top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-131 - அதிர்ச்சிகளுக்கு தயாராக இருங்கள்!"

Updated: Feb 18

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-131

அதிர்ச்சிகளுக்கு தயாராக இருங்கள்!


  • தன் குழந்தைகளுடன் இன்பச்சுற்றலாவிற்கு அயல்நாடு சென்று ஒரு வாரகாலம் நன்கு களித்த ஒரு அன்பான குடும்பம், விமானத்தில் ஊர்திரும்பினர். விமான நிலையத்திலிருத்தது தங்கள் நான்கு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பும்வழியில் ஏற்பட்ட திடீர்விபத்தில், வாகனத்தின் முன் அமர்ந்திருந்த அவர் கணவர், அவர்களின் இரண்டாவது மகன் மற்றும் வாகன ஒட்டுனர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே அந்த பெண்ணின் கண்முன்னே அவர்கள் உயிர்பிரிகிறது. அந்த அன்பான குடும்பம் ஒரே நொடியில் சின்னபின்னமாகி போனதைக் கண்டவர் யாவரும் கண்ணீர்மல்கி நின்றனர். தன் கணவனையும், இரண்டாவது மகனையும் தொலைத்துநிற்கும் அந்தபெண்ணிற்கு என்ன ஆறுதல் உள்ளது?

  • எனக்கு தெரிந்த ஒரு நண்பர், சமீபத்தில் தன் வாடிக்கையாளருக்கு உதவுவதற்காக போய், தேவையில்லாமல் வழக்குகளில் சிக்கிக் கொண்டார். அந்த நண்பர் மிகவும் நல்லவர். ஆனால் அவரது வாடிக்கையாளர், இன்னொருவரை குறிவைத்து தீட்டிய திட்டத்தில், அன்றைய தினம் அவருடன் இருந்த குற்றத்திற்கு, இன்று தேவையற்ற பெரியவழக்கில் சிக்கி திணறுகிறார். தன் வாடிக்கையாளருக்கு உதவும் எண்ணத்துடன் சென்றவருக்கு, அவரின் துரோகத்தால், வாழ்க்கையையே புரட்டிப்போடும் பேரதிர்ச்சி காத்திருந்தது!

சிலநொடிகளில் விபத்துக்கள் மொத்த குடும்பத்தையும் மாற்றிவிடுகிறது. சுனாமி, புயல், நிலநடுக்கம் போன்ற எண்ணற்ற இயற்கை சீற்றங்கள், உங்கள் கனவுகளையெல்லாம் முற்றிலுமாய் சீரழித்துவிடுகிறது. அப்படி திடீரென்று ஏற்படும் இழப்புக்கள் உங்களின் செல்வங்களை அழித்தாலும், தன்னம்பிக்கையோடு பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையை மீண்டும் தொடங்குபவர்கள், நல்லதொரு வாழ்வை படிப்படியாய் ஏற்படுத்திக்கொள்கின்றனர். உயிருக்குயிரானவர்களை இழந்திருக்கலாம், பாடுபட்டு சேர்த்த செல்வமெல்லாம் அழிந்திருக்கலாம், ஆனால் எல்லாவற்றையும் தாண்டி, இழந்தவற்றையெல்லாம் மீண்டும் உருவாக்க நீங்கள் மிஞ்சியிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சிக்குறியதே.


நண்பர்கள், உறவுகள், தெரிந்தவர்கள் என்று நிறைய நபர்களுடன் அன்றாடம் எண்ணற்ற பரிவர்த்தனைகளை நீங்கள் செய்வீர்கள். கூட்டாக தொழில்களில் ஈடுபடுவீர்கள். சிலசமயம், உங்களின் நம்பிக்கைக்குரியவரே உங்களை திட்டமிட்டு ஏமாற்றி உங்கள் செல்வத்தை அபகரிக்கலாம். சில துரோகங்களால் நீங்கள் பெரிய கடனாளியாகக் கூட நிற்கலாம். வாழ்வில் ஏமாற்றங்களும், துரோகங்களும் எப்போது, எப்படி வருகிறதென்று தெரியாது. ஆனால், எல்லோருக்கும் அது ஏதேனுமொருவகையில் அனுபவமாய் வந்துபோகிறது. அவற்றிற்காக இடிந்துபோகாமல், ஏமாற்றங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் கவனமாக போராடி தன்னை நிரூபிப்பவர்கள், காலத்தின் யதார்த்தத்தை புரிந்து பயனிக்கும் ஞானியாகிறார்கள். அந்த ஏமாற்றங்களையே தொடர்ந்து பேசி நேரத்தை கடத்துபவர்கள், எந்தவித முன்னேற்றமும் இன்றி வறுமையில் தவிக்கின்றனர்.


அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்வில், அதிர்ச்சிகள் எத்திசையிலும் வரலாம்;

  • செய்துவரும் நல்லவேலையில் இருந்து, ஆட்குறைப்பில் நீங்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்;

  • குடும்பத்தில் யாருக்கேனும் திடீர் மருத்துவ அவசரம் ஏற்பட்டு, கடனாளி ஆகலாம்;

  • உலகளவில் பொருளாதார மந்தநிலையில் வியாபாரத்தை மூடவேண்டுய நிலை ஏற்படலாம்;

  • செய்யாத குற்றத்திற்கு, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தேவையில்லாமல் தண்டிக்கப்படலாம்;

  • திடீர் தீ விபத்தில் சொத்துக்களை இழக்க நேரிடலாம்;

  • சிலசமயம், மனம்விட்டு பேசாத காரணங்களினால், குடும்ப உறவுகளில் நிரந்தர பிளவு ஏற்படலாம்;

  • யாருமே எதிர்பாராத விதமாய் கொரனா போன்ற பெருந்தொற்றுகள் உலகத்தையே ஸ்தம்பிக்கலாம்;

இப்படி திடீர் அதிர்ச்சிகள் எத்திசையிலிருந்து எப்போது வருகிறதென்று கணிக்கமுடியாமல் தான் எல்லோருடைய வாழ்க்கையும் நகர்கிறது. இந்த அதிர்ச்சிகளுக்கு யாரும் விதிவிலக்கில்லை. அதேசமயம், இந்த அதிர்ச்சிகள் எதுவும் உங்கள் வாழ்வின் முடிவும் ஆகிவிடாது.


வாழ்வில் வெற்றிபெற என்னவெல்லாம் செய்யலாம் என்று கட்டுரைத்தொடரை எழுதிவருகையில், திடீரென்று ஏன் இழப்புக்கள் குறித்து சித்தாந்தம் பேசுகிறேன் என்ற யோசிக்கலாம். வாழ்வில் வெற்றிபெற வேண்டும், சாதிக்க வேண்டுமென்று எவ்வளவுதான் ஒடினாலும், மனித வாழ்வின் நிலையாமையை மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இடையில் இந்த தலைப்பில் ஒரு சிறு கட்டுரை.


பொதுவாக நீங்கள் திட்டமிட்டது நடக்கும். ஆனால் அதைத்தாண்டி பரம்பொருளின் திட்டம் வேறாக இருந்தால், அவற்றையும் ஏற்றுக்கொண்டு அடுத்து செய்யவேண்டியதை யோசிக்க வேண்டியதுதான். திடீர் இழப்புக்கள், அதிர்ச்சிகளில் மூழ்கி, அதையே தொடர்ந்து நினைத்தும், பேசியும் காயத்தை பெரிதாக்கினால், அந்த இழப்புக்கள் நிரந்தரமாகிவிடும். தன்னம்பிக்கையோடு புதிய முயற்சியை தொடங்குபவர்கள், பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் சாம்ராஜ்யத்தை கட்டமைக்கிறார்கள். நீங்கள் எப்படி?


உயிருக்குயிரான உறவுகளை இழக்கலாம்;

உண்மையென்று நம்பியவைகள் ஏமாற்றலாம்;

எதிர்பாராத அதிர்ச்சிகளை

எப்போதும் எதிர்பார்த்திருங்கள்;


எண்ணிய எண்ணியாங்கு

நடக்குமென்பதற்கு உறுதியேதுமில்லை;

கூடாதென்று எண்ணியவைகளும்

சிலசமயம் நடக்கலாம்;


எல்லா வகையான அதிர்ச்சிகளுக்கும்

எப்போதும் தயாராக இருங்கள்;

எல்லாம் நம்மை கடந்து போகக்கூடியனவே;


நம்மைப் பொறுத்தமட்டில்

நாம் இவ்வுலகில் இருக்க அனுமதிக்கப்படும் வரையில்

நாம் மட்டுமே நிரந்தரம்;



- [ம.சு.கு 17.02.2023]

Recent Posts

See All

நீங்கள் பெரிதாய் செய்யவேண்டுமானால் அதை உங்களுக்காக செய்துதர ஒரு நம்பிகையான ஆதரவுக்கூட்டம் இருக்கவேண்டும்; அந்த ஆதரவு கூட்டத்தை தேடுங்கள்!

மனஅழுத்தம், உளைச்சல், அமைதியின்மையை தவிர்க்க மாத்திரைகளைவிட அன்றாட தியானமும், மூச்சுப்பயிற்சியும் – உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்

Post: Blog2 Post
bottom of page