[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-193
உங்களை யார் கவனிப்பது?
ஒரு குருவிடம், பெண்மனி ஒருவர் அன்றாடம் வீட்டுப் பராமரிப்பு, பிள்ளைகள் பராமரிப்பென்று தன் வாழ்வு சிறைபட்டிருப்பதாக உணர்கிறேன் என்று கூறினார். பொருளீட்டில் ஒருவர் வேலையென்றும், வீட்டுப் பராமரிப்பு ஒருவர் வேலையென்றும் பொறுப்பெடுத்து கடமையைச் செய்வதில் அவ்வப்போது சலிப்பு வருவது இயல்பே. இந்த கடமைகளோடு, உங்களை மேம்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று குரு கேட்டார்? “எதுவுமில்லை” என்று அந்த பெண்மனி பதிலளித்தார். உங்களுக்காக, நீங்கள் ஒரிரு மணிநேரம் ஏற்படுத்தி தியானம், யோகாசனம், நூல் வாசிப்பு, புதிய கலைகளை கற்றல் என சிலவற்றை செய்ய பரிந்துரைத்து ஆறுமாதம் தவறாமல் முயற்சிக்குமாறு கூறினார். வீட்டுவேலை பழுவில் உள்ள அந்த பெண்மனிக்கு அது சாத்தியமா?
ஒரு வியாபாரிக்கு, அன்றாட வர்த்தகம் நன்றாக சென்று கொண்டிருந்தது. அதில் வந்த வருவாயை, தன் குடும்ப செலவிற்கு எடுத்ததுபோக, தொடர்ந்து அதே தொழிலில் முதலீடு செய்துவந்தார். தொழில் அல்லாமல், தன் எதிர்காலத்திற்காக அவர் வேறு எந்த சேமிப்பையும், முதலீடுகளையும் செய்யவில்லை. தனக்கும், தன் குடும்பத்தினரின் எதிர்காலத்திற்கென்று மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, வைப்புநிதி, ஓய்வூதிய திட்டம், வீடு என்று எதையும் ஏற்படுத்திக் கொள்ளாமல், எல்லாவற்றையும் தொடர்ந்து ஒரே வியாபாரத்தில் முதலீடு செய்தார். திடீரென்று ஒருநாள் பெரிய வாடிக்கையாளர் ஏமாற்றி கைவிரிக்க, எக்கச்சக்க நஷ்டம். தன் முதலீடுகளெல்லாம் ஓரிரு மாதங்களில் கரைந்து கடன் அதிகரித்தது. ஒருவேளை அவரது வியாபாரம் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால், அவரது நிலை என்னவாகும்?
ஒருவருட காலம் கழித்து மீண்டும் குருவை சந்திக்க அந்த பெண்மனி தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். இம்முறை அவர் முகத்தின் மலர்ச்சியை கவனித்த குரு, அந்த பெண்னிடம் என்ன மாற்றத்தை உணர்ந்துள்ளாய் என்று கேட்டார். அந்த பெண்மனி கூறியது, முன்னைவிட அரைமணி நேரம் இப்போது சீக்கிரமாக எழுந்து 5-10 நிமிட நேர தியானமும், 15-20 நிமிடம் யோகாசனமும் தவறாமல் செய்வதாகவும், அன்றாடம் தவறாமல் தொலைக்காட்சிக்கான நேரத்தை குறைத்து, தினமும் 1 மணிநேரம் புத்தகம் வாசிப்பதாகவும் கூறினார். மேலும் தன் மகளுடன் சேர்ந்து தற்போது நாட்டியம் கற்க செல்வதாகவும் கூறினார். முன்னைவிட இப்போது தன் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி கூடியிருப்பதாகவும், தனக்காக தினமும் நேரம் ஓதுக்கி தன்னை மேம்படுத்திக்கொள்ள துவங்கியது முதல் தன்வாழ்க்கை அர்த்தமுடையதாக மாறியிருப்பதை உணர்வதாகவும் தெரிவித்தார்.
ஆம்! உங்களை நீங்கள் பார்த்துக்கொண்டால், உங்கள் மனம் அமைதியும், மகிழ்ச்சியும் கொண்டிருந்தால், நீங்கள் மற்றவர்களையும், மற்றவைகளையும் நன்றாக பார்த்துக்கொள்ள முடியும். சலிப்புடன் வேலை செய்யும் போது, அவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி மேம்படுத்த முடியாது. மகிழ்வுடனும், ஈடுபாட்டுடனும் வேலை செய்யும்போது, வேலை எளிதாவதோடு, அவற்றை சீக்கிரமாகவும், சிறப்பாகவும் செய்ய முடிகிறது.
வியாபாரத்தில் செல்வம் சேர்வதை, அவ்வப்போது சிறிதளவு வெளியில் எடுத்து தன் பாதுகாப்பிற்கென வேறு சேமிப்பு / முதலீடுகளில் போட வேண்டும். மேலும் இலாபத்தில் 25% பணத்தை, எதிர்கால அசம்பாவிதங்களை சமாளிக்க, ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்தில் போட்டுவைத்தால், சிக்கலான காலகட்டங்களில் இந்த சேமிப்பு பேருதவியாய் இருக்கும்;
வியாபாரத்தை விரிவாக்க, அதே தொழிலில் தொடர்ந்து முதலீடு செய்யவேண்டிய தேவை ஒருபுறம் இருந்தாலும், நடைமுறையில் சந்தை மாற்றங்கள், பொருளாதார சூழ்நிலைகளால் ஏற்படும் சரிவுகளை சமாளிக்கவும், உங்கள் நலனுக்கென்று நீங்கள் குறிப்பிட்ட அளவு சேமிப்பை / இதர முதலீடுகளை / காப்பீடுகளை மாதம் தவறாமல் தொடர்ந்து செய்துவந்தால், ஒருபுறம் அந்த சேமிப்பு/முதலீடு வளர்ந்துவரும். உங்களுக்கென செய்யவேண்டிய இந்த சேமிப்பை நீங்கள் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டு வந்தால், நெருக்கடிக் காலங்களில் வாழ்க்கை திண்டாட நேரிடும்.
வியாபாரத்தை பெருக்க நீங்கள்தான் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். அதேசமயம், உங்கள் நலனை, உங்கள் எதிர்கால பாதுகாப்பை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு சேமிப்புத் திட்டங்களும் / காப்பீடுகளும் இல்லாமல் உங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது. அப்படி முட்டாள்தனமாக மக்கள் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், அரசாங்கம் ஊழியர்களுக்கு கட்டாய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய திட்ட நிதி என்று உழைக்கும் காலத்தில் அவர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்து எதிர்கால பாதுகாப்பிற்கு அரசாங்கம் சேர்க்கிறது. மேலும் தொழிலாளர்களுக்கு மருத்துவ திட்டம், பணிக்கொடை திட்டம் என்று வெவ்வேறு கட்டாய திட்டங்களை செயல்படுத்துகிறது.
ஊழியர்களுக்கு இது ஒருபுறம் கட்டாயமாக சேமிப்புக்களாக, எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடுகளாக அரசாங்கமே நடத்துகிறது. ஆனால் சிறு வியாபாரிகளுக்கு, சுயதொழில் முனைவோருக்கு யாரும் இந்த மாதிரி எதிர்கால பாதுகாப்பு அளிப்பதில்லை. இலாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டியது அவர்களின் விதியாக இருக்கும்போது, தனக்கும், தன் குடும்பத்தினருக்குமான குறைந்தபட்ச எதிர்கால பாதுகாப்பு நிதி / மருத்துவ காப்பீடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அர்களின் கட்டாய தேவை. தனக்கென செய்யவேண்டிய இந்த அத்தியாவசியத் தேவைகளை கவனிக்கத் தவறினால், கஷ்டகாலங்களில் பிறர்மீது குறைகூறுவதில் பயனில்லை.
நீங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உலகம் சுழன்று கொண்டும், வாழ்க்கை நகர்ந்துகொண்டும் தான் இருக்கும். நீங்கள் வாழும் காலங்களில், உங்களுக்கென நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் இங்கு கேள்வி. உங்கள் நலனை, உங்களைத் தவிற வேறுயாராலும் சரிவர பார்த்துக்கொள்ள முடியாது. உங்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மற்றவர்கள் “சுயநலமான செயல்” என்று குறைகூறினால், அதை பொருட்படுத்தாதீர்கள். உங்கள் கஷ்டகாலத்தில் அவர்கள் வந்து உங்களுக்கு உதவமாட்டார்கள்.
“உங்களை நீங்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்ற வரிகளை என்றும் மறவாதீர்கள்.
வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி செல்வம் சேர்க்கிறீர்கள்;
சுற்றமும் நட்பும் மகிழ்ந்திட வழிசெய்தாலும்
நீங்கள் ஓய்வின்றி உழைத்ததின் பயனாய்
உங்களுக்கு மிஞ்சுவது வாழ்வியல் நோய்கள்தான்;
சேர்த்த செல்வத்தில் மருந்துகள் வாங்கலாம் – ஆனால்
நோயுடன் வரும் வலியை நீங்கள்தானே தாங்கவேண்டும்;
உழைக்கும்போது உழைப்பின் கவனத்திற்கு இணையாக
உங்கள் ஆரோக்கியத்தையும் நீங்கள் தான் கவனிக்க வேண்டும்;
ஆயிரம் கோடி செல்வம் சேர்த்தாலும்
இறுதியாத்திரையில் உங்களோடு உடன்வருவதென்ன?
செல்வம் சேர்க்கும் பயனத்தில் இழந்தவைகள் என்ன?
உலகைச் சுற்றிப்பார்த்திருக்கலாம் – செய்யவில்லை!
ஆரோக்கியத்தை கவனித்திருக்காலம் – செய்யவில்லை!
குடும்பம் / உறவுகளோடு மகிழ்ந்திருக்கலாம் – செய்யவில்லை!
அறிய நூல்கள் பல வாசித்திருக்கலாம் – செய்யவில்லை!
வரியவர்க்கு தானம் செய்திருக்கலாம் – செய்யவில்லை!
இயற்கையின் அழகை இரசித்திருக்கலாம் – செய்யவில்லை!
உங்களுக்கென்று நீங்கள் செய்யவேண்டியவை நிறைய இருக்க
எதையுமே நீங்கள் செய்துகொள்ளாமல்
செல்வம் சேர்ப்பதில் பயன் ஏதும் உண்டோ?
உங்களுக்கானதை யார் வந்து செய்து கொடுப்பார்கள்?
உங்கள் எண்ணமும், ஆசையும், தேவையும்
நீங்கள் மட்டுமே அறிவீர்கள்!
உங்களுக்கானதை உங்களால் மட்டுமே உணர முடியும்!
உங்களுக்கானதை நீங்கள்தான் செய்தாக வேண்டும்!
- [ம.சு.கு 20.04.2023]
コメント