top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-129 - மாற்றத்தை வேகப்படுத்துங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-129

மாற்றத்தை வேகப்படுத்துங்கள்!


  • நன்றாக இயங்கிக் கொண்டிருந்த உணவகங்கள் பல, கடந்த 4-5 ஆண்டுகளில் காணாமல் போய்விட்டன. அதேசமயம் எண்ணற்ற புதிய உணவு தயாரிக்கும் கூடங்கள் உருவாகியுள்ளன. என்ன நேர்ந்தது இந்த இடைப்பட்ட காலத்தில்? உணவகத்திற்கு வந்து உணவு உண்பவர்களின் எண்ணிக்கை நோய்தொற்றுக்களால் திடீரென்று குறைந்து விட, மக்கள் வீட்டிலிருந்தே உணவை கைபேசி செயலியில் பதிவு செய்தால், வீட்டிற்கே உணவு வந்துசேர வழி பிறந்தது. விரல் நுணியில் வீட்டிலிருந்தே கேட்டால், வீட்டிற்கேவந்து சேர வழி கிடைத்ததும், உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுவதற்கான தேவை குறைந்துவிட்டது. இந்த மாற்றத்தை புரிந்து கொண்டு நிறைய சிறுசிறு சமையலறைகள் உருவாகி மக்களுக்கு எல்லா வகையான உணவுகளையும் கொடுக்கிறது. இந்த மாற்றத்தை உணராத உணவகங்கள் வியாபாரத்தில் பெரிய சரிவை சந்தித்தன. தாமதமாக விழித்துக்கொண்டு சில உணவகங்கள் தப்பின. ஏனையவை மூடப்பட்டன.

  • முந்தைய காலங்களில் வங்கியில் வரவு-செலவு கணக்குகளுக்கு எண்ணற்ற கணக்கு புத்தகங்கள், பேரேடுகள் வைத்து எழுதி வந்தனர். ஆண்டுக் கணக்கை சரிபார்த்து முடிக்க வெகுநாட்கள் ஆனது. ஆனால் இன்றைக்கு அந்த ஏடுகள் எந்த வங்கியிலும் இல்லை. எல்லா வங்கிகளும் 100% கணினிமயம் ஆகிவிட்டன. வர்த்தகத்தின் அசுர வளர்ச்சியை தாக்குப் பிடிக்க கணினி இல்லாமல் இன்று வங்கிகள் செயலாற்றுவது சத்தியமில்லை. காலத்தின் நிர்பந்தத்தினால் மெதுவாக மாறிய வங்கிகள், வளர்ச்சியில்லாமல் திண்டாடுகின்றன. தகவல் தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வேகமாக தன்னை மாற்றிக்கொண்ட பல தனியார் வங்கிகள் கடந்த 20 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன.

உணவகங்கள் வீட்டிற்கு வரத்துவங்கியதிலிருந்து, பல தாய்மார்கள் அவ்வப்போது சமையலறைக்கு ஓய்வு கொடுத்து தானும் ஓய்வெடுக்க முடிகிறது. எந்தவொரு அவசரத் தேவைக்கும் உணவு சமைப்பதைப்பற்றி கவலையில்லை. இந்த வீட்டிலிருந்து வாங்கும் முறை, இப்போது உணவுப் பொருட்களைத் தாண்டி மளிகை சாமான், காய்கரிகள், மாமிசங்கள் வரை வந்துவிட்டன. மற்றொருபுறம், ஒரு குறிப்பிட்ட கனமான பொருளை, ஒருஇடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் வாகனங்களை பதிவு செய்து கொண்டுசெல்ல முடிகிறது. கையில் பணம் தயாராக இருக்கவேண்டுமென்ற கவலையும் இல்லை. வங்கிக் கணக்கில் பணமிருந்தால், கைபேசியிலேயே கொடுக்கல்-வாங்கல்களை முடித்துவிடலாம். எல்லாம் விரல் நுணியில் மாயங்கள் நடந்துவருகின்றன. இந்த புதிய மாற்றங்களை எவ்வளவு வேகமாக நிறுவனங்கள் ஏற்று தன்னை தயார்படுத்திக் கொள்கின்றன என்பது தான், நிறுவனங்களுக்கான பெரிய சவால். மற்றவர்கள் சோதிக்கட்டும் என்று காத்துக்கொண்டிருந்தால், வியாபாரத்தை இழக்க நேரிடலாம்.


காலத்தின் கட்டாயத்தால் தொழில்நுட்பத்தை தாமதமாக ஏற்றுக்கொள்ளும் நினுவனங்கள், வங்கிகள், வியாபார தளங்கள் போட்டி நிறைந்த உலகில் நிலைத்திருக்கவே திண்டாடவேண்டும். அதேசமயம், மாறிவரும் தொழில்நுட்பங்களை சீக்கிரத்தில் உணர்ந்து அதை அன்றாட பணியில், வாடிக்கையாளர் சேவையில் பயன்படுத்தி மேம்பட்ட சேவைவழங்கும் நிறுவனங்களும், வங்கிகளும் அமோக வரவேற்பைப்பெற்று வேகமாக வளருகின்றன.


சந்தையில் நிறுவனங்கள் தொழில்நுடபத்தை பயன்படுத்தி வளர்வது ஒருபுறம் இருக்க, நம் தனிமனித செயல்பாடுகளில், எந்த அளவிற்கு நாம் இன்னும் பழைய முறைகளை பயன்படுத்துகிறோம், எந்த அளவிற்கு புதிய மாற்றங்களை ஏற்படுத்துகிறோம் என்று உங்கள் செயல்பாடுகளை ஒருமுறை மறு ஆய்வு செய்து பாருங்கள்.


  • மக்கள போக்குவரத்தின் வேகம் அதிகரித்துவிட்டன. பேருந்துகள் காலம் தாண்டி, தனிப்பட் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து மேலும் சுலபமாகிவிட்டது. இன்று அது அடுத்த கட்ட தானியங்கி முறையை நோக்கி நகர்கிறது. அதற்கு நீங்கள் தயாரா?

  • ரொக்கப் பணம் குறைந்து, வங்கிப்பரிவர்த்தனைகள் யாவும் வலைதளத்திலும், கைபேசியிலும் நிகழ்கின்றன. அடுத்ததாக எண்ணிம நாணயத்தை நம்நாடு அறிமுகம் செய்கிறது. அதை அன்றாட பரிவர்தனைக்கு பயன்படுத்த நாம் தயாரா?

  • நாள்கணக்காக செய்துவந்த வேலைகளை, இன்று கணினி பத்து நிமிடத்தில் செய்து முடிக்கிறது. தட்டச்சு போய் கணினி கடிதங்களை எளிமையாக்கியது. இன்று பேசுவதை கேட்டு அப்படியே கடிதமாக அச்சிட்டுக் கணினி கொடுக்கிறது. இந்த புதிய மாற்றங்களுக்கு நீங்கள் தயாரா?

  • நோய்வகைகள் அதிகரித்து விட்டன. காற்றும் / நீரும் மாசுபட்டுவருகின்றன. சுத்தமான காற்றையும், நீரையும் காசுகொடுத்து வாங்கவேண்டிய நிலை. புதிய நோய்களுக்கு எண்ணற்ற தடுப்பு மருந்துகளும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த அவசர உலகில் இன்னும் பழைய மருத்துவமுறையை கடைபிடிப்பது சாத்தியமில்லை. காற்று/நீர் மாசிற்கு ஏற்ற புதிய இயந்திரங்களை பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம். இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?

  • விவசாயத்தில், ஒருகாலத்தில் பாத்திகட்டி நீர் பாய்ச்சினர். இன்று அத்தனை தண்ணீர் இல்லை. ஒருபாத்தியில் விட்ட நீரை, இன்று பத்து மரத்திற்கு சொட்டுநீர் பாசனம் மூலம் பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாயம். ஆனாலும், தொழில்நுடபம் வளர்ந்து, ஏக்கருக்கான விளைச்சல் பலமடங்கு அதிகரித்துவிட்டன. இன்னும் பாரம்பரிய முறை வேண்டுமென்று ஒருகூட்டம் போராடுகிறது. பாரம்பரிய முறை விவசாயத்தில், இன்றைய 800 கோடி மக்களுக்கு உணவளிப்பது சாத்தியமில்லை. விவசாயத்தில் வரும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த நீங்கள் தயாரா?

நிறைய புதுமைகள் வருகின்றன. அவை சந்தையில் வந்து ஓரிருவர் முயற்சிசெய்து வெற்றிகண்ட பின் பலரும் வாங்குகின்றனர். ஆனால் புதியவற்றிற்கான பரிசோதனை முயற்சிகள் ஒரு புறம் நடக்கும். அந்த புதிய பரிசோதனைகளில் நீங்கள் பங்கெடுக்க தயாராக இருக்கிறீர்களா?


மாற்றம் ஒன்றே நிலையானதென்றனர்;

அந்த மாற்றங்களை

காலத்தின் கட்டாயத்தில் சிலர் ஏற்கின்றனர்;

வேலைகள் எளிமையாவதால் சிலர் ஏற்கின்றனர்;

மாற்றங்களை ஏற்படுத்த

புதிய கண்டுபிடிப்புக்களை நோக்கி சிலர் முயற்சிக்கின்றனர்;

இவர்களில் நீங்கள் எந்தவகை?


யார் மாற்றங்களை எதிர்நோக்கி

பரிசோதனை முயற்சிகளில் இறங்குகிறாரோ – அவருக்கு

ஏனையவர்களைக் காட்டிலும்

சீக்கிரமாக முன்னேர அதிகவாய்ப்பு இருக்கிறது!


- [ம.சு.கு 15.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page