top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-152 - ஓய்வெடுப்பது முக்கியம்..!"

Updated: Mar 11, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-152

ஓய்வெடுப்பது முக்கியம்!!


  • பொது தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவன், எல்லா பாடங்களையும் பலமுறை நன்றாக படிப்பதும், எழுதி பயிற்சி செய்வதுமாக கடுமையாக உழைத்தான். இரவு-பகல் பாராது கண் விழித்து நன்கு படித்து வந்த மாணவன், தேர்விற்கு முந்தைய நாள், மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மூன்று நாள் தீவிர சிகிச்சைக்குப்பிறகே வீடு திரும்பினான். அவன் கஷ்டப்பட்டுப் படித்தும், தேர்வுக்கு போகமுடியாததால், அந்த கடினமான முயற்சி பயனற்றுப்போனது. கஷ்டப்பட்டு படித்தால்தான் வெற்றிபெற முடியும் என்பது உண்மை வாக்கானாலும், அளவுகடந்ததால் அந்த கஷ்டப்பட்ட முயற்சியே தோல்விக்கு வழிவகுத்துவிட்டது!

  • 24 மணிநேரம் தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகளில், ஊழியர்கள் மூன்று முறைவேளைகளில் (ஷிப்ட்) பணிக்கு வந்து போவார்கள். வழக்கமாக 8 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்கள், அடுத்த முறைவேளை ஊழியர் யாரேனும் விடுப்பெடுத்தால், கூடுதலாக 8 மணிநேரம் பணிசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அப்படி கூடுதல் பணியாக இரவு 10 மணிப்பணியை ஏற்று செய்த ஊழியர் ஒருவர், நள்ளிரவு உறக்க கலக்கத்தில் இயந்திரத்தில் தன் கையை சிக்கவைத்து ஒரு கையை முற்றிலுமாக இழக்க நேரிட்டது. உடன் இருந்த ஊழியர் சீக்கிரமாக இயந்திரத்தை நிறுத்தியதால், பாதிப்பு கையளவில் நின்றது. இல்லாவிட்டால் உயிரே போயிருக்கக்கூடும். ஓய்வின்றி எதற்கிந்த விஷப்பரீட்சை!

போதுமான அளவு ஓய்வெடுக்காமல் கஷ்டப்பட்டால், உடல் நிலை ஒத்துழைப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. உடல் நிலையும், மனநிலையும் ஒத்துழைக்காவிட்டால், அந்த குறிப்பிட்ட தேர்வுநாளில் அவர்களால் சரிவர செயல்பட முடியாமல், அதுவரை பட்ட கஷ்டம் அனைத்தும் வீணாகப்போய்விடும். தேர்விற்கு முந்தைய நாட்களில் சரிவர தூங்காமல் படித்துவிட்டு, தேர்வு அறையில் சிலமாணவர்கள் தூங்கிவிட்ட கதை நிறைய நிகழ்கிறது. நல்ல மதிப்பெண் பெற மிகவும் கஷ்டப்பட்டு படிக்கவேண்டும். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும். உடல்நிலையும், மனநிலையும் ஒத்துழைக்கும் வண்ணம், ஆரோக்கியத்தை காத்து, முயற்சித்தால், அந்த முயற்சி பயன்தரும். இல்லாவிட்டால், தேர்வு அறையில் தூங்கிய கதைதான் நிகழும்!!


எவ்வளவுதான் அனுபவம் வாய்ந்த, கைதேர்ந்த ஊழியராக இருந்தாலும், உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்காவிட்டால், எண்ணமும் செயலும் கட்டுப்பாட்டில் இருக்காது. அவ்வப்போது தூக்க கலக்கம் உங்கள் செயல்பாடுகளை பாதித்து பெரிய சிக்கலில் சிக்கவைத்துவிடும். இயற்கை முறைமைகளை உங்களால் முற்றிலுமாக மாற்றிவிடமுடியாது. ஒருநாள் தூங்காமல் இருந்தால், மறுநாள் நீங்கள் எங்கு உட்கார்ந்தாலும் அப்படி தூங்கிவிடுவீர்கள். அப்படியே வேலைசெய்தால், தவறுகள் நேர்வதற்கான வாய்ப்பு அதிகம். உங்களின் சிந்தனைத்திறனும் உறக்கமின்மையினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும். அச்சமயத்தில் உங்களால் நன்கு யோசித்து முடிவெடுக்க முடியாது. அதையும் மீறி முடிவெடுத்தால், அதிலும் தவறுகள் நேர்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.


மென்பொருள் நிறுவனம், அதன் புதிய மென்பொருள் சோதனை ஓட்டத்தின்போது நிறைய சிறுசிறு தவறுகளை களையவேண்டியிருந்தது. வெகுசாதாரணமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த தவறுகள், ஏன் அடிக்கடி நிறைய நிகழ்கின்றன என்பது குறித்த ஒரு சிறுஆய்வு நடத்தப்பட்டது. எல்லோரும் ஊழியரின் அனுபவக்குறைவே காரணமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், இந்த சிறுசிறு தவறுகளுக்கான முக்கிய காரணம் ஊழியர்களின் அதீத மனஅழுத்தமும், போதுமான ஓய்வின்மையுமே காரணம் என்று அறிக்கை சமர்பிக்கப்பட்டது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. குறிப்பாக அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள், நிறைய சிறுதவறுகள் செய்திருப்பது இதை உறுதிப்படுத்தி இருந்தது.


போதுமான அளவு ஓய்வெடுக்க நாம் தவறும்பட்சத்தில்

  • தனிநபருடைய உற்பத்தித்திறனும் / படைப்பாற்றலும் வெகுவாக பாதிக்கிறது;

  • ஓய்வின்றி அளவிற்கு அதிகமாக உழைத்துக் கொண்டிருக்கும்போது, சிந்தனைத்திறன் குறைந்து, முடிவெடுப்பதில் தாமதங்களும், தவறுகளும் நிகழ்கின்றன;

  • போதுமான ஓய்வின்றி பயிற்சி செய்து, கடைசி கட்டத்தில் களைத்துப்போய் நிற்பதால் போட்டியில் பெரும் பின்னடைவு எற்பட்டுவிடுகிறது;

  • அன்றாட வழக்கமான நேரத்தில் உறங்கச் செல்லாமல் நேரம் மாற்றினால், சரியான உறக்கமில்லாமல் பாதிக்கப்படுகின்றனர்;

  • போதுமான அளவு உறக்கமில்லாதவர்களின் எடை அதிகரிக்கிறது;

  • தொடர்ந்து ஓய்வின்றி உழைப்பது, அதீத மனஅழுத்தத்தையும், மனஉளைச்சலையும் அதிகப்படுத்துகிறது;

உடல் உழைப்பிற்கும், மனஉளைச்சலுக்கும் ஏற்ப, போதுமான ஓய்வெடுக்க வேண்டும். அதேசமயம் எதற்கெடுத்தாலும் ஓய்வெடுக்கிறேன் என்று போய் அமர்ந்துகொண்டால், அப்பொழுதும் உற்பத்தி பாதிக்கும். ஒருநாளைக்கு 6-8 மணி நேர உறக்கம் இருப்பது அவசியம் என்று அறிவியல் கூறுகிறது. உங்கள் உடலுக்கு எவ்வளவு ஏற்புடையதென்று உங்களுக்குத்தான் நன்றாக தெரியும். சீராக ஒவ்வொரு நாளும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி-எழுந்தால் உடலும், மனுமும் ஆரோக்கியமாக இருக்கும்;


உங்கள் உற்பத்தித் திறனை, படைப்பாற்றலை, நினைவாற்றலை, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய முக்கிய காரணியான “போதுமான அளவு ஓய்வு” என்ற விடயத்தை, இந்த அவசர யுகத்தில் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் நமக்கு முன்னே இருக்கும் பெரிய சவால்.

  • அன்றாடம் தொலைக்காட்சி, கைபேசியில் இரவில் நேரம் செலவிடுவதை குறைத்து, குறித்த நேரத்தில் உறங்கச் செல்லுங்கள். அதை உங்கள் குடும்பத்தின் பழக்கமாக்குங்கள்;

  • படைப்பாற்றல் சிறப்புற மனஅமைதி தேவை. மனஅமைதிக்கு, போதுமான ஒய்வுடன், மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் நல்ல உறுதுணையாக இருக்கும்;

  • ஓய்வின்றி உடலைவருத்தி சம்பாதித்து மருத்துவரிடம் அந்தப் பணத்தை செலவிழிப்பதைவிட, அளவோடு உழைத்து மனநிம்மதியோடு வாழ்வது சிறந்தது.

உங்கள் உடலை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, ஆரோக்கியத்தோடும், மனநிம்மதியோடும் வாழவேண்டும் என்று விரும்பினால், உங்கள் உடலைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். எப்போது ஓய்வு கட்டாயம் தேவை என்பதை உங்கள் உடலே உங்களுக்கு அறிகுறிகள் காட்டும். அவற்றை உணர்ந்து கவனமாக செயல்படுங்கள். அதீதமாக உங்கள் உடலை வருத்தினால், கடைசியில் காலமெல்லாம் வருந்தவேண்டிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படக்கூடும்.


வாழ்வில் நிம்மதியான உறக்கமென்பது ஒரு வரம்;

அதேசமயம் கேட்பார் யாருமில்லை என்று

எப்பொழுது பார்த்தாலும் தூக்கமும் ஓய்வுமாக இருந்தால்

ஆரோக்கியம் குன்றி அசௌகர்யமே வாழ்க்கையாகிவிடும்;


வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் – அதேசமயம்

உழைப்பதற்கு நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்;

வெற்றியை கொண்டாடவும் அனுபவிக்கவும்

நீங்கள் இல்லாவிட்டால், அந்த வெற்றியால் பயன் என்ன?


உடலை வருத்தினால் தான் வெற்றி காண முடியும்;

ஆனால் எந்த எல்லை வரை வருத்துவது என்று தெரிந்திருக்க வேண்டும்!

அளவிற்கு அதிகமாக பயிற்சிசெய்து காயம் ஏற்படுத்திக்கிடந்தால்

முக்கிய போட்டியில் விளையாட நீங்கள் இருக்க மாட்டீர்கள்!

அதேசமயம் போதுமான பயிற்சியில்லாவிட்டால்

உடல் சோம்பேறித்தனத்தில் ஊறித்திளைத்துவிடும்;


நல்ல ஓய்வெடுத்து பின் விடியும்

ஒவ்வொரு நாளும் நல்ல நாள்தான்;

போதுமான அளவு ஓய்வு

ஆக்கத்தையும் அறிவையும் வளர்க்க உறுதுணையாகும்;



- [ம.சு.கு 10.03.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page