top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-187 - கூடாதவற்றிலிருந்து விலகியிருங்கள்!"

Updated: Apr 15, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-187

கூடாதவற்றிலிருந்து விலகி இருங்கள்!


  • பழைய கருத்துக்கணிப்பு ஒன்றில், மாணவர்களுக்கு புகைபிடித்தல், மது பழக்கங்கள் எல்லாம் நண்பர்கள் வட்டதிலிருந்துதான் வருகிறதென்று தெளிவுப்படுத்தியது. சமீபத்திய கருத்துக்கணிப்பும் அதை மேலும் உறுதிபடுத்தியது. கருத்துக்கணிப்புக்களைத் தாண்டி, இப்படித்தான் கெட்டப்பழக்கங்கள் பிள்ளைகளுக்கு உறுவாகிறதென்று கிட்டத்தட்ட எல்லா பெற்றோர்களுக்கும் தெரியும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு எவ்வளவு அறிவுறுத்தினாலும், பல பிள்ளைகள் அந்த மாய வலையில் சிக்கத்தான் செய்கிறார்கள். பெற்றோர்கள் சொல்வதை கேட்காமல், நண்பர்களின் வாக்கை ஏன் பிள்ளைகள் ஏற்கிறார்கள்?

  • மிகவும் நேர்மையான வியாபார நிறுவன முதலாளி ஒருவர், தன் தொழில் பாதுகாப்பிற்காக நிறைய அரசியல் சகவாசங்களை வைத்திருந்தார். அந்த சகவாசங்கள் படிப்படியாய் நெருக்கமானது. ஒரு சமயம், ஒரு அரசியல்வாதியின் பணப் பெட்டகம் ஒன்றை அவர் அலுவலகத்தில் வாங்கி வைக்க வேண்டி சூழ்நிலை வந்தது. அவர் மீதிருந்த நம்பிக்கையில், அந்த அரசியல்வாதி அவரது அலுவலகத்தை பயன்படுத்தி முறைகேடான பணத்தை வாங்கினார். சில இரகசிய தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அன்றைய தினம் அவர் அலுவலகத்தில் பணத்தை கண்டெடுத்து அந்த முதலாளியை கைது செய்தனர். விசாரனையின் போது, அந்த அரசியல்வாதி, அந்த பணத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கைவிரித்துவிட்டார். சில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் போக, கூடுதலாக, தன் பணம் பல இலட்சங்களை கூடுதல் வரியாக செலுத்தி பிரச்சனையிலிருந்து மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்தார். செய்யாத குற்றத்திற்கு இவருக்கு கிடைத்த தண்டனையும், நஷ்டமும் சரியா?

பிள்ளைகள் யாரும் தீய பழக்கங்களுக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டு போவதில்லை. பல சமயம் நண்பர்களும், மற்றவனை கெடுக்கவேண்டுமென்று திட்டமிட்டு செய்வதில்லை. போகிற போக்கில் இந்த தீய பழக்கங்கள் விழிப்புணர்வின்மையின் காரணமாக வந்துவிடுகிறது. தன் நண்பன் இரவு விருந்திற்கு போகும் இடத்தில், உடனிருக்கும் நண்பனிடம் மதுவை ஒருமுறை சுவைக்கச் சொல்கிறான். ஆரம்பத்தில் நண்பன் மறுத்தாலும், ஒருமுறைதான் என்றும், வாழ்வில் எல்லாவற்றையும் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று நண்பனை சமாதானப்படுத்தி விடுகின்றனர். அந்த இரவு விருந்து ஒரு மது விருந்து என்று போவதற்கு முன் நான்றாக தெரியும். அங்கு நாம் மது அருந்தாமல் பழசாறு அருந்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வந்த நண்பன் இறுதியில் மதுவை நண்பர்களின் அன்புக்கட்டளைக்கு இணங்கி முதல் முறை சுவைக்கிறான். ஒருமுறை என்று துவங்கி, அடுத்தடுத்த முறைகளில் அது வழக்கமாகி விடுகிறது. இந்த அன்புக்கட்டளையை, நட்பின் நெருக்கடியை தவிர்க்க முதற்கண், அவ்விடத்திற்கு செல்வதை தவிர்த்திருக்கலாமே!


தனக்கு சம்பந்தமில்லாத பணத்தை, அந்த அரசியல்வாதிக்கு உதவுவதாக நினைத்து வாங்கிவைத்த அந்த முதலாளி, தன் வாழ்நாளுக்குமான சிக்கலையும், அவப்பெயரையும் வாங்கினார். இத்தனைக்காலம் நேர்மையாக வாழ்ந்து செல்வம் சேர்த்தவரை, இன்று ஊரார் பொதுப்படையாக “அரசியல்வாதிகளுடன் சேர்த்து கொள்ளையடித்த சொத்து என்று” முத்திரை குத்தினர். தன் தொழில்பாதுகாப்பிற்கு, எல்லா தரப்பு மக்களுடனும் நல்லுறவு பேனுவது அவசியம். அதில் அரசு அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் அடங்குவர். ஆனால், தவறான செயல்களை செய்யும் அந்த பிரமுகர்களுடன் தொடர்பை பலப்படுத்தினால், இப்படிப்பட்ட சில வில்லங்கங்களும் சேர்ந்தே வரும். அந்த சிக்கல் இருக்ககூடிய நபர்களின் வியாபார பரிவர்த்தனையிலிருந்து விலகி இருக்கவேண்டும். தவறு செய்பவர்கள், இன்று தப்பித்தாலும், என்றாவதொருநாள் சிக்குவார்கள். அவர்களின் தவறான பரிவர்த்தனைகளில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், உங்களுக்கும் கட்டாயம் அந்த சிக்கல் வரும். இது உங்களுக்கு தேவையா? என்று முதலிலேயே யோசித்துக் கொள்ளுங்கள்.


பொதுவாக உங்களைச் சுற்றிலும் எண்ணற்ற நல்லவைகளும், தீயவைகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். எல்லா நிகழ்வுகளிலும், சரி-தவறுகளை பிரித்துணர வேண்டியது உங்கள் வேலை. அவ்வாறு பிரித்துணர வேண்டுமானால், சந்தை மற்றும் பொருளாதாரம் குறித்த நிறைய பொது அறிவு வேண்டும். மக்கள் எப்படியெல்லாம் இன்று ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வு, உங்களை அந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்து விலகியிருக்க உதவும். நீங்கள் சிக்கல்களிலிருந்து தப்பிக்க விரும்பினால், முதற்கண் அவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்;

  • சந்தையில் எப்படியெல்லாம் ஏமாற்றுப் பேர்வழிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும்;

  • உங்களைச் சுற்றிலும் நல்லவர்களையும், நம்பிக்கையானவர்களையும், அறிவாளிகளையும் வைத்துக் கொள்ளுங்கள்;

  • உங்களுக்கென்று ஒரு கொள்கையை நிர்ணயித்து, அதிலிருந்து எப்போதும் விலகாதிருங்கள்;

  • உங்களுடைய இலட்சியங்களில் தெளிவாக இருங்கள். அவ்வப்போது வரும் திசைதிருப்பிகளை இணங்கண்டு கவனமாக தவிர்த்துவிடுங்கள்;

  • உங்களுக்கு சந்தேகம் இருந்தால், புரியவில்லை என்றால், நம்பிக்கையானவரின் உதவியை நாடுங்கள்;

  • உங்கள் உள்ளுணர்வை சற்று கவனியுங்கள். சில தவறுகளிலிருந்து விலகியிருக்க, உங்கள் உள்ளுணர்வு அவ்வப்போது அறிகுறிகளை காண்பிக்கும்;

  • உங்களைச் சுற்றி நிகழும் எல்லாவற்றையும், எல்லா மனிதர்களையும் எப்போதும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருங்கள்;

உங்கள் கவனிப்பும், விழிப்புணர்வுமே, உங்களை பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கவும், விலகியிருக்கவும் உதவும். பிரச்சனையில் சிக்கி பின் உங்களை நீங்களே நொந்து கொள்வதற்கு பதிலாக, கூடியவரை, தவறானவைகள் / தவறானவர்களிடம் இருந்து முன்ஜாக்கிரதையாக விலகி நிற்பது சாலச்சிறந்தது.


இன்ன செயல் தவறென்று தெரிந்தால்

அதிலிருந்து வெகுதூரம் விலகியிருப்பது சாலச்சிறந்தது;

நீங்கள் செய்யா விட்டாலும்,

மற்றவர் செய்வதை வேடிக்கை பார்த்து நிற்பதுவும் குற்றமே;


ஒருவேலை நண்பர்களோடு சேர்ந்து தவறான இடங்களுக்கு சென்றால்

ஒரு முறை செய்வதில் தவறில்லை என்று வற்பறுத்தப்படுவீர்கள்;

ஒரு முறை மட்டுமே என்று ஆரம்பிக்கும் எந்தவொரு தவறான பழக்கமும்

நிரந்தரமான பழக்கமாக உங்கள் ஆட்கொண்டுவிடும்;


தவறான சேர்க்கை தவறுக்கு வழிவகுக்கும் – ஆதலால்

தவறென்று தெரியுமிடத்திலிருந்து

நிரந்தரமாக விலகி நில்லுங்கள்;

வாழ்க்கை நிம்மதியாகவும், அர்த்தமுனைடையதாகவும் போகும்;



- [ம.சு.கு 14.04.2023]




Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page