top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-180 - யாரும் யாருக்கும் போட்டியல்ல!"

Updated: Apr 8, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-180

யாரும் யாருக்கும் போட்டியில்லை!


  • பள்ளியில் 2-3 மாணவர்களுக்கு இடையே முதல் மதிப்பெண் எடுப்பதில் தொடர்ந்து கடுமையான போட்டி நிலவுகிறது. அடுத்தடுத்த தேர்வுகளில் ஒருவர் மாறி ஒருவராக முதல் மதிப்பெண் எடுக்கிறார்கள். 12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வில் அவர்களுக்கிடையே சிறிய மதிப்பெண் வேறுபாடு மட்டுமே இருந்தது. அந்தப் பள்ளியை விட்டு வெளியேறும் போது, அவர்கள் இதுநாள் வரை போட்டியாக கருதிய சகமாணவர் யாரும் அடுத்த கல்லூரிக்கான போட்டியில் இல்லை. கல்லூரியில் இடம் கிடைக்க வேறு மாணவர்களுடன் கடுமையான போட்டி. எந்தப் பாடத்தில் எத்தனை மதிப்பெண் எடுத்தவருக்கு இலவச சேர்க்கை கிடைக்கும் என்று போட்டி. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் போட்டி இருக்கிறது. ஆனால் போட்டி போடும் நபர்கள் மாறிவிடுகிறார்கள். போட்டியாளர்கள் மாறும்போது, முன்னர் இருந்து போட்டியாவும் வீணானவையா?

  • கோவையில் இட்லி பாட்டி என்ற பெயர் பிரசித்தம். சந்தையில் 5-10-50 ரூபாய்க்கு இட்லி விற்கப் பட்டுக்கொண்டிருக்க, ஒரு பாட்டி மட்டும் தன் கடையில் ரூ,1-க்கு தரமான இட்லி விற்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாய் மிகக் குறைந்த விலையில் தன் சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. உலகம் எப்படி வேண்டுமானாலும் வியாபாரம் செய்யட்டும், ஆனால் தரமான இட்லியை குறைந்த விலையில் கொடுத்து தன் வாழ்வாதாரத்தை நகர்த்துவேன் என்று வெற்றிகரமாய் நிரூபித்தது அந்த கமலாத்தாள் பாட்டி. இங்கு அந்த பாட்டிக்கு போட்டி யார்?

நம்மில் பலர் முழுமையை நோக்கி உழைப்பதில்லை. நமக்கு முன்னால் யாருமில்லாமல், நாம் முதலிடத்தில் இருந்தால் போதுமென்ற அளவுகோளில் தான் உழைக்கிறோம். நாம் முன்னிருக்கும்போது, நம்மை யாரும் முந்திச்சென்றுவிடக் கூடாதென்று கவனமாக இருக்க முயற்சிக்கிறோம். அந்த முதல் இடத்தை பிடிக்க முயற்சிப்பதும், பிடித்த இடத்தை தக்கவைக்க முயற்சிப்பதுமே போட்டியின் ஆணிவேறாகிறது.


பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லி விற்றாலும், தன் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவில்லை. தன் உணவிற்கு தேவையான ஊதியம் கிடைத்தது. ஆரம்பத்தில் ரூ.0.25 க்கு விற்பனையை ஆரம்பித்து, காலப்போக்கில் விலை ஏற்றத்திற்கு ஏற்ப ரூ.1/- க்கு விற்பனை செய்தது. தன் வியாபாரத்தில் இட்லி, சட்னி என்று மட்டும் அளவோடு நிறுத்தி தொடர்ந்து வெற்றிகரமாய் பாட்டி நடத்தியது. தரம் குறையாமல், இலாபம் அதிகம் வைக்காமல் போதுமென்ற மனப்பான்மையுடன், கிட்டத்தட்ட 100% முழுமையை அடைந்த பாட்டியின் வியாபாரத்திற்கு, இங்கு போட்டியார்?


தேர்வில் 100/100 மதிப்பெண் தான் அதிகபட்சம். நீங்கள் அதை தொடர்ந்து எடுத்துவந்தால், உங்கள் போட்டிக்கு யார் இருக்கிறார்கள்? நீங்கள் யாருக்கு போட்டியாய் இருக்கப்போகிறீர்கள்? முழுமையை அடைந்தபின் போட்டிக்கான இடைவெளி இருப்பதில்லை. உங்கள் முதல் இடத்தை யாராவது பகிர்ந்து கொள்ள வரலாமே தவிர, யாராலும் தட்டிப்பறித்துவிட முடியாது. பூஜ்ஜியத்திற்கும் – நூறுக்கு இடைப்பட்ட நிலைதான் போட்டிக்கான களம். நீங்கள் பூஜ்ஜியத்தில் இருந்தாலும் போட்டியில்லை. 100% இருந்தாலும் போட்டியில்லை. முழுமைதான் போட்டியின்மைக்கான ஒரே முடிவு.


இன்று களத்திலிருப்பவருடன் போட்டியிட்டு வென்று, நாளை புதிய களத்தில் புதிய குழுவுடன் போட்டியிட்டு வெல்ல முயற்சிக்கிறீர்கள். களம் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு களத்திலும், பழைய போட்டியாளர்கள் விலகி, புதிய போட்டியாளர்கள் வருவார்கள். போட்டி நிறந்தரமாக இருக்கிறது. ஆனால் போட்டியாளர்கள் நிரந்தரமில்லை. அப்படியானால் உங்களுக்கு போட்டி யார்? நீங்கள் யாருக்கு போட்டியானவர்?


உண்மையைச் சொல்வதானால், உங்களுக்கு போட்டி நீங்கள் மட்டும் தான். ஏனெனில் எல்லா களத்திலும் பொதுவாக இருக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டும் தான். உங்களுடனான உங்கள் போட்டியில், வெல்ல ஒரே வழி, நீங்கள் முழுமையை, 100%-ஐ அடைந்து நிற்பது மட்டுமே;



போட்டி நிறைந்த உலகம் என்கின்றனர்

உண்மையில் போட்டி இருக்கிறதா?


இங்கு தரமான பொருளை அளவான இலாபத்தில்

விற்பவருக்கு போட்டியில்லை!

இங்கு முறையான கல்வியை, பொது அறிவை,

சாமர்த்தியத்தை பெற்றவருக்கு போட்டியில்லை!


இங்கு 100% பெற்றவருக்கு போட்டியில்லை;

இங்கு பூஜ்ஜியத்தில் நிற்பவருக்கும் போட்டியில்லை;

இடைப்பட்ட இடத்தில் திண்டாடுபவருக்குத்தான்

எல்லாமே போட்டியாக தெரிகிறது!


போட்டியில் ஜெயிக்க வேண்டுமென்று

நிம்மதியிழந்து போராடுவதில் பயனேதுமில்லை!

போட்டியாக கருதும் செயலின் உச்சத்தை (100%)

நீங்கள் கஷ்டப்பட்டு அடைந்துவிட்டால்

உங்களை விஞ்ச யாருளர்? அங்கு போட்டியிருக்குமா?


- [ம.சு.கு 07.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page