top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-157 - கையில் இருப்பது (எ) ஆசைப்படுவது!!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-157

கையில் இருப்பது (எ) ஆசைப்படுவது!!


  • கல்லூரியில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் பலருக்கு படிப்பை முடித்ததும் அதிக சம்பளம் வரக்கூடிய பெரிய வேலையில் சேர வேண்டுமென்று ஆசையிருக்கும். இளங்கலை பட்டம் பெற்ற அனுபவமற்ற புதியவர்களை, ஆரம்பத்தில் சிறிய பணிகளில் அமர்த்தி பயிற்றுவிக்கப்பட்டு, படிப்படியாய் வளர வாய்ப்பளிப்பார்கள். ஊதியமும் ஆரம்பத்தில் குறைவாக இருக்கும். போகப்போக அவர்களின் திறமை, செயல்பாடுகளுக்கேற்ப வேலை மாற்றங்களும், பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டு ஊதியம் அதிகரிக்கப்படும். இந்தப் படிப்படியான வளர்ச்சி என்ற இயல்பில் கிடைக்கவிருக்கும் வேலையை தவிர்த்துவிட்டு, நேராக மேலாளர் பதவிக்காண நேர்காணலுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தால், என்னவாகும்?

  • நிறைய சம்பாதித்து பிள்ளைகளுக்கு செல்வம் சேர்க்க ஓடுகிறோம். பெரிய வீடு, பெரிய நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டுமென்று அதிக கடன்பட்டு வாங்கி, அந்த கடனை அடைக்க இரவு-பகல் பாராமல் கனவனும்-மனைவியும் உழைக்கிறார்கள். வீட்டு வேலைக்கும், குழந்தை பராமரிப்பிற்கும் ஆட்களை வைத்து குழந்தைகளின் மழலை மொழியையும், வளர்கின்ற பாங்கையும் உடனிருந்து முழுமையாய் அனுபவிப்பதை தவறவிட்டு, நிறைய சம்பாதிப்பதில் என்ன பயன் இருக்கிறது? இளமையில் இல்லறத்தின் இனிமையை தொலைத்துவிட்டு, பணத்தின் பின்னால் ஓடிசேர்ப்பதில் என்ன பயன் இருக்கிறது?

பணி அனுபவமில்லாமல், நேராய் மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்தால், நேர்காணல் அழைப்புகள் பெரும்பாலும் வராது. ஒருவேளை வந்தாலும், நேர்காணலில் அனுபவமின்மையை காரணம்காட்டி நிராகரிக்கப்பட வாய்ப்பதிகம். கல்லூரிக் காலங்களில், கல்வியை தாண்டி மற்ற திறமைகளை வளர்த்துகொண்டவர்களுக்கு, சாதாரண மானவர்களைக் காட்டிலும் அதிக ஊதியம் தரும் வேலைகிடைக்க வாய்ப்பு அதிகம். அப்படி திறமைகளை வளர்த்துக்கொள்ளாமல், கிடைக்கின்ற ஆரம்பகட்ட வேலைகளை தவிர்த்து, நேரடியாக கல்லூரியில் இருந்து வெளிவந்தவுடன் மேலாளர் பதவிக்கு கனவுகண்டு கொண்டிருந்தால், சாத்தியப்படுமா?


ஒவ்வொரு குடும்பமும், தங்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளும் நோக்கில்தான், செல்வம் சேர்க்க இராப்பகலாய் உழைக்கிறார்கள். அந்த உழைப்பில் தவறில்லை. செல்வம் சேர்க்கும் நோக்கில் ஒடுவதிலும் பெரிய குற்றமில்லை. ஆனால் குழந்தைகளுடன் அன்றாடம் நேரம் செலவிடாமல், வாழ்க்கைத் துணையுடன் அன்பு பாராட்டாமல், வேலை வேலையென்று ஒடுவதில்தான் இங்கு பிரச்சனை. குடும்பத்தோடு நேரம் செலவிட்டு இன்புறும் வேளையில் செல்வம் சேர்க்க ஒடினால். நீங்கள் ஓய்வாக குடும்பத்தோடு இருக்க விரும்பும் போது, யாரும் உங்களுடன் இருப்பதில்லை.


நீங்கள் பிள்ளைகளுடன் அவர்களின் பிள்ளைப் பிராயத்தில் நேரம் செலவிடவில்லை. இன்று நீங்கள் வயதாகும்போது, உங்களுடன் நேரம் செலவிட அவர்களுக்கு நேரம் இல்லை. இந்த சக்கரம் இப்படியே தொடர்கதையாய் போகிறது. வாழ்கின்ற காலத்தில் இருக்கின்ற செல்வத்தை போற்றி அனுபவிக்காமல், நிறைய செல்வம் சேர்ப்பதிலேயே குறியாக ஓடி வாழ்க்கையை வாழாமல், இறுதிகாலத்தில் வேதனைப்பட்டு இறப்பவர்கள்தான் ஏராளம்!!


ஒருபுறம் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு, கிடைப்பதை தவிர்த்து கஷ்டப்படுகிறோம். மறுபுறம் இருக்கின்ற செல்வத்தை அனுபவிக்காமல், மேலும் செல்வம் சேர்க்க ஒடுகிறோம். இப்படி தேவைக்கு அதிகமானவற்றிற்கும், சாத்தியமற்றவைகளுக்கும் கனவு கண்டு, இருக்கும் நேரத்தையும், இருக்கும் வசதிகளையும் அனுபவிக்காமல் நேரத்தை வீணடிப்பது யாருடைய முட்டாள்தனம்!!


ஒருபுறம் இருப்பவற்றை அனுபவிக்காமல் தொலைப்பவர்கள் இருக்க, மறுபுறம் போதுமான அளவு செல்வமும், நல்ல மனிதர்களும் இருந்தாலும் ஒருசிலருக்கு ஏனோ மனநிம்மதி கிடைப்பதில்லை.

  • அவர்கள் புதிய தேடல் ஆன்மீகம் சார்ந்து ஒடுகிறது. அந்த தேடலை நோக்கிய முயற்சியில் தான், சித்தார்த்தர் புத்தரானார், உலகில் பௌத்தம் பிறந்தது.

  • இருக்கின்ற அரச எல்லைகள் போதாதென்றுதான் அலெக்சான்டரும், ஹிட்லரும் உலகையாள போராடினார்கள். அவர்களின் போர்கள் வரலாறாகின.

  • பல்லாயிரம் வருடங்களாய் மனிதயினம் பரினமித்து வந்தபோதிலும், கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மனிதனின் தேவைகளும், ஆசைகளும் எண்ணற்ற புதிய அறிவியல் தேடல்களை தூண்டி, விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுத்து, வாழ்வியல் முறைகளையே மாற்றியிருக்கிறது.

தன்னிடம் இருக்கின்ற பொருளோடு மனநிம்மதி அடைந்து நின்றுவிட்டால், புதிய தேடல்கள் இருக்காது. தேடல் இல்லாமல், நீங்கள் எதையும் அடையமுடியாது என்பது எல்லோரும் அறிந்தது தான். புதியவற்றிற்கான தேடல் வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், அந்த ஆசைகளை நோக்கிய தேடலில், நாம் கையில் இருப்பவற்றை சரியாக பயன்படுத்தாமல், மன உளைச்சலுடன் இருப்பதுதான் இங்கு மிகப்பெரிய பிரச்சனை.

  • இருக்கின்ற குடும்பம், உறவுகள், நட்புகளோடு போதுமான அளவு நேரம் செலவிடாமல், மேலும் மேலும் சம்பாதிப்பதில் பயனில்லை;

  • இருக்கின்ற செல்வத்தை அனுபவிக்காமல், பெரியவற்றை கடன்பட்டு வாங்கி, பின் அந்த கடனை அடைக்க ஓடுவதில் அர்த்தமில்லை;

உங்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலம் தான். அதற்குள் நீங்கள் மனநிறைவோடு வாழ்ந்து முடிக்கவேண்டும். அந்த மனநிறைவை ஆசைகளை நோக்கிய தேடலில் அதிகம் தேடாதீர்கள். இருக்கின்ற செல்வங்களை சுற்றம் மற்றும் நட்புகளுடன் சேர்ந்து அனுபவிப்பதில் கவனம் செலுத்தி மனநிறைவு காண்பது எளிதென்பதை புரிந்து கொள்ளுங்கள்.


தேடல் இல்லாமல் படைப்புக்கள் இல்லை;

இருப்பதை அனுபவிக்காமல் நிம்மதியில்லை;

இருப்பது போதுமா? தேடல் வேண்டுமா?

என்ற கேள்வி எல்லோருக்கும் வருவது இயல்பே!


தேடலும் வேண்டும் – அதேசமயம்

இருப்பதை உணர்ந்து அனுபவிக்கவும் வேண்டும்!

இரண்டுக்கும் மத்தியில்

எதற்கு எவ்வளவு நேரம் செவிட வேண்டுமென்பது உங்கள் கையில்!


உங்கள் மனநிறைவான வாழ்க்கைக்கு

எது சரியென்று நீங்களே யோசியுங்கள்!


- [ம.சு.கு 15.03.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page