top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-156 - போற்றலும், தூற்றலும் – இரண்டும் ஒன்றேதான்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-156

போற்றலும், தூற்றலும் - இரண்டும் ஒன்றுதான்!


  • உங்கள் துறைசார்ந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் தேர்தலில், 75% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் தேர்வுபெறுகிறீர்கள். சங்க உறுப்பினர்களின் பெருவாரியான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருப்பதற்கு பாராட்டுக்கள் குவிகின்றன. ஒருபுறம் பாராட்டு மழைபொழிந்தாலும், மறுபுறம் உங்களின் எதிரணிக்கு வாக்களித்த 25% உறுப்பினர்களில் சிலர் உங்கள் வெற்றி குறித்து அவதூர பேசவும் செய்கிறார்கள்.

  • அரசு பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர், தன் மாணவர்களின் கல்வியின்பால் அதீத கவனம் செலுத்தினார். ஆசிரியர்களின் செயல்பாடுகள், மாணவர்களின் வருகை மற்றும் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து அவ்வப்போது ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் செய்தார். நிகழும் தவறுகளுக்கு ஏற்ப, பெற்றோர்களை அழைத்து மாணவர்களை கண்டிக்கவும் செய்தார். தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதை போற்றும் ஆசிரியர்-மாணவர்களுக்கு மத்தியில், அவ்வப்போது சில எதிர்ப்புகளும் கிளம்பின. எவ்வளவுதான் போற்றுதற்குரிய வகையில் செயல்பட்டாலும், சிலரின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக தூற்றுவது தொடரத்தான் செய்தன!

எந்த ஒரு நிர்வாகப் பொறுப்பிற்கும், ஏகமனதாக தேர்வு செய்யப்படுவதற்கும், போட்டியில் ஒருவர் தோற்று மற்றவர் வெல்லும் சூழலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. போட்டிச் சூழலில் வெற்றிபெற்றால், உங்களை ஆதரிப்பவர்களோடு, எதிரணியினருக்கும் சேர்த்து நீங்கள் சங்கப் பொறுப்பேற்கிறீர்கள். நீங்கள் எது செய்தாலும் ஒரு கூட்டம் போற்றுவதும், அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி இன்னொருசாரார் தூற்றுவதும் தொடர்ந்து நிகழ்ந்தேறும்; போற்றுதலையும், தூற்றுதலையும் பெரிதுபடுத்தி எண்ணங்களை அலைபாய விட்டால், உங்கள் செயல்கள் ஒருதலை பட்சமானதாக மாறிவிடும். மாறாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட பணியின் மான்பிற்கிணங்க, போற்றல்-தூற்றல்களை சமமாக ஏற்று, பொது நன்மையை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டால், படிப்படியாக சில எதிர்ப்புகள் குறைய வாய்ப்பாகும்.

மாணவர்களின் கற்றலிலும், ஆசிரியர்களின் கற்பித்தலிலும் கவனம் செலுத்தி அவற்றை மேம்படுத்த தலைமை ஆசிரியர் எவ்வளவு ஆக்கபூர்வமான நோக்கில் உழைத்தாலும், ஒரு சில ஆசிரியர்களும், மாணவர்களும் அவற்றை எதிர்மறை கண்ணோட்டத்தில் பார்ப்பதை தவிர்க்க முடியாது. அப்படி எதிர்மறையாளர்களின் தூற்றல்கள் எப்போதும் ஒரு தொடர்கதைதான். தன் செயல்பாடுகளை மெச்சுபவர்களையும், அதே செயலை ஏசுபவர்களையும் பெரிதுபடுத்தி கவனத்தை சிதறடிக்காமல், செய்கின்ற பணியையும், வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி மேம்படுத்தினால், காலப்போக்கில் எதிர்மறையாளர்களும் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பாகும்.


நீங்கள் வாழ்வதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். எதைச் செய்தாலும் அவற்றில் சில நன்மைகளும், தீமைகளும் கலந்திருக்கும். இவருக்கு பிடிக்கும் என்று ஒன்றைச் செய்தால், அது மற்றவருக்கு பிடிக்காது. ஏதொன்றையும், எல்லோருமே ஏற்றுக்கொள்ளும் வகையில் செய்ய வேண்டுமானால், எனக்குத் தெரிந்தவரை நீங்கள் எதையும் செய்ய முடியாது. எதைச் செய்தாலும், ஒருவர் அங்கீகரிப்பதும், ஒருவர் எதிர்ப்பதும் தொடர்கதைதான்.

  • சாலைகளை விரிவுபடுத்த மக்கள் விரும்பினால், சாலையோர மரங்களை வெட்டித்தான் ஆகவேண்டும். சாலையை விரிவாக்கியதற்கு சிலர் நன்றி தெரிவிப்பார்கள். மரங்களை வெட்டியதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். நன்றிகளையும், எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாமல், சமுதாய நலனையும், இயற்கை வளத்தையும் கருத்தில் கொண்டு, ஒரு மரத்தை வெட்டியதற்காக, அந்தப்பகுதியில், 10 மரக்கன்றுகளை நட்டு வளர்கிறது;

  • பெண்ணின் செயல்பாடு சிறந்ததா? ஆணின் செயல்பாடு சிறந்ததா? என்று ஒரு பட்டிமன்றம் நடந்தது. இரு தலைப்பிற்கும் உரிய கருத்துக்களை வாதிடுபவர்கள் அடுக்கினாலும், இறுதியில் நடுவர் ஒரு தீர்ப்பை தந்துதான் ஆகவேண்டும். அவர் பெண்களுக்கு சாதகமாக சொன்னாலும், ஆண்களுக்கு சாதகமாக சொன்னாலும், இல்லை இருவருமே சமம் என்று சொன்னாலும், மக்கள் கருத்து வேறுபட்டுத்தான் இருக்கும். எல்லோருமே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு தீர்ப்பு இல்லை. சொல்லப்பட்ட தீர்ப்பு சூழ்நிலைக்கு ஏற்புடையதாக இருந்தாலும், மனித மனங்கள் அதை அப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அவரவர்கள் தங்களின் மனநிலைக்கும், ஆசைகளுக்கும் ஏற்ப தங்களின் ஆதரவுகளையும், எதிர்ப்புக்களையும் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் இட்லி செய்தால் ஒரு பிள்ளைக்கு பிடிக்கும், இன்னொரு பிள்ளைக்கு தோசை பிடிக்கும். மாவு ஒன்றென்பதால், நிலைமை இரு தோசை ஊற்றி சமாளிக்கலாம். தோசை வேண்டாம் பூரி வேண்டுமென்று ஒரு பிள்ளை அடம்பிடித்தால், காலை அவசரகதியில் சாத்தியமிருக்காது. ஒரே சமயத்தில் எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது. மற்றொரு நாள் பூரிசெய்து கொடுக்கவேண்டியதுதான்.


எதைச் செய்யும்போதும், ஆங்கீகாரமும், சிலபல எதிர்ப்புக்களும் வருவது இயல்பு. எந்த சூழ்நிலையிலும் நாம் சரியானதை மட்டுமே செய்கிறோமா என்பது தான் நாம் கவனம் செலுத்த வேண்டிய விடயம். ஒரு குறிப்பிட்ட குழுவின் ஆதரவிற்காக, ஒரு தலைபட்சமாக செயல்படுவது, இன்னொரு குழுவிற்கு செய்யும் துரோகாமாகிவிடும். பொது நலனுக்காக எதைச் செய்யும்போதும் போற்றல்களும், தூற்றல்களும் கலந்திருக்கும் சூழலில், நீங்கள் கவனிக்க வேண்டிய சிலவிடயங்கள்;

  • இருக்கின்ற சிக்கலான சூழ்நிலையில், என்ன பேசுகிறோம்? எப்படி நடந்துகொள்கிறோம்? என்கிற விடயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்;

  • உங்கள் செயல்கள் பலரால் போற்றப்படலாம்; அதேசமயம், ஒரு சிலருக்கு அது பிடிக்காமலும் போகலாம்; பிடிக்காதவர்கள் எதிர்வினையாற்றக்கூடும் என்பதை உணர்ந்து கவனமாக இருப்பது அவசியம்;

  • பிறருடைய செயல்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் போது, ஆக்கப்பூர்மான முறையில் அவர்கள் செய்த நன்மைகளையும் சொல்லி, குறைகளை சொல்லும்போது, அவை நேர்மறையாக ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பாகும்;

  • கூடியவரை, எதிர்மறையாளர்களுடன் எதிர்வாதம் செய்யாமல் தவிர்த்துக்கொள்வது மிகநல்லது;

நீங்கள் செய்வது சரியானதாகவும், பலருக்கு பயன்படும் ஆக்கப்பூர்வனாதுமாக இருக்குமானால், அவற்றோடு வரும் சில எதிர்ப்புக்களையும், தூற்றல்களையும் பெரிதுபடுத்தாமல் நீங்கள் தொடர்ந்து கவனமாக செய்து கொண்டே இருக்கவேண்டியதுதான்.


எதைச் செய்தாலும்

போற்றல்களும் தூற்றல்களும் கலந்து வரும்;

பயன் பெறுபவர் போற்றுவதும்

சுயநலவாதிகள் சிலர் தூற்றுவதும்

எங்கும் எப்போதும் தொடர் கதைதான்!


போற்றுதலையும், தூற்றுதலையும் பொருட்படுத்தாமல்

ஆக்கப்பூர்வமான செயல்களில் மட்டுமே கவனம்செலுத்தினால்

வளர்ச்சியும், வெற்றியும் வாழ்வின் அங்கமாகிவிடும்!


- [ம.சு.கு 14.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page