top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-134 - இருவரும் வெல்லலாம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-134

இருவரும் வெல்லலாம்!


  • நண்பர்களுடன் கூட்டாக இணைந்து வியாபாரம் செய்யும்போது, வியாபாரத்தை வளர்க்க எண்ணற்ற வேலைகளை செய்யவேண்டியிருக்கும். அவற்றில் சில எளிமையானதாகவும், சில வேலைகள் கடினமாகவும் இருக்கும். கூட்டாளிகளுக்குள் எல்லோரும் எளிமையானதையே செய்யவிரும்பி, கடினமானதை தவிர்த்தால், வியாபார வளர்ச்சி பாதிக்கும். அச்சமயம், கூட்டாளிகளின் திறமைகளுக்கு ஏற்ப பணிகளை பிரித்து, அவரவர்கள் வியாபார களத்தில் இருக்கும் நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப அனுசரித்து செயல்பட்டால், கூட்டாக வியாபாரத்தில் வெற்றிகாணலாம். மாறாக அதீத சுயநலத்துடன் ஒவ்வொருவரும் செயல்பட்டால், சீக்கிரத்தில் கூட்டுத்தொழிலில் விரிசல் ஏற்பட்டு வியாபாரம் சிதைந்து போகும்;

  • பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும், நல்ல கல்வியறிவு பெற்றவர்களாகவும் வளர்க்க ஆசைப்படுகின்றனர். ஆனால், குழந்தைகள் எந்நேரமும் நண்பர்களுடன் விளையாட விரும்புகின்றனர். குழந்தைபருவத்தில் விளையாட்டு-கல்வி இரண்டுமே முக்கியம் தான். அதீதமாக குழந்தையை கட்டுப்படுத்தி படிக்கவைக்க முயற்சித்தால் எதிர்விணையாகலாம். அதேசமயம் அதிகமாக விளையாட அனுமதித்தாலும் கல்வி பாதிக்கும். இதற்கான சமரசநிலையை பெற்றோர்கள் தான் சூழ்நிலைக்கேற்ப யோசிக்க வேண்டும். பிள்ளைகள் போதுமான அளவு கற்பதும், விளையாடுவதற்கும் பெற்றோர்கள் வழிவகுத்தால், எல்லோருக்கும் அது மகிழ்ச்சிகரமாகும்;

இன்று வியாபார உலகம் மிகவேகமாகிவிட்டது. நாளுக்குநாள் புதிய பொருட்களும், சேவை முறைகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஒருவரே எல்லாவற்றையும் கவனித்து வியாபாரத்தில் வெற்றிகாண்பது கடினம். குடும்பத்தினர், நண்பர்கள், முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பில்லாமல் இன்று வியாபாரத்தை விரிவுபடுத்துவது சாத்தியமில்லை. அதேசமயம், மற்றவர்களை வியாபாத்தில் கூட்டு சேர்க்கும்போது, உங்களின் ஆதாயத்தை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருந்தால், கூட்டுத் தொழில் சரிபட்டுவராது. வியாபாரத்தில் வெற்றிகாண எல்லா கூட்டாளிகளும், எல்லா ஊழியர்களும் பரஸ்பரம் நம்பிக்கையுடன், பொதுவான வெற்றிக்கு உழைத்தால், வியாபாரத்தின் வளர்ச்சியில் எல்லோரும் நல்ல ஆதாயத்தை ஈட்ட முடியும்.


குழந்தை வளர்ப்பில், அவர்களை எப்போது கட்டுப்படுத்த வேண்டும்? எப்போது சுதந்திரமாக விடவேண்டும்? என்பது அனுபவத்தில் கற்கவேண்டிய கலை. தங்களின் வாழ்க்கைச் சூழ்நிலை, குழந்தைகளின் திறமை, எதிர்காலத் தேவை என்று எண்ணற்றவற்றை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் கவனமாக குழந்தைகளின் சிந்தனைத்திறனை, கல்வியறிவை, உடல் ஆரோக்கியத்தை, நட்புவட்டத்தை, உறவுகளுடனான விட்டுகொடுத்தலை, சமுதயாத்துடனான அவர்களின் பரஸ்பர புரிதலை மேம்படுத்தினால், அவர்கள் எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் பரிணமிக்க வாய்ப்பாகும். இவையணைத்தையும், குழந்தைகளிம் போக்கிலேயே பயனித்து அவர்களுக்கு படிப்படியாய் புரிய வைத்து சாதிப்பதுதான் குழந்தை வளர்ப்பில் இருவருக்குமான வெற்றி!


ஒருவர் தோற்று மற்றவர் வெற்றிகாண்பது நடைமுறை இயல்பு. ஆனால் இருவரும் வெற்றிகாண்பதுதான் அமைதியான மனித வாழ்விற்கான ஆதாரம்.

  • தம்பதியருக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்படும்போது, தான் மட்டுமே சரி என்று தன்பக்க நியாயத்தை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், இருவரும் மனம்விட்டுப் பேசி சமரசமானால், அது இனிய இல்லறத்தில் இருவருக்குமான வெற்றி!

  • குழந்தைகள் தங்களுக்கு கிடைத்த பொருட்களை தன் சகோதர-சகோதரிகளுடன் பகிர்ந்துண்ணுவது, அன்பிற்கும், சகோதரத்துவத்திற்குமான வெற்றி!

  • பள்ளி-கல்லூரிகளில் இலவசமாகவோ, கட்டணம் செலுத்தியோ நல்ல முறையில் கல்விபுகட்டுவது, கற்றல்-கற்பித்தலுக்கும், அறிவார்ந்த சமுதாயத்தை கட்டமைப்பதற்குமான வெற்றி!

  • போர் செய்யும் இரண்டு நாடுகள், அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் காண்பது, இரண்டு நாட்டு மக்களின் அமைதியான வாழ்விற்கான வெற்றி!

  • உடல் நலம் குன்றியர்களுக்கு மருத்துவ சேவை வழங்கி உயிர்காக்கும் சேவை புரிவது மருத்துவ பணிக்கும், மனித உயிர்களுக்குமான வெற்றி!

எல்லா பணியிலும், எல்லோரும் அவர்களுக்குரிய ஆதாயத்தை கருத்தில் கொண்டுதான் அந்தப் பணியை துவக்குகிறார்கள். ஆனால் அப்பணி மற்றவருக்கு நன்மையை ஏற்படுத்தும்போது, பணப்பரிவர்த்தனைகள் வெறும் சடங்காகி, இருவரும் பெற்றிடும் வெற்றி பிரதானமாகிறது. ஒருவர் மட்டும் வென்று, மற்றவர் தோற்கும் இடங்களில், தேவையற்ற மனஸ்தாபங்களும், விரோதங்களும் வளர்கின்றன.


உங்கள் சக ஊழியர், போட்டியாளரை தோற்கடிக்க வேண்டுமென்று நீங்கள் களமிறங்கினால், அவரும் அதே எண்ணத்தில் உங்களுக்கு எதிராக களம் குதிப்பார். அந்தப் போட்டி ஆக்கப்பூர்வமாக இல்லாமல், இருவரையும் எதிர்மறை எண்ணத்தில் ஆழ்த்தி, சமுதாய உறவுகள் சீர்குலைத்துவிடும். எந்தப்போட்டியானாலும், உங்கள் பலத்தை முன்னிறுத்தி போராடுங்கள். பிறரை ஏமாற்றி வெற்றிபெற நினைத்தால் நீங்களும் ஒருநாள் ஏமாற்றப்படுவீர்கள். வெற்றியென்பது உங்கள் சொத்தல்ல, அது அவ்வப்போது வந்துபோகும் விருந்தாளி. வெற்றிக்களிப்பில் அகந்தையுடன் தோற்றவர்களை பரிகசித்து விடாதீர்கள். அப்போதைக்கு அவர்கள் தோற்றிருக்கலாம். அடுத்தமுறை அவர்கள் வெகுண்டெழுந்து வெற்றிகொள்ளலாம். போட்டியை கடந்து மனிதம் பாராட்டினால், மனித உறவுகள் ஆக்கப்பூர்மாய் வளர்ந்து எல்லோரும் வெற்றிகாணும் சமதர்ம, சமத்துவ சமுதாயம் சீக்கிரத்தில் நிலைபெற்றிடும்.


நீங்கள் வெற்றிபெறும் போது

உங்களைச் சார்ந்தவர்களும் வெற்றிபெற்றால்

வெற்றியின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்;


விளையாட்டோ, வியாபாரமோ

வழக்கோ, வாழ்க்கையோ,

உறவோ, பகையோ,

எங்கு போட்டியாளர்கள்

இருவருமே வெற்றிகாண வாய்ப்பிருக்கிறதோ

அங்கு விட்டுகொடுத்து

இருவரும் வெற்றிகாணுங்கள்;


ஒருவேளை ஒருவர் மட்டுமே

வெற்றிகாண முடியுமென்றால்

எல்லாமுறையும் நீங்களை ஜெயிக்காதீர்கள்!

முக்கியமில்லாத இடத்தில் தோற்றுவிடுங்கள்!

விட்டுக்கொடுப்பது மட்டுமே அமைதிக்கும்

சமாதானத்திற்குமான ஒரே வழி!



- [ம.சு.கு 20.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page