“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-170
புதிய வாழ்க்கை, இன்றிலிருந்தும் தொடங்கலாம்!
தன்னுடைய 10-ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் மற்றும் 12-ஆம் வகுப்பு பொருளாதார பாட பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர் திருமதி.அஞ்சு சர்மா. இரண்டு பொதுதேர்வுகளிலும் தோல்வியுற்றதால், இனி தனக்கு இந்த படிப்பு ஏற்புடையதல்ல என்று விலகிவிடாமல் இன்றிலிருந்து மாற்றுவேன் என்று தைரியமாய் புதிய சரித்திரத்தை துவங்கி கல்லூரியில் தங்கப் பதக்கமும், வெற்றி பெறுவது மிக கடினம் என்று கருதும் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) தேர்வில் தன் முதல் முயற்சியிலேயே வெற்றிகண்டு சாதனை படைத்தார்.
கைப்பந்து மற்றும் கால்பந்தாட்ட வீராங்கனையாக விளங்கிய திருமதி.அருனிமா சின்ஹா, திருடர்களால் ஓடும் இரயிலில் இருந்து தள்ளப்பட்டு தன் ஒருகாலை இழக்கிறார். எல்லாம் முடிந்துவிட்டதென்று நினைத்து, அரசாங்கம் இழப்பீடாய் கொடுத்த பணத்தையும், வேலையையும் கொண்டு மீதி காலத்தை ஓட்டியிருக்கலாம். ஆனால் அவருக்கு ஏனோ, இமயத்தின் எவரெஸ்ட் சிகரத்தை தொட ஆசை பிறந்தது. செயற்கை காலோடு மலை ஏறும் பயிற்சியை துவக்கி, ஒருநாள், எவரெஸ்டில் கால்பதித்து வரலாற்றி பெயர் பதித்தார்.
சரியாக கற்பதற்கான வழிமுறை தெரியாமல், கடைசி நிமிடத்தில் படிக்க முயற்சித்து பலனளிக்காமல் போயிருக்கலாம். அல்லது ஆசிரியர் சொன்னது புரியாமல் இருந்ததால் தோல்வியுற்றிருக்கலாம். அந்து தோல்வி முடிவல்ல என்பதுதான் யதார்த்தம். அந்த யதார்த்தம் புரிந்தவர்கள், தோல்வியின் காரணத்தை புரிந்து கொண்டவர்கள், கடந்தகால தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவக்கி திருமதி. அஞ்சு சர்மா போல வெற்றிச் சரித்திரம் படைக்கிறார்கள். யதார்த்தத்தை உணராமல் தங்களை தாங்களே மட்டுப்படுத்திக் கொள்பவர்கள், மேலும் சரிந்து கீழ்நிலை அடைகிறார்கள்.
கடந்து போன கசப்பான நிகழ்வுகளை மறக்க, புதியதொரு வெற்றியை படைக்க வேண்டும். காலில்லாமல் கைப்பந்தும், கால்பந்தும் ஆடமுடியவில்லை என்று ஒதுங்கிவிடாமல், செயற்கைக் காலோடு மலை ஏறுகிறேன் என்று துவங்கி, உலகின் உயரிய சிகரங்களை எல்லாம் தொட்டுவிட்ட அருனிமாவிடம் நீங்கள் என்ன கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.
கடந்து வந்த நாட்கள், மாதங்கள், வருடங்களில், நாம் எதையும் முயற்சிக்காததால், எந்தவொரு சாதனையும் படைக்காமல் இருந்திருக்கலாம். அல்லது, நம் முயற்சிகள் தவறாகி சாதனைகள் தவிறியிருக்கலாம்.அல்லது, மற்றவர்களால், ஏமாற்றப்பட்டு இழப்பை சந்தித்திருக்கலாம். இதற்கு முன்னர் வரை நாம் முயன்றோமா? இல்லையா? என்பது குறித்த ஆராய்ச்சியில் இப்போது எந்தப் பலனுமில்லை. மாறாய், இன்றிலிருந்து முயற்சிக்கிறோமா? இல்லையா? என்ற கேள்விக்கான பதிலில் தான் உங்களின் முன்னேற்றம் ஒளிந்திருக்கிறது.
பள்ளிக்கு போக வழியில்லாமல், உணவிற்கு போதிய வருவாய் இல்லாமல் தன் இளமைக் காலங்களில் திண்டாடிய எண்ணற்றவர்கள், தங்களின் கடின உழைப்பால் பணத்தையும், புகழையும் சம்பாதித்துள்ளனர். அதே சமயம், அவர்களுடன் அதே நிலையில் இருந்து பலர், எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே காலத்தை கடத்தி மடிந்திருக்கின்றனர். இவர்கள் இருவரில், யாராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்துவிட்டதால், இப்படியே பசியோடும், பட்டினியோடும் போராடித்தான் வாழ்க்கையை கழிக்க வேண்டுமென்று இருப்பதை அப்படி ஏற்றுக்கொள்கிறீர்களா?
இன்று ஏழையாய் இருந்தால் என்ன ! இன்றிலிருந்து உழைத்து படிப்படியாய் வாழ்க்கையில் முன்னேறி என் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன் என்று நம்பிக்கையுடன் முயற்சிக்கப் போகிறீர்களா?
நேற்றைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில் பயனில்லை. இன்றிலிருந்து என்ன செய்யலாம் என்று யோசித்தால், ஆக்கப்பூர்வமாக செய்வதற்கு நிறைய இருப்பது தெரியும்.
நம்முடைய இளமைக் காலங்களில் கல்வியை தவிர்த்திருக்கலாம். அதற்காக என்றைக்குமே ஒரு படிப்பறிவு இல்லாதவனாகவே மடிய வேண்டுமென்று விதி ஏதுமில்லை. எந்த வயதிலும் கற்பதற்கு ஆரம்பிக்கலாம். தன் எழுபது வயதில் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற வயோதிக வாலிபர்கள் நிறையவே இருக்கிறார்கள்!
நேற்று வரை குடியும், கும்மாளமுமாக, சம்பாதிக்கும் பணத்தை முற்றிலுமாய் சீரழித்திருக்கலாம். அதனால் உடல் நலனும் குன்றியிருக்கலாம். இன்றிலிருந்து மனம் மாறினாலும், இனிவரும் காலத்தை குடும்பத்தோடு இனிமையாக களிக்கலாமே!
அதிக கடன் வாங்கி கட்டமுடியவில்லை என்று தற்கொலை செய்துகொள்கிறார்கள். மனித உயிரை விட பணம் பெரிதில்லை என்பதால், அரசாங்கம் திவால் அறிவிப்பு முறையை (“மஞ்சள் நோட்டீஸ்”) காலங்காலமாய் சட்டம் வகுத்து நிர்வகித்து வருகிறது. நீதிமன்ற ஒப்புதலுடன் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் கட்டமைக்க வழியிருப்பதை ஏற்று புதிய வாழ்வை துவக்கி முன்னேற்றம் கண்டவர்கள் பலருண்டு!
தன் கணவனை விவாகரத்து செய்து பணக்கஷ்டத்தில் இருந்த ஜெ.கே, இரவுலிங், தனக்குபிடித்தமான எழுத்துப்பணியை ஆரம்பித்தார். தன் முதல் நூல், பல பிரசுர நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட போதிலும், தன் ஹாரிபார்ட்டர் நாவலின் மூலம் உலகின் அதிக வருவாய் ஈட்டும் முன்னனி எழுத்தாளர் ஆனார்.
எதையும் முன்னர் செய்யவில்லை என்பதற்காக, இனிமேல் செய்யக்கூடாதென்று சட்டம் இல்லை. ஏனோ காரணத்தினால், முன்னர் செய்யாமல் விட்டிருக்கலாம். அதுவே முடிவல்ல. இன்றிலிருந்து துவக்கி, படிப்படியாய் வெற்றி காணலாம். தன் 40-களில் ஜனாதிபதி யானவரும் இருக்கிறார். அதேசமயம், தன் 70-களில் ஜனாதிபதியானவரும் இருக்கிறார். கடந்து விட்ட காலத்தை பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை. இன்றிலிருந்து என்ன செய்யப்போகிறோம் என்பது மட்டுமே நாம் கவனிக்க வேண்டிய ஒரே முக்கியமான விடயம்.
இத்தனைக் காலம் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்;
இன்றிலிருந்து எப்படி இருக்க விரும்புகிறோம்
என்பதுதான் துவக்கப்புள்ளி!
நம் விருப்பத்தை, நம் கனவுகளை நிஜமாக்க
இன்றிலிருந்து என்ன முயற்சி செய்கிறோம்
என்பது தான் பயனத்தின் ஆரம்பம்!
எடுக்கின்ற முயற்சியில் எந்தளவிற்கு
நம்பிக்கையும், மனவுறுதியும் கொண்டு
விடாமுயற்சியுடன் சாதிக்கிறோம்
என்பதுதான் உண்மையான வெற்றி!
கடந்த காலங்களில் எதுவும் செய்யாமலிருந்திருக்கலாம்
குறைந்தபட்சம் இன்றிலிருந்து செய்யத் துவங்குங்கள்!
கடந்த காலத்தில் தீமைகளை மட்டுமே செய்திருக்கலாம்
குறைந்தபட்சம் இன்றிலிருந்து நன்மை செய்யத் துவங்குங்கள்!
பாவக் கணக்கின் பற்றுகள் இன்றோடு முற்றுபெறட்டும்!
கள்வராயிருந்த இரத்னாகர்,
வால்மீகியாகி கொடுத்ததுதான் இராமாயணம்!
நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்;
இன்றிலிருந்து உங்கள் புதிய இராமாயணத்தை எழுத நீங்கள் தயாரா?
- [ம.சு.கு 28.03.2023]
Comments