டும் என்று எண்ணியபோது உங்களுக்கு மலைப்பாக இருந்தது. இரசம் செய்வதற்கே கஷ்டப்பட்டதை நினைத்து, இது சாத்தியமா என்று உங்களுக்கு பயமாகவும் இருந்தது. உங்கள் தாயிடம் கேட்டபோது, அவர் தினமும் ஒன்றை கற்றுக்கொள், எல்லாம் தானாக கைகூடும் என்று சர்வசாதாரணமாக சொன்னார். அது சாத்தியமா?

உடல் பருமனானவர்கள் 1 கி.மீ ஓடுவதே மிகவும் சிரமமாக இருக்க, 5 கி.மீ தூரத்தை அவர்கள் கடக்க கடுமையான பயிற்சி தேவை. ஏதோ குருட்டு முயற்சியில் ஒரு நாள் ஓடினால், அடுத்த ஒரு வாரத்திற்கு கைகால் வலியில் அவதிப்பட வேண்டும். அந்த 5 கி.மீ தூரத்தை சிரமமில்லாமல் கடக்க வேண்டுமானால் அனுதினமும் பயிற்சி செய்து, சற்று உடல் பருமனையும் குறைத்து, அவ்வளவு தூரத்திற்கு உங்கள் கால்களை பழக்கப்படுத்த வேண்டும். கால்களை எடுத்த மாத்திரத்தில் பழக்கப்படுத்டிவிட முடியாது. ஆரம்பத்தில் சிறிதாக துவக்கி படிப்படியாக ஆதிகரித்தால், கால்கள் மெதுவாக அதிக தூரத்திற்கு பழக்கப்படும். திடீரென்று ஒருநாள் அதிக தூரம் ஓடினால், கைகால் வழிமட்டுமே மிஞ்சும். தினமும் சிறிது சிறிதாக தூரத்தை அதிகரித்த நண்பனுக்கு 5 கி.மீ சில மாதங்களில் எளிமையானது. அதே சமயம் படிப்படியான பயிற்சி இல்லாமல் இருந்த நண்பனுக்கு அதே தூரத்தை கடப்பது மிகசிரமமான ஒன்றானது. இருவரும் ஓடிமுடித்தார்கள். அந்த பயிற்சியில்லாதவர் அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிக்கு வரமுடியவில்லை.


ஆயகலைகள் அறுபத்து நான்கில் எந்தவொன்றை கற்று நிபுணத்துவம் பெறுவதானாலும், அது ஒரே நாளில் சாத்தியப்படுமா? சமையலாகட்டும், பரதமாகட்டும், கலை எதுவானாலும் ஒரு அடிப்படை பயிற்சியில் துவங்கி படிப்படியாய் ஒவ்வொரு பதார்த்தங்களையும், அபிநயங்களையும் கற்றுத்தேற வேண்டும். நேற்று கற்றதை இன்று பயிற்சி செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், இன்றும் புதிதாய் ஏதாவதொன்றை கற்றால், உங்களின் அறிவு ஆழமாகும். தினம்தினம் ஒருபுதிய விடயத்தை கற்றால், உங்கள் செயல்களை மேம்படுத்தினால், குறுகிய காலத்தில் உங்களால் எந்த துறையிலும் நிபுணத்துவம் பெற்று மிளிரமுடியும்.


இணையத்தில் சர் டேவ் பிரெய்ல்போர்டு பற்றியும், அவர் பிரிட்டிஷ் மிதிவண்டி அணியை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்த விதத்தைப்பற்றியும் தேடி படித்துப்பாருங்கள். மிதிவண்டிப்போட்டியில் எட்டாக் கணியாக இருந்த ஒலிம்பிக் பதக்கங்கள் அவர்களுக்கு முற்றிலும் வசமான, “தினமும் 1% வளர்ச்சி” என்ற அனுகுமுறையை எப்படி நீங்கள் பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள்.


படிப்படியான பயிற்சியின் மூலம் நண்பர் 5 கி.மீ ஓடினார். சமையால் கைவசமானது. இந்த வளர்ச்சிக்கு எதிர்பதமாக தீயபழக்கங்களும் அப்படித்தான் வேறூன்றுகிறது. யாரும் ஒரே நாளில் பெரிய குடிகாரர் ஆகிவிடுவதில்லை. தினம் தினம் சிறிதாக ஆரம்பித்து அதிகரிப்பதில்தான் அவர்கள் முற்றிலும் சீர்கெட்டுப் போகிறார்கள். நல்ல பழக்கமோ, தீய பழக்கமோ, எல்லாம் ஒரு புள்ளியில் துவங்கி படிப்படியாக வேறூன்றுகிறது. யார் அதை அனுதினமும் படிப்படியாக அதிகரிக்கிறார்களோ, அவர்கள் அதில் ஆழ்ந்து உச்சத்தை தொடுகிறார்கள்.


தினமும் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்படுத்தும் முறைக்கு சிலர் கீழ்கண்ட சில ஆட்சேபங்களை சொல்வர்;

  • வெற்றி தாமதமாகும்

  • சில தினங்களில் சலிப்பு வந்துவிடும்

  • ஒற்றை நோக்கோடு பயனிப்பதனால், வேறு நல்லமுறைமைகளை கண்டுகொள்ளாமல் போகலாம்;

  • ஆரம்பத்தில் முன்னேற்றம் எளிதாக தோன்றினாலும், நாளடைவில் தொடர் முன்னேற்றம் மிகவும் கடுமையாக இருக்கும்;

மேற்கூறிய காரணங்கள் சரியானவை தான். ஆனால், இந்த காரணங்களைக் காட்டிலும், இந்த முறைமையில் நீங்கள் அடையும் படிப்படியான வளர்ச்சியின் தாக்கம் அளவற்றது.

  • அன்றாட முன்னேற்றம், உங்களுக்கு சிறந்த உந்துசக்தியாக இருந்து வழிநடத்தும்;

  • அடுத்து புதிதாக இன்றென்ன செய்யலாம் என்ற சிந்தனை உங்கள் இலக்கு நோக்கிய பயனத்தை துரிதப்படுத்தும்;

  • நீங்கள் கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றும் படிப்படியாக உங்களுக்கள் வேறூன்றி இயல்பாகிவிடும்;

  • ஆரம்பத்தில் கடினமாக தோன்றிய எந்தவொரு இலக்கும், பயனத்தில் எளிமையாகிப் போகும்;

  • உங்கள் செயல்கள் யாவும், பழக்கமாக ஆரம்பித்து அன்றாட வழக்கமாகிவிடும்;

உங்கள் வெற்றிக்கு, உங்கள் இலக்கு நோக்கிய கடினமான பயனத்தை நீங்கள் எப்படி எளிதாக கையாள்கிறீர்கள் என்பதில் இலகுவாகிறது. தினமும் சிறிதுசிறிதாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் போது, கடினமான விடயங்கள் கூட போகிற போக்கில் எளிதாகி விடுகின்றன. நேற்று செய்தவைகள் இன்று பழகிப்போகின்றன. இன்று கற்பவை நாளை பழகிப்போகும். சில மாதங்களில் எல்லாம் எளிமையாகிவிடும். இவை அனைத்திற்கும் முக்கியம், நீங்கள் மனவுறுதியுடன் படிப்படியான முன்னேற்றத்தை அனுதினமும் செயல்படுத்துவதில் தான் ஆரம்பமாகிறது.


இன்று செய்ததை அப்படியே

நாளையும் செய்வதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது?

இன்றைக் காட்டிலும் நாளைய செயலில்

என்னதொரு சிறு முன்னேற்றம் செய்யமுடியும் உங்களால்?


சாதாரண வட்டிக்கு கூட்டு வட்டிக்குமான

வித்தியாசத்தை சற்று அலசிப்பாருங்கள்!

ஒரு மாத அளவில் பெரிய வேறுபாடு தெரியாது

ஆனால் ஓராண்டு அளவில்

கூட்டுவட்டியின் வளர்ச்சி அபரிமிதமானது!


உங்கள் அன்றாட சிறுசிறு முன்னேற்றமும்

உங்கள் வெற்றிக்கான கூட்டு வட்டிதான்!


இன்றிருக்கும் நிலையிலிருந்து

அனுதினமும் 1% முன்னேற்றம் ஏற்படுத்துங்கள்!

ஒராண்டில் உங்கள் வளர்ச்சி

37 மடங்காக உயர்ந்திருக்கும்!


- [ம.சு.கு 24.05.2023]


சர் டேவ் பிரெய்ல்போர்டு குறித்த ஹார்வர்டு கட்டுரையை இங்கு படிக்கலாம் - https://hbr.org/2015/10/how-1-performance-improvements-led-to-olympic-gold]





Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarios


Post: Blog2 Post
bottom of page