top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-183 - நிகழ்வுகளோடு சமரசம் செய்துகொள்ளுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-183

நிகழ்வுகளோடு சமரசம் செய்துகொள்ளுங்கள்!


  • நீங்கள் ஆசையாசையாய் வாங்கி பயன்படுத்தி வரும் ஒரு அழகிய கண்ணாடி குவளை, உங்கள் கைதவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. மீண்டும் அதே போன்றதொரு குவளை கிடைப்பது கடினம் என்பதால், உங்களுக்கு மிகவும் வருத்தம். இதை மற்றொருவர் உடைத்திருந்தால் எப்படி திட்டியிருப்பீர்களோ, அதே போல உங்களை நீங்களே திட்டிக்கொள்கிறீர்கள். வீட்டில் ஒவ்வொருவரிடமும் சொல்லி வாரக்கணக்கில் வருத்தப்படுகிறீர்கள். என்றிருந்தாலும் ஒரு நாள் உடைந்து, தன் மூல நிலைக்கு திரும்பப்போகும் கண்ணாடி குவளைக்கு இவ்வளவு வருத்தப்பட வேண்டுமா?

  • காலையில் ஒரு நிகழ்விற்கு வருவதாக ஒத்துக்கொண்டிருந்தீர்கள். சரியான நேரத்திற்கு தயாராகி வீட்டிலிருந்து கிளம்புகிறீர்கள். ஆனால், உங்களின் நான்கு சக்கர வாகனத்தில் காற்று முற்றிலுமாய் குறைந்துவிட்டது. அதே சமயம், பழுதாகியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை இன்னும் சரிபார்க்க கொடுக்கவில்லை. நேரம் ஓடஓட உங்களுக்கு இரத்த அழுத்தமும் கூடிகிறது. நீங்கள் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், சில நிகழ்வுகள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும். இதை விதியென்று ஒருசாராரும், ஏதேச்சையான நிகழ்வென்று ஒருசாராரும் சொல்வர். அந்தக்கணத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

எந்தவொரு கண்ணாடிக்பொருளும், ஒருநாள் உடைந்தே தீரும். நீங்கள் அதை பயன்படுத்தாமல், கைபடாமல் தூரத்தில் வைத்தால் சில வருடங்கள் பத்திரமாக இருக்கலாம். பயன்பாட்டிற்கு வந்த எந்தவொரு கண்ணாடிப் பொருளும், ஒருநாள் உடைபடும் என்பது எழுதப்படாத விதி. கண்ணாடி, மண்பாண்டங்கள், பீங்கான் பொருட்களை பயன்படுத்தும் முன்னர், அது ஒருநாள் உடைபடும் என்பதை புரிந்திருந்தால், பின்னாலில் அது நிகழும்போது, அந்த நிகழ்வோடு சீக்கிரம் சமரசம் செய்து நகர்ந்திடலாம். இல்லாவிட்டால், உடைந்துவிட்டதே என்று வருத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.


உறங்கும் போது நன்றாக இருந்த வாகனம், காலையில் பழுதடைந்திருந்தால், உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. உங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையெல்லாம் மீறி நடக்கும் இந்த யதார்த்தத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டு அடுத்து சாத்திய்கூறான வழிமுறையை யோசிக்க வேண்டியதுதான். குறித்த நேரத்திற்கு போக முடியவில்லை என்பதால் சில வர்த்தகத்தை இழக்க நேரிடலாம்.


நாம் இயங்கினாலும், இல்லாவிட்டாலும், நம்மைச் சுற்றி எண்ணற்ற நிகழ்வுகள் தன்னிச்சையாகவும், பிறரது ஏவலிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றில் பலவற்றை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.

  • முதலில் எந்த சூழலில் நீங்கள் இருக்கிறீர்கள், அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற தெளிவான புரிதல் இருக்க வேண்டும்;

  • நிகழ்வுகளில் தொடர்புடைய மற்ற நபர்களின் கண்ணோட்டத்தில் சற்று யோசித்துப் பாருங்கள்;

  • நீங்கள் இன்று அதை கஷ்டப்பட்டு பத்திரப்படுத்தினாலும், காலவோட்டத்தில் அது நிலைத்திருக்குமா என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேளுங்கள்?

  • உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து எப்போதும் இருக்கும். எல்லா சமயங்களிலும் நீங்களே வெற்றிபெற வேண்டுமென்று பிடிவாதமாக இருக்காதீர்கள். சூழ்நிலைகளுக்கேற்ப, பிறர் கருத்துக்களையும் ஏற்று சமரசம் செய்து முன்செல்லுங்கள்;

  • சந்தை நிகழ்வுகள், சந்தை மாற்றங்கள், உங்கள் உடல் நிலை மாற்றங்களை யாவும் உங்கள் கணிப்பைத்தாண்டி அதன் போக்கில் போகக்கூடம். மாற்றம் வரக்கூடும் என்று எதிர்பார்த்திருந்து அவற்றை ஏற்றுக்கொண்டு முன்செல்லுங்கள்;

  • உங்கள் ஊழியர்களுக்கு நிறைய பயிற்சி அளித்து, தவறில்லாமல் செய்ய வழி ஏற்படுத்தலாம். ஆனால் எவ்வளவுதான் பயிற்சி கொடுத்தாலும், சில மனித தவறுகள் நிகழ்வதை உங்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாதேன்பதை உணர்ந்து சமரசமாகுங்கள்;

இப்படி நிறைய சந்தர்ப்ப-சூழ்நிலைகள் தினம்தினம் வரும், போகும். எல்லாவற்றிற்கும் உட்கார்ந்து வருத்தப்பட்டுக்கொண்டிருந்தால், உங்களால் எதையும் சாதிக்க முடியாது. சில சமயங்களில், நெருக்கமானவர்களின் உயரிழப்புக்களும் நிகழும். இந்த யதார்த்தத்தோடு சமரசம் செய்துகொண்டு, இனி மேற்கொண்டு செய்ய வேண்டியதை எப்படி சிறப்பாக செய்யலாம் என்று யோசித்து செய்ய ஆரம்பித்தால், எல்லா பிரச்சனைகளும் காலப்போக்கில் முக்கியத்துவம் இழந்து வரலாறுகளாய், அனுபவமாய் உங்கள் நினைவுகளில் நிற்கும்.


என்றிருந்தாலும் ஒருநாள் கண்ணாடி உடையத்தான் செய்யும். வாகனம் பழுதடையத்தான் செய்யும். அது நிகழ்வது இயல்பு. அன்றைய தினம் உங்களுக்கு முக்கியமான தினம் என்று வாகனத்திற்கு தெரியாது. எப்போதும் ஒரு மாற்று ஏற்பாட்டை யோசித்து வைத்துக்கொள்ளுங்கள். எதேச்சையாக அந்த மாற்று ஏற்பாடும் கைகொடுக்காமல் போகக்கூடும். ஏற்படும் நிகழ்வுகளைப்பற்றி அதீதமாக யோசித்து மனதை வருத்திக்கொள்ளாமல், யதார்த்தத்தோடு சீக்கிரம் சமரசம் செய்துகொண்டு, அடுத்த கட்ட செயலில் கவனம் செலுத்துங்கள். ஏனையவை எல்லாம் தானாக சரியாகிவிடும்.


நீங்கள் பார்க்கும் நிகழ்வுகள் ஒருசிலவே

உலகின் இயக்கத்தில் உங்கள் கற்பனைக்கு எட்டாதளவு

நிறைய நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன;


கடல் அலை ஓயாமல் வருவதுபோல

உங்களைச் சுற்றிய நிகழ்வுகளும்

எல்லையில்லாமல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்;

அவற்றில் சில உங்களுக்கு சாதகமாகவும்

பல நிகழ்வுகள் உங்களுக்கு எதிராகவும் இருக்கக்கூடும்;


உங்களால் கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகள்

வாழ்வின் யதார்த்தம் என்ற புரிதலோடு

ஏற்றுக்கொண்டு சமரசம் செய்து முன்னேறினால்

மன அமைதியுடன் எல்லோரையும் அரவணைத்து

வாழ்வின் வெற்றியை நோக்கி பயனிக்கலாம்;


- [ம.சு.கு 10.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page