“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-216
பழக்கவழக்கத்தை பரிசீலியுங்கள்!
50 ஆண்டுகளுக்கு முன்னர், தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவிற்கும், இன்றைய அளவிற்கும் நிறைய வேறுபாடு. ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில், ஒரு தனிநபரின் உற்பத்தித் திறனிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு நாளைக்கு 50 உள்ளாடைகளை தைத்தும், மடித்தும் வந்த ஊழியர்கள், இன்று கிட்டதட்ட 200 உள்ளாடைகளை முடிக்கிறார்கள். அன்றிருந்த அதே 12 மணி நேர வேலையைத்தான் இன்றும் செய்கிறார்கள். ஆனால் உற்பத்தி அளவு 3-4 மடங்கு அதிகரித்தது எப்படி?
ஒரு மிகச்சிறந்து பேச்சாளர், தன்னுடைய இளம்வயதில் முதல் முறையாக கல்லூரியில் மேடையேறி பேசும்போது திக்கித்தடுமாறி பாதியிலேயே நிறுத்தினார். அவருக்கு மேடையில் நிற்பதற்கு பயம் இருக்கவில்லை. ஆனால் அவர் பேசவேண்டிய விடயங்களை அவரால் நினைவுகூற முடியவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு விடயமாக தன்னை தயார் செய்தார். தன் ஒவ்வொரு பழக்கத்தையும் பரிசீலித்து மாற்றினார். எல்லா பேச்சுக்கும் முன்னர், தலைப்பிற்கு உரிய கருத்துக்களை பட்டியலிட்டார். அவற்றை வரிசையாக நினைவு வைத்துக்கொள்ளும் குறிப்பு முறைகளை ஏற்படுத்தினார். சிறு குறிப்பு காகிதத்தை தன் சட்டையில் எப்போதும் தயாராக வைத்தார். பேசும் வாக்கியங்களின் ஏற்ற இறக்கங்களை பதிவு செய்து, மீண்டும் கேட்டு தனக்குத்தானே திருத்தினார். எந்தெந்த மாதிரியான கருத்துக்களுக்கு மக்கள் வரவேற்பு எப்படி இருக்கிறதென்று தொடர்ந்து பிரசீலித்தார். 50 மேடைகளை கடக்கும் போது, அவர் மக்கள் விரும்பும் சிறந்த பேச்சாளரானார்.
முந்தைய காலத்தில் தொழிற்சாலைகளில் ஒரு ஊழியர், ஒரு மூலப்பொருளை கையில் எடுத்தால், அதை முழுவதுமாக செய்துமுடிக்கும் வரை ஒருவரே எல்லாவற்றையும் செய்வார். ஒரு பொருள் தயாரிப்பில் பல நிலைகள் இருந்தால், எல்லாவற்றையும் ஒருவரே மாற்றிமாற்றி செய்து பொருளுக்கான இறுதிவடிவத்தை கொடுப்பார். ஆனால், அறிவியல் மாற்றத்தில், வல்லுனர்களின் ஆலோசனையில், ஊழியர்களின் ஒவ்வொரு நொடி வேலையும், பழக்கவழக்கமும் பரிசீலிக்கப்பட்டது. எதை எங்குவைத்து எடுத்தால் எளிதாக இருக்கும்? எதை முதலில் செய்தால் வேகத்தை கூட்டலாம்? எதையெதை யார்யாருக்கு பிரித்துக்கொடுத்தால் வேகத்தை அதிகரிக்கலாம் என்று ஊழியர்களின் ஒவ்வொரு செயலையும், பழக்கத்தையும் தொடர்ந்து மாற்றியமைத்து, உற்பத்தியை 3-4 மடங்கு இயந்திரங்கள் ஏதுமின்றி பெருக்கினர். அப்படி செயல்களை பிரித்து வேகமாக செய்ததை, அப்படியே இயந்திரமயமாக்க அவர்களுக்கு மிக எளிதாக போனது.
அந்த பேச்சாளர் மேடைப்பேச்சில் வெற்றிகரமாக 100 மேடைகளை கடந்தபின்னும், தினமும் தன் பேச்சை தானே 1-2 முறை கேட்டு தவறுகளை திருத்துகிறார். தன் கைகள் தவறாக அசைக்கும் பழக்கத்தை பரிசீலித்து நெறிபடுத்தினார். சொற்களின் உச்சரிப்பை கவனித்து மாற்றினார். இன்று அவருடைய பேச்சில் தவறுகண்டுபிடிக்க அவரைத்தவிற யாராலும் முடியாத அளவு, தன் பழக்கத்தை தானே தொடர்ந்து பரிசீலித்து நிறைய முன்னேற்றங்களை வெளிப்படுத்தினார். அந்த பேச்சாளர் வெற்றிபெற்ற முறைமை ஒன்றே வாழ்வில் சாதனைகள் புரிவதற்கான ஒரேவழி. உங்கள் தவறான பழக்கத்தை, தவறான செய்முறையை நீங்கள் எவ்வளவு சீக்கிரம் இனம்கண்டு திருத்துகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் நீங்கள் வெற்றிக்கு அருகில் நெருங்கி வருவீர்கள்.
முதல் முறை ஒலிம்பிக்கில் கடைசி வீரராக வந்தவர், படிப்படியாக தன் ஒவ்வொரு முயற்சியையும், உடல் அசைவுகளையும், உடற்பயிற்சியையும் மேம்படுத்தி அடுத்த முறை தங்கம் வென்றார். வெற்றிபெற நிறைய முயற்சி செய்யவேண்டுமென்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், அந்த முயற்சியானது. உங்களின் ஒவ்வொரு பழக்கத்தையும் பரிசீலித்து முன்னேற்றம் ஏற்படுத்துவதாக இருந்தால், உங்களின் வெற்றி சீக்கிரத்தில் சாத்தியப்படும்.
இன்று வரை செய்துவந்தது சரியாகவோ, தவறாகவோ இருந்திருக்கலாம். நடந்தைவைகள் மாற்றமுடியாது. மாறாய் நம் செயல்களை, பழக்கங்களை இன்று பரிசீலித்து தவறுகளை திருத்தினால், இனி செய்யப் போகின்றவைகளாவது நல்லதாகவும், சிறப்புக்குரியதாகவும் இருக்க வழியேற்படும். செய்துவருவது தவறோ-சரியோ, அவ்வப்போது அவற்றை மறுபரிசீலனை செய்துகொண்டேயிருங்கள்.
உங்கள் பழக்கவழக்கங்களை அவ்வப்போது பரிசீலிக்காமல் விட்டால்
காலமாற்றத்திற்கு ஏற்ப நீங்கள் மாறுபடாமல் பழமையிலேயே இருக்கநேரிடலாம்;
எங்கு பிரச்சனை வருகிறது? ஏன் வருகிறது? என்ற காரணங்கள் தெரியாமல் கஷ்டப்படலாம்;
தவறான பழக்கங்கள் உங்கள் உடல்நலன், மனநலன் மற்றும் உறவுகளை பாதிக்கலாம்;
உங்கள் வளர்ச்சிக்கு தேவையான மாற்றங்களை தவறவிடலாம்;
எந்தெந்த பழக்கவழக்கங்களை நீங்கள் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து கொண்டேயிருக்க வேண்டும்;
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க ஆசைப்பட்டால், உங்கள் உணவுப் பழக்கத்தையும், உடற் பயிற்சி தேவைகளையும் தொடர்ந்து மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை ஏற்படுத்தலாம்;
பல்வேறுபட்ட வேலைகளுக்கான உங்கள் நேரப் பயன்பாட்டை மறுஆய்வு செய்து அவசர-அவசியங்களுக்கேற்ப மாற்றியமைத்தால், உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்;
உங்களின் தற்போதைய பழக்கங்கள் எதை நோக்கி வழிநடத்துகிறதென்று பரிசீலித்து உரிய மாற்றங்களை செய்தால், உங்கள் இலட்சியத்தை நோக்கிய பயனம் விரைவாகும்;
சமுதாயத்துடனான அணுகுமுறையை, உறவுகளுடனான இணைப்பை தொடர்ந்து பிரசீலித்து மேம்படுத்தினால், உங்கள் வெற்றிபயனத்தில் எல்லோரும் துணை நிற்பர்;
உங்களின் தற்போதைய திறன்களை கடந்து புதிய கற்றலை துவக்க, உங்களின் தற்போதைய பழக்கவழக்கத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த அவற்றை நீங்கள் பரிசீலித்தால் தானே முடியம்;
உங்களின் வரவு-செலவு பழக்கங்களை தொடர்ந்து மறுஆய்வு செய்துகொண்டே இருக்கவேண்டும். அதீதமாக செலவழிப்பதும் தவறு, அதேசமயம் போதுமான செல்வம் இருந்தாலும், செலவு செய்யாமல் பூட்டி வைப்பதும் தவறு.
உலகில் மாற்றம் என்பது நிரந்தரம். அந்த மாற்றத்திற்கேற்ப, உங்களை நீங்கள் தயார் படுத்தவேண்டியது அவசியம். உங்களின் அன்றாட பழக்கவழக்கங்களை மறுபரிசீலனை செய்து போதிய மாற்றங்களை தொடர்ந்து செய்துவந்தால், உங்களின் வளர்ச்சிப்பாதை எளிதாகும்;
பிறப்பு முதல் இறப்பு வரை
எண்ணற்ற செயல்களை எதேச்சையாகவும்
தொடர் பழக்கவழக்கத்தாலும் செய்கிறோம்;
செய்கின்ற செயல்கள் தொடர்ந்து
கர்ம வினைகளை தீர்த்தும் வளர்த்தும் வருகிறது;
உங்கள் கட்டுப்பாட்டில் துவங்கும் பழக்கம்
வழக்கமாகும்போது உங்கள் கட்டுப்பாட்டை மீறும்;
வழக்கமாகிவிட்ட பழக்கம்
காலத்திற்கு ஒவ்வாததானால் – அவை
வளர்ச்சிக்கு பதிலாய் வீழ்ச்சிக்கு வித்திடலாம்;
இன்று நல்ல பழக்கம் என்பது – காலமாற்றத்தில்
நாளை தவறான பழக்கமாகலாம்;
காலச் சூழ்நிலைகள் மாறும்போது
நம் பழக்கவழக்கங்களும் மாற்றம்காண வேண்டும்;
பழக்கவழக்கத்தை ஏற்புடையதாக மாற்ற
அவ்வப்போது அதை முழுவதும் பரிசீலிக்க வேண்டும்;
மாற்றம் ஒன்றைத்தவிர எதுவும் நிரந்தரமில்லை எனும்போது
உங்கள் பழக்கவழக்கம் மட்டும் எப்படி விதிவிலக்காகமுடியும்?
- [ம.சு.கு 13.05.2023]
댓글