top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-158 - சிந்தனையில் கவனம் செலுத்துங்கள்!"

Updated: Mar 17, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-158

சிந்தனையில் கவனம் செலுத்துங்கள்!


  • ஆசிரியர் வீட்டுப்பாடமாக ஏதாவதொரு ஓவியம் வரைந்துவர குழந்தைகளுக்கு கட்டளை இட்டிருந்தார். எதை வரைவதென்ற குழப்பம் வரவே, வீட்டிலிருந்த கணினியியை துவக்கி இணையத்தில் குழந்தை தேடத் துவங்கியது. குழந்தைகள் எளிதாக வரையக்கூடிய ஓவியம் என்று தேடும்போது, சிறிய பொம்மைப்பட விளம்பரம் ஒன்று ஒரமாக வந்தது. அந்த பொம்மைப்படத்தின் மீது கவனம் சென்று அந்த இணையப் பக்கத்திற்கு சென்று பொம்மைப்படத்தை பார்க்கத் துவங்கிவிட்டது. ஓவியம் வரைய தேடலைத் துவங்கிய குழந்தை, 1 மணிநேரமாய் பொம்மைப்படத்தை பார்த்து நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தது. தேடல் துவங்கியது ஒரு இடம். நேரம் கழிந்தது இன்னொரு இடம்;

  • இரவு சிலசமயம் திடீரென்று விழிப்பு வந்து நேற்று செய்து முடித்திருக்க வேண்டிய வேலையோ அல்லது நாளை செய்ய வேண்டிய வேலை குறித்த ஞாபகம் வரும். அதை காலையில் உடனடியாக செய்ய வேண்டும் என்று எண்ணக்கொண்டு தூங்க முயற்சிப்போம். ஆனால் எண்ணம் அத்தோடு நின்றுவிடாமல் நேற்று என்னவெல்லாம் செய்தோம், நாளை என்னவெல்லாம் செய்ய வேண்டும், யாரையெல்லாம பார்க்க வேண்டும், என்ன பேசவேண்டுமென்று பலவற்றை மாறிமாறி யோசித்துக்கொண்டிருக்கும். சிலசமயங்கள் இந்த சிந்தனை 1-2 மணி நேரங்களை வரை எல்லையில்லாமல் பயனித்து இரவு உறக்கதை முற்றிலுமாய் கெடுத்து விடும். உறக்கும் கெடுவது அடுத்த நாளைய செயல்பாட்டை சிறிது பாதிக்கும். ஏன் இப்படி தேவையில்லாமலும், ஒரு குறிப்பிட்ட நோக்கமில்லாமலும் அலைபாய விடுகிறோம்?

குழந்தைகள் ஒரு விளையாட்டில் இருந்து இன்னொன்றுக்கு மாறுவது, படித்துக்கொண்டிருக்கும் போது, தொலைக்காட்சி சத்தம் கேட்டவுடன் அதை பார்க்க வருவது, என்று ஒன்றில் முற்றிலுமாய் கவனம் செலுத்தாமல் மாற்றிக் கொண்டிருக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களிடமும் பரவலாய் நிலவும் இயல்பான பழக்கம்தான். தொலைக்காட்சி பார்க்கும் சில ஆண்கள் என்ன பார்க்க வேண்டுமென்ற தெளிவில்லாமல் தொடர்ந்து அலைவரிசைகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இப்படி ஒரு இலக்கில்லாமல் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவிக்கொண்டே இருப்பதால், சிந்தனையும், செலவிட்ட நேரமும் வீணாவதோடு, உங்களின் வெற்றியை நோக்கிய பயனம் திசை தெரியாமல் திண்டாடுகிறது.


சிந்தனைகள் ஒன்றில் துவங்கி, இலக்கில்லாமல் பலவற்றில் உலாவுவது, இரவு விழிப்பு வரும்போது மட்டுமல்லாமல், நிறைய நபர்களுக்கு பகல் பொழுதிலும் நிகழ்கிறது. இந்த பகல் கனவுகளில் தேவையில்லாமல் நேரம் வீணாவதும், சிந்தனைகள் தேவையில்லாமல் திசைமாறுவதையும், யாரும் உணர்வதில்லை. சிந்தனைகளைத் தாண்டி, சில சமயம் ஒரு குறிப்பிட்ட திட்டம், செயல்பாடு குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த உரையாடலும் பலசமயம் திசைமாறி அரசியல், திரைப்படம், பிரயானம் என்று பலவற்றிற்கு மாறிவிடுகிறது. எதற்காக அந்த குழு கூடயதோ, அந்த தலைப்பிற்கு செலவிட்ட நேரத்தைவிட கவனம் திசைதிரும்பி முக்கியமில்லாத விடயங்களில் அதிக நேரம் வீணாகிறது.


பல்வேறுபட்ட சிந்தனைகள் மாறிமாறி வந்தால் தான், புதுமைகளை படைக்கமுடியும், மன உளைச்சல் இருக்காது, பிரச்சனையை அனுகும் பல்வேறு கோணங்கள் குறித்து அறிய முடியும் என்று ஒருசிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். ஒருசில சமயங்களில் அது சரியாக இருக்கலாம். ஆனால், பொதுவாக எண்ணங்கள் இலக்கில்லாமல் உலவினால், உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டு வேலைகள் தள்ளிப்போகின்றன. குறித்த நேரத்தில் முடியாத வேலைகளால், மன உளைச்சலும், இன்னல்களுமே அதிகரிக்கின்றன.


ஏன் இந்த சிந்தனை கட்டுப்படுவதில்லை? எண்ணவோட்டத்தை எப்படி சரியாக வழிநடத்துவது? முழுமையான கட்டுப்பட்ட நிலையை அடைய நிறைய பயிற்சிகள் தேவைப்படலாம். நம் சிந்தனைகளை வழிநடத்த எங்கு துவக்கலாம்? எப்படி துவக்கலாம்?

  • வெளிப்புறச் சூழலில் வேறு நிகழ்வுகள், சத்தங்கள், உங்களை திசைதிருப்புவது ஒரு முக்கிய காரணமாக இருக்கும். கூடியவரை அமைதியான சூழலை அமைத்துக்கொள்ளுங்கள்;

  • உங்கள் மனநிலையை ஒருகனம் நீங்கள் நோட்டமிடுங்கள். நீங்கள் உங்களுக்குள் அமைதியடையாமல் எதையும் செய்ய முடியாது. அதிக மன உளைச்சல் இருந்தால், போதுமான அளவு ஓய்வெடுத்து பின் வேலையை துவக்கினால், கவனம் ஒருநிலைப்பட வாய்ப்பதிகம்;

  • செய்கின்ற செயல், சிந்திக்கின்ற விடயங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கவேண்டும். விருப்பமில்லாத விடயங்களில் உங்கள் கவனத்தை தொடர்வது மிகவும் சிரமம்;

  • இன்று செய்ய வேண்டிய வேலைகளை இன்றைக்கு செய்து முடிப்பது குறித்து யோசித்து திட்டமிட வேண்டும். சோம்பலுக்கு இடமளித்து நாளை செய்ய யோசித்தால், அந்த சோம்பல் உங்கள் நேரத்தையும், எண்ணத்தையும் முற்றிலுமாய் விழுங்கிவிடும்;

  • பல்வேறு பணிகளை ஒருசேர துவக்கி மாட்டிக்கொள்ளாதீர்கள். பணிகளின் முக்கியத் துவத்திற்கேற்ப, போதுமான நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கினால், கவனச்சிதறல்களை தவிர்க்கலாம். எல்லாவற்றையும் ஒரு சேர செய்ய முயற்சித்தால், கவனச் சிதறல்கள் எல்லாவற்றையும் பாழ்படுத்திவிடும்;

  • கைப்பேசி, இணையம், சமூக வளைதளம் போன்றவற்றில், குறிக்கோள் இல்லாமல் உலாவாதீர்கள். இணையம், சமூக வலைதளமென்பது ஒரு மாய உலகம். அங்கு உங்கள் கவனத்தை மயக்கியிழுக்க பல இலட்சம் விடயங்கள், தகவல்கள், படங்கள் முயற்சிக்கின்றன. அவை உங்களின் அப்போதை தேவையை, எண்ணவோட்டத்தை பல செயற்கை நுண்ணறிவு முறைகளில் அறிந்து உங்களை திட்டமிட்டு இழுக்க முயற்சித்துக் கொண்டே இருக்கும்.

உங்கள் சிந்தனைகள் உங்களுடைய ஆறாம் அறிவின் அரும்பெறும் சொத்து. அதை எப்படி வழிநடத்தி வெற்றிகாண வேண்டுமென்பது உங்கள் கையில். நீங்கள் வெல்கிறீர்களா? (அல்லது) உங்களை திட்டமிட்டு மயக்கியிழுக்க நினைக்கும் வளைதள உலகம் வெல்கிறதா? என்பது உங்கள் கையில்.


உங்கள் எண்ணங்களை, சிந்தனைகளை சிதறடிக்க, திசைதிருப்ப பல நேரடி முயற்சிகளும், மறைமுக முயற்சிகளும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். அவற்றில் சிக்கிவிடாமல், கவனமாக உங்கள் எண்ணங்களை, சிந்தனைகளை முறைப்படுத்தினால், எடுகின்ற காரியங்களை செவ்வனே செய்து வெற்றியை நோக்கி விரைவாக முன்னேறலாம்; எல்லாம் அவரவர் கையில்!!



சிந்தனை தான் மனித வாழ்க்கை

சிந்தனை தான் புதுமைகளின் ஆரம்பப் புள்ளி

சிந்தனை சீறாய் வழிநடத்தப்பட்டாள்

இன்பங்களைத் துய்க்கவும்

இறைநிலை எய்தவும் வழிவகை தெரியும்;


சரியானவற்றை சிந்திக்கிறோமா?

சரியான நேரத்தில் சிந்திக்கிறோமா?

சிந்திப்பதை கவனச் சிதறலின்றி தொடர்ந்து சிந்திக்கிறோமா?


உங்கள் சிந்தனையின்மீது கவனமிருந்தால்

ஒருவர் சிந்தனை மூலைச்சலவை செய்யப்படாமல்

சீறாய் வழிநடத்தப்பட்டால் – அந்த

சிந்தனையே அந்த மனிதனை சிறப்படைய செய்யும்;



- [ம.சு.கு 16.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page