top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-165 - “நிறைய இருந்தால்” மகிழ்ச்சியா?"

Updated: Mar 24, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-165

"நிறைய இருந்தால்" மகிழ்ச்சியா?


  • உங்களுக்கு பிடித்த 20 வகையான உணவுகளை வாங்கிவந்து சாப்பிட உட்காருகிறீர்கள். இப்போது அந்த 20 வகைகளையும் உங்களால் முழுமையாக சாப்பிட முடியுமா? ஒவ்வொன்றிலும் ஒருவாய் எடுத்து சாப்பிட்டாலே உங்கள் வயிறு நிறைந்துவிடும். பின் எதற்காக அத்தனை உணவுகளையும் ஒருசேர வாங்கி உண்ண முயற்சிக்க வேண்டும்? நிறைய இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கிடைத்தவற்றை எல்லாம் வாங்கிவந்து எதற்காக வீணடிக்க வேண்டும்? அவற்றையெல்லாம் பார்த்தும், உண்டும் முடிந்ததுடன் உங்கள் வாழ்வு பூர்த்தியாகிவிட்டதா?

  • குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் பொருளை வாங்கித்தர வேண்டி அடம்பிடிக்கும். அந்த பொருள் கிடைத்தால், இனிமேல் எதுவும் கேட்கமாட்டேன் என்று சத்தியம் செய்யும். அந்த பொம்மையை வாங்கிக் கொடுத்தால் அதன் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அதைப்பார்த்து நாமும் மகிழ்வோம். ஆனால் அந்த பொம்மையினால் வந்த மகிழ்ச்சி எத்தனை காலம் நீடிக்கும்? அந்த குழந்தை இனி எதுவம் கேட்கமாட்டேன் என்ற தன் சத்தியத்தை காப்பாற்றுமா?

எல்லாவற்றையும் வாங்கியுள்ளதாக நீங்கள் எவ்வளவுதான் மகிழ்ந்தாலும், அவற்றை முழுவதுமாய் உண்ணாமல் வீணடிக்கும் குற்றவுணர்வும் வரத்தான் செய்யும். ஒரு குறிப்பிட்ட அளவுதான் உங்களால் உண்ண முடியும். ஒரு குறிப்பிட்ட அளவு பொருட்களைத்தான் உங்களால் உபயோகித்து அனுபவிக்க முடியும். வீட்டில் 10 கட்டில் மெத்தை இருந்தாலும், படுத்துறங்க ஒன்று மட்டும்தான் தேவை. ஒருவேளை உறவினர்கள் வந்தால், அவர்கள் பயன்பாட்டிற்கு அது உதவும். அளவிற்கு மீறினால், அது உங்களுக்கல்ல, அடுத்தவருக்குத்தான்! அதை அடுத்தவருக்கு கொடுத்து இன்புற்றால் மகிழ்ச்சி பெருகும். கொடுக்காமல் பூட்டிவைப்பதில் மிஞ்சுவது பயம் மட்டும்தான் ! மகிழ்ச்சியல்ல !!


குழந்தைகள் இன்று வாங்கிய பொம்மையைக் கொண்டு 2-3 நாட்கள் சலிக்காமல் விளையாடுவார்கள். பின்னர் அந்த பொம்மை சலித்துப்போய்விடும். அடுத்த வேறேதேனும் ஒரு புதிய விளையாட்டுப் பொருளைக் கண்டால் அது வேண்டுமென்று அடம்பிடிப்பர். கையில் இல்லாத வரை அந்த பொருள் வேண்டும். அது கிடைத்து விளையாடி முடித்தவுடன், அதன் மீதிருந்த மோகம் தீர்ந்து அடுத்த பொருள் வேண்டுமென்று மனம் மாறிவிடுகிறது.


இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களின் கதையும் அதே போலத்தான்.

  • ஒரு சிறுவீடு வாங்கும் வரை, அதை அடைவதுதான் மகிழ்ச்சி என்று ஓடுகிறோம். அந்த வீட்டை வாங்கி குடியேறிய மூன்று மாதத்திற்குள் இது போதவில்லை, அது போதவில்லை என்று குறைகூறி மகிழ்ச்சியை தொலைத்து இன்னும் பெரிய வீட்டிற்கு ஆசைப்படுகிறோம்;

  • ஒரு இரண்டு சக்கர வாகனம் வாங்கினால் மகிழ்ச்சி என்று முதலில் நினைத்தவருக்கு, ஒரு வருடத்தில் அது புளித்துப்போகிறது. நான்கு சக்கர வாகனத்திற்கு ஆசைப்படுகிறார். அது வாங்கினால் மகிழ்ச்சி நிரந்தரமாகிறதா என்றால், அங்கும் அது முழுமையடைவதில்லை. அடுத்ததாக, விலையுயர்ந்த “ரோல்ராய்ஸ்”-க்கு மனம் ஏங்குகிறது.

நாம் ஆசைப்பட்டது கிடைத்துவிட்டால் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அது ஏன் நிரந்தரமாக இருப்பதில்லை. வெகுசீக்கிரத்தில் அந்த மகிழ்ச்சியிலிருந்து வெளிவந்து அடுத்தவற்றிற்காக ஏன் ஏங்குகிறோம்? அதிலும் நம் பக்கத்துவீட்டுக்காரர் நம்மிடம் இருப்பதை விட சற்று பெரிதாக, கூடுதலாக வைத்திருந்தால், உடனே மகிழ்ச்சி வேதனையாகிவிடுவது ஏன்?


“ஹெடோனிக் தழுவல்” என்று உளவியலில் ஒரு கோட்பாடு இருக்கிறது. அதாவது, ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுமைக்கும் ஒரு மகிழ்ச்சி நிலையிலேயே பயனிப்பதாகவும், அவ்வப்போது வரும் அதீத மகிழ்ச்சியும், துன்பமும் சீக்கிரத்தில் பழகிப்போய், மகிழ்ச்சி சீக்கிரத்தில் சராசரி நிலையை அடைந்துவிடுவதும் நடைமுறை வழக்கம் என்பது அந்த கோட்பாடு. உத;பெரிய வீடும், வாகனமும் வாங்கியதற்கு நீங்கள் அளப்பறிய மகிழ்ச்சி கொள்ளலாம். சிலநாட்களில் நீங்கள் அந்த பெரிய வீட்டிற்கும், வாகனத்திற்கும் பழகிவிடுவீர்கள். பின்னர் அந்த பெரிய வீடும், வாகனமும் தனிப்பட்ட மகிழ்ச்சியாய் தெரியாது. அவை அன்றாட வழக்கமாகிவிடும். பின்னர் அடுத்த பெரிய பொருளை நோக்கி மகிழ்ச்சி எதிர்பார்த்திருக்கும். எதுவும் உங்களிடம் வந்து சேரும் வரைதான் அதற்கான ஏக்கமும், அதை அடைந்துவிட்டதற்கான மகிழ்ச்சியும். சில நாட்களில் அவை பழகிப்போனால், அதில் நீங்கள் மகிழ்ச்சியை உணர்வதில்லை என்பது வாழ்வின் யதார்த்தம்.


இப்படி “ஹெடோனிக் தழுவல்” கோட்பாடு போல “தேர்வுகளின் முரண்பாடு” என்று மற்றுமொரு உளவியல் கோட்பாடு இங்கு குறிப்பிடுவது பொருந்தும். உத; நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிர சட்டை வேண்டுமென்று கடைக்கு சென்று கேட்கிறீர்கள். பல கடைகளில் தேடிய பின் ஒரு கடையில் மட்டும் ஒரு சட்டை கிடைக்கிறது. உடனே அது கிடைத்த மகிழ்ச்சியில் வாங்கிவிடுகிறீர்கள். அதே நிகழ்வில், அந்த கடையில் நீங்கள் கேட்ட நிறத்தில் 50 வித ஆடை வடிவமைப்பு கொண்ட சட்டைகள் இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்க எவ்வளவு நேரம் ஆகும்? ஒரு சட்டை மட்டும் இருந்தபோது, வேறு தேர்வுகள் இல்லையே என்று மனதில் நினைத்துக்கொண்டு அந்த ஒன்றை உடனே வாங்கிய நீங்கள், பல தேர்வுகள் இருக்கும்போது முடவெடுக்க குழம்புகிறீர்கள். ஒன்றும் இல்லாவிட்டாலும் வருத்தம். நிறைய தேர்வுகள் இருந்தாலும் குழப்பத்துடனான வருத்தம்.


நிறைய இருந்தால் சொகுசான வாழ்க்கை இருக்கும். நினைத்ததை வாங்கி அனுபவிக்க முடியும். சமுதாயம் உங்களை பெரிய மனிதனாக அங்கீகரித்து மதிப்பளிக்கும். அப்படி நிறைய இருக்கும் போது, உங்களுக்கான அளவை மட்டும் வைத்துக்கொண்டு அளவுக்கு மிஞ்சியதை பிறருக்கு கொடுத்து மகிழ்ந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாவதோடு, நிரந்தரமாகவும் வாய்ப்பிருக்கும்.

நிறைய இருந்தாலும், யாருக்கும் கொடுக்காமல் பெட்டியில் வைத்து பாதுகாத்தால், தேவையற்ற மன அழுத்தமும், பயமும் தான் அதிகரிக்கும். அதேபோல, மற்றவர்களிடம் இருப்பதை பார்த்து தானும் அவற்றை பெறவேண்டுமென்று தேவைக்கு அதிகமாக, தன் சக்திக்கு அதிகமாக ஆசைப்பட்டு, கடன்பட்டு வாங்கினால், அதை நிம்மதியாக அனுபவிக்க முடியாமல் கடனில் திண்டாட வேண்டியதுதான்.


உங்களிடம் எவ்வளவு இருக்கிறதென்பது

உங்கள் மகிழ்ச்சியை தீர்மானிப்பதில்லை!

இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்கிறீர்களா?

என்பதில்தான் உங்கள் மகிழ்ச்சியின் அளவு நிர்ணயமாகிறது!


நிறைய இருக்கிறதென்பது மகிழச்சியல்ல!

அதை அணுகும் விதத்தில்தான் உங்கள் மகிழ்ச்சி இருக்கிறது!!


மாளிகையில் இருப்பவனுக்கு மண்குடிசையில் இருப்பவனுக்கும்

இன்பமும் துன்பமும் ஒரே அளவுகோளில் தான்;

இருக்கின்ற சூழ்நிலையில், இருக்கின்ற செல்வத்தில்

யார் மனநிறைவடைகிறார்களோ, அவர்களுக்குத்தான் மகிழ்ச்சி சொந்தம்!!

- [ம.சு.கு 23.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page