top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-145 - சமயத்தில் இழப்பைத் தடுப்பதும் வெற்றிதான்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-145

சமயத்தில் இழப்பைத் தடுப்பதும் வெற்றிதான்!


  • மிகப்பெரிய வாகன விபத்து பாதிக்கப்பட்ட பல நபர்களை மிகவும் கவலைக்கிடமான நிலையில் பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு வருகிறார்கள். பலருக்கு கை-கால்கள் நசுங்கி, இரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது. அந்த சமயத்தில் அதீதமாக பாதிக்கப்பட்டவர்களின் கை-கால்களை அவசர சிகிச்சையில் அகற்றி, அவர்களின் உயிரை காக்க மருத்துவர்கள் அதிவேகமாக முடிவெடுத்த வேலை செய்ய வேண்டும். இருக்கின்ற மருத்துவ வசதிகளைக் கொண்டு அப்போதைக்கு எல்லா உயிர்களை காப்பதை பிரதானப்படுத்தி, கையை அற்றினால், காலை அகற்றினால் அவரால் இயல்பாக வாழமுடியுமா, அவரால் தொழில் செய்யமுடியுமா? என்று அப்போதைக்கு ஆராய்ச்சி செய்யாமல், உயிரை காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை செய்வார்கள்.

  • வியாபாரம் நன்றாக செயல்படும்போது, அதை விரிவுபடுத்தும் நோக்கில் வங்கியில் கடன் பெற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். பெரிய நிறுவனங்களின் முதலீடு-கடன் விகிதத்தை பார்த்தால், சொந்த முதலீட்டைவிட 2-3 மடங்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தியிருப்பார்கள். வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடந்துகொண்டிருக்கும் போது, கடன்களுக்கான வட்டியும் முதலும், படிப்படியாக திரும்ப செலுத்தப்பட்டு வரும். வியாபாரத்தில் வழக்கமான மந்தநிலை ஏற்படும்போது இவைகளை செலுத்த சற்று காலதாமதமாகும். ஒருவேளை வியாபாரத்தில் பெரிய இழப்புக்கள் ஏற்படும்போது, மேலும் கடன் வாங்கி சமாளிப்பது நல்லதா? அல்லது வியாபாரத்தை நிறுத்துவது நல்லதா? நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?

மருத்துவத்துறையில், அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவது ஒருவகையில் மிகக் கடினமான வேலை. இங்கு நீங்கள் சரியான முடிவை சீக்கிரமாக எடுக்க வேண்டும். பலரிடம் கலந்தாலோசிக்க போதுமான நேரமிருக்காது. நீங்கள் எடுக்கும் முடிவு, விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காக்கப்போகிறது. அதே சமயம் கை-கால்கள் அகற்றப்பட்டால் அவரது இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும். இங்கு இரத்தப்போக்கை கட்டுப்படுத்தி, பாதிக்கபட்ட உறுப்பை அகற்றுவது அவரது உயிரைக்காக்கும் என்றால், அதை சீக்கிரமாக முடிவெடுத்து செய்வதுதான் அங்கு மிகப்பெரிய வெற்றி!


நிறைய சிறு வியாபார நிறவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள், சில வருடங்களிலேயே மூட்ப்பட்டு விடுகின்றன. அவைகள் சிலவற்றில், அதை நடத்தியவர்கள் பெரிய கடனாளியாகி சிக்கலில் தவிப்பதையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வியாபாரம் நன்கு நடக்கும்போது, கடன் சுமை தெரிவதில்லை. ஒருவேளை வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடக்காவிட்டால், ஒரு புறம் பொருட்கள் தேங்கி பாதிக்கப்படும், மறுபுறம் வாடகை, வட்டி, ஊழியர் சம்பளம் என்று செலவு நிகழ்ந்துகொண்டே இருக்கும். இவற்றை சமாளிக்க மேலும் கடன் வாங்கினால் மீண்டும் அதே சிக்கல்தான். மாறாக அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் சிலவற்றை விற்று கடனை குறைத்தால், நிலைமையை தாக்குப்பிடிக்கலாம். ஆனால் சொத்துக்களை விற்கமாட்டேன், இப்போதைக்கை வேறொரு கடன் வாங்கி சமாளிக்கிறேன் என்று கடனை அதிகரித்தால், சிக்கல் இன்னும் அதிகமாகும்.


வியாபாரம் சீரடைய வாய்ப்பிருக்கும் பட்சத்தில் தற்காலிக இழப்பைத் தாங்கி, வியாபாரத்தை தொடரலாம். அதே வியாபாரத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்கிற பட்சத்தில், அந்த நஷ்டத்தை தாங்கி வியாபாரத்தை தொடர்வதைக்காட்டிலும், ஏற்பட்டுள்ள நஷ்டத்தோடு விலகிவிடுவது நல்லது.

இங்கு சொத்துக்களை விற்பது, வியாபாரத்தை கைவிடுவது, ஊழியர்களை நிறுத்துவது போன்ற முடிவுகள் எதிர்மறையானவையாக தோன்றினாலும், நஷ்டத்தை தடுக்க, எங்காவது ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். இக்கட்டான சூழ்நிலையில், சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க தாமதித்தால், கடன் வளர்ந்து நீங்கள் ஒன்றுமில்லாதவராகி விடுவீர்கள். நஷ்டத்தை தடுத்து, கடனை குறைக்க சொத்துக்களை விற்று வழிவகை செய்தால், தன்னம்பிக்கையுடன் மீண்டும் எழுந்துவர வாய்ப்புகிடைக்கும். முடிவெடுக்க தாமதித்து எல்லாவற்றையும் இழந்துவிட்டால், எவ்வளவுதான் தன்னம்பிக்கை இருந்தாலும், மீண்டுவர காலதாமதமாகும்.


வியாபாரத்தை எப்போது தொடர வேண்டும், எப்போது நஷ்டத்தை உணர்ந்து வெளியேர வேண்டும், எப்போது வியாபாரத்தை குறைத்து தாக்குப்பிடித்து நிற்கவேண்டும் என்ற முடிவுகள் தான், உங்களை ஒரு நல்ல வியாபாரியாக சந்தை நிலைநிறுத்தும்.


மருத்துவம், வியாபாரம் என்பதைத் தாண்டி, இந்த இழப்புக்கள் எல்லாத் துறைகளிலும் வெவ்வேறு விதங்களில் வரும். அந்த இழப்புக்களின் தாக்கத்தை குறைத்து, அந்தந்த துறையில் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதுதான் அதிமுக்கியம்.

  • விளையாட்டில், தோல்வி தவிர்க்கமுடியாத கட்டத்தில், கடைசி கட்ட முயற்சிகளாக தாக்குதல் ஆட்டத்தை கையெடுப்பார்கள். அல்லது குறிப்பிட்ட புள்ளிகளை தொடரில் தக்கவைக்க, இழப்பு விகிதத்தை குறைக்க முற்படுவார்கள்.

  • உறவுகளுக்கிடையே பெரிய சண்டை-சச்சரவுகள் தோன்றும் சூழ்நிலையில், அவற்றை சமாளிக்க மன்னிப்பு கோருவது, அவ்விடத்தை விட்டு அகன்றுவிடுவது, பெரியவர்களை வைத்து சமாதானம் செய்வது, போன்று ஏதேனுமொரு வழியை கையாண்டு உறவுகளுக்குள் சமாதானமாவது முக்கியம்.

  • இயற்கை சீற்றங்களின்போது, உயிர் சேதமின்றி சூழ்நிலையை சமாளிப்பது அரசுக்கு பெரிய சவால். பொருளிழப்புக்கள் ஏற்பட்டால் காலப்போக்கில் சரிசெய்யலாம். ஆனால் உயிர்சேதம் ஏற்பட்டால், அந்த குடும்பத்தினருக்கு அது நிரந்தர இழப்பு.

வெற்றிக்காகத்தான எல்லோரும் உழைக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தோல்வி நேரும் பட்சத்தில், அதை உணர்ந்து, தோல்வியினால் பெரிய பாதிப்பு ஏற்படாத வண்ணம், இழப்புக்களை தடுப்பதும், குறைப்பதுவும் அப்போதைக்கு ஒருவகையான பெரிய வெற்றிதான்.


வெற்றி என்றும் நிரந்தரமன்று

சூழ்நிலைகள் மாறும்போது

தோல்வி தவிர்க்கமுடியாத பட்சத்தில்

தோல்வியினால் வரும் இழப்புக்களை

கவனமாக செய்பட்டு குறைத்துக்கொண்டால்

அடுத்த போட்டியில் பங்குபெற

உங்களிடம் போதுமான பலமும் பொருளும் இருக்கும்;


இழப்பைத் தடுக்காமல்

கடைசிவரையில் ஒருகை பார்க்கிறேன் என்று

ஏட்டிக்கு போட்டியாய் தொடர்ந்து

எல்லாவற்றையும் இழந்து நின்றால்

போட்டிச் சக்கரத்திலிருந்து நிரந்தரமாய் விலக நேரிடும்;


- [ம.சு.கு 03.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Yorumlar


Post: Blog2 Post
bottom of page