top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-150 - வாங்கும் விலை முக்கியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-150

வாங்கும் விலை முக்கியம்!


  • விலையுயர்ந்த ஆப்பிள் நிறுவன கைப்பேசியை ஒரு வயதான பெண்மணி வைத்திருந்தார். அதை ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகமான விலை கொடுத்து வாங்கியுள்ளார். அந்த கைப்பேசியில் உள்ள அம்சங்களைக் கொண்டு பல வேலைகளை செய்யலாம். ஆனால் அவருக்கு அதை வெறும் தொலைபேசி அழைப்பிற்கு மட்டுமே பயன்படுத்தத் தெரியும். அதிலும் அதில் உள்ள எழுத்துக்கள் சிறிதாக இருக்கிறதென்று ஒரு குறைவேறு சொன்னார். வெறும் அழைப்புக்களை பேச மட்டுமே தேவையென்றால், அவ்வளவு விலை கொடுத்து எதற்கு அந்த ஆப்பிள் கைப்பேசி வாங்க வேண்டுமென்று புரியவில்லை.

  • கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட இடம் விற்பனைக்கு வந்தது. அதன் அப்போதைய சந்தை விலை 50 இலட்சமாக இருந்தது. கடைத்தெருவில் இருந்ததால், அதை வாங்க சற்ற போட்டி இருந்தது. அதனால், விலை 55-60 இலட்சம் வரை போகுமென்று எதிர்பார்த்தனர். அந்த உரிமையாளருடன் ஏற்பட்ட ஒரு கௌரவ பிரச்சனைக்காக, அந்த இடத்தை வாங்கியே தீரவேண்டுமென்று ஒருவர் போட்டிபோட்டார். அதேசமயம், அந்த இடத்திற்கு அருகில் கடைவைத்திருப்பவரும் போட்டிபோட்டார். இறுதிவிலை 1 கோடியில் முடிந்தது. கௌரவ பிரச்சனைக்காக அந்த விலை கொடுத்து அதை வாங்கினார். ஆனால் பயன்பாடு என்ன? சிறிது காலத்திற்குபின், அதை 80 இலட்சத்திற்கு பக்கத்து கடைகாரருக்கு அவரே விற்றார். ஏன் இந்த தேவையற்ற போட்டி? யாரால் யாருக்கு இலாபம்?

வயதானவர்கள் பயன்படுத்துவதற்கு எளிதாய் சில கைப்பேசி வடிவமைப்புக்கள் சந்தையில் விற்கப்படுகிறது. அந்த கைப்பேசிகளை வாங்கிப்பயன்படுத்தினால், எளிதாக இருக்கும். ஆனால், ஏனோ மக்கள் பகட்டிற்காக பயன்படுத்த சிரமமாக இருக்கும் பொருட்களை வாங்கி அல்லல்படுகின்றனர். பொருட்களை பகட்டிற்காக வாங்காமல், அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப வாங்கினால், பொருள் விரையும் குறைவதுடன், பயன்படுத்த எளிமையாகவும், உதவியாகவும் இருக்குமே!


எந்த ஒரு பொருளையும் போட்டியிலோ / ஏலத்திலோ எடுக்கும்போது, அந்தப் பொருளினால் நமக்கு என்ன பயன் இருக்கிறதோ, அதைப் பொருத்துத்தான் விலை கொடுக்க வேண்டும். கடைத் தெருவில் உள்ள பக்கத்து இடத்தை வாங்கினால் எளிதாக தன் கடையை விரிவாக்கம் செய்யலாம் என்பதற்காக, பக்கத்துக் கடைக்காரர் 20-30% அதிக விலை கொடுத்த வாங்க தயாராக இருப்பார். ஆனால் புதிதாக வந்து வாங்குபவருக்கு அந்த 20%-30% கூடுதல் விலையென்பது கட்டுபடியாகாத ஒன்றாக இருக்கும். அவ்விடத்தில், தேவைக்கு அதிகமாக போட்டியிட்டு அதிகவிலை கொடுப்பதில் புதியவருக்கு நஷ்டம்தான்.


எந்தப் பொருளையும் வாங்கும் போது, அதன் தேவைக்காக மட்டும் வாங்குங்கள். உங்களின் பகட்டிற்காகவும், கௌரவத்திற்காகவும் வாங்கி தேவையில்லாமல் பணத்தை விரயமாக்காதீர்கள். உங்களிடம் ஏழேழு தலைமுறறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவு செல்வம் இருந்தாலும், தேவையற்றதை வாங்கி வீணடிப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாக நீங்கள் வாங்கிவிட்டால், மற்றொருவருக்கு அது கிடைக்காமல் போகிறது.


மேலும், வாங்கும் பொருளுக்கு, எவ்வளவு பணம் கொடுக்கிறோம்? என்கிற விடயத்தில் நீங்கள் வெகுகவனமாக இருக்கவேண்டும். குறைவாக கிடைக்கப்போகும் பொருளை அவசரப்பட்டு அதிக விலை கொடுத்து வாங்கினால், நீங்கள் தான் முட்டாள்!

  • பெரிய நடிகரின் திரைப்படம் வெளியான வாரத்தில் அதன் நுழைவுச்சீட்டு ரூ.1000/-. அடுத்த வாரம், நுழைவுச் சீட்டின் விலை ரூ.150/-, கூட்டமும் குறைவு! எதை தேர்வுசெய்வது புத்திசாலித்தனம்?

  • புதிய கைப்பேசி வெளியான அன்று வாங்கினால் ரூ.75,000/-. மூன்று மாதங்கள் கழித்து அதே நிறுவனம் அந்த கைப்பேசியை ரூ. 60,000/-க்கு விற்கிறது. எப்போது வாங்குவது நல்லது?

ஒரு பொருளை வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியது என்ன?

  • உங்களுக்கு உபயோகமில்லாத பொருளென்றால், அது இலவசமாகவே கிடைத்தாலும், அதை எடுத்து வந்து வீட்டில் வைப்பது உங்களுக்குத் தான் நஷ்டம். அது தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கிடக்கும்;

  • ஒரு முறை உபயோகத்திற்கு மட்டுமே போதும் என்கிற பட்சத்தில், அதிக விலை கொடுத்து அதை வாங்குவதற்கு பதிலாய், வாடகைக்கு கிடைத்தால் எடுத்து உபயோகித்து விட்டு திருப்பிக்கொடுத்து விடலாமே;

  • நீண்டகாலம் வைத்து உபயோகிக்க வேண்டிய பொருளென்றால், விலை மலிவான பொருளை வாங்கி அல்லல்படுவதை விட, நல்ல உயர்ந்த தரமுடைய பொருளாய் பார்த்து வாங்கி பயன்படுத்தினால், நிம்மதியாய் இருக்கும்;

  • குறிப்பிட்ட காலத்திற்குள் உபயோகித்து முடிக்க வேண்டிய பொருளென்றால், ஒருவேளை உங்களால் முழுதும் பயன்படுத்த முடியாதென்றால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து உபயோகிக்கும் போது, அந்த பொருளின் விலை பலாரல் பகிர்ந்து கொள்ளப்படுகிறது;

  • தொழில்நுட்பம் மாறிக்கொண்டிருக்கும் பொருட்களில், கூடியவரை புதிய தொழில்நுட்ப வரவை வாங்குங்கள். பழைய தொழில்நுட்பப் பொருளை வாங்கினால் சீக்கிரத்தில் மாற்றவேண்டிய தேவை ஏற்படும்;

  • நாட்கள் செல்லச்செல்ல விலையேறும் விமான கட்டணங்கள் விடயத்தில், நீங்கள் சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும். காலவிரயத்திற்கு ஒருவிலையுண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்;

  • அதேசமயம், நாட்கள் செல்லச்செல்ல விலை குறையும் தொழில்நுட்ப பொருட்கள் விடயத்தில், அத்தியாவசியத்தேவை வரும்வரை காத்திருந்து வாங்கினால், குறைவான விலைக்கு வாங்கலாம்;

விலையுயரந்து பொருட்களோ, விலை குறைவான பொருட்களோ, எதை வாங்கவதானாலும், உங்களுக்கு நீங்கள் கேட்டு திருப்பதிபடுத்திக் கொள்ளவேண்டிய கேள்விகள்;

  • எதை வாங்குகிறோம்? / எதற்காக வாங்குகிறோம்?

  • என்ன விலை கொடுத்து வாங்கிறோம்? / விலைக்கேற்ற தரம் இருக்கிறதா?

  • அதன் தேவையும் உபயோகமும் என்ன?

  • அந்த பொருளில்லாமல் அந்த தேவையை சமாளிக்க முடியாதா?

இதற்கான விடைகள் தெளிவாக இருந்தால், நீங்கள் திருப்தியடைந்தால், தைரியமாக வாங்கலாம். இதற்கு விடை தேடுகிறேன், பல பொருட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குகிறேன் என்று முடிவெடுக்க காலம் தாழ்த்திக் கொண்டிருந்தால், அந்த காலவிரயத்திற்கும் ஒரு விலையுண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.


வாங்கும்போது - தேவை / விலை / தரம்

மூன்றையும் கவனித்து வாங்குங்கள்!

அத்தியாவசியத் தேவைகளுக்கு விலை கொடுக்கலாம்!

அவசரத் தேவைகளுக்கு விலை கொடுக்க யோசிக்க வேண்டும்!

அவசியமில்லாதவற்றை இலவசமாகக்கூட வாங்கிவிடக் கூடாது!!


நூறு ரூபாய் விலை குறைவாக வாங்குவது திறமையல்ல!

ஏனெனில் அதில் ஒருவர் நஷ்டப்பட்டிருப்பார்!

கொடுத்த விலையைக் காட்டிலும் அதிகமாக

பொருளை பாதுகாத்து பயன்படுத்துவதுதான் திறமை!

ஏனெனில் இங்கு இருவருக்கும் இலாபம் இருக்கும்!


வாங்கிய பொருளின் பயன்பாட்டின் மீது கவனம் செலுத்துங்கள்!

அடுத்த முறை என்ன விலைக்கு வாங்கவேண்டுமென்பதில்

நீங்கள் வல்லுனராகிவிடுவீர்கள்!!


- [ம.சு.கு 08.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

コメント


Post: Blog2 Post
bottom of page