“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-226
நிறைய பயிற்சி கொடுங்கள்!
நீங்கள் வாங்கிய பொருட்களில் ஏதேனுமொரு குறையிருந்தால், தொலைபேசி சேவை எண்னை அழைத்து உங்கள் குறையை சொல்லிய அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படி அழைத்தவுடன், மறுபுறம் இருக்கும் சேவை அலுவலர் எப்படி உரையாடலை ஆரம்பித்து, எப்படி முடிக்கிறார் என்று கவனித்திருக்கிறீர்களா? அதே போன்று வேறொரு தருணத்தில் மற்றொரு அலுவலர் பேசும்போது, அதேபானியை அச்சுபிசகாமல் கடைபிடித்திருப்பார். எவ்வளவு கடுமையாக வாடிக்கையாளர் பேசினாலும், அவர்கள் அமைதியாகவும், பொறுமையுடனும் பதிலளிப்பார்கள். அப்படியானால், அவர்களுக்கு கோபமும், சலிப்பும் வராதா? எப்படி 100 சேவை ஊழியர்களும் ஒரேமாதிரி கோபப்படாமல் பதிலளிக்கிறார்கள்?
தவழ்கின்ற குழந்தை நடக்க ஆசைகொள்கிறது. அது தானாக நடந்துவிடுமா? பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தைக்கு எழுந்து நிற்க பழக்குகிறார்கள். தாய்தந்தையரின் கைகளைப் பிடித்து நிற்கப்பழகும் குழந்தையின் கால்கள் மெதுவாக பலம் பெறுகிறது. கால்கள் படிப்படியாக பலம்பெற அது தன் இரண்டு கால்களால் சுயமாக நிற்கப் பழகுகிறது. அடுத்து அதன் இரண்டு கைகளையும் பிடித்து ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடக்க பழக்குகிறார்கள். ஒரிரு மாதத்தில் அப்படியே கைகளை பிடித்து நடக்கப் பழகுகிறது. நபர்கள் அருகில் இல்லாதபோது, சுவற்றைப் பிடித்து நடக்க முயற்சிக்கிறது. ஒருவேளை குழந்தைக்கு மனிதர்களைப்போல நடக்கப்பயிற்சி அளிக்காமல் விலங்குகளுடன் இருக்கவிட்டால், மனிதன் தன்னையும் ஒரு நான்குகால் மிருகம் என்று எண்ணி கையை காலாக பயன்படுத்தியிருப்பானோ?
வாடிக்கையாளர் தான் உங்களின் அரசர் என்று காந்தி சொன்னார். உங்கள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த அவர்கள் உங்கள் கடைக்கு வந்தகணம் முதற்கொண்டு உங்கள் பொருட்களை வாங்கி உபயோகித்து மற்றவருக்கு பரிந்துரைக்கும் வரை, ஒவ்வொரு கணமும் திருப்திபடுத்தும் விதத்தில், எப்படி அவர்களை கையாள வேண்டும், எதை பேச வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், என்று உங்கள் ஊழியர்களுக்கு நீங்கள்தான் பயிற்சி அளிக்கவேண்டும். அப்படி பயிற்சி அளிக்காமல் ஒரு புதியநபரை வேலைக்கு நிறுத்தினால், அந்த நபர் இஷ்டம்போல வாக்குறுதிகளை அளிக்கக்கூடும் அல்லது வாடிக்கையாளரின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லத்தெரியாமல் திணறக்கூடும்.
உங்கள் ஊழியர்கள் செய்யும் ஒவ்வொரு தவறும், உங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கக்கூடும். ஒரு பொருளை எப்படி உற்பத்தி செய்யவேண்டும்? எப்படி பொருத்த வேண்டும்? எப்படி வாடிக்கையாளரை வரவேற்க வேண்டும்? எப்படி பொருட்களின் செயல்பாடுகள் குறித்து விளக்க வேண்டும்? எப்படி விற்பனையை உறுதிசெய்ய வேண்டும்? எப்படி வாடிக்கையாளர்களின் குறைகளை கையாள வேண்டும்? என்று வியாபாராத்தில் ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் அறிந்திருந்தால், ஒரு தனிநபராக ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைவீர்கள். அதை உங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றாக பயிற்சியளித்து செயல்படுத்தினால், அடுத்த கட்ட அசுரவளர்ச்சியை அடைவதற்கு வழியேற்படும். உங்கள் ஊழியர்கள் பயிற்சியின்றி களத்தில் நின்றால், நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி எல்லாவற்றையும் சீரழிக்க நேரிடும்,
குழந்தை நடக்கப் பழகுவதானாலும் சரி, பேசப்பழகுவதானாலும் சரி, தன் முதல் முயற்சியிலேயே அது சாத்தியப்படுவதில்லை. அதை சீக்கிரத்தல் சாத்தியப்படுத்த பெற்றோர்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எழுத்தாக குழந்தைக்கு அதன் தாய் பயிற்சிகொடுக்கிறார், ஒவ்வொரு நாளும் கைபிடித்து குழந்தைக்கு நடக்க கற்றுக்கொடுக்கப்படுகிறது. அப்படி தொடர்பயிற்சியின் மூலம், குழந்தை ஒவ்வொன்றாக கற்றுக்கொள்கிறது. கற்றுக்கொண்டதை தினமும் பயற்சி செய்து அதில் நிபுனத்துவம் அடைகிறது. பயிற்சி மட்டுமே எல்லாவற்றின் ஆரம்பமும், சரியான முடிவுமாகும்;
இன்று உங்கள் திறன்களை வளர்க்க நீங்கள் என்ன பயிற்சி செய்துகொண்டிருக்கிறீர்கள்?
உங்கள் ஊழியர்களின் திறன்களை வளர்க்க என்ன பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
பயிற்சி செய்வதும், பயிற்சி கொடுப்பதும்
தேவையற்ற நேர விரயம்
தேவையற்ற பண விரயம்
அதிகமாக பயிற்றுவிக்கப்படுவதனால் படைப்பாற்றல் திறன் குறைகின்றது
என்று நிறைய காரணங்கள் சொல்லி பயிற்சியை தவிர்ப்பார்கள். அந்த காரணங்களை கடந்து, நீங்கள் உங்கள் நிறுவனத்தில் முறையான பயிற்சியை அளித்து, ஊழியர்களை வழிநடத்தினால்,
ஊழியர்களின் திறன் மேம்படும்
அடிப்படைகளை அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வதன் மூலம், அவர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்
ஊழியர்களுக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும். தெளிவுடன் வேலையை செய்தால், அதை முடிக்கும்போது, மனநிறைவு ஏற்படும்;
என்ன செய்ய வேண்டுமென்ற தெளிவு அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்;
தேவையற்ற பல சிறுதவறுகள் தவிர்க்கப்படும்
ஊழியர்களின் அனுபவங்கள் பயிற்சியின் மூலம் பகிரப்பட்டு, எல்லோருக்கும் அந்த துறையில் பரந்துபட்ட அறிவு ஏற்படும்;
எல்லோரும் ஒரே மாதிரி செய்வார்கள். ஒருவேலை ஓரிருவர் திடீரென்று வரவில்லை என்றாலும், விட்ட இடத்திலிருந்து மற்றவர்கள் அந்த வேலையை எளிதில் தொடர்வார்கள்;
நல்ல பயிற்சிபெற்ற ஊழியர்களைக்கொண்ட நிறுவனம், தைரியமாக கடினமான வேலைகளை, திட்டங்களை எடுத்து செயல்படுத்த முடியும்.
நீங்கள் பெரிய திட்டங்களை எடுத்து வெற்றிகரமாக செயல்படுத்தி வெற்றிகாண விரும்பினால், நீங்கள் பயிற்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் குழுவை, உங்கள் ஊழியர்களையும் சிறப்பாக தயார்படுத்த வேண்டும்.
ஊழியர்களுக்கான பயிற்சி தேவைகள் என்ன என்று பட்டியலிட வேண்டும்
யார் யாருக்கு எந்தெந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும், பயிற்றுனர் யார், எப்போது பயிற்சி நடத்தப்பட வேண்டும் என்று தெளிவாக திட்டமிட வேண்டும்
பயிற்சிகள் முடித்தபின், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களின் திறன் மேம்பாடு எந்தளவிற்கு இருக்கிறது, பயிற்சியின் பலன் எப்படி என்ற ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்;
பயிற்சி மட்டுமே எல்லா தவறுகளையும் சரிசெய்யும்
தொடர்ந்து பயிற்சி கொடுங்கள்!
எல்லாம் கற்றறிந்த மேதாவிகளும்
கட்டாயம் தொடர்ந்து பயிற்சியெடுக்க வேண்டும்;
உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் செய்யலாம்
உங்கள் ஊழியர்களுக்கு பயிற்சியளித்தால்
அவர்கள் உங்களுக்காக செய்து முடிப்பார்கள்!
ஒன்றிரண்டு செய்வதானால் நீங்களே செய்யலாம்
ஓராயிரம் செய்யவேண்டுமானால்
உங்கள் ஒருவரால் எப்படி சாத்தியமாகும்
பலருக்கு பயிற்சிகொடுத்து பழக்கப்படுத்தினால்
இலட்சமானாலும், கோடியானாலும்
எளிதில் செய்துமுடிக்கலாமே!
- [ம.சு.கு 23.05.2023]
Comments