top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-148 - கடன் – வளர்ச்சிக்கா? வீழ்ச்சிக்கா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-148

கடன் - வளர்ச்சிக்கா? வீழ்ச்சிக்கா?


  • உங்களிடம் 10,000 ரூபாய் இருக்கிறது. ஒரு பொருளை வாங்கி வியாபாரம் செய்ய கூடதலாக 5000 தேவைப்படுகிறது. மாதம் 2% வட்டிக்கு வாங்கி வியாபரம் செய்கிறீர்கள். வியாபாரம் ஓரளவிற்கு செல்லும்போது வட்டி கட்டி விடுகிறீர்கள். வியாபாரம் நன்றாக சென்றால், வட்டியுடன் கடனையும் உங்களால் எளிதில் அடைக்க முடிகிறது. ஒரு வேளை பெரிய நஷ்டம் ஏற்பட்டால், இருப்பதை விற்று 5,000 ரூபாய் கடனை அடைத்துவிட்டு, உங்கள் முதலீடு 10,000 நஷ்டத்துடன் தப்பிவிடுகிறீர்கள். அதே வியாபாரத்தில் ஒருவேளை உங்கள் பணம் 10,000-ம் ஆகவும், கடன் தொகை 50,000/- ஆகவும் இருந்து, பெரிய நஷ்டம் ஏற்பட்டால் நிலைமை என்ன ஆவது?

  • கிராமத்தில் இருந்து 20,000/- பணத்துடன் நகரத்திற்கு வந்து, 5 இலட்சம் மதிப்புடைய சரக்கேற்றும் வாடகை வண்டி ஒன்றை கடனுக்கு வாங்கி, அயராது உழைத்து, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு முதலாளியாக ஒவ்வொரு ஊரிலும் ஒருசில வெற்றியாளர்கள் இருக்கிறார்கள். அதேசமயம், அளவிற்கு அதிகமாக கடன் வாங்கி, ஆடம்பரச் செலவு செய்து நடுத்தெருவில் நிற்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சொந்தப்பணம் 2-3 மடங்காகவும், கடன் 1 மடங்காகவும் இருக்கும்போது, நிலைமை வேறு. அதேநிலை எதிர்பதமாக இருக்கும்போது, நிலைமை வேறு ! கடன் குறைவாக இருந்தால், நஷ்டமான சூழ்நிலையிலும் கடனை அடைத்து வேறு வேலைக்கு செல்லலாம். மாறாக கடன் உங்களின் சொத்துக்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் திவால் சூழ்நிலைதான். யதார்த்தத்தில், அப்படிப்பட்டதொரு நிலையில், பலர் செய்கின்ற தவறு, அந்த வீழ்ச்சியை ஏற்று சொத்துக்களை விற்று முடிந்தளவு கடனை அடைப்பதற்கு பதிலாய், வியாபாரத்தில் எப்படியும் சம்பாதித்து எல்லாவற்றையும் அடைத்துவிடலாம் என்று மேலும் அதிக வட்டிக்கு கடனை வாங்கி, போராடுகின்றனர். விளைவு, தன் காசு போனது போக, தன்னை நம்பி கடன் கொடுத்தவர்களின் பணமும் சேர்ந்து நஷ்டமாகிறது. கடனுக்கு எல்லை இருக்கவேண்டும் என்று நன்கு தெரிந்திருந்தாலும், ஏனோ பலர் அதை கண்டுகொள்ளாமல், அதிக வட்டிக்கு வாங்கி சிக்கி சீரழிகின்றனர்.


வாகனங்களை கடன் பட்டு வாங்கினாலும், கண்ணும் கருத்துமாக வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி, படிப்படியாய் வெற்றிகாண்டார்கள். ஒரு வாகனம் இருந்த இடத்தில், 100 வாகனம் வந்தது. கடனை அளந்து வாங்கி, தொடர்ந்து கண்கானித்து, நிதி நிர்வாகத்தை திரம்பட கையாண்டவர்கள், வளர்ச்சியின் பாதையில் வெகுவேகமாக சென்றார்கள். அதே போல, கடனுக்கு வாகனத்தை எடுத்து, சரிவர வாடிக்கையாளர் சேவை செய்யாமல், தொடர்ந்து நஷ்டப்பட்டு அந்த வாகனத்தை கடன்கொடுத்தவரிடம் பரிகொடுத்த கதைகளும் ஏராளம்.


வியாபாரத்தில், மூலதனம் இருந்தால் தான் வியாபாரம் செய்ய முடியும். மூலதனம் நிறைய இருந்தால், பொருட்களை பெரிய அளவில் வாங்கி வியாபாரம் செய்யலாம். அதிக மூலதனம் இல்லாதவர்கள், அதற்காக வங்கியிலும், தெரிந்தவரிடத்திலும் கடன் வாங்கி வியாபாரத்தில் முதலீடு செய்கின்றனர். வியாபாரம் சூடுபிடித்ததும், வருகின்ற இலாபத்தில் கடனை எளிதாக அடைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். நன்றாக செல்லும் வியாபாரத்தில், எல்லோரும் எல்லா கடனையும் அடைத்து விடுகிறார்களா? பெரும்பாலும் இல்லை! வியாபாரம் நன்றாக செல்கின்ற இடத்தில், தைரியமாக மேலும் கடன் வாங்கி கிளைகள் அமைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துகின்றனர். இலாபத்தில் கடனை அடைப்பதற்கு பதிலாய் சொத்துக்களை வாங்கி, அதே சொத்தை அடமானம் வைத்து இன்னும் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவாக்குகின்றனர்.


இந்த கடன் சக்கரம், ஒரு நாள் வியாபாரம் மந்த நிலை ஏற்படும் போது, தன் சுயரூபத்தை காட்டத் துவங்குகிறது. கடினமான காலங்களுக்காக சிறிது நிதியை ஒதுக்கி வைத்தவர்கள் சமாளித்து தப்பித்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் முதலீடு செய்து கையில் ரொக்கமில்லாமல் இருப்பவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அக்கணம் சிக்கலின் தீவிரத்தை உணராமல், அதிக வட்டிக்கு இன்னும் கடனை வாங்கி தொடர்கின்றனர். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என்று கடன் பெருகிக்கொண்டே போய், ஒருநாள் திவாலாகி நிற்கிறார்கள்.


வியாபாரத்தில் நஷ்டம் எற்படுவதனால் வரும் பாதிப்பை விட, வாங்கிய கடனுக்கு எப்படி வட்டிகட்டுவது, எப்படி திருப்பிச் செலுத்துவது என்ற சிந்தனையில்தான் பல விபரீத முடிவுகளை சிலர் எடுத்து விடுகின்றனர். எதற்கு, யாரிடம், எவ்வளவு கடன் வாங்கவேண்டுமென்ற வரையரை இல்லாமல் வாங்கி, நஷ்டப்பட்டு விடுகின்றனர். வாங்கிய கடனை அடைப்பதற்காக, காலமெல்லாம் ஓயாது உழைத்து வட்டிகட்டிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் கடன் உங்களை வாழவும் விடாது, சாகவும் விடாது!


கடன் வாங்குவதற்கு முன் கட்டாயம் யோசிக்க வேண்டிய விடயங்கள்;

  • எதற்காக வாங்குகிறோம்? எவ்வளவு வாங்குகிறோம்?

  • வாங்கிய கடனுக்கான வட்டிவிகிதம் எவ்வளவு?

  • எதை அடமானம் வைத்து வாங்குகிறோம்?

  • திருப்பிச் செலுத்த போதுமான வருவாய் இருக்கிறதா?

  • திருப்பி செலுத்த முடியாதுபோனால், விளைவு என்ன?

  • கடன் வாங்காமல் சமாளிக்க வேறு வழி இருக்கிறதா?

இத்தனை கேள்விகளுக்கும் விடை தெளிவாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஆழம் தெரியாமல் கிணற்றில் காலைவிடும் பரிதாப நிலைதான்!


உங்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்க

நிறைய பேர் இருக்கலாம் – ஆனால்

உங்களால் திருப்பிகட்டமுடியுமா என்று பாருங்கள்!


சரியான வியாபார திட்டம்

ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் திட்டம்

போட்டிகளை சமாளிக்கும் திட்டம இல்லாமல்

கிடைக்கிறதே என்று கடனை வாங்கி

வியாபாரத்தில் முதலீடு செய்தால்

ஆயிரத்தில் ஒருவராய் வெல்வதற்கு பதிலாய்

ஆயிரத்தோடு ஒருவராய் கடனில் மூழ்கி

குடும்பத்தோடு கஷ்டப்பட வேண்டியதுதான்;


வருவாய் இல்லாமல் கடன் வாங்காதீர்கள்;

திருப்பிச் செலுத்த வழியிருக்காது!

இருக்கின்ற சொத்திற்கு மீறி கடன் வாங்காதீர்கள்;

எந்தக் காலத்திலும் வெளிவர முடியாது;


வியாபாரத்திற்கும், வீடுகட்டவும்,

அளவோடு கடன்பட்டு

வளமாக வளர்ந்தவர்களுக்கு மத்தியில்

அளவிற்கு மீறி கடன்பட்டு

அழிந்துபோனாவர்கள் ஏராளம்!


ஞாபகத்தில்கொள்ளுங்கள் - அளவிற்கு மீறினால்

கடன் - வாழவும் விடாது ! சாகவும் விடாது !


- [ம.சு.கு 06.03.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page