top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-154 - ஒன்றை நம்புவது (எ) ஒன்றை தெரிந்துகொள்வது!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-154

ஒன்றை நம்புவது (எ) ஒன்றை தெரிந்துகொள்வது!


 • பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்தும் போது பூமி உருண்டை என்று சொன்னால் மாணவர்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அதை அவர்களால் அந்த பிஞ்சு வயதில் சோதித்து அறிந்துகொள்ள முடியாது. அதே சமயம் (1+3=4), (0+4=4) & (2+2=4) என்று ஆசிரியர் கூறினால், அதை அவர்கள் எண்ணிக்கை உவமானத்தோடு ஒப்பிட்டு கற்றால், தெளிவான புரிதல் ஏற்பட்டு கணிதம் கைவசமாகும்;

 • உங்கள் ஜாதகத்தில் ஒன்பது கோள்கள் இருக்கின்றன, அதன் தற்போதைய நிலைகளைப் பொருத்துத்தான் உங்கள் வாழ்க்கை நகர்கிறதென்று ஒரு சோதிடர் சொன்னால் அப்படியே சிலர் நம்புகிறீர்கள்; ஒருசிலர் எதிர்வாதம் செய்கிறார்கள்; அதேசமயம் 9 கோள்கள் என்ன, எவ்வளவு தூரத்தில் இருக்கின்ற என்று அறிவியல் ஆய்ந்து சொன்னால், அவற்றிற்காண காரணத்தை புரிந்துகொண்டு எல்லோரும் ஏற்றுக்கொள்கிறீர்கள்; ஜாதகத்தை மட்டும் நம்பி ஆராயாமல் இருந்திருந்தால், இன்று வான்வெளி நம் கட்டுப்பாட்டில் வந்திருக்காது; ஜாதகத்தை நம்புவது உங்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் உங்கள் சக ஊழியரையும் கட்டாயப்படுத்தி ஜாதக்தை ஏற்றுகொள்ளச்சொல்வதில் நியாயமில்லை!

ஒரு குறிப்பிட்ட விடயத்தை ஆய்ந்தறிய, நமக்கு அப்போதைக்கு இருக்கும் அறிவும், நேரமும், பொருளும், இடமும் போதாமல் போகலாம்; அதனால் அப்போதைக்கு ஆசிரியர் மீதான நம்பிக்கையில் அதை ஏற்று குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர் அவர்கள் பெரியவரானதும், வாய்ப்பு கிடைக்கும்போது, அதை பற்றி சற்று தீவிரமாக சிந்தித்து தங்களின் நம்பிக்கை சார்ந்த புரிதலை மேம்படுத்திக்கொள்கின்றனர்; ஆனால் ஒரு சில சமயங்களில், நமக்கு முன்னர் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்து சிலசமயம் சிக்கலிலும் மாட்டிக்கொள்கின்றனர்;


ஜாதகத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து, இருக்கின்ற பொன்னையும் பொருளையும் இழந்து நிற்பவர்கள், ஆங்காங்கே சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அப்படியே நம்பினால், நாமும் பலவற்றை இழக்க நேரிடும்; ஏதோ அப்போதைய அவசரத்திற்கு சிலவற்றை ஆராயாமல் ஏற்றுக்கொண்டாலும், காலப்போக்கில், ஒவ்வொரு விடயத்திற்குமான காரண-காரியங்களை ஆராய்ந்து செயல்படுத்தினால், வெற்றிக்காண வாய்ப்பு பிரகாசமாகும்;


ஒன்றை தெரிந்துகொள்வதென்பது, அந்த விடயம், அந்த பொருள், அந்த இடம், அந்த நபர் குறித்து ஆய்வு செய்து, தீர விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்வதாக இருக்கும். அந்த விடயம் குறித்து நன்றாக அலசும்போது, அதன் சாதக-பாதகங்கள், இலாப-நட்டங்கள் குறித்து தெளிவாக தெரிந்து முடிவெடுக்க வாய்ப்பாகும். மேலும் அது ஆழமாக ஆராயப்பட்டுள்ளதால், அந்த தகவல், பொருள், மனிதர் குறித்த தகவல் முதல் தரமானதாகவும், திரிக்கப்படாமலும், நம்பகத்தன்மையுடையதாகவும் இருக்கும்;


எல்லாவற்றையும் ஒருவர் நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்வது சாத்தியமில்லை. அதேசமயம், ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல், எல்லாம் அதுவாக நடக்கட்டும் என்ற நம்பிக்கையில் விடுவது அடிமுட்டாள்தனம். மற்றவர்களின் கூற்றுக்களை போதுமான அளவு ஆராயாமல், அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்வது சிலசமயங்களில் அபாயகரமானதாகவும் போகலாம்; மற்றவர்களுக்கு நடந்துள்ளதுபோல தனக்கும் அது வெற்றிகரமாக நடக்கும் என்று எண்ணிக்கொண்டு இருப்பதும் ஆபத்தாகலாம்.

 • நீங்கள் மற்றவர்கள் சொல்வதை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல், முழுமையாக ஆராய்ந்து தெரிந்துகொள்ளும் போது, அந்த குறிப்பட்ட விடயம் / குறிப்பிட்ட செயலில் உள்ள தவறுகளை சரி செய்து வெற்றிகாண வாய்ப்பு அதிகரிக்கிறது;

 • நீங்கள் ஆராய்ந்து தெரிந்துகொண்ட விடயமென்றால் மிகவும் நம்பிக்கைக்குறியதாக இருக்கும்; உங்கள் பெற்றோர் / உறவினர் / நண்பர் சொன்னதன் பேரில் வைக்கும் நம்பிக்கையானால், கடைசி வரையில் இது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்நுகொண்டேதான் இருக்கும்;

 • ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்? என்ற கேள்விகளுக்கு தொடர்ந்து பதில்தேட முயற்சித்தால், அது யார் சொல்லியதாக இருந்தாலும், அவர்கள் மீது, அவர்கள் சொல்லிய விடயத்தின் மீதான நம்பிக்கை தெளிவான புரிதலாக மாறி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்;

 • நீங்கள் நம்பிய விடயத்தை பிறருக்கு சொல்வதற்கும், நீங்களாக ஆய்ந்து அறிந்துகொண்ட விடயத்தை மற்றவருக்கு சொல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நம்பிய விடயங்களில், நுணுக்கமான கேள்விகள் கேட்கப்பட்டால், உங்களால் பதிலளிக்க முடியாது. அதேசமயம், நீங்களாக ஆய்தறிந்த விடயத்தில் எந்த சோதனையையும் உங்களால் சந்தித்து சாதிக்க முடியும்;

 • உங்களின் நம்பிக்கையை மற்றவர்களும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, ஏனெனில் அந்த நம்பிக்கைகளுக்கு அறிவியல் சான்றுகள் காட்டமுடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் ஆய்ந்து தெரிந்து கொண்ட விடயத்தை, அறிவியல் பூர்வமாக விளக்கி பலரை ஏற்றுக் கொள்ளச் செய்ய வாய்ப்பதிகம்; உங்கள் புரிதலை உங்கள் குழுஏற்று உங்கள் பின்னால் பயனித்தால், உங்கள் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்;

 • ஆய்ந்து புரிந்துகொள்வது தான் சிறந்தது என்றாலும், நமக்கிருக்கும் குறைந்த நேரத்தில் எல்லாவற்றையும் நாமே ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். அவ்விடத்தில், நம் நம்பிக்கைக் குறியவர்களின் கூற்றுக்களை அப்படியே ஏற்று செயல்படுத்துவதன்றி வேறு வழியிருக்காது.

 • சிலவற்றை ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்காது. நாம் வீடுகட்டும்போது, பொறியாளர் சொல்லும் சில கட்டுமான விதிகளை அப்படியே ஏற்றுக்கொண்டு செய்யவேண்டியதுதான். அதை சோதித்துப் பார்க்கவோ, படித்து தெரிந்துகொள்ளவோ, போதுமான நேரம் இல்லாமலிருக்கலாம்;

 • நீங்கள் நம்புவதை உங்கள் துணையும் நம்பவேண்டுமென்ற எதிர்பார்த்தால் தேவையில்லாத மனக்கசப்புகள் வரும். அதேசமயம், நீங்கள் ஆய்ந்தறிந்தத புரிதலை உங்கள் துணை ஏற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புண்டு.

நீங்கள் மற்றவர் சொல்வதை அப்படியே நம்பி செயல்படுத்தலாம். அதே சமயம், யார் என்ன சொல்லியிருந்தாலும், நீங்களாக களத்தில் குதித்து ஏன்? எதற்கு? என்ற எல்லா கேள்விகளுக்கு விடைகண்டு மனத்திருப்தியுடன் செயல்படுத்தலாம். எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள், இப்போதைய நிலையை தற்காலிகமாக சமாளிக்க குறுகிய கால செயல்பாடென்ன? பிரச்சனைகளில் இருந்து விடுபட நீண்டகால நிரந்தர தீர்வு என்ன? என்று அலசிப்பார்த்து, நம்பிக்கைக்கும், புரிதலுக்குமான வேறுபாட்டை புரிந்து செயல்பட்டால், சூழ்நிலைக்கேற்ப சவால்களை சமாளித்து வெற்றிப் பாதையில் பயனிக்கலாம்;


மற்றவர்கள் சொல்வதை அப்போதைக்கு நம்பி செயல்படுத்தினாலும்

காலத்திற்கும் அப்படியே அதே நம்பிக்கையில் இருந்துவிடாதீர்கள்;


நேரம் கிடைக்கும்போதெல்லாம்,

உங்களின் எல்லா நம்பிக்கைசார்ந்த விடயங்களையும்

ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக்கேட்டு

ஆய்ந்து அறிந்து கொள்ளுங்கள்;


நீங்களாக ஆய்ந்து அறிந்துகொள்ளும் விடயம்

எவ்வளவு கடினமானதாக இருந்தாலும்

அது நிரந்தர அறிவாக உங்களுக்குள் வளர்ந்துகொண்டிருக்கும்;


பிறர் சொல்லியதை நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு

அந்த விடயம் எவ்வளவு எளிதானதாக இருந்தாலும்

அதைப்பற்றிய புரிதலே இல்லாமல் இயந்திரமனிதனாக இயங்கும்;


பிறர் மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில்லை!

ஆனால் பிறர் மீதான நம்பிக்கையை மட்டுமே பிரதான வாழ்க்கையாக்கிவிடாதீர்கள்;- [ம.சு.கு 12.03.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Opmerkingen


Post: Blog2 Post
bottom of page