“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-218
நல்லதை அதிகம் சொல்லுங்கள்!
ஒருவர் தன் மனைவியுடன் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு முதல்முறையாக விருந்திற்கு செல்கிறார். ஆரம்ப வரவேற்புக்கள் முடிந்து பேச ஆரம்பிக்கும்போது. அவரது மனைவி, வீட்டை முழுதும் சுற்றிப்பார்த்துவிட்டு, சுவற்றில் பூசப்பட்ட நிறம் மங்கலாக இருப்பதாகவும், இந்திந்த பொருட்களை இப்படி வைத்திருப்பது அழகில்லை என்றும் தன் கருத்துக்களை எதிர்மறையாக சொல்கிறார். இவையனைத்தும், அவரது நண்பரின் மனைவி தேடித்தேடி செய்தவைகள். அவரது தேர்வுகளை எடுத்தவுடன் குறைசொல்லவே, அவரது முகம் மாறிவிட்டது. ஏனோ அதன் பின்னர், அந்த நண்பரின் மனைவிக்கும், இவரது குடும்பத்திற்கும் பொருந்தவே இல்லை. அவர்களது நட்பே சிறிது காலத்தில் முறிந்துவிட்டது;
எல்லா நிறுவனத் திட்டங்களும், பல ஊழியர்களின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அந்த குழுவை ஒரு திட்ட மேலாளர் முன்னெடுத்து வழிநடத்துவார். அந்த மொத்த குழுவினரும் ஓரே அளவான திறமை படைத்தவராக இருக்க வாய்ப்பில்லை. ஒருசிலர் நல்ல திறமை சாலிகளாகவும், ஒருசிலர் சராசரியாளர்களாகவும் இருப்பார்கள். திறமைசாலிகளை மட்டும் அங்கீகரித்து, சராசரியாளர்களை தொடர்ந்து குறைகூறிக்கொண்டிருந்தால், அந்த திட்டத்தை அந்த மேலாளரால் திறம்பட முடிக்க முடியுமா?
மற்றவர்கள் வீட்டு அமைப்புமுறை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அங்கு வசிக்கும் அவர்களுக்கு அது பிடித்திருக்கும். அவர்கள் தங்களுக்கு பிடித்த வகையில் தேடித்தேடி செய்த விடயங்களை ஏன் நீங்கள் குறை சொல்ல வேண்டும். அப்படி குறைசொல்வதால் உங்களுக்கென்ன பயன்? அந்த வீட்டின் அமைப்பில் உள்ள நல்லவிடயங்களை முதலில் கண்டு பேசுங்கள். அது அவர்களின் தேர்விற்கு கிடைக்கும் அங்கீகாரமாக எண்ணி மகிழ்கின்ற போது, அங்கிருக்கும் சிறுகுறைகளை மேம்படுத்தும் ஆலோசனைகளை சிறிதளவாக சுட்டிக்காட்டினால், அதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு தேவையான திருத்தங்களையும் செய்வர். அதைவிடுத்து, குறைகளை மட்டுமே முன்னிறுத்தினால், அவர்கள் உங்களையே மொத்தத்தில் கைகழுவி விடுவார்கள்;
ஒரு குழுவில் எல்லா வகையான ஆட்களும் இருப்பார்கள். அதில் ஒருசிலரை மட்டும் போற்றி, மற்றவர்களை குறைகூறினால், அந்த குழுவின் ஒற்றுமையும், ஒருங்கிணைத்த செயல்பாடும் பெருமளவில் பாதிக்கும். எல்லா செயல்களிலும், நிறைய சராசரியாளர்களின் பங்களிப்பும் தேவை. அவர்களை தவிர்த்துவிட்டு உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. அதேசமயம், அந்த சராசரியாளர்களின் சிறுபங்களிப்பை அங்கீகரிக்காமல், அவர்களின் முழுமையான ஆதரவை பெறமுடியாது. ஒருகுழுவின் வெற்றிக்கு, அதன் உறுப்பினர்கள் அனைவரையும், அவரவர் திறமைகளுடன் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டால் தான் குழு ஒருங்கிணைந்து செயல்படும். அதில் திறமைசாலிகளை மட்டும் போற்றி, மற்றவர்களை அவர்களுடன் ஒப்பிட்டு குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தால், அந்த சராசரியாளர்களுக்கு திட்டத்தில் ஈடுபாடு குறைந்து, அவர்களின் பங்களிப்பும், செயல்களின் தரமும் குறைந்துவிடும்.
ஏன் தவறுகளை சுட்டிக்காட்டுவதைவிட, ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விடயங்களை அதிகம் பேச வேண்டுமென்றால்
அவர்கள் செய்த நற்செயல்களை முன்னிறுத்தி பேசும்போது, அவர் அங்கீகரிக்கப்படுவதை அவர் உணர்கிறார். இங்கு சமுதாய அங்கீகாரம் தான் எல்லோருக்குமான பிரதான தேவை. அவரின் நற்செயல்களை முன்னிறுத்தி அந்த அங்கீகாரத்தை வழங்கும் போது, அது நேர்மறையான சூழ்நிலையையும், சிந்தனையையும் வளர்க்கிறது. அப்போது, அவரை மேலும் முன்னேற்றும் நோக்கில் சுட்டிக் காட்டப்படும் ஓரிரு தவறுகள், ஆக்கபூர்வமான கருத்துக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு திருத்திக் கொள்ளவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள்;
நீங்கள் நற்செயல்களை பிரதானப்படுத்தி ஒருவரை அங்கீகரிக்கும்போது, மேற்கொண்டு அவர்கள் உங்கள் முன்னிலையில் மேலும் நற்செயல்களை செய்வதிலேயே கவனம் செலுத்துவர்;
ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை முன்னிறுத்தி பேசும்போது, அவர்களுடனான உங்கள் தொடர்பு மேலும் பலப்படும். உங்கள் சொற்களும், கருத்துக்களும் பெரும் மதிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படும்;
நீங்கள் யாருடனும் ஆக்கப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்த விரும்பினால்,
அவர்களையும், அவர்களின் செயல்களையும் நன்கு கவனியுங்கள். அவர்கள் சொல்வது முழுவதையும் கவனமாக கேளுங்கள்;
நேர்மறையான, ஆக்கப்பூர்வமான வார்த்தைகளை மட்டும் தேடித்தேடி உபயோகியுங்கள் [வள்ளுவனின் “இனிய உளவாக” குறளை படித்துணருங்கள்]
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவர்கள் செய்த நற்செயல்கள் குறித்து பேசுங்கள், அவர்களின் முயற்சிகளை பாராட்டுங்கள்;
மற்றவர்களை பற்றி அனுபவமற்ற அனுமானங்களை வளர்த்துக்கொள்ளாதீர்கள்; சந்தேகங்கள் இருந்தால், உடனுக்குடன் கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்;
உதவு செய்பவரின் கண்ணோட்டத்தில் அல்லாமல், அதை பெறுபவரின் கண்ணோட்டத்தில் அவரது தேவை குறித்து யோசியுங்கள்; எதையும் எடுத்தோம்-கவிழ்த்தோம் என்று முடிவு செய்யாமல், பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது;
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்போது, கூடியவரை நேர்மறையான சொற்களில் அவர்களின் நற்செயல்களை பாராட்டி, அவரை முன்னேற்றும் நோக்கில் ஆலோசனையாக அவர்களது சில தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்.
பொதுவாக, ஒரு நேர்மறையான, ஆக்கப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்துவதென்பது ஒரு வகையான கலை. உங்கள் அனுபவத்தில், பழகும் நபருக்கு ஏற்ப, அவர்களது குணாதியங்களுக்கு ஏற்ப, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் பேச்சுத் திறமையால், அந்த நபரை ஊக்குவிக்கவும், தவறுகளை திருத்தவும், உங்கள் உறவுகளை பலப்படுத்தவும் முடிந்தால், உங்களால், உலகில் எவ்வளவு கடினமான மனிதரையும் தன் வயப்படுத்தி வென்று சாதிக்க முடியும்.
நல்லதை நிறைய சொல்லுங்கள்!
நல்லதை கேட்கக்கேட்க எல்லாம் நல்லதாகட்டும்!
எடுத்தவுடன் செய்த தவறை சுட்டிக்காட்டினால்
பயமும், படபடப்பும் அதிகரித்து
ஒளிந்துகொள்ளவும், தற்காத்துக்கொள்ளவும்
மனம் வழி தேடும்;
சரியாக செய்தவற்றைச் சொல்லி!
சாதனைகளைச் சொல்லி!
முன்னேற்றவேண்டிய தேவைகளென
குறைகளை சிறிதாக சுட்டிக்காட்டினால்!
கட்டாயம் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி
வாழ்க்கையில் பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்;
- [ம.சு.கு 15.05.2023]
Comments