top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-174 - எதற்கடுத்து எதைச் செய்ய?"

Updated: Apr 2, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-174

எதற்கடுத்து எதை செய்ய?


  • காலை எழுந்தது முதல், மாலை வரை தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருப்பதாக உணர்கிறோம். ஆனால், மாலையில் ஒரு சுயஅலசல் செய்துபார்த்தால், திட்டமிட்ட பலவேலைகளை தொடவே இல்லை என்கிற சூழ்நிலை. நிறைய வேலை செய்தது போன்ற உணர்வு இருந்திருக்கும், ஆனால் எத்தனை முடிந்திருக்கிறதென்பது தான் இங்கு முக்கியம். நீங்கள் நேற்று செய்தவற்றையும், இன்று செய்தவற்றையும் ஒரு முறை சுயஅலசல் செய்து பாருங்கள்.

  • தேர்விற்கு தயாராவதற்காக விடுமுறை விடப்பட்டிருக்கும். இரண்டு மாத கால அவகாசத்தில் நடக்கவிருக்கும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றிபெற கடுமையாக உழைக்கிறீர்கள். எல்லாத் தேர்வுத்தாளுக்கும் போதுமான விடுமுறை இடைவெளி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, அடுத்த 10 நாட்களில் வரும் தேர்விற்குரிய பாடங்களை படிக்க வேண்டுமா? அல்லது, கடைசியாக வரும் தேர்விற்குரிய பாடத்தை இப்போது படிக்க வேண்டுமா? அல்லது இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது, அதனால் இன்றைய தினம் தொலைக்காட்சியில் படம் பார்க்கலாமா? இதற்கான உங்கள் விடை என்ன?

உங்கள் செயல்கள் குறித்த சுயஅலசல் செய்தால், பெரும்பாலான சரி-தவறுகளை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். அப்படி முதல் சுயஅலசலில் தெளிவு வரவில்லை என்றால், மாறுபட்ட சுழலில், மீண்டும் முயற்சித்துப்பாருங்கள். ஒருவேளை நீங்கள் செய்தது சரியானதே என்று நீங்கள் இன்னும் கருதினால், ஒரு முறை உங்கள் எதிரியின் கண்ணோட்டத்தில் அதே செயலை அலசிப்பாருங்கள். கண்ணோட்டம் மாறுபடும்போது, செயலின் தன்மையும், அவசியமும் மாறுபட்டிருப்பதை உணர்வீர்கள். எதை செய்தது சரி, எதை தவிர்த்திருக்கலாம் என்ற புரிதல் வந்தால், அடுத்த முறை அது நல்ல வழிகாட்டியாக இருக்கும்;


தேர்விற்கு எந்த பாடத்தை இப்போது எடுத்து படிப்பது என்ற கேள்விக்கான பதில் சுழ்நிலைக்கேற்ப மாறுபடும்.நீங்கள் அடுத்துவரும் தேர்விற்குரியதை நன்றாக படித்து முடித்திருந்தால், கடைசி 2-3 நாட்களில் அவற்றை ஒரு முறை வாசித்து நினைவு கூர்ந்துகொள்ளலாம். மீதமுள்ள 7 நாட்களில் இன்னும் படித்து முடிக்கவேண்டிய வேறுபாடத்தை முடிக்க முயற்சிக்கலாம். அதேசமயம், அடுத்துவரும் தேர்விற்குரிய பாடங்களை படித்து முடிக்காத நிலையில், வேறு பாடங்களை எடுத்து படிப்பதில் பயனேதும் இருக்கப்போவதில்லை. எந்த பாடத்தை முன்னர் படிக்க வேண்டுமென்று மாணவர்கள்தான் சிந்தித்து செயல்படவேண்டும்.


வேலைகளை செய்ய முடிவுசெய்யும்போது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, எதை முதலில் செய்வது, எதற்கடுத்து எதைச் செய்வது என்ற தெளிவு. இதை தீர்மானிக்கும்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் என்னென்ன;

  • எந்தெந்த செயல் அவசரமானது, எது அவசியமானது?

  • எந்தெந்த செயல் எதோடு தொடர்புடையது ? எது இல்லாமல் எது இல்லை?

  • எந்தெந்த செயலுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? நமக்கிருக்கும் நேரம் எவ்வளவு?

  • எந்தெந்த செயலுக்கு எவ்வளவு ஆற்றல் தேவை (பணம், மனிதர்கள், பொருள், நேரம்...)

  • எந்தெந்த செயலுக்கு உங்களின் கவனம் எவ்வளவு தேவை?

மேற்குறிப்பிட்ட ஐந்து கேள்விகளுக்கான விடை கிடைத்தால், வேலை செய்வது குறித்த கீழிருக்கும் ஐந்து கேளவ்விகளுக்கும் உங்கள் தெளிவு கிடைக்கும்

  • எதை முதலில் செய்ய வேண்டும்?

  • எதை அடுத்ததாக செய்ய வேண்டும்?

  • எதை நீங்கள் செய்ய வேண்டும்?

  • எதை பிறரிடம் கொடுத்து செய்ய வேண்டும்?

  • எதை செய்யாமல் விட வேண்டும்?

இந்த தெளிவு இல்லாமல் தான், பலர் தங்கள் செயல்களை சரியாகவே செய்தாலும், தவறான நேரத்தில் செய்ததினால், அந்த செயலுக்குரிய முழுமையான பலமை பெறமுடியாமல் போகிறது.


தேர்விற்காக படிப்பதற்கும், அறிவை வளர்க்க படிப்பதற்கும் சற்று வேறுபாடு உண்டு. எந்தப்பாடத்தின் உட்பொருள் மட்டும் தெரிந்தால் போதும், எதை வரிவிடாமல் படித்து தெரிந்திருக்க வேண்டும் என்ற வேறுபாட்டை தெரிந்து படிப்பவர்கள், சூழ்நிலைக்கேற்ப படித்து வெற்றிபெறுகிறார்கள். எது வாழ்க்கைக்கு தேவையோ, அதன் உட்பொருளை மனதில் பதியவைக்கிறார்கள். எது தேர்விற்கு மட்டும் தேவையோ, அதை அப்போதைக்கு கற்றுத் தேறுகிறார்கள்.


வேலைகளை செய்வதிலும் , அந்த செயலின் அவசர-அவசியங்களுக்கு ஏற்ப முன்னிலைப்படுத்தி, உரிய முறையில் செய்து முடிக்க நிறைய மேலான்மை வழிகாட்டிகள் (ஐசனோவர் பட்டியல்முறை,...) வழக்கத்தில் இருக்கின்றன. அவற்றில் உங்கள் வேலையின் தன்மைக்கு எது ஒத்துவரக்கூடியதோ, அந்த நேர மேலான்மை முறையை செயல்படுத்தி வெற்றிகாணுங்கள்;


நிறைய காரியங்களை செய்து முடிக்க வேண்டும்;

நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும்;

நிறைய ஊர்களை சுற்ற வேண்டும்;

நிறைய உறவுகள் நண்பர்களுடன் நேரம் செலவிட வேண்டும்;


படிப்பு, சம்பாத்தியம், இல்லறம், வயோதிகம் என்று

வாழ்க்கை ஒரேமாதிரி ஓடி ஒடுங்கிவிடுகிறது;

எதற்கடுத்து எதை செய்யவேண்டுமென்று

சமுதாயம் ஏற்கனேவே ஒரு தொடர் விதியை நிர்ணயித்துவிட்டது;

நீங்களும் நானும் அறியாமலே அந்த விதியில் சிக்குண்டுள்ளோம்;


அந்த விதியிலிருந்து வெளியே வந்தவர்கள் வென்றார்கள்;

அந்த விதியிலேயே உழன்றவர்கள் வழக்கமாய் மறைந்தார்கள்;

நீங்கள் அந்த விதியில் எங்கு இருக்கிறீர்கள்?

விதிவசத்தில் உங்கள் செயல்களை செய்துகொண்டிருக்கிறீர்களா?

விதி உங்கள் வசத்தில்

எதை எப்போது எங்கு எப்படி எவ்வாறு செய்வதென்று

கட்டுப்பட்டு பின்தொடர்கிறதா?



- [ம.சு.கு 01.04.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page