top of page

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-159 - மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்!"

  • Writer: ம.சு.கு
    ம.சு.கு
  • Mar 17, 2023
  • 2 min read

Updated: Mar 18, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-159

மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்!


  • குழந்தைகள் தினம் தினம் நிறைய சுட்டித்தனம் செய்கின்றன. அவர்களின் குறும்புகளுக்கு அவ்வப்போது சில அடிகளை கொடுக்கவும் செய்கின்றனர். சில பிள்ளைகள், பெற்றோர் சொற்களை கேட்காமல் தவறான பழக்கவழக்கங்களுக்கு உள்ளாகி குடும்பத்தின் பெயர்களை கெடுத்துவிடுகிறார்கள். ஆனாலும், அவர்களின் பெற்றோர்கள் அவர்களின் தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள எக்கணமும் தயாராக இருக்கிறார்கள். வயதான காலத்தில் தங்களை பார்த்துக்கொள்ளாத பிள்ளைகள், கஷ்டமென்று வந்து நின்றால், தங்களிடம் இருக்கும் சொற்ப சொத்துக்களையும் விற்று பிள்ளைக்கு முடிந்தவரை உதவத்தான் செய்கிறார்கள். ஏன் பிள்ளைகள் தொடர்ந்து இன்னல்பல கொடுத்தாலும், மீண்டும் மன்னித்து ஏற்றுக்கொள்கின்றனர்?

  • அலுவலகத்தில் ஊழியர்கள் நிறைய வேலைகளை செய்துகொண்டிருக்கும் போது, ஒரு சில தவறுகள் அவ்வப்போது நிகழ்வது இயல்பு. எல்லா தவறுகளுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கிறார்களா என்றால் கட்டாயம் இல்லை. சிறுசிறு தவறுகளை கண்டும்காணாமல் இருப்பார்கள். அவை மீண்டும் நிகழ்ந்தால் கவனமாக வேலை செய்யுமாறு கட்டளையிடுவார்கள். அதேசமயம் பெரிய இழப்பை ஏற்படுத்தும் தவறுகளையோ, ஒழுக்கம் தவறிய செயல்களையோ செய்தால் வேலையிலிருந்து வெளியனுப்பும் கடுமையான தண்டனைகளை கொடுப்பார்கள். ஏன் சில தவறுகளை மன்னிக்கிறார்கள்?

எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், சில குடும்ப உறவுகள் அதையும் தாண்டி வலுவானது. எந்த சூழ்நிலையிலும் குற்றங்களை சகித்து ஏற்றுக்கொள்ள அவரவர்களின் குடும்பத்தினர் தயாராக இருப்பதால்தான் இன்னும் மனிதம் தழைத்திருக்கிறது. குற்றம் செய்தவர்கள் மனம்திருந்திட வழிவகையும் கிடைக்கிறது. மன்னித்து ஏற்றுக்கொள்ள இடமில்லாத நபர்கள், மீண்டும் தொடர்ந்து குற்றம் செய்ய வாய்ப்பு அதிகரிக்கிறது. குடும்பத்தினர் அறிவரை கூறி, அன்பு பாராட்டி மேற்கொண்டு நல்வழிப்படுத்துவதால்தான், ஒரிருமுறை குற்றம் புரிந்தவர்கள் மனம் திருந்திட வாய்ப்பு கிடைக்கிறது.


வேலையில் தவறுகள் நிகழ்வது மனித இயல்பு. அப்படி தவறுகளே இல்லாமல் செய்ய வேண்டுமானால், இயந்திர மனிதர்களைக்கொண்டு செய்தால்தான் முடியும். நன்கு அனுபவப்பட்டவர்களும் அவ்வப்போது சில மாறுபட்ட முயற்சிகளின்போது தவறு செய்வார்கள். அந்த தவறுகளுக்காக அவர்களை வேலையை விட்டு நிருத்தினால், பின் அனுபவம் வாய்ந்தவர்களை எங்கிருந்து தேடுவது. தவறுகளே செய்யாத ஊழியர் வேண்டுமென்றால், அப்படியொரு நபர் கிடைப்பது சாத்தியமில்லை. பெரிய இழப்புகள் ஏற்படுத்தாத வகையில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, ஆங்காங்கே நிகழும் சிறுதவறுகளை மன்னித்து, உரிய அறிவுரை கூறி வழிநடத்தினால், படிப்படியாக தவறுகள் திருத்தப்பட்டு நிறுவனத்தை முன்னேற்றலாம். எல்லா தவறுகளையும் பெரிதுபடுத்தி, ஊழியர்களை திட்டினால், ஒவ்வொருவராக வேறுவேலை தேடி சென்றுவிடுவார்கள். தொடர்ந்து புதியவர்களை சேர்த்து பயிற்சி கொடுத்து வேலையை செய்வது காலதாமதத்தை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தின் வளர்ச்சியையும் வெகுவாக பாதிக்கும்.


வாழ்க்கையில் எளிமையான, கஷ்டமான, முக்கியமான, உணர்வுப்பூர்வமான சிலவற்றில், முக்கியமானது “மன்னிப்பது”. உங்களை ஏமாற்றியவர்களை, உங்களை காயப்படுத்தியர்களை மன்னிப்பது சற்று கடினமான விடயம். உங்கள் உணர்வுகளை காயப்படுத்தியவர்களை பழிக்குப்பழி வாங்காமல் மன்னிப்பது, அந்த பழிவாங்கும் சங்கிலித் தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கும். மன்னிக்கலாம் என்று முடிவுசெய்துவிட்டால், அதை செயல்படுத்துவது எல்லாவற்றையும் விட எளிதானது. ஏனெனில் மன்னிப்பதில் மட்டுமே நீங்கள் எதையும் செய்யாமல் சும்மா இருக்கமுடியும். “மறப்போம் ! மன்னிப்போம்!” என்ற வார்த்தைகள் தான் மனிதனை இன்றும் பிணைத்துவைத்திருக்கிறது. மன்னிப்பு குறித்து யோசிக்கும் போது, நிறைய கேள்விகள் உங்களுக்குள் வரலாம்;

  • மன்னிப்பு என்பது இயலாமையின் அடையாளமா (அல்லது) வெற்றியின் அடையாளமா?

  • மன்னிப்பு வழங்கினால், அதன் மதிப்பு தெரியாமல் மீண்டும் தவறு செய்கிறார்களா?

  • மன்னிக்க வேண்டுமென்று நிறைய சிபாரிசுகள் வருகின்றனவா? அல்லது மிரட்டல்கள் வருகின்றனவா?

  • ஒரு குறிப்பிட்ட தவறை மன்னித்தால், நிறுவனத்தின் கட்டுக்கோப்பான அமைப்பு பாதிக்கப்படுமா? (திருடியவனை மன்னித்து வேலையில் தொடர்ந்தால், மற்றவர்களுக்கு திருடி மாட்டினால் நிறுவனம் மன்னித்துவிடும் என்ற எண்ணம் தோன்றக்கூடும்)

மன்னிப்பது, உங்களின் தனிப்பட்ட உரிமை. கடந்துவந்த கஷ்டங்களை புறந்தள்ளி மன்னிப்பதற்கு, நிறைய பெருந்தன்மை வேண்டும்; உங்களால் மன்னிக்க முடிந்தால்

  • உங்களின் கோபம் குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் அடுத்த செயல்களை செய்ய முடியும்;

  • மன நிறைவான, உடல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிகிடைக்கும்;

  • குடும்பம், உறவுகள், சமுதாயத்துடன் நல்ல உறவு நீடிக்கும்; சரியையும், தவறுகளையும் சமமாக பாவிக்கும் எண்ணம் வளரும்;

  • மற்றவருடைய கோணத்தில் பிரச்சனையை பார்த்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளரும்;

  • மற்றவர்களை மன்னிக்க முடிந்தால், நீங்கள் அவரினும் மேம்பட்டவர் என்பதை நிரூபிக்கிறீர்கள்;

சிலசமயம், உங்களால் மன்னிக்க முடியாமல் போகலாம்; பெரிதாய் நம்பியவர்கள் எமாற்றும் போது, மனம் அவ்வளவு எளிதில் ஆற்றுப்படுவதில்லை; ஒருவேளை நீங்கள் மன்னிக்கத் தவறினாலோ அல்லது நீ்ங்கள் தாமதித்தாலோ விளைவுகள் எதிர்பதமாக திரும்பலாம்.


ஒரு சிலருக்கு தவறு செய்வது குறித்து எந்தவொரு குற்றவுணர்வும் இருப்பதில்லை. மற்றவர்கள் பாதிக்கிறார்களே என்ற மனிதாபிமானம் துளியும் இருப்பதில்லை. அவர்களை மன்னிப்பதில் அர்த்தமில்லை என்ற வாதம் வருகிறது. அப்படிப்பட்ட எல்லை மீறிய குற்றங்களின் போது, உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்துவிட்டு நீங்கள் விலகிவிட வேண்டும். நீங்களே பழிவாங்க புறப்பட்டால், பின் உங்களுக்கும் அந்த குற்றம் செய்பவருக்கும் வேறுபாடின்றி போகும்.


தவறுகளை மன்னித்து விட்டால், உங்களுக்கு மேற்கொண்டு அதில் யோசிக்க ஒன்றுமில்லை. எந்தவொரு மன உளைச்சலும் இல்லாமல் நிம்மதி கிடைக்க வாய்ப்பதிகம். அதேசமயம் நீங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கினால், தேவையின்றி மனஅழுத்தமும், நிம்மதியின்மையுமே ஏற்படும். மறுபுறம், மன்னிக்கப்படவருக்கு குற்ற உணர்வில் திருந்த வாய்ப்பு கிடைக்கும். அவர் திருந்தினால் எல்லோருக்கும் நன்மை.



மனித குலம் கண்டுணர்ந்து

உயரிய இரண்டு உணர்வுகள்

அன்பு & மன்னிப்பு ?!


என்ன செய்தார்கள் என்று பார்க்கும் இடத்தில்,

யார் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்?

தவிர்த்திருக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு

விடை தேடினால், எல்லா பிரச்சனைக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்;




- [ம.சு.கு 17.03.2023]


Recent Posts

See All
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

 
 
 

Comments


Post: Blog2 Post
bottom of page