top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-167 - கொடுப்பவருக்குத்தான் கிடைப்பது நிலைக்கும்!"

Updated: Mar 26, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-167

கொடுப்பவருக்குத்தான் கிடைப்பது நிலைக்கும்!


  • இல்லறத்தில், கணவன் பொருளீட்டவும், மனைவி மனை காக்கவும் தங்களின் தனிப்பட்ட சுகதுக்கங்களை கடந்து மனமுவந்து உழைக்கின்றனர். அதிகாலை முதல் இரவு வரை குடும்பத்தின் நலனுக்கு உழைக்கும் தாய் ஒருபுறம், அவர்கள் வளமாக வாழ போதுமான செல்வம் ஈட்ட போராடும் தந்தை ஒருபுறம் என்று பெரிய பலன் எதிர்பார்க்காமல், அன்பை மட்டும் முன்னிறுத்தி பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பெற்றோர்கள். தான் பெற்ற பிள்ளையை நன்மக்களாய் வளர்த்தெடுத்த பெருமை பெற்றோர்க்கு. நல்ல பெற்றோரின் வளர்ப்பில் நல்லவர்களாய் வளர்ந்த பிள்ளைகள், தங்களின் அடுத்த தலைமுறைக்கு இதே கதையை தொடர்கிறார்கள். இங்கு பெறுவது யார்? கொடுப்பது யார்? பெற்றது எவ்வளவு? கொடுப்பது எவ்வளவு?

  • நிறைய இலக்கிய பேச்சாளர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவர்களில் பெரும்பாலானவர்கள், கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழ் துறை பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். அது ஏன்? பண்டைக் காலம் முதல், இன்று வரையிலும் எண்ணற்ற அறிஞர்களும், மேதைகளும் வாழ்ந்து சென்றுள்ளனர். ஆனால் வள்ளுவர், கம்பர், ஔவை என்று ஒருசிலரின் பெயர்கள் மட்டுமே இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?

தன் சந்ததியை உருவாக்கி வளர்த்தெடுக்கும் பெற்றோர்கள் நிறைய கொடுக்கிறார்கள். அதை பெற்ற பிள்ளைகள், தங்களின் அடுத்த சந்ததிக்கு திரும்பவும் கொடுக்கிறார்கள். இந்த கொடுக்கல் தொடரும்வரை, அடுத்தடுத்து மனிதகுலம் நிலைத்து நிற்கும். இந்த பெறுவதும் கொடுப்பதுமான சங்கிலி உடைந்தால், மனித குலத்தின் ஆணிவேர் அழியத்துவங்கிடும்;


தமிழ் பாடத்தை தினந்தோறும் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் குருவிற்கு, தினம்தினம் அதன் உட்பொருள் புதிதாய் புரிந்து கொண்டே இருக்கும். அந்த புரிதல் ஆழமானவர்கள், பேச்சாற்றல் மிக்கவரென்றால், மக்களுக்கு அவரிடத்தில் கேட்டறிய நிறைய இருக்கும். தன் அறிவும்/புரிதலும் மாணவர்களைக் கடந்து எளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டுமென்று பேசத்துவங்கி சமுதாயத்தை சீர்திருத்த முயற்சிக்கிறார்கள். வள்ளுவர் முதல் பாரதி வரை, யாரெல்லாம் காலத்தால் அழியாத அறிய பொக்கிஷப் படைப்புக்களை மக்களுக்கு அளித்தார்களோ, அவர்களின் பெயர்கள் இன்றும் அழியாப்புகழோடு நீடிக்கிறது. தன் அறிவை, புரிதலை தன்னோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அடுத்த தலைமுறை வளம்பெற கற்பிப்பதும், நூலாக வடித்து காலம் கடந்து நிற்பதும், அவர்கள் சமுதாயத்திற்கும் செய்யும் பெருங்கொடையாகும். அப்படி நீங்கள் என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள்!


நடைமுறையில், நாம் பிறந்தது முதல் இறுதிவரை சமுதாயத்திடம் இருந்து தொடர்ந்து பலவற்றை பெற்று கொண்டே இருக்கிறோம். இந்த சமுதாயத்தின் கருணைப்பார்வையில் தான் உண்ணும் உணவு முதல் எல்லா அத்தியாவசியத் தேவைகளும் எல்லோருக்கும் பூர்த்தியாகிறது. ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள், ஆதிகாலத்தைப்போல நீங்களே உங்களுக்கான விவசாயம் செய்தும், உடைகளுக்கான நூல்நூற்றும், ஆடு-மாடுகளை வளர்த்தும் வாழ்க்கையை ஓட்ட முடியுமா என்று? நீங்கள் செய்யும் தொழிலில் நிறைய செல்வம் சேர்க்கலாம். ஆனால் உங்கள் பணத்திற்கு விவசாயிகள் நெல்லைத் தர மறுத்தால், உடைகளை தர மறுத்தால் – உங்கள் கதி என்னவாகும்?


சமுதாயம் நமக்கு ஒன்றும் செய்வதில்லை என்று தொடர்ந்து குறைகூறிக்கொண்டே இருக்கிறோம். யதார்த்தத்தில் சமுதாயம் அனுமதிப்பதாலேயே நம்மால் இங்கு நடமாட முடிகிறது. சமுதாயம் பகுத்தண்டு பல்லுயிர் ஓம்பும் உயரிய நோக்கில் செயல்படுவதாலேயே நம்மால் உண்டு உய்க்க முடிகிறது. ஒரு சராசரி மனிதனாக தன் குடும்பத்திடமும், சமுதாயத்திடம் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு வாழ்ந்து மடியப்போகிறீர்களா? அல்லது உங்களால் முடிந்த அளவு சமுதாயத்திற்கும், அடுத்த தலைமுறைக்கும் பலன் தரும் வகையில் தொடர்ந்து உதவி செய்யப் போகிறீர்களா?

நீங்கள் சமுதாயத்திற்கு கொடுக்க முடிவு செய்து களம் கண்டால்,

  • நீங்கள் பெற்றதை விட அதிகமாக கொடுக்க முன்வரும்போது, சமுதாயத்திற்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து, சமுதாயத்துடனான உறவு பலப்படும்.

  • நீங்கள் கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்குவதால், உங்களைச் சுற்றிலும் நேர்மறையான சூழ்நிலை உருவாகும்;

  • உங்களைப் பார்த்து, மற்றவர்களும் கொடுத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கக்கூடும்;

  • உங்கள் மனதில் அன்பும், கருணையும் அதிகரிப்பதோடு, தன்னம்பிகையும், தைரியமும் அதிகரிக்கும்;

கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருந்தாலும், இன்றைய கலிகாலத்தில் கர்ணனைப்போல எல்லாவற்றையும் வாரி வழங்கிவிட முடியாது என்பது யதார்த்த வாழ்க்கை. மேலும் நீங்கள் என்ன நோக்கத்திற்கு கொடுக்கிறீர்களோ, அவை சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என்றும் பார்க்க வேண்டிய சூழலும் உள்ளது.

  • உங்கள் கைகளை சுட்டுக்கொள்ளாத அளவிற்கு கொடுங்கள்;

  • உங்களை ஏமாற்றிப் பிளைப்பவரிடம் கவனமாக இருங்கள்;

  • நீங்கள் கொடுத்துக்கொண்டிருக்க, சிலசமயங்களில் பிரதிபலானாக பல வஞ்சனைகள் வரக்கூடும். எப்போதும் சூழ்நிலைகளில் கவனமாக இருங்கள்;

கொடுப்பது உங்கள் கடமை. அதேசமயம்,

  • சமுதாயத்தில் தேவையற்ற எதிர்பார்ப்புக்களை மற்றவர்களிடம் ஏற்படுத்திவிடாதீர்கள்;

  • ஒருவர் ஏமாற்றினார் என்பதற்காக எல்லோரையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்;

  • நீங்கள் இவ்வளவுதான் கொடுப்பேன் என்று எல்லை வகுக்காதீர்கள். உங்களின் தேவைக்கு மிஞ்சியவை எல்லாம் மற்றவருக்கு கொடுப்பதற்குத்தான். மற்றவர்களின் தேவையறிந்து கொடுத்து உதவுங்கள்.

நாம் சமுதாயத்திடம் இருந்து நிறைய பெற்றிருக்கிறோம்.

  • உங்களுக்கு அடிப்படை கல்வி பயிற்றுவித்து உங்கள் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆசிரியர்கள், நீங்கள் உயரத்தை அடைந்ததற்கு பெரும் மகிழ்ச்சியடைவதோடு தொடர்ந்து இன்னும் பலரை தொடர்ந்து முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

  • விஞ்ஞானிகள் யாரும் தான் மட்டுமே சுகமாக வாழ்வதற்கு புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கவில்லை. தான் சார்ந்த சமுதாயத்தின் வாழ்வை எளிதாக்க பல புதிய பொருட்களை உருவாக்குகின்றனர்;

  • இன்றைக்கு நடப்படும் மரக்கன்றுகள் அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழலை காக்கும். நேற்றைக்கு நம்முன்னோர் நட்டவற்றின் பயனை இன்று நாம் பெறுகிறோம். இன்று நாம் நட்டால், நம் அடுத்த தலைமுறை பசுமையில் வாழ வழியாகும்;

  • உலகை உலுக்கிய கோவிட் பெருந்தொற்று காலத்தில், நம்மை காக்க ஆயிரமாயிரம் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் சேவை புரிந்தனர்;

  • சமூக நலனுக்காகவும், சுற்றுச்சூழலை பேனுவதற்காகவும், எண்ணற்ற சமூக ஆர்வலர்கள் காலங்காலமாய் போராடி சமுதாயத்தை முன்னேற்ற அவர்களால் ஆன முயற்சியை தொடர்கின்றனர்;

இந்தப் பட்டியல் எல்லையில்லாமல் வளர்ந்து கொண்டே போகக்கூடியது. இந்தப் பட்டியலில் நீங்கள் ஏதாவதொரு இடத்தில் இருந்தால், சமுதாயம் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது. நீங்கள் இந்த உதவிகளை பெற்றவராக இருந்தால், உங்களால் முடிகின்ற போது பிறருக்கு அதேவண்ணம் உதவி செய்திடுங்கள்.


உங்களிடம் பணம் வரும்-போகும்.;

இறுதிக்காலத்தில் தான் இத்தனை செல்வம் வைத்து

வாழ்ந்தேன் என்று எண்ணுவதைக் காட்டிலும்


தன்னிடம் இருந்த செல்வத்தில்

இத்தனை பேருக்கு உணவு கிடைக்க வழிசெய்தேன்

இத்தனை பிள்ளைகள் படிக்க வழி செய்தேன்

என்று மனம் எண்ணினால்

மனதிற்கு உண்மையான நிம்மதி கிடைக்கும்.


கொடுப்பது குறைந்து பறிப்பது அதிகமாக இருப்பதால்

சமுதாயம் சீரழிந்து நிற்கிறது ;

கொடுப்பது அதிகரித்துவிட்டால்

சமுதாயம் தானாக சீராகிவிடும்;


- [ம.சு.கு 25.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page