“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-137
ஆழமாக படியுங்கள், முழுமையாக கவனியுங்கள்
புதிதாக சமையல் செய்ய கற்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்மனி, சமையல் புத்தகத்தை அவ்வப்போது படித்து சமையல் முயற்சிகளை மேற்கொள்கிறார். ஒரு சமயம் புதிய புத்தகத்தின் நடுப்பக்கத்தை திறந்து அங்கிருந்த ஒரு உணவை சமைக்க ஆரம்பிக்கிறார். புத்தகத்தில், அந்த உணவுக்குறிப்பின் இடையிடைய “முன்னர் சொன்னது போல” என்று முந்தைய பக்கங்களில் சொல்லபட்ட வகைக்கு தொடர்பு படுத்தப்படுகிறது. திடீரென்று நடுப்பக்கத்தில் படிக்க ஆரம்பித்து சமையல் செய்யத் துவங்கியதால், அந்த பெண்மனிக்கு அந்த தொடர்புபற்றி ஏதும் புரியவில்லை. ஏதோ ஒரு அனுமானத்தில், தனக்கு தெரிந்த விதத்தில் செய்துமுடிக்கிறார். இறுதியில் அந்த உணவை அவரால் உண்ணமுடியாத அளவிற்கு பொருட்களின் சேர்க்கையும், வேகவைத்த பதமும் அளவுகடந்திருந்தது. என்ன பிரச்சனை இங்கே?
ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உபயோகிப்பாளர், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தன் கைப்பேசியில் இருந்து வெளி அழைப்புக்கள் எதுவும் போவதில்லை என்று குறை சொல்ல ஆரம்பித்தார். அந்த சேவைநிலைய ஊழியர், மேற்கொண்டு எதையும் செவிகொடுத்து கேட்காமல், கணினியில் பரிசோதித்துவிட்டு, இன்னும் இரண்டு மணிநேரத்தில் சரியாகிவிடும் என்று கூறி அழைப்பை துண்டித்தார். மூன்று மணிநேரத்திற்கு பின் அந்த உபயோகிப்பாளர் மீண்டும் அழைத்து சரியாகவில்லை என்றார். இப்போதும் ஏன் என்று முழுமையாக கேட்காமல் கணினியை பார்த்துவிட்டு அந்த பகுதியில் பழுதுநீக்கும் பணி நடப்பதால், இன்னும் 2 மணி நேரத்தில் சரியாகுமென்றார். ஆனால் ஒன்றும் ஆகவில்லை. மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவே, அது உயரதிகாரிக்கு போனது. அவர் பிரச்சனை என்ன என்று முழுவதுமாக கேட்டபோது, அது புதிதாக எடுக்கப்பட்ட இனைப்பென்றும், இன்னும் வெளியூர் அழைப்புகளுக்கான வசதி அனுமதிக்கபடவில்லை என்பதும் தெரியவந்தது. அதிகாரி அந்த ஊழியரை அழைத்து போதுமான வசைபாடி, வாடிக்கையாளர் சேவையில், முதலில் பிரச்சனையை முழுமையாக கேட்டு தெரிய வேண்டியதின் அவசியத்தை விளக்கினார்.
நீங்கள் எந்தவொறு கலையை புத்தகத்திலிருந்து கற்பதானாலும், முதலில் அந்த புத்தகத்தை முழுமையாக படியுங்கள். அதுவும் குறிப்பாக எதாவதொரு பக்கத்தை திறந்து அதில் கூறப்படும் விளக்கத்தை அப்படியே செயல்படுத்த முயற்சிக்காதீர்கள். அந்த அத்தியாயத்திற்கு முன்னும், பின்னும் எண்ணற்றவை அத்தோடு இணைத்து சொல்லப்பட்டிருக்கும். எந்தவொரு புத்தகமும், துவக்கம் முதல் இறுதிவரை ஒரு கோர்வையாக இணைக்கப்பட்டு, ஒன்றின் தொடர்ச்சியாக இன்னொன்று இருக்கும்வகையில் ஒவ்வொரு அத்தியாயமும் அமைக்கப்பட்டிருக்கு. புத்தக அறிவைக்கொண்டு ஒன்றை செய்ய முற்படுவதானால், அந்த புத்தகத்தை ஒருமுறை முழுமையாக படித்து நன்கு புரிந்துகொண்ட பின்னர், உங்கள் முயற்சிகளை தொடங்கலாம். கலைகளை கற்றுக்கொள்ளும் விடயம் மட்டுமல்லாமல், சித்தாந்தங்கள், அறிவியல் கோட்பாடுகள், மொழியிலக்கணம் என்று எந்தவொரு தலைப்பில் வாசித்து அறிவதானாலும், கையில் எடுத்த புத்தகத்தை முழுவதுமாக படித்தபின் உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முடிவுகளை தீர்மானியுங்கள். பாதிபடித்துவிட்டு களத்தில் குதித்தால், உங்கள் புரிதல் கோளாரில் எல்லாமே கெட்டுப்போக வாய்ப்புண்டு.
படிப்பதை முழுமையாக படிக்கவேண்டியது அவசியம் என்பதுபோல, மற்றவர்கள் சொல்வதை கேட்கும்போதும், அதை முழுமையாக கேட்டு பின் முடிவெடுக்க வேண்டும். ஒருவர் பாதி சொல்லிமுடிப்பதற்கு முன் நீங்களாக மேற்கொண்டவற்றை அனுமானித்து செய்தால், தேவையற்ற நேர இழப்பும், குழறுபடிகலுமே மிஞ்சும். ஒரு பேச்சாளரின் கருத்துக்களை கேட்பதானாலும், பெரியவர்களின் அறிவுரையை கேட்பதானாலும், ஆசிரியர் நடத்தும் பாடங்களை கேட்பதானாலும், அவற்றை முழுமையாக கேட்டு புரிந்துகொள்வது அதிமுக்கியம். சில கருத்துக்களை சொல்லும்போது, அதன் சாதக-பாதகங்களை கடைசியில் அவர் சொல்லக்கூடும். பாதியிலேயே நீங்கள் சென்றுவிட்டால், சாதக-பாதகங்கள் தெரியாமல் அரைகுறை அறிவாகவே அது இருக்கும். அந்த அரைகுறை அறிவுநிலையில் நீங்கள் அதை செய்ய முயற்சித்தால், அவை சிலசமயம் விபரீதங்களிலும் முடியலாம்.
படிப்பதோ / கேட்பதோ – முழு ஈடுபாட்டுடன், கவனமாகவும், முழுமையாகவும் செய்யுங்கள்; முழுமையாக படிக்கும்போது அந்த தலைப்பில் ஆழமான புரிதலும், பகுத்துணரும் ஆற்றலும், புதிய சிந்தனை கோணங்களும் வர வாய்ப்பு அதிகம்; அதேசமயம், முழுமையாக கவனிக்கும்போது, நபர்களுக்கிடையே நல்ல புரிதல் ஏற்பட்டு கருத்துவேறுபாடுகள் களையப்பட வாய்ப்பாகிறது;
புரியாத வார்த்தைகளோ, கடினமான வரிகளோ இருந்தால், அகராதிகளை பயன்படுத்துங்கள் (அல்லது) ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு புரிந்துகொள்ளுங்கள்; புரியாதவற்றை சற்று அலசி புரிந்துகொள்ளும்போது, மொழியறிவு மேம்பட்டு, சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகளும் உருவாகும்;
எதை படிக்கும்போதும் / கேட்கும் போதும், அதை எழுதியவர், சொல்கின்றவர் என்ன கண்ணோட்டத்தில் அதை சொன்னார் என்பதையும் அலசிப்பார்த்து முடிவுசெய்யுங்கள். 100 ஆண்டுகளுக்குமுன் சொல்லப்பட்ட, இன்று காலத்திற்கு ஒவ்வாத சித்தாந்தங்களில் அதிகம் பயனிப்பது தேவையற்றது. அதேபோல அதீதமாக ஒருவரின் வார்த்தைகளை கேட்டு மூளைச்சலவை ஆகாமல் தப்பிப்பதும் அதிமுக்கியம்;
முழுமையாக படிப்பதும் / கேட்பதும் சில சமயம் நேரவிரையத்தையும், களைப்பையும் ஏற்படுத்துவதாக சிலர் சொல்கிறார்கள். அரைகுறை புரிதலால் ஏற்படும் நஷ்டங்களும், விபரீதங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால், அந்த நேரவிரயம் பெரிய இழப்பல்ல என்பதே நிஜம்.
வாழ்வில் வெற்றிபெற ஆசையிருந்தால், நீங்கள் நிறைய படிக்கவேண்டும். எதை படிக்கவேண்டும் என்று கவனமாக தேர்ந்தெடுத்து, அதை முழுமையாக படித்திடல் வேண்டும். அரைகுறையாக படிப்பதில் பயனேதுமில்லை. அரைகுறை அறிவு ஆபத்துக்குறியதே. அதேபோல, பிறரின் கருத்துக்களை கேட்கும்போதும், பொறுமையாகவும், முழுமையாகவும் கேட்டிடுங்கள்.
மருத்துவராக இருந்தால், நோயாளியின் கஷ்டத்தை முழுமையாக கேட்பது அவசியம்;
பொருட்களை விற்பவராக இருந்தால், வாடிக்கையாளரின் தேவையை, குறைகளை முழுமையாக கேட்டு தீர்த்துவைக்க வேண்டும்;
குழந்தைகளை நல்லமுறையில் வளர்க்க, அவர்கள் சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அதை முழுமையாகவும், பொறுமையாகவும் கேட்டு, பின் வழிநடத்தவேண்டும்;
மனகஷ்டத்தில் இருப்பவர்களுக்கு, நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், அவர்கள் மன ஆறுதலுக்கு அவர்களின் கஷ்டத்தை சொல்லும்போது, அமைதியாக கேட்பது அவர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும்;
என்ன, எப்போது, எப்படி செய்யவேண்டுமென்று முடிவெடுத்து செய்யும்போது, அதை பாதியில் விடாமல், எப்போதும் முழுமையாக செய்துவிடுங்கள். ஓரிரு முறை அது தேவையற்றதாக இருந்தாலும், பாதியில் விடுவதால் ஏற்படும் முன்னேற்த்தின் தடைகளுக்கு ஒப்பிடும்போது, அந்த ஓரிரு நேர இழப்புக்கள் பெரிதல்ல.
என்ன படிக்கிறோமோ
அதை தெளிவாக, முழுமையாக படிக்க வேண்டும்;
எதை கவனிக்கிறோமோ
அதை முழுமையாக கவனித்து மனதில் ஏற்றவேண்டும்;
படிப்பதும், கவனிப்பதும் அரைகுறையானால்
நம் செயலும், வளர்ச்சியும்
அரைகுறையாகத்தான் இருக்கும்;
படிப்பதிலும், கவனிப்பதிலும் அவசரப்பட்டு
பின்னர் அவதிப்படுவதைவிட
செய்யும் போதே முழுமையான ஈடுபாட்டுடன் செய்து
புரிந்துகொண்டால் வாழ்வில் பாதிபிரச்சனைகள்
தோன்றாமலே தீர்ந்துபோகும்;
- [ம.சு.கு 23.02.2023]
Comments