"[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-190
மின்னுவதெல்லாம் பொன்னல்ல!
நம் தமிழகத்தில், ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை, புதியதொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நடுத்தர வர்கத்தினரின் சேமிப்பில் பலஆயிரம் கோடிகள் ஏமாற்றப்படுவது வாடிக்கையான ஒன்று. தேக்கு மரத்திட்டம் தொடங்கி, சமீபத்திய ஈமு கோழி வளர்ப்பு, பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டம் என்று எண்ணற்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் வெகு விமரிசையாக விளம்பரப்படுத்தப்பட்டு, அதிக வட்டி / மாதாந்திர வருவாய் வருமென ஆசைவார்த்தையில் மயங்கச் செய்து நடுத்தர வர்கத்தினரின் சேமிப்புக்களை திருடுகிறார்கள். அதிகவட்டி கிடைக்க வேண்டுமென்ற மக்களின் பேராசையை பயன்படுத்தி, சிலமாதங்கள் எல்லோரும் நம்பும் வகையில் அந்த வட்டியை கொடுத்து, மொத்த முதலீடுகள் சில ஆயிரம் கோடிகளாக சேர்ந்ததும் ஏமாற்றி ஒடியவர்கள் இங்கு ஏராளம். மக்கள் ஏன் அப்படிப்பட்ட ஆசைவார்த்தைகளை நம்பி ஏமாறுகிறார்கள்?
கடந்த 20-30 ஆண்டுகளாக, நம் தமிழக அரசியல் களம், எண்ணற்ற வாக்குறுதிகளை வாரிவழங்கி, மக்களின் நம்பிக்கையை ஏமாற்றியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், இன்ன சலுகைகள் செய்வோம் என்று பெரிய பட்டியல் வைத்தாலும், அவற்றில் 10-15% வாக்குறுதிகளைக்கூட முழுமையாக நிறைவேற்றுவதில்லை. வெறும் கண்துடைப்பிற்காக, பல செயல்களை செய்ததாக விளம்பரப்படுத்தி மக்களை சமாதானப்படுத்தி விடுகின்றனர். முன்னர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அப்படியே மீதமிருக்க, அடுத்த தேர்தலுக்கு, இன்னும் புதிய வாக்குறிதிகளை அள்ளி வீசுகின்றனர். இந்த இலவசங்களை வழங்குவதுதான் நல்ல அரசாங்கம் என்று மக்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை விதைத்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி யாரும் பெரிதாய் கண்டுகொள்வதில்லை. ஏன் இந்த போலி விளம்பர மாயையில் சிக்கிக்கொள்கிறார்கள்?
மக்கள் அனைவருக்கும் உழைக்காமல் செல்வத்தைப் பெருக்க ஆசை. அதனால், தங்களிடம் இருக்கும் சொற்ப பணத்தை எப்படி சீக்கிரத்தில் பலமடங்காக்குவதென்று வழிகளை தேடுகின்றனர். யாராவது மாதம் 1% வட்டி தருகிறேன் என்றால் அது எப்படி? பணம் பாதுகாப்பாக இருக்குமா? என்று நிறைய கேள்வி கேட்டு ஆராய்கிறார்கள். அதேசமயம், யாராவதொரு நண்பன், இந்த புதிய நிறுவனத்தில் மாதம் 5% வட்டி தருகிறார்கள், நான் அங்கு முதலீடு செய்து கடந்த சில மாதங்களாய் பெற்றுவருகிறேன், நான் யாருக்கும் இதை சொல்லவில்லை, என் நண்பன் என்பதால் உனக்கு இதை கூறுகிறேன் ஏன்று சொன்னால், அந்த அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, யாரிடமும் மேற்கொண்டு எதையும் விசாரிக்காமல், மிகவும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதாக எண்ணிக்கொண்டு பணத்தை முதலீடு செய்கின்றனர். ஒரு மாதம் வட்டி வந்தவுடன், தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்கின்றனர். ஒரு நாள், அந்த நிறுவனம் கைவிரிக்கும்போது, சேர்த்த செல்வத்தை தொலைத்ததோடல்லாமல், கடனாளியாக நிற்கிறார்கள். இது, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, தவறாமல் நம் தமிழக மக்கள் மத்தியில் திரும்பத்திரும்ப நிகழ்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு முறை ஏமாந்தவர்களே, அடுத்தடுத்த முறையும் ஏமாறுகிறார்கள். எத்தனைதான் ஏமாந்தாலும், பணத்தாசை, அதிக வட்டியின் மீதான ஆசை, அவர்களின் கண்களை சீக்கிரத்தில் மறைத்துவிடுகிறது!
இந்த பணத்தாசை குறித்து சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பிரபலமான ஒரு திரைப்படம் “சதுரங்க வேட்டை”. உங்களுக்கு நேரம்கிடைக்கும்போது, அந்த படத்தை பாருங்கள். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், யதார்த்த உலகில், நம்மவர்கள் எப்படி சுலபமாக ஏமாற்றப்படுகிறார்கள் என்ற பாடம் நமக்கு கிடைக்கும்.
அரசாங்கம், நாட்டின் பொருளாதாரம் குறித்த பொது அறிவை மக்கள் பெரிதாய் வளர்த்துக்கொள்ள விரும்புவதில்லை. ஒவ்வொருவரும், அவரவர்களுக்கு, குறுகிய காலத்தில் என்ன பலன் கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கின்றனர். ஆட்சியாளர்களின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து தொடர்ந்து ஏமாறுகிறார்கள். ஒவ்வொரு வாக்குறுதிக்கு வழங்கும் இலசங்களும், நம் மக்களிடம் இருந்தே வரிப்பணமாக வசூலிக்கப்பட்டு அவர்கள் கொள்ளையடித்தது போக மீதத்தை இலவசம் என்ற பெயரில் வழங்கி பொருளாதாரத்தை பாழ்படுத்துகிறார்கள் என்ற புரிதல் யாருக்கும் வருவதில்லை. அதை யாராவது விளக்கினாலும், யாரும் பொருட்படுத்துவதில்லை. எல்லோருக்கும், அவரவர்களின் குறுகிய கால ஆதாயம்தான் முக்கியத் தேவையாக இருக்கிறது.
இந்த ஏமாற்றுதல்-ஏமாறுதல் என்பது பணத்தின் மீது மட்டுமல்ல, சில சமயங்களில் மனிதர்களின் மீதும் அதீத நம்பிக்கைவைத்து ஏமாந்து போகிறார்கள். தனக்கு இன்னாரைத் தெரியும், அவரை வைத்து உங்கள் காரியத்தை முடித்துக்கொடுக்கிறேன் என்று கூறி பணத்தை கறந்துவிடுகிறார்கள். அவர்கள் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்பது புரியும்முன்னா், பெரும்பாலான பணம் கைமாறியிருக்கும்.
யார்வேண்டுமானாலும் உங்களிடம் வந்து, அவரவர்களின் தற்பெருமை பேசி, உங்களை அவர்களிடம் முதலீடு செய்ய தூண்டலாம். நீங்கள் செய்ய வேண்டியது;
நீங்கள் செய்யப்போகும் முதலீடு குறித்து, கட்டாயம் உங்கள் ஆலோசகரிடம் விபரங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் வாங்குவது பொன்னோ, பொருளோ, கூடியவரை நீண்டநாட்களாக சந்தையில் உள்ளவர்களிடம் விசாரித்து வாங்குவது நல்லது;
அதிக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் எது? அவர்களின் வாக்குறுதிகளின் சாத்தியக்கறுகள் என்ன? என்பதை நீங்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்?
ஒன்றை மலிவு விலைக்கு தருகிறேன் என்று ஒருவர் சொன்னால, ஒன்று அது தரமற்றதாக இருக்கவேண்டும், அல்லது ஏமாற்று வேலையாக இருக்க வேண்டும். இங்கு யாரும் உங்களுக்கு மாமன்-மச்சான் இல்லை, தன் பணத்தை செலவழித்து உங்களுக்கு இலவசமாகவும், மலிவாகவும் கொடுப்பதற்கு.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள், மிக சாதுர்யமான வாக்குறுதிகள், நம்பகத்தன்மையான பேச்சு என்று எண்ணற்ற வழிமுறைகளில் உங்கள் கவனத்தை கவர்ந்து உங்களை தன் வயப்படுத்துவார்கள். முடிந்தால் அவற்றில் இருந்து விலகியிருங்கள். முடியாவிட்டால், பெரிய முதலீடுகள் எதையும் செய்யாமல், சிறிதளவில் நிறுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று மாயவார்த்தைகளை நம்பி ஏமாந்தால், முதற்கண் அதன் குற்றம் உங்களுடையது தான்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல – இது
யதார்த்த வாழ்வின் முக்கியமான தத்துவம்;
எந்த பொருள், எந்த நபரின் தன்மையையும்
கண்ணுக்கு தென்படும் புறவிடயங்களைக் கொண்டு
தீர்மாணித்து விடக்கூடாது;
எல்லாவற்றின் அகத்தை தீர ஆராய வேண்டும்;
- [ம.சு.கு 17.04.2023]
Comentarios