“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-173
பெருமை பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள்!
திருமண வைபவங்களுக்கு போனால், எல்லா பெண்களும் தங்க நகைகளில் ஜொலிப்பதை பார்ப்பீர்கள். கூடுதலாக, சில ஆண்கள் தன் எல்லா விரல்களிலும் மோதிரம் போட்டு, ஒரு பெரிய தங்கச் சங்கிலியை சட்டைக்கு வெளிய போட்டிருப்பதையும் பார்கக்கூடும். தங்க நகை இல்லாதவர்கள், தங்கம்போன்ற போலியான நகைகளைப் போட்டு வருகிறார்கள். ஏன் இந்த பகட்டு? தன்னிடம் இருக்கிறதென்று காட்டிக் கொள்வதில் என்ன சாதிக்கப் போகிறார்கள்?
இன்றைய போட்டி நிறைந்த வியாபார உலகில், நீங்கள் புதிய வாடிக்கையாளரை சேர்க்க, பெரிய வர்த்தகங்களை வெல்ல, வாடிக்கையாளரை கவரவேண்டியது அவசியமாகிறது. நீங்கள் இதுவரை செய்த பெரிய வர்த்தகங்கள், சாதனைகள் எல்லாவற்றையும் சொன்னால் தான், அவருக்கு உங்கள் மீதும், உங்கள் நினுவனத்தின் மீதும் நம்பிக்கை வரும். யாரும் கத்து குட்டிகளிடம் வேலையை ஒப்படைக்க விரும்புவதில்லை. மாறாய் நன்கு பழக்கப்பட்ட, கைதேர்ந்தவர்களிடமே வேலையை கொடுக்க முடிவெடுக்கிறார்கள். நீங்கள் அனுபவசாலி, கைதேர்ந்தவர் என்று எப்படி மற்றவர்கள் அறிவது – நிறைய விளம்பரமும், தற்பெருமை பேசுவதும் செய்தால் தானே அது சாத்தியம்!!
இந்த சமுதாயம் தங்களைப் பற்றி உயர்வாக எண்ண வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். அதனால் என்ன பயன் விளையப்போகிறதென்றால், பெரிதாய் ஏதுமில்லை. ஆனாலும், வங்கியில் அடகு வைத்த நகையை, வேறிடத்தில் அதிக வட்டிக்கு கடன் வங்கி, நகையை மீட்டு திருமணத்திற்கு அணிந்து செல்கிறார்கள். மறுநாள், திரும்பவும் நகையை வங்கியில் அடமானம் வைக்கிறார்கள். தங்களிடம் இல்லாத ஒன்றை இருப்பது போன்ற மாயத்திரை உருவாக்கி, அந்த மாயத்திரையை தொடர்ந்து காப்பாற்றப் போராடும் இந்த புத்திசாலி முட்டாள்களை எப்படி திருத்துவது?
ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால், இதற்கு முன்னர் 10-20 வீடுகள் கட்டிய பொறியாளரிடம் தான் வேலையை கொடுக்கிறோம். பணிக்கு ஆள் எடுக்கும்போது. முன்அனுபவம் எவ்வளவு என்று பார்க்கிறோம். ஏனெனில், புதியவர்களிடம் கொடுத்து, வேலையில் தவறுகள் நேர்வதற்கு யாரும் விரும்புவதில்லை. சந்தை அனுபவத்தை எதிர்பார்க்கும் போது, உங்களுக்கு அனுபவம் இருக்கிறதென்பதை நீங்கள் சொல்லாமல் எப்படி சந்தை அறியும். நீங்கள் சாதித்தவற்றை வெளியில் விளம்பரப்படுத்தினால் தான் வேலை கிடைக்கும், வியாபாரம் கிடைக்கும். ஒன்றும் செய்யாமல் இருந்தால், எதுவும் உங்களைத் தேடி தானாக வராது. விளம்பரமும், தறபெருமையும் இல்லாமல் வியாபாரம் இல்லை என்பது சந்தை யதார்த்தம். ஆனால் அந்த விளம்பரமும், தற்பெருமையும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே இருக்க வேண்டும். அவை எல்லை மீறும்போது, எதிர்வினையாற்றத் துவங்கிவிடும்.
நான் உட்பட எல்லோரும், எப்படியெல்லாம் பெருமை பேசுகிறோம்;
தன்னிடம் உள்ள விலை உயர்ந்த 2-4 சக்கர வாகனங்கள், பெரிய வீடு, சென்றுவந்த வெளிநாட்டு சுற்றுலா பயனம், விலை உயர்ந்த உடை, நகைகள் என்று தன் உடைமகள் குறித்து பெருமை பேசிக்கொண்டே இருக்கிறார்கள்;
எதற்கெடுத்தாலும், தனக்கு “இன்னாரை தெரியும்” என்று பெருமை சொல்வது. உயர்பதவி மற்றும் செல்வந்தர்களை தெரியும் என்று போலியாக சொல்லி பணத்தை ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள்;
தான் பங்கெடுத்து செய்யாத ஒரு செயலை, யாரும் அறியமாட்டார்கள் என்ற எண்ணத்தில், தான் செய்ததாக பொய்யாக பெருமை பேசுவது;
கோவிலில் ஒரு மின்விளக்கு, கதவு, மின்விசிறி என்று எந்தப்பொருளை பார்த்தாலும், உபயதாரர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. மக்களுக்கு ஏனோ தான் தானமாக கொடுத்ததை ஊர் அறிய வேண்டுமென்பதில் அத்தனை ஆசை!
இப்படி தற்பெருமை பேசி, போலியாக ஒரு மாயவலையை பின்னி, அதற்குள்ளேயே காலத்திற்கும் உழன்று கொண்டிருக்கும் கூட்டம் தான் இங்கு மிக அதிகம். அந்த பெருமை பேசுவதால் என்ன சாதித்தார்கள் என்று கேட்டால், சரியான பதில் ஏதுமிருக்காது. மாறாய், இந்த அதீத பெருமை பேசுபமவர்களிடம் இருந்து, விஷயம் தெரிந்தவர்கள் படிப்டியாய் விலகிச் சென்றுவிடுவார்கள்.
பெருமை பேசுவது என்ற விடயத்தில் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பது அவரவர்கள் இருக்கும் சூழ்நிலையை பொருத்தது. இதில் பொதுவாக கவனிக்கபட வேண்டிய விடயங்களை இங்கு பட்டியலிடுகிறேன்;
நீங்கள் சாதித்தவைகள் குறித்து மனநிறைவும், பெருமையும் கொள்வது உங்களை ஊக்கப்படுத்தும். அதே சமயம் அதை மற்றவர்களிடன் சொல்லும் போது, அடக்கத்துடனும், மரியாதையுடனும் சொல்ல வேண்டும்;
உங்கள் வெற்றிகள் குறித்து பெருமையாக சொல்வது, மற்றவரை ஆக்கப்பூர்மாக ஊக்கப்படுத்தும் வகையில் இருந்தால், அது மிகவும் நல்லது. தேவையற்ற பொறாமை, காழ்ப்புணர்ச்சிகளை தூண்டுவதானால், கவனத்துடன் அவற்றை தவிர்ப்பது சாலச்சிறந்தது;
உங்கள் வெற்றிகள் குறித்து மட்டுமே தொடர்ந்து பேசி, மற்றவர்கள் பேச வாய்ப்பளிக்காமல் இருந்து விடாதீர்கள். நீங்கள் பேசியதைவிட, கேட்பது அதிகமாக இருக்கட்டும்;
மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும், உங்களை பற்றி பெருமையாக பேச வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இயங்குவதை தவிர்த்திடுங்கள்.
புகழும், பெருமையும் உங்கள் செயல்பாடுகளின் மேன்மையினால் தானாக வந்து போகட்டும். புகழ், பெருமைகளின் முன், தாமரை இலை மேல் தண்ணீர் போல் பட்டும்படாமல் இருந்துவிடுங்கள்.
நாம் செய்யும் செயல் எல்லாவற்றையும் பார்த்து
யாராவது புகழ்ந்தால், நமக்கு மனநிறைவாக இருக்கும்;
ஒருவேளை யாருமே பார்க்கவில்லை என்றால்
நாமாக இதை செய்தோம் என்று பெருமையாக சொல்வோம்;
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி,
எதில் சலிப்பு வருகிறதோ, இல்லையோ
பெருமை பேசுவதில் மட்டும் சலிப்பே வருவதில்லை;
உங்கள் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணமே
பெருமைக்காக செய்து மாட்டிக்கொள்வதில்தான் ஆரம்பிக்கிறது;
உறவுகள் முன்னிலையில், ஊரார் முன்னிலையில்
கௌரவத்திற்காகவும், பெருமைக்காகவும்
தன் சக்திக்கு மீறி ஒத்துக்கொண்டு
கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார்கள்;
அடுத்த முறை எதை பேசும்போதும், செய்யும்போதும்
தேவைக்காக செய்கிறோமா? – அல்லது
பெருமைக்காக செய்கிறோமா? – அல்லது
கடமைக்காக செய்கிறோமா? – என்று
ஒருமுறை உங்களுக்கு நீங்களே அலசிப்பார்த்து
தெளிவு பெற்று செயலில் இறங்குங்கள்;
- [ம.சு.கு 31.03.2023]
Comments