“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-144
"பொறாமை" கவனத்தை சிதைக்கும் !
உங்களுடன் பணிபுரியும் சக ஊழியருக்கு பதவி உயர்வும், அதிக சம்பள உயர்வும் கிடைக்கிறது. அதே குழுவில் இருக்கும் உங்களுக்கு சராசரியான உயர்வு மட்டுமே கிடைக்கிறது. பதவி உயர்வு பெற்ற சகபணியாளர் என்னவெல்லாம் சிறப்பாக செய்து மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார், அவர் நிறுவனத்திற்கு ஏற்படுத்திய இலாபம் என்ன என்பதை அலசிப்பார்த்து, நீங்களும் அடுத்த முறை கவனமாக செயல்பட்டு வளர்ச்சிகாண விரும்புவீர்களா? அல்லது நானும் அவரைப்போலத்தானே உழைக்கிறேன், ஏன் நிர்வாகம் தன்னை புறந்தள்ளி அவர் ஒருவரை மட்டும் போற்றுகிறதென்று புலம்பிக்கொண்டே, அந்த சக ஊழியர் மீது பொறாமைத்தீயில் வெதும்புவீர்களா? எது உங்கள் குணம்?
ஒரு தம்பதியருக்கு முதல் குழந்தை பிறந்து 7-8 வருடங்கள் கடந்தபின் இரண்டாவது குழந்தை பிறக்கிறது. முதல் பிள்ளையை பாராட்டி, சீராட்டி வளர்த்தது போல, இரண்டாவது பிள்ளைக்கும் போதுமான கவனத்தை தரும் போது, முதல் பிள்ளையின் மீது முன்னர் இருந்த முழுக்கவனம் சற்று குறைவது இயல்பு. ஆனால், அதை அந்த 8 வயது குழந்தை புரிந்து கொள்வது சற்று கடினம். பெற்றோர்கள், புதிய வரவையே அதிகம் விரும்புவதாகவும், தன்னை நிராகரிப்பதாகவும் எண்ணி, தன் இளைய சகோதர/சகோதரியின் மீது தேவையற்ற பொறாமை துவங்குகிறது. பல குடும்பங்களில் இந்த பொறாமை எண்ணம் அவர்களின் இறுதிக்காலம் வரை தொடர்ந்து நீடித்து எண்ணற்ற பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. நடைமுறையில் இந்தப்பிரச்சனை எண்ணற்ற வீடுகளில் இருப்பதும், இதனால் குடும்பமே எண்ணற்ற மனஉளைச்சலுக்கு ஆளாவதும் சர்வசாதாரணமாக காணமுடிகிறது. இப்படிப்பட்ட பொறாமை நிலை உங்கள் பிள்ளைகள் மத்தியில் உருவாகாமல் இருக்க, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
சகபணியாளர் கடினமான உழைப்பாலும், தனித்திறமைகளாலும், நிறவனத்திற்கு இலாபகரமான விடயங்களை செய்து தன்னை நீரூபித்ததை அங்கீகரித்து, நிறுவனம் அவருக்கு பதிவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை அளிக்கிறது. அதேசமயம், வேலையை சரியாக செய்யாதவர்களை பணிநீக்கமும் செய்கிறது. நிறுவனத்தை பொறுத்தவரை, யார் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறார்களோ, அவர்கள் அங்கீகாரத்துடன் தொடரலாம். நீங்கள நிறுவனத்திற்கு பயன் படும் வகையில் சிறப்பாக செயல்படாவிட்டால், காலப்போக்கில் பணிநீக்கம்கூட செய்யப்படலாம். இந்ந சூழ்நிலையில் உங்கள் பணியின் மீது கவனம் செலுத்தாமல். சக ஊழியர் மீது பொறாமைப் பட்டுக்கொண்டிருந்தால், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஒருவேலை பொறாமை கொண்டு வெதும்புவது உங்கள் குணமாக இருந்தால், உடனடியாக ஆக்கப்பூர்மாக மாற்றத்திற்கான வழிகளை யோசித்து செயல்படுத்த ஆரம்பியுங்கள். உங்கள் உள்ளத்தில் பொறாமை குடிகொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும், உங்களுக்கு வீழ்ச்சிதான். எவ்வளவிற்கு எவ்வளவு அதிலிருந்து சீக்கிரமாக வெளிப்படுகிறீர்களோ, அவ்வளவிற்கவ்வளவு மிக நல்லது;
குடும்பத்தில் இருக்கும் இரு பிள்ளைகள் மத்தியில் உருவாகும் பொறாமைதான், நீண்டகாலம் நீடிக்கக்கூடய பொறாமை உணர்வு. பல இடங்களில் குழந்தைகள் இதை வெளிக்காட்டாமல், தங்களின் மனதிற்குள்ளேயே புழுங்கி, காலப்போக்கில் பல தவறான செயல்களை செய்கிறார்கள். இந்த உணர்வுதான், பெரிய சொத்துத் தகராறுகளுக்கும், பல குற்றங்களுக்கும் காரணியாகி விடுகிறது. இப்படிப்பட்ட நிலை உருவாகாமல் கவனமாக பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோரின் தலையாய கடமை. இதை சரிவர கவனிக்காத பெற்றோர்கள், பிற்காலத்தில் அவர்கள் கண்முன்னே அவர்களின் பிள்ளைகள் அடித்துக் கொள்வதை பார்க்க நேரிடுகிறது.
பெரியவர்களாகிய உங்களுக்குள் பொறாமை எண்ணம் வராமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல, உங்கள் பிள்ளைகளுக்குள்ளும் அப்படிப்பட்ட பொறாமை எண்ணம் வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகஅவசியம்.
ஏன் பொறாமை தோன்றுகிறது?
மற்றவரிடம் இருப்பது உங்களிடம் இல்லாவிட்டால் அவர் மீது பொறாமை;
தனக்கு கிடைக்க வேண்டியது, மற்றவருக்கு கிடைத்துவிட்டால் பொறாமை;
நம்முடையது, கைநழுவி அடுத்தவரிடம் போய்விடுமோ என்ற பயத்தில் அவர் மீது பொறாமை;
தான் மட்டுமே வைத்திருக்க வேண்டுமென்ற ஆணவத்தில், அந்த பொருளை உடையவர்கள் மீது காழ்புணர்ச்சியுடனான பொறாமை;
தன்னம்பிக்கை இல்லாத மனிதர்களுக்கு, ஏன்? ஏதற்கு? என்ற காரணமில்லாமல் யாரைப்பார்த்தாலும், எதைப்பார்த்தாலும் பொறாமை;
ஒருசில சமயங்களில் பொறாமை உணர்வு வந்தவுடன், அதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு, தன்னுடைய தவறுகளை திருத்தி, செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தி, செய்கின்ற எல்லா செயல்களிலும் கவனத்தை அதிகப்படுத்தி வெற்றியை நோக்கி இன்னும் அதிக உத்வேகத்துடன் போராடினால், அடுத்த முறை வெற்றிகாண வாய்ப்பு அதிகரிக்கும். யதார்த்தத்தில், பொறாமை உணர்வு அப்படிப்பட்ட புரிதலை வழங்கி முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது அபூர்வம். பொறாமை உணர்வு தோன்றியவர்கள், அதற்குள்ளேயே உழன்று தீய எண்ணங்களையும் அதிகரித்து, பிறரைக் கெடுக்கும் தீச்செயல்களில் ஈடுபட துணிந்து விடுகிறார்கள்.
பொதுவாக, ஒருவர் தன்னுள் பொறாமை உணர்வு ஏற்பட்டுள்ளதை புரிந்து கொள்வதில்லை.பொறாமை உணர்வில் சிக்கியவர்கள், தொடர்ந்து தங்கள் பக்க நியாயத்தை மட்டுமே யோசித்து தான் நிராகரிக்கப்பட்டதாக, சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்டதாக குறைகூறுகின்றனர். வெற்றிபெற்றவர் பட்ட கஷ்டத்தைப் பற்றி அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தான் வெற்றி பெறாதபோது, அடுத்தவரும் வெற்றிபெறக்கூடாது என்ற வஞ்சக எண்ணம் கலந்த பொறாமைத்தீ காலங்காலமாக மக்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது. இந்த எண்ணமே அவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறதென்ற புரிதலும் ஏற்படுவதேயில்லை. இது குறித்து இவர்களிடம் யாரேனும் பேச முற்பட்டாலும், ஒன்று அவர்கள் அதை விரும்புவதில்லை அல்லது அவர்கள் தங்கள் பக்க கருத்தையே நியாயமென்று தொடர்ந்து வாதிடுகின்றனர்.
உங்களுள் பொறாமை வந்துள்ளது என்பதை உங்களால் உணரமுடிந்தால், அதை உங்களால் கட்டாயம் வெல்ல முடியும்.
மற்றவர் உங்களுக்கு செய்த நன்மைகளை நினைத்து, அவர்களின் வளர்ச்சிக்கு மனமார வாழ்த்து தெரிவிக்க முற்படுங்கள்;
“அவர் வளர்ந்துவிட்டாரே” என்று எண்ணுவதற்கு பதிலாக “அவரைப்போல நானும் வளர என்ன செய்ய வேண்டும்” என்று யோசிக்கத் துவங்குங்கள்;
அடுத்தவர் என்ன செய்கிறார் என்பதில் கவனம் செலுத்தாமல், பெரிய வெற்றிக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை கவனியுங்கள்;
புகழ்பெற்றவர்கள், அவ்விடத்தை அடைய எத்தனை உழைத்துள்ளார்கள், எந்தளவிற்கு தங்களின் அறிவை விசாலப்படுத்தியுள்ளார்கள், எந்த அளவிற்கு தங்களின் தொடர்பு வட்டத்தை பெருக்கியுள்ளார்கள், எந்தெந்த தனித்திறமைகளில் எவ்வளவு கவனம் செலுத்தி நிபுனத்துவம் பெற்றுள்ளார்கள் என்பதை ஆழமாக கவனித்து, உங்கள் செயல்களில் உரிய மாற்றங்களை ஏற்படுத்தினால், பொறாமையில் பொசுங்குவதற்கு பதிலாய், பொறாமை உணர்வு துவக்கிய புள்ளியிலிருந்து வெற்றிச் சரித்திரத்தை நீங்கள் எழுதலாம். அதற்கு நீங்கள் தாயாரா?
உங்கள் இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருக்கும்போது
உங்களின் போட்டியாளர்களைவிட
சிறப்பாக செயலாற்ற முயற்சிக்கவேண்டிய இடத்தில்
போட்டியாளர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து
பொறாமைப் பட்டுக்கொண்டிருந்தால்
உங்கள் இலக்கின் மீது எப்படி கவனம் செல்த்த முடியும்;
பொறாமையைக் கொண்டு நீங்கள் வெற்றி காணமுடியாது;
எல்லா நேரங்களிலும்
பொறாமை தீய எண்ணங்களுக்கும்,
தீச்செயலை செய்வதற்குமே வழிநடத்தும்;
பொறாமைத் தீயில் நீங்கள் பொசுங்கிடாமல்
பொறாமையை பொசுக்குங்கள்!
நீங்கள் பொறாமை கொள்வதைவிட
பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளுமளவிற்கு
சாதித்துக் காட்டுங்கள்!!
- [ம.சு.கு 02.03.2023]
Comentarios