“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-164
நீங்கள் மட்டுமே முக்கியமானவர்!
இந்தியாவில் காப்பீடுகள் ஆரம்பித்த புதிதில், உயிர் காப்பீட்டு நிறுவன முகவர்கள், நீங்கள் செத்தால் உங்கள் குடும்பத்திற்கு பணம் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தினார்கள். தான் செத்தபின் பணம் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? என்று அதை பலரும் அலட்சியப்படுத்தினர். காப்பீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்த அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி எதிர்மறையாக கருதப்பட்டதால், பெரிய வரவேற்பை பெறவில்லை. பின்னர் படிப்படியாக உளவியல் காரணங்கள் ஆராயப்பட்டு சந்தைப்படுத்தும் உத்தியை மாற்றினர். காப்பீடு ஒரு ஆதாயம் தரும் முதலீடாக, வரிவிலக்கு தரும் முதலீடாக விளம்பரப்படுத்தி படிப்படியாக சந்தையை ஆக்கிரமித்தார்கள்.
வீட்டையும், குடும்பத்தையும் அன்றாடம் கவனித்துக் கொள்ளும் பெரும் பொருப்பை பெண்கள் ஏற்றுக் கொள்கின்றனர். பணிக்கு செல்லும் பெண்களுக்கு அது கூடுதல் சுமையாகவும் இருக்கிறது. இதனால், அவர்கள் தன் கணவன், பிள்ளைகள் என்று எல்லோருடைய ஆரோக்கியத்திலும் உரிய கவனம் செலுத்திவிட்டு, தன்னுடைய விடயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். நம் தமிழக பெண்களில் 50% அதிகமானோர் தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வில்லாமல் உடல் பருமண், இரத்தக்கொதிப்பு, நீரிழிவு என்ற வாழ்வியல் நோய்களில் சிக்கிக்கொள்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு இராப்பகலாய் உழைக்கும் பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை கோட்டைவிடுவது ஏனோ?
காப்பீட்டு நிறுவனங்களின் வெற்றிக்கு காரணம், மக்களுடைய புரிதலா? அல்லது அவர்களின் குடும்பத்தின் மீதான அக்கரையா? அல்லது பணத்தை சேமிக்கும் யோசனையா?. யதார்த்தம் யாதெனில், நம் நாட்டில் 20%-க்கும் குறைவானவர்களே உயிர் காப்பீட்டை காப்பீடு நோக்கத்தில் எடுக்கிறார்கள். ஏனையவர்கள் எல்லோரும் அதை ஒரு வரிவிலக்குடைய முதலீடாக மட்டுமே பார்க்கிறார்கள். பெரும்பாலானவர்கள், தான் இருக்கும்போது என்ன பயன் கிடைக்கும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். தான் இல்லாது போனால் தன் குடும்பம் என்னவாகும் என்பதைப்ற்றி கவலை இருப்பதில்லை! இந்த அனுகுமுறை காப்பீடு விடயத்தில் தவறென்றாலும், பெரும்பான்மையினரின் யதார்த்தம் இதுதான்.
தன் குடும்பம் நன்றாக இருக்கவேண்டுமென்று உழைக்கும் பெண்கள், அதில் அங்கம்வகிக்கும் தானும் நன்றாக இருந்தால் தான், எல்லோரும் நலமோடு மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்பதை அவ்வளவாக புரிந்து கொள்வதில்லை. தான் ஆரோக்கியமாக இருந்தால்தான், தன் குடும்பத்தினரை கடைசிவரை நன்றாக பார்த்து வழிநடத்த முடியும் என்பதை அவர்கள் மனம் முழுமையாக உணராமல், சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல், வீட்டில் யாரும் இல்லாதபோது, தனக்கென எதையும் சமைக்காமல் பழையதை உண்டும், போதிய உறக்கம், உடற்பயிற்சி, மனப்பயிற்சி (தியானம், யோகம்) இன்றியும் வாழ்க்கையை கடத்துகிறார்கள்.
நடைமுறையில் வீட்டின் எல்லாமுமாக இருந்த மனைவி ஒருவேளை தவறிவிட்டால், சில நாட்கள் வருத்தப்பட்டுவிட்டு கணவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வழக்கம்போல நகர்த்திக்கொள்வார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. மனைவி இருக்கும்போது எல்லாமே தன்னைச் சுற்றி இருப்பதனால் எல்லாம் தன்னை சார்ந்தே என்று நினைத்துவிடுகிறார்கள். அது உண்மையென்றாலும், ஒருவேளை அவர் தவறிவிட்டால், பெரும்பாலும் அவர் இடத்திற்கு இன்னொருவர் வந்து வாழ்க்கை இயல்பாய் நகர்ந்துவிடுகிறது.
ஒரு நல்ல குடும்பத்தலைவியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக் கொண்டிருக்கலாம். அத்துடன் ஒரு பெண்ணாக தன்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தன்னை நம்பிதான் குடும்பம் இருக்கிறதென்றாலும், தான் இல்லாவிட்டாலும் குடும்பம் இருக்கும் என்கிற நிதர்சனத்தை உணரவேண்டும். பெண்ணுக்கு குடும்பம் அதிமுக்கியமாக தெரிந்தாலும், அதில் அங்கமாகிய தான் அதனினும் முக்கியம் என்பதை உணர்ந்து தன்னுடைய ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்தினால், அவரும், அவருடைய குடும்பமும் ஒன்றாய் மகிழலாம்.
இந்த “தனிமனித முக்கியத்துவம்” என்கிற கோட்பாடு, அன்றாட குடும்ப வாழ்க்கையில் மட்டுமல்லாமல், அலுவலகம், வியாபாரம் என்று எல்லா இடத்திலும் யதார்த்தமாய் வியாபித்திருக்கிறது. அலுவலகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் இரவுபகல் பாராமல் உழைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் முடியாமல் இருக்கின்ற காலத்தில் அலுவலகம் உங்களுக்காக எதையும் செய்யாது. உங்களால் இனி பயனில்லை என்றால், ஓய்வுகொடுத்து விட்டிற்கு அனுப்பிவிடும். பிற்காலத்தில் அலுவலகத்தை குறைகூறுவதில் பயனில்லை. வாழ்கின்ற காலத்தில், பணிபுரியும் காலத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
வேலை-வேலை என்று உரிய நேரத்தில் சாப்பிடாமல், போதிய உறக்கம் இல்லாமல் இருந்தால், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என்று பல வாழ்வியல் நோய்களுக்கு ஆளாகி நீங்கள்தான் அவதிப்பட வேண்டும். உங்கள் வியாதிகளைப் பற்றி அலுவலகம் பொருட்படுத்தாது என்பதை புரிந்துகொண்டு, அன்றாடம் உங்கள் ஆரோக்கியத்தில் போதுமான கவனம் செலுத்தினால், தனிமனிதனாக நீங்கள் நன்றாக இருப்பதோடு, அலுவலகத்தையும், உங்களின் குடும்பத்தையும் நன்றாக பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் இல்லாவிட்டால் அலுவலகம் புதியவரை நியமித்துவிடும். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கும், இல்லாலுக்கும் நீங்கள் சம்பாதிப்பதைவிட, உங்களின் இருப்புதான் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வாழ்வதற்கு நிறைய விடயங்களும், பொருட்களும் தேவைப்படும். அவற்றை சம்பாதிக்க நீங்கள் ஓடலாம். எதை சம்பாதிக்க ஓடினாலும், அவற்றை பெற்று குடும்பத்தோடு அனுபவிக்க நீங்கள் இருக்க வேண்டும். அதற்கு முதலில் உங்கள் மீது போதுமான கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து நடந்துகொண்டால், எல்லாம் சுபமாகும்.
ஆயிரமாயிரம் உறவுகள் சுற்றியிருந்தாலும்
ஆயிரமாயிரம் செல்வம் குவிந்திருந்தாலும்
நீங்கள் இல்லாவிட்டால்
அவற்றினால் உங்களுக்கென்ன பயன்?
வாழ்க்கையில் உங்களுக்கு நீங்கள் மட்டுமே பிரதானம்;
ஆனால் அது அகங்காரம் ஆகாமலும்
மனிதத்தை குழைக்காமலும், பார்த்துக்கொண்டால்
வாழ்வின் கசப்பிலும் இனிப்பைக் காணமுடியும்;
உங்கள் ஆரோக்கியம், உடல்நலன், மனநலனில்
போதுமான அக்கறை இருக்கட்டும்!
நீங்கள் நன்றாக இருந்தால்
உங்களைச் சார்ந்தவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள முடியும்;
நீங்களே இல்லாவிட்டால் ..........??!!!
- [ம.சு.கு 22.03.2023]
Comments