top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-136 - ஒப்பீடுகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கட்டும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-136

ஒப்பீடுகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கட்டும்!


  • ஒவ்வொரு நிறுவனமும், அதன் மாதாந்திர / காலாண்டு / ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடுகையில், அந்த வருடத்திய வரவு-செலவு, இலாப-நட்ட கணக்குகளுக்கு அருகில், சென்ற மாதத்தின் / காலாண்டின் / ஆண்டின் அதே காலகட்டத்திற்குரிய வரவு-செலவு கணக்குகளை குறிப்பிடுகின்றனர். ஒருசில நிறுவனங்கள், கடந்த 3-5 ஆண்டு எண்களையும் குறிப்பிடுகின்றனர். அரசாங்கமும் அதன் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், சென்ற ஆண்டு திட்டமிட்டவைகள் என்ன? அவற்றில் நிறைவேற்றப்பட்டவை எவ்வளவு, திட்டமிடப்பட்ட எண்களும், களத்தில் அந்த ஆண்டு நிகழ்ந்த எண்களும் என்ன என்பதை வெளியிடுகின்றனர். எதற்காக அந்த பழைய எண்களை குறிப்பிட்டு இடத்தை வீணடிக்கிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

  • பத்திரிக்கைகளும், பல்வேறு விளம்பரங்களிலும், நிறுவனங்கள் தாங்கள் முதலாவதாக உள்ளோம், எங்கள் வாகனம் சிறந்ததென்று பத்திரிக்கை கருத்துக்கணிப்பு கூறுகிறது, இன்னின்ன சேவைகளில் நாங்கள் போட்டியாளர்களை விட சிறப்பாக உள்ளோம் என்று சந்தையில் தங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு தங்களின் தனித்துவத்தை, சிறப்பை விளம்பரப்படுத்தி விற்பனையை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.

நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை, சென்ற ஆண்டின் வர்த்தக அளவோடு ஒப்பிட்டு எத்தனை சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளதென்று கணக்கிடுகிறது. தன் போட்டி நிறுவனங்கள், மொத்த சந்தை வர்த்தகத்தோடு ஒப்பிட்டு, தங்களின் சந்தை ஆளுமையை வெளிப்படுத்துகிறது. மறுபுறம் அரசாங்கம் தங்களின் வருடாந்திர நிதிநிலை திட்டம், திட்டகாலத்தின் நிகழ்ந்த வரவு செலவுகளுடன் ஒப்பிட்டு வருவாய்-செலவீனங்களின் சதவிகிதத்தை அறிக்கையாக வெளியிடும் போது, தேசத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்கள் மக்களுக்கு தெளிவாகின்றன. ஒருவேளை இந்த ஒப்பீடு இல்லாமல் வெறும் இந்த ஆண்டிற்கான எண்களை மட்டும் பிரசுரித்தால், நாடும், நிறுவனமும் வளர்ந்திருக்கிறதா? இல்லை வர்த்தகம் குறைந்திருக்கிறதா? என்று படிப்பவர்களால் கண்டறியமுடியாது. இந்த ஒப்பீடுகள்தான் தற்போதைய நிலையை தெளிவாக விளக்க உதவியாக இருக்கிறது.


நிறுவனங்கள் தங்களின் பொருட்களை, நிறுவன தர அடையாளத்தை (பிராண்ட்), சேவையை விளம்பரப்படுத்தும் போது, சந்தையில் கிடைக்கும் சாதாரண பொருட்களோடு ஒப்பிட்டு, தங்களின் தனித்துவத்தை, சிறப்பம்சத்தை சந்தைபடுத்துகின்றனர். பொதுவாக ஒப்பீடுகள் இல்லாமல், மக்களால் எளிதாக புரிந்து கொள்ளவும், நினைவில் வைக்கவும் முடிவதில்லை. அதேசமயம், ஒப்பீடுகளின் போது ஏதாவது நிறுவனம், மற்ற நிறுவனத்தின் பொருளை நேரடியாக தாக்கி குறைகூறினால், அது தேவையற்ற போட்டி-பொறாமைகளுக்கு வழிவகுத்து, வழக்காகவும் போகிறது. யாரையும் மட்டம் தட்டாமல், பொதுவான ஒப்பீட்டுடன் சந்தைப்படுத்தும் போது, வர்த்தகம் அமைதியாக நடக்கிறது. அதேசமயம் சிறுசிறு நினுவனங்கள் சந்தையில் தவறான ஒப்பீடு, எல்லைமீறிய கருத்து வெளிப்பாடுகளினால், போட்டி தெருச்சண்டைபோல் உறுவெடுத்து வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. வியாபார சந்தை ஆரோக்கியமான ஒப்பீடுகளுடன் அளவாக இருக்கும் போது, சந்தை அமைதியாகவும் , வாடிக்கையாளருக்கு ஆக்கப்பூர்வமாகவும் போகிறது.


நாடுகளுக்கிடைய, வியாபார வளர்ச்சி, மக்களின் ஆண்டு வருமான வளர்ச்சி, விலைவாசி உயர்வு என்ற எண்ணற்ற ஒப்பீட்டு அறிக்கைகள், மேற்கொண்டு சரியான திட்டங்கள் வகுத்து ஆரோக்கியமான வளர்ச்சியடைய வழிவகுக்கும். அதேசமயம், ஒரு தேசத்தின் இராணுவம், ஆயுத பலம் குறித்த ஒப்பீடுகள், மக்கள் மனதில் தேவையற்ற அச்சத்தை உருவாக்குவதோடு, மற்ற நாடுகளையும் இராணுவ செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும். ஒப்பீடுகள் ஆக்கப்பூர்வமானதாக இருந்து மனித சமுதாயத்தின் அமைதிக்கும், ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கவேண்டும். மாறாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி மக்களின் அமைதியை சீர்குலைப்பதானால், அந்த ஒப்பீடுகள் அபத்தானவையாகும்;


குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு மட்டம்தட்டினால், அவர்களின் மனநிலை பாதிப்பதோடு எதிர்வினையாற்ற வழிவகுத்துவிடும் என்று நிறைய ஆலோசனைகள் சொல்லப்படுவதை கேட்டிருப்பீர்கள். அந்த விதி குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, பெரியவர்களுக்கும், வாழ்வின் எல்லா விடயங்களுக்கும் பொருந்தும் பொதுவான ஒன்றே.


ஒப்பீடுகள், ஆக்கப்பூர்வமாக இருந்தால்

  • சந்தையில் கிடைக்கும் பொருட்களின் தரம், விலை, நிறுவனத்தின் தொடர்ந்த சேவை குறித்து ஒப்பிட்டு வாங்கும்போது, வாடிக்கையாளருக்கு தரமான பொருள், சரியாண விலையில் கிடைக்க வாய்ப்பாகிறது;

  • தன் பலம்-பலவீணம் குறித்து ஒப்பிட்டு அறிந்துகொண்டால், தன் அறிவையும், திறமைகளையும் வளர்க்க அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று திட்டமிட முடிகிறது;

  • சரியான அளவீடுகளுடன், எல்லா சாதக-பாதகங்களையும் ஒப்பிடும் போது, தவறுகளை திறுத்திக்கொள்ளவும், திட்டமிடலை மேம்படுத்தவும், ஊழியர்களுக்கு போதுமான பயிற்சியளிக்கவும் திட்டமிட வழிவகை ஏற்படுகிறது;

சரியான ஒப்பீடுகள், நல்ல பொருளை தேர்வு செய்ய, சரியான பள்ளி-கல்லூரிகளை தேர்வு செய்ய, ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்வு செய்ய, தன்னம்பிக்கையும் ஆக்கப்பூர்வ எண்ணங்களும் நிறைந்த மனிதர்களை இனங்கான, சேவை முறைமைகளை தேர்வு செய்ய........ என்று எண்ணற்ற வழிகளில் உதவிபுரிகிறது.


அதேஒப்பீடுகள் தவறாகும் பட்சத்தில், என்ன நேரும்;


  • ஒருவர் தன்னை மற்றவரோடு ஒப்பிடுவதில், தன்மீதான சுயசந்தேகங்களால், தாழ்வுமனப்பான்மை அதிகரித்து, பொறாமை குணமும், வஞ்சக எண்ணமும் வளர வழிவகையாகிறது;

  • ஒப்பீடு சரியாண அளவுகோளில் இல்லாத பட்சத்தில், ஒருதலைபட்சமான சிந்தனைக்கு அது வழிவகுத்து, தவறான அனுகுமுறைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்க வாய்ப்பாகிவிடுகிறது;

நடைமுறையில், ஒப்பீடுகள் இல்லாமல் வாழ்க்கையில்லை. எதையும் நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருக்க, ஏதேனுமொன்றுடன் சம்பந்தப்படுத்தி, ஒப்பிட்டு நினைவில் ஏற்றுமாறு வல்லுனர்கள் கூறுகின்றனர். மறுபுறம், அந்த ஒப்பீடுகள் எல்லைமீறும்போது, தேவையற்ற போட்டி, பொறாமைகள் உருவாக வாய்ப்பாகிவிடுகிறது.


ஒப்பீடுகள் இல்லாமல் வாழ்க்கையில்லை

ஒப்பீடுகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்குவரை

தனிமனித வெற்றிக்கும்

சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்

நல்லதொரு காரணியாக வழிவகுக்கிறது;


ஒப்பீடுகள் எல்லைகடந்து

மற்றவரை குறைகூற வழிவகுக்கும்போது

அதன் எதிர்வினை அபாயகரமானதாகிறது!


ஒன்றை மறந்துவிடாதீர்கள்!

மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும்

தனித்துவமானவர்கள் !

வெவ்வேறுபட்ட ஆற்றல் படைத்தவர்கள்!

ஒப்பீடுகளை முன்னிறுத்தி

இவருக்கு நிகராய் நீ ஏன் இல்லை?

என்று கேட்பதைவிடுத்து

அவரவரின் தனித்துவத்தை ஊக்கப்படுத்தி

முன்னேற்றம் காண வழிவகை செய்வோம்!!


ஒப்பீடுகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்வரை

மனிதசமுதாயம் வளர்ச்சிப்பாதையில் பயனிக்கும்!


- [ம.சு.கு 22.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page